Dec 28, 2018

அம்பேத்கரும் அவரது தம்மமும்



“அம்பேத்கரும் அவரது தம்மமும்” – மார்க்சியக் கண்ணோட்டத்தில் வசுமித்ர எழுதியுள்ள திறனாய்வு நூல்.

சமூகத்தின் எந்த ஒரு பிரச்சினையையும் சரியாக புரிந்துகொள்ள அடிப்படையில் நமக்கு பொருள்முதல்வாத கண்ணோட்டம் தேவைப்படுகிறது. ஏனென்றால் இதுவே மனித மனம், குணம், கருத்து ஆகிய தனிமனித பண்புகள் மற்றும் அது ஏதோ தனியிருப்பைக் கொண்டதாக நம்முள் ஏற்றிவைக்கும் மதங்கள் (மற்றும் அரசு, ஆளும் வர்க்க சிந்தனைகள், பண்பாடு.. இதர) குறித்த சரியான, விஞ்ஞானபூர்வமான புரிதலை வழங்கும். கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ் மற்றும் ஜென்னியின் துணையோடு) பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதமாக, இயங்கியல் பொருள்முதல்வாதமாக வளர்த்து எடுத்து மார்க்சியமென்னும் பெருங்கொடையை சமூகத்திற்கு வழங்கினார்.

வியாக்கியானம் மட்டும் செய்துகொண்டிருக்காமல் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவருவதற்கான அரசியல்பொருளாதாரத்தையும், விஞ்ஞானபூர்வ சோசலிச திட்டத்தையும் மார்க்ஸ் வழங்கினார். இந்த சிந்தாந்தத்தை உள்வாங்கி நூற்றாண்டு காலங்களாக மார்க்சியர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் சமூக பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசியதோடு, நடைமுறைக்கான வேலைதிட்டங்களையும் முன்வைத்துள்ளனர். உலகெங்கிலும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்தியும் காட்டியுள்ளனர்.

மார்க்சியமானது உலகப் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்யவும் தீர்க்கவும் வழிகாட்டுவதால் இது சர்வதேசிய பொருத்தப்பாடு கொண்டதாக இருக்கிறது. மானுட விடுதலைக்கான ஒளிவிளக்கு மார்க்சியம்! அதன் மையமும், சாரமும் பாட்டாளி வர்க்கப் புரட்சி! பொதுவுடைமை சமூகத்தை நிர்மாணித்து சமத்துவத்தை நிலைநாட்டுதல் என்பதாகும். அனைத்துவகையான படிநிலை அமைப்புகள், ஏற்றத்தாழ்வுகளை களைய இதைவிட சிறந்ததொரு சித்தாந்தம் இதுவரை நிறுவப்படவில்லை.

உலகளவிலும், இந்திய சூழலும் அதை பொருத்தியும், நடைமுறைபடுத்தியும் பெரும் தியாகங்களைச் செய்தும், இன்னுயிர் ஈந்தும் கம்யூனிஸ்ட்கள் (என்று சொல்லும் போது அனைத்து நாட்டு மத, இன, சாதி, பாலின மக்களும் ஆவர்) வளர்த்தெடுத்த பாட்டாளி வர்க்க அரசியலை முறியடிக்க இன்று பல்வேறு சக்திகளும், அமைப்புகளும், பூர்ஷுவா அறிவுஜீவிகளும், ஏகாதிபத்திய தரகர்களும், மதவாத சக்திகளும் (அறிந்தும், அறியாமலும்) முயன்று வருகின்றனர்.

அவற்றுள் பின்நவீனத்துவம், தலித்தியம் என்னும் சித்தாந்தமற்ற ஒரு கண்ணோட்டத்தை சாமர்த்தியமாக இங்கு பரப்பிவிட்டிருக்கின்றனர். மார்க்சியத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த பாட்டாளி வர்க்க அரசியல் அழித்தொழிப்பு சதிகளுக்கு பெரும்பாலும் அறியாமையின் காரணமாக தலித்துகள் பலியாக்கபப்டுகின்றனர்.

பிறப்பின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையைக் கொண்ட சாதி என்னும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் ஒருங்கிணைப்பை குறிப்பிட்ட சாதியினரை முதன்மையாக ஒருங்கிணைப்பதாக முன்வைத்து செயல்படும் இந்த அரசியலானது அம்பேத்கர் என்னும் தலைவரை முன்வைத்து உணர்ச்சிகரமான அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. (விவரங்களுக்கு சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலைக் காணவும்).

சாதி என்பதை தனித்த ஒரு மனநிலை பிரச்சினையாக காண்பதும், பண்பாட்டு பிரச்சினை என்பதை தனித்த ஒன்றாக காண்பதும், இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மாறுவதாலும், சட்டவாத கோரிக்கைகளை முன்வைத்தும் சாதியை ஒழித்துவிட முடியும் என்பதாக இந்த ‘இயமற்ற ஒரு இயம்’ முன்வைக்கப்படுகிறது! இதில் துளியும் பொருள்முதல்வாத கண்ணோட்டம் என்பது இருப்பதில்லை.

இந்த பின்னணியில் தான் அம்பேத்கரையும், பௌத்தத்தையும் எப்படி புரிந்துகொள்வது என்று பல மார்க்சிய ஆய்வாளர்கள் நூல்களை எழுதிவந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக நானும் இரண்டு நூல்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தினேன். ஆனால் முதல் நூலின் பெயரை மட்டுமே படித்துவிட்டு இங்கு ஆதிக்கசாதிகளின் வெறிக்கு நிகராக நடந்த இணைய தாக்குதல்கள் அராஜகத்தின் உச்சம். கருத்து சுதந்திரம் பேசும் அத்தகைய பெருந்தகைகள் தாங்கள் அப்படி ஒன்றை வாய்ப்பேச்சாக மட்டுமே பேசுபவர்கள் என்பதை மெய்ப்பித்தனர்.

முன்னெப்போதையும் விட இப்போது வீரியமாக பண்பாட்டு புரட்சி, நீலப் புரட்சி, தலித்திய பண்பாட்டு மையங்கள், தலித்திய அறிவுஜீவிகள் மன்றம், தலித்திய பௌத்த மாநாடுகள் என்று பல்வேறு நிறுவனங்கள் மூலம் தீவிர தலித்திய அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இத்தகைய எழுச்சி வரவேற்கத்தக்கதே. அதேவேளை அதன் போக்கில் குறை நிறைகளை பேசுவதென்பது தலித்துகளுக்கான விடுதலை அரசியலுக்கும் அவசியமானதே. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட சாதியின் பெரும்பான்மை என்பது உழைக்கும் வர்க்கமாகும். வர்க்க அரசியலை (தந்திரமாக) புறக்கணிக்கும் போக்கு ஒரு சில தலித்திய அமைப்புகளிடமும், தலித்தியவாதிகளிடம் காணப்படுவதால் இது அவசியமாகிறது.

அத்தகையதொரு திறனாய்வை மேற்கொள்வதென்பது தலித்தியம் என்னும் பெயரில் முன்வைக்கப்படும் அம்பேத்கரியம் – அதன் தலைவர் அம்பேத்கர் மற்றும் அவரின் பெயரால் பரப்பப்படும் புத்த தம்மம் (நவயான பௌத்தம்) ஆகியவற்றை ஆய்வு செய்வது என்பதாகும். வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் இவற்றை நாம் அனுக வேண்டியுள்ளது. 

இப்படித்தான் வசுமித்ர எழுதியிருக்கும் இந்நூலுக்கான தேவையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ரங்கநாயகம்மாவின் நூலை மொழிபெயர்த்ததிலிருந்து இங்கு நிகழ்ந்த அடையாள அரசியல் வெறியாட்ட தாக்குதல்களால் நானும் வசுமித்ரவும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தோம். தனித்து விடப்பட்டவர்களாகவும் மனச்சோர்வு கொண்டோம். அதேவேளை எங்களின் இந்த பங்களிப்பை சமூக மாற்றத்திற்கான தேவையாக புரிந்துகொண்ட தோழர்களின் ஆதரவும் ஆங்காங்கே கிடைத்தும் வந்தது.
முகநூலில் ஆபாசமான வசைகளை ஏவிவிட்டனர். ரவுடிகள் போல் ஒரு கூட்டம் செயல்பட்டது. வசுமித்ரவுக்கு தொலைபேசி மிரட்டலும் வந்தது. பதில் அளித்துக்கொண்டே இருந்தோம். இரண்டாவது ஒரு நூலையும் நான் கொண்டு வந்தேன். இரண்டாவது நூல் பற்றி மூச்சில்லை, பேச்சில்லை!

இந்த வன்ம வெறுப்பரசியல் போக்கு வசுமித்ரவை உறுத்திக்கொண்டே இருந்தது. அவ்வப்போது அவன் சிறு பதிவுகள், கட்டுரைகள் என்று அடையாள அரசியல் குறித்து எழுதி வந்தான். ஒரு கட்டத்தில் இந்த சமூக ஊடகங்களில் எழுதுவது பயனற்றது என்ற உணர்வு ஏற்பட தான் ஒரு முழுமையான ஆய்வு நூலை எழுதப் போவதாக முடிவு செய்தான். முகநூலை விட்டு வெளியேறினான். ஆய்வைத் தொடங்கினான்.

இதற்கிடையில் எங்கள் வாழ்நிலைமைகளில் அடுத்தடுத்து சரிவு ஏற்பட இருவரும் கடும் மன உளச்சலுக்கு உள்ளானோம். அருகருகில் இருந்துகொண்டு இதை கையாள முடியாது என்று முடிவெடுத்து ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டோம். (வசு தன் முன்னுரையில் இதனை தனிமைத் துயரின் நடுவில் இந்நூலை எழுதினேன் என்று பதிவு செய்திருக்கிறான். அதையும் கூட நான் 4,5 நாட்களுக்கு முன்பு தான் படிக்க நேர்ந்தது!).

ஆளுக்கொரு திசையில் பயணிக்க தொடங்கினோம். தொடர்பற்று! (பொருளாதார நிலைமையிலிருந்தும்) முழுவதும் முடங்கிப் போன வசு என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாத ஒரு இயந்திரமாக நானும் நடமாடிக் கொண்டிருந்தேன். ஏறத்தாழ 8 மாதங்கள்.

“அண்ணி அண்ணன் அம்பேத்கர் புக்கை முடிச்சுட்டார் அண்ணி” என்று ஒருவர் ஒரு நாள் சொன்னபோது அதிர்ச்சியடைந்தேன் என்பதே உண்மை. அதிலும் அது 920 பக்கங்கள், இருநூற்றுக்கும் அதிகமான ஆதார நூல் பட்டியலை கொண்டிருக்கிறது என்கிற செய்திகள் எல்லாம் எனக்கு உண்மையில் அச்சத்தையே ஏற்படுத்தியது (ஏனென்றால் அவ்வளவு கல் எறிதலை பெற்றிருக்கிறேன் அல்லவா).

அசுரவதம் நிகழ்வின்போது சந்தித்துக் கொண்டோம். அதோடு மீண்டும் தண்டவாளம் விரிசலடைந்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நான் வண்டியிலிருந்து விழுந்த விபத்தே மீண்டும் எங்களுக்குள் உரையாடலை ஏற்படுத்தியது. நூலை முடித்துவிட்டேன் என்றான். கண்ணீர் மட்டுமே பதிலாக அமைந்தது!

அதன் பிறகு இந்நூலுக்கான உழைப்பைப் பற்றியும் அவன் விவாதித்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன். சமீபத்தில் தோழர் சந்தானத்தையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நூலின் தேவையை பற்றி அவர் பேசியது, மனநிறைவை தந்தது.   தோழர் தி.சு நடராஜன் முன்னுரை எல்லாவற்றையும் தெளிவுபடுத்தியது. தோழர் பாலசந்திரனின் அவர் எங்கள் நலம்விரும்பி மட்டுமல்ல, மார்க்சிய நலம்விரும்பியும் கூட. இவர்களின் இணைவில் இந்த நூல் வெளியீட்டிற்கும் தயாராகிவிட்டது.


மாதிரி நூல் கைக்கு வந்ததும் நான் ஒரு பிரதியை பெற்றேன். வசுமித்ரவின் முன்னுரையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வசுவிற்குள் இப்படி ஒரு பக்குவமான அறிவுஜீவி ஒளிந்திருப்பதை கண்டு நம்பிக்கையோடு இருக்கிறேன்.

20 வருட பரந்துபட்ட வாசிப்பு – இந்திய தத்துவங்கள், இலக்கியம், கவிதை, மார்க்சிய நூல்களின் வாசிப்பனுபவம்.  தற்போது அம்பேத்கரின் தொகுப்பு நூல்களையும், பௌத்த நூல்களையும் கூர்மையாக, உன்னிப்பான அவதானிப்பகளோடு ஆய்வு செய்திருக்கிறான். (கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது!)

ஒரு ஆய்வை முன்வைக்கையில் அது சமூகத்தை நோக்கிய உரையாடல். அது அறிவார்ந்த உரிமையும் கூட. அதற்கு வரக்கூடிய எதிர்வினைகள் அறிவார்ந்த வகையில் இருக்க வேண்டுமேயன்றி சிறுபிள்ளைத்தனமான அவதூறுகளாக சாதி வெறி பேச்சுகளாக இருப்பது அவரவரின் பிழைப்புவாத பேச்சாக மட்டுமே இருக்க முடியும்.


குறளி பதிப்பக வெளியீடாக ஜனவரி 2ஆம் தேதி இக்சா மையத்தில் மாலை 6 மணிக்கு நூல் வெளியீடு. தோழர்கள் அனைவரும் வந்து உரையாடல் என்னவென்று தெரிந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன் ❤️

https://www.facebook.com/events/370290703780781/?notif_t=plan_user_associated&notif_id=1545963866956410 

No comments:

Post a Comment