Dec 29, 2018

மார்க்சியம் ஒரு விஞ்ஞானம்


மார்க்சியத்தில் பெண்ணியம் இல்லை, தனிமனித மனம் இல்லை, மனித மையம் இல்லை, தலித்தியம் இல்லை இதை அதோடு சேர்க்க வேண்டும், அப்பொழுதுதான் மார்க்சியம் முழுமையான பார்வையோடு கூடிய தத்துவ்வாதமாக இருக்கும் என வாதிப்பவர்களை நோக்கி தோதாத்ரி கூறுகிறார்:
“மார்க்சியம் ஒரு விஞ்ஞானம். அது நியூட்டனின் அல்லது ஐன்ஸ்டைனின் விதியைப் போன்றது. தத்துவரீதியாக அது இயங்கியல், பொருள்முதல்வாதம் சமுதாய ரீதியாகப் பொருளாதார உறவுகள் தாம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானவை என்பது மார்க்சியம். மாறுதல்களை ஏற்றுக்கொள்வது மார்க்சியம். வர்க்கப் போராட்டம்தான் சமுதாயத்திற்கு உந்துவிசை என்பது மார்க்சியம். சுரண்டலற்ற சமுதாயத்தினைப் பற்றிக் கூறுவது மார்க்சியம். மற்றவை அப்படியல்ல. பெண்ணியம் பெண் விடுதலை பற்றியது. தலித்தியம் விளிம்புநிலை மக்கள் பற்றியது. பெரியாரியம் அடிப்படை மாறுதலை வலியுறுத்தாமல், சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்வைப்பது. இவற்றிற்கும் மார்க்சியத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. இவை முற்போக்கானவைதாம் என்றாலும், இவை மார்க்சியத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்ணியக் கொள்கைகளில் மார்க்சியம் சார்ந்ததும் உண்டு. தலித்தியத்தில் மார்க்சியம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கூறும் காரணம் அது வன்முறையானது என்பதாகும்.
பெரியாரியவாதிகளும் மார்க்சியத்தினை அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அது பெரியாரிய மார்க்சியம் எனப்படுகிறது. இப்படி முரண்படும் கோட்பாடுகளை மார்க்சியத்துடன் இணைப்பது என்பது சாத்தியம்தானா?
மேலும் இந்த வாத்த்தினை முன்வைப்பவர்கள் மார்க்சியம், பெண்ணியம், பெரியாரியம், தலித்தியம் ஆகியவற்றைச் சமமாகவே காண்கின்றனர். இது சரியான பார்வை ஆகாது. மார்க்சியம் அடிப்படையானது. இதன் உதவியுடன் சகலத்தையும் விளக்க முடியும். ஆனால், பெண்ணியத்தையோ, பெரியாரியத்தையோ (தலித்தியத்தையும் – கொற்றவை) வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் விளக்க முடியாது.
பெண்ணியம், பெரியாரியம், தலித்தியம் ஆகியன முன்வைக்கும் கருத்துகள் அந்தந்தத் துறைகளுக்குப் பொருத்தமானவைவே. இவற்றில் ஒட்டுமொத்தப் பார்வை என்பது இல்லை. இவற்றில் உண்மை உண்டு. ஆனால் அந்த உண்மை துறை சார்ந்த உண்மையே தவிர சகலத்திற்கும் பொருத்தமான உண்மையில்லை. மார்க்ஸ் கூறும் வர்க்கப் பார்வை எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். மற்றவை அப்படி அல்ல. எனவே அடிப்படியான ஒன்றைத் துறை சார்ந்த பார்வையுள்ளவற்றிற்குச் சமமாக மார்க்சியத்தைக் காண்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது…. இதற்குமாறாக மார்க்சியத்துடன் பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் என்று எல்லாவற்றையும் இணைத்தாலோ இவற்றிற்குச் சம்மாக மார்க்சியத்தைப் பார்த்தாலோ மார்க்சியம் வினோதமான உடையணிந்த கோமாளியாகவே இருக்கும்.” – அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலில் வசுமித்ரவின் முன்னோட்டத்தில் இடம்பெறும் மேற்கோள் (மூல நூல்: எஸ். தோத்தாத்ரி, மார்க்ஸ் எப்படி இருப்பார்?, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக் 68.69)
தொன்று தொட்ட காலம் தொடங்கி காலம் காலமாக தத்துவப் போராட்டம் என்பது நடந்து வந்திருக்கிறது. குறிப்பாக மார்க்சியம் தோன்றிய பின்னர் அதற்கு எதிரான முதலாளித்துவ போலி ஜனநாயக இயங்கள் பரப்பப்பட்ட போது இந்தியாவிலும் மார்க்சியம் ‘எதிர்’ மற்ற துறை சார் இயங்கள் குறித்த தத்துவார்த்த விமர்சனங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன… இருக்கின்றன…
ஏதோ புதிதாக இன்று நாங்கள் எல்லோரையும் பிரிக்க வந்தது போல் பேசி இங்கு சிலர் புனிதர்கள் ஆக முயல்கின்றனர். அத்தகையோர்க்கு தத்துவப் போராட்டம் என்றால் என்ன அது எதற்கு தேவை என்கிற புரிதலோ, தேவையோ இல்லை என்பதே பொருளாகும்.
மார்க்சிய சித்தாந்தத்தை வலியுறித்திப் பேசினாலும் நடைமுறையில் எல்லா ஜனநாயக சக்திகளோடும் இணைந்து தான் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே தங்களுக்கு நல்லவர் பட்டம் வேண்டி அடுத்தவர்களுக்கு பிரிவினைவாத சாயம் பூசுவது வேடிக்கையானது!
நடைமுறையில் கைக் கோர்ப்பது என்றால் என்ன? கூட்டங்களுக்கு தலை கணக்கு சேர்ப்பதா? இல்லை பாராளுமன்ற அதிகாரத்தில் பங்கு வேண்டி கூட்டணி அமைத்துக் கொள்வதா? இது நடந்துகொண்டுதானே இருக்கிறது!
ஆனால் அந்த நடைமுறை என்பது தற்காலிக ஜனநாயகப் போராட்டம். ஆனால் நாம் அடைய வேண்டிய இறுதி இலக்கு என்பது என்ன? அதற்கு சரியான உலக கண்ணோட்டத்தினைப் பெறாமல் எங்கணம் நாம் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது? அதில் வெற்றி பெருவது. அதற்கான வழிகாட்டுதலை முன்வைக்கையில் எல்லாம் “கம்யூனிஸ்டுகளுக்கு சாதியைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை” என்பதாக கூறுவோரிடத்து
“இதுவும் தேவை அதுவும் தேவை” என்னும் சமரசவாதமா பதில்?
“இவரிவர் இடத்தில் x,y,z பிரச்சினைகளுக்கு எதிரான கலகக் குரல்கள் எழும்பின, சிற்சில சீர்திருத்தங்கள் கிட்டின ஆனால் தீர்வு வேண்டுமெனில் சரியான தத்துவ வழிகாட்டி வேண்டும்” என்பது பிரிவினைவாதமா, தத்துவார்த்த தர்க்கவாதமா? சரியான தத்துவத்தை வழங்காமல் மக்களை போராட்டங்களுக்கான கருவிகளாக மட்டும் பயன்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.
அம்பேத்கரை விமர்சிப்பதும், மார்க்சியத்தை வலியுறுத்துவதம் தவறான உள்நோக்கம் கொண்டது (அதுவும் இன்னார் இந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால் என்னும் வாதம்!) என்னும் ‘போராளிகள்’ உண்மையிலேயே மக்களின் நலன்களுக்காகத் தான் பேசுகிறார்கள் என்றால் திறந்த மனதுடன் மார்க்சியத்தை கற்றுக்கொள்ளலாமே? எது அவர்களைத் தடுக்கிறது? வர்க்கத்திற்கு அப்பாற்டட்து சாதி என்பதே அம்பேத்கரிய / தலித்தியமாக முன்வைக்கப்படுகிறது? இதற்கு ஒத்து ஊதவேண்டுமா? அல்லது அது தவறு என்று விளக்குவது பிரிவினைவாதமா? அறிவுக்கு இங்கு இடமுண்டா இல்லையா?
அம்பேத்கரை முன் வைத்து பரப்பப்படும் தலித்தியத்தை, பௌத்தத்தை சரியாகப் புரிந்துகொள்வது என்பதோ அல்லது அவரின் (அதன்) வரையறைகளை அடையாளம் காண்பது என்பதோ அவரை மறுத்தலிக்கும் எண்ணம் கொண்டதல்ல மாறாக அவரை முன்வைத்து இங்கு மக்களை ஏமாற்றும் சில தலித்திய பிழைப்புவாதிகளை அடையாளம் கண்டுகொள்வது என்பதாகும்.
மார்க்சிய தத்துவார்த்த விமர்சன அடிப்படியிலான உரையாடல் என்னவென்று தெரிந்துகொள்ள சந்திப்போம் ஜனவரி 2 அன்று. இக்சா மையம் மாலை 6 மணி. 

No comments:

Post a Comment