Dec 14, 2018

இராமாயணம் – மார்க்சியப் பெண்ணிய மறுகதையாடல்




ரங்கநாயகம்மாவின் இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் நூல் இராம இராஜ்ஜியத்தை சாதியவாத, நிலவுடைமை முறையிலான ஆணாதிக்க சமூகம் என்றுரைக்கிறது.

இந்நூலை படித்த பின்னர் அல்லது ஒரு சில வரிகளைப் படித்ததுமே கூட ஒழுக்கவாதிகள் இதை கொளுத்திவிட துடிப்பார்கள். அவர்களால் காகிதங்களை ரிக்க முடியுமே ஒழிய சிந்தனைகளையல்ல…”

என்கிறார் மார்க்சிய எழுத்தாளரான ரங்கநாயகம்மா. இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் தன்னுடைய நூல் குறித்துதான் இவ்வாறு கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்துள்ளார். ஆனால் இராமாயணத்திற்கும் கார்ல் மார்க்ஸின் மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு? இந்நூலைப் படிக்கும்ஒழுக்கவாதிகள்ஏன் இதை ரிக்குமளவுக்கு சினம் கொள்வார்கள்? ரங்கநாயகம்மா இந்நூலில் அந்தளவுக்கு இராம இராஜ்ஜியத்தை கூறு போட்டிருக்கிறார்.

பொதுவான கருத்தின்படி, இராம இராஜ்ஜியம் என்பது ஒழுக்கத்தின் உச்சம், அதுவே நல்லாட்சிக்கான அளவுகோல். ஆகவே நாம் மீண்டும் அந்த உன்னத காலத்திற்கே செல்ல வேண்டும். காந்தியும் கூட இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார்:

“… கடந்த கால இராம இராஜ்ஜியம் என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஓர் உண்மையான ஜனநாயக ஆட்சி. சராசரி மனிதனுக்குக் கூட தாமதமின்றி, பொருள் செலவின்றி துரிதமாக நீதி கிடைத்துவிடும்.”

ஆனால் ரங்கநாயகம்மாவிற்கோ இராம இராஜ்ஜியமானது நாம் அடைய விரும்பும் மேன்மையான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை. பணக்கார வர்க்கத்தின் நலன்களுக்காக ஆட்சி புரிந்தகொடுங்கோல்ர்களானதசரதன், இராமன், இராவணன் போன்ற மன்னர்களின் ஆட்சியானது ஏற்றதாழ்வுகள் நிறைந்த ஆபத்தான ஆட்சி என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா.
மார்க்ஸைப் பொறுத்தவரை, வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாக கொண்டிருக்கும் முதலாளிகள் கூட்டமும், அந்த சொத்துடைமை வர்க்கத்திற்காக உழைத்து உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்கள் என்னும் இரண்டு முரண்பட்ட பிரிவினர் மற்றும் அவர்களுக்கிடையிலான பாகுபாடுகளாகும். இதன் அடிப்படையில் ரங்கநாயகம்மாவைப் பொறுத்தவரை இராம இராஜ்ஜியம் என்பது நிலபுலன்கள், மாட மாளிகைகள், தோட்டங்கள், குதிரைகள், மாடுகள், ஆநிரைப் பண்ணைகள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொக்கிஷங்களையெல்லாம் அளப்பரியதாகக் கொண்டிருந்த செல்வந்தர் வர்க்கத்தினை ஆதிக்க சமூகமாகக் கொண்டிருந்த சமூகத்தின் இராஜ்ஜியமாகும். நாட்டை ஆண்ட மன்னனுக்கு உகந்த வகையில் சமூகத்தைப் பராமரிக்க உழைப்பது தான் உழைக்கும் வர்க்கத்தின் கடமை. அத்தகைய சமூகத்தில் ஏழ்மை, அடிமைத்தனம், விபச்சாரம், நிலப்பிரபுத்துவம், ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டிப் பிழைத்தல் என்னும் வர்க்க அமைப்போடு சாதிய ஒழுங்குமுறையும் நிலவியது. அதோடு பெண்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை. பல்வேறு தடுப்பரண் அமைப்புகளின் வாயிலாக பெண்கள் முற்றிலுமாக வீடிற்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

இராம இராஜ்ஜிய பண்பாடென்பது ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டிய பண்பாடாகும். அதனால் தான் இராமாயணத்தை தங்கள் மதக் கொள்கையாக தழுவிக்கொண்டவர்களுக்கு அதன் மீதான விமரசன நூல் என்பது ரிக்குமளவுக்கு சினமூட்டக்கூடியது.

இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் 1994 இல் முதல் முதலில் பதிப்பிக்கப்பட்டது. 1975, 1976 இல் இரண்டு தொகுதிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்டன. பின்னர் ஆந்திராவில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் பி.ஆர். பாபுஜி, ஆர். வெங்கடேஸ்வர ராவ், ஆரி சீதாராமய்யா மற்றும் சி. பத்மஜா ஆகிய நால்வரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தின் சமஸ்கிரத மூல காலவரிசைப்படியே இந்நூலும் எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் மற்றும் உத்ர காண்டம் என ஏழு காண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காண்டமும் கடவுளென மன்னன் இராமனின் வாழ்வை வெவ்வேறு காலகட்டங்களாக விளக்குகின்றன. ‘இராமாயணம்: ஒரு விஷ விருட்சம்நூல் 700 பக்கங்களைக் கொண்ட நூலாகும். 16 நீண்ட கதைகள் மற்றும் ஒவ்வொரு துணைக் கதைக்கும் மற்றொன்றிற்கும் தொடர்புடைய பதினொருஇணைக்கதைகளையும், விமர்சனத்திற்கு ஆதாரமாக மூல சர்க்கத்தை அல்லது யாப்புகளை ஆதாரமாகக் கொண்ட 600 அடிக்குறிப்புகளையும் கொண்டதாகும்.

சொத்துடைமை வர்க்கத்தின் செல்வக் குவிப்பு (உழைக்கும் வர்க்கத்தின் அடிபணிதல் அந்த சொத்துகளில் இருந்து செல்வத்தை தோற்றுவித்தாலும்) பற்றியதே மார்க்சிய சிந்தனை. ஒட்டுமொத்த நூலிலும், விரிவான அடிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள் வழி நடக்கும் உரையாடல்கள் மற்றும் தரவுகளை கவனமாக முன்வைத்து அக்காலத்தில் நிலவிய பண்பாட்டை ஆய்வு செய்கிறார் ரங்கநாயகம்மா. உதாரணமாக, இராமனின் பட்டாபிஷேகம் குறித்து தசரத மன்னன் குழம்பியிருந்த தருவாயில் அவரை சந்திக்க வந்த வசிஷ்ட முனிவர் கேட்கிறார்:

எல்லாம் நலம்தானே? ஏதேனும் புதிய தேசங்களைக் கைப்பற்றினாயா? உன்னுடைய எதிரிகளையெல்லாம் வென்றுவிட்டாயா? […] உன் குத்தகைதாரர்கள் அனைவரும் உனக்கு அடிபணிந்து நடக்கின்றனரா? – பால காண்டம், சர்க்கம் 19, ஸ்லோகம் 45”
இராம இராஜ்ஜியத்தில் (ஒவ்வொரு காலகட்டத்திலும்மொ.ர்) வர்க்க ஒழுங்குமுறையை கண்டிப்பான முறையில் கட்டிக்காக்கும் மத மற்றும் அரசியல் பிணைப்பும் நிலவியது. சாதியக் கலப்பைத் தடுப்பதும், அடிமையுடைமையை ஊக்குவிப்பதும், பெண்களைஅந்தப்புரத்தில்வைத்துக் காக்கும் சட்டங்களை இயற்றுவதும், நாத்திகர்களை துன்புறுத்துவதும், அரச வழிபாடு என்னும் அளவுக்கு மன்னர்களை துதிபாடுதலுமாக அந்த ஒழுங்குமுறை கட்டிக்காக்கப்பட்டது.

மன்னர்களுக்கான கடமை மதங்களால் வரையறுக்கப்பட்டு, வர்க்கப் படிநிலையில் அவர்கள் உச்சத்தில் வைக்கப்பட்டார்கள். இராமனின் விசயத்தில், அவனை கடவுளாக்கி வழிபட்டனர். தசரதனுக்கு இந்த மகத்துவம் கிடைக்கவில்லை. அயோத்தியக் காண்டத்தில் வால்மீகி எழுதுகிறார்:

மன்னன் இல்லாத ஒரு நாட்டில் மேகங்கள் சூழ்வதில்லை. மழை பெய்வதில்லை. பயிர்கள் வளர்வதில்லை. வணிகம் நடைபெறுவதில்லை. பயணங்கள் நடப்பதில்லை. மனைவிகளும், பிள்ளைகளும் கட்டுப்படுவதில்லை. அரச தண்டனையில்லையென்றால் நாத்திகர்கள் கலகம் செய்வார்கள். பிராமணர்கள் சடங்கு சம்பிராதாயங்களை மீறுவார்கள். மன்னன் இல்லையெனில் அராஜகம் (anarchy) பெருகிவிடும்அயோத்திய காண்டம், சர்க்கம் 66, ஸ்லோகம் 47”

இராமன் காட்டிற்கு நாடு கடத்தப்பட்ட போது பரதன் அவர்களை சந்திக்க சித்திரக் கூடம் செல்கிறான். இராஜ்ஜியம் குறித்து சகோதரர்கள் அளவலாவுகின்றனர். மக்கள் நலன் குறித்து இராமன் ஏதும் கேட்கவில்லை. அதைவிடுத்து வணிகர்களின் நலன் குறித்து விசாரிக்கிறான். “ஓர் அரசனானவன் அனைவரையும் காக்க வேண்டும், குறிப்பாக வணிகர்களை.” (அயோத்தியா காண்டம் சர்க்கம் 100, ஸ்லோகம் 47&48) [1]. அதுமட்டுமா,  உழைக்கும் வர்க்கத்திற்கு அதிக ஓய்வு (நாட்கள்) கொடுத்துவிடாதே பரதா, அவர்கள் இன்பத்தில் மூழ்கிவிட்டால் வேலைகள் பாதிக்கப்படும்என்றான் (அயோத்தியா காண்டம், சர்க்கம் 100, ஸ்லோகம் 54) [2].

இவ்வாறாக இராம இராஜ்ஜியம் என்பது நிலவுடைமை முறையில், நிலப்பிரபுக்களால் நிர்வகிக்கப்பட்ட இராஜாங்கமாகும். ஏழை விவசாயிகள் தங்கள் விளைச்சலின் பெரும்பகுதியை மன்னர்களுக்கும், அவர்களின் படைகளுக்கும் கொடுத்தே வாழ வேண்டிய நிலைமை. வர்க்க அமைப்பும், சாதியமைப்பும் பிணைந்த ஒரு சமூகப் படிநிலையானது ஏழைகளை வாட்டியது. மதமானது சாதியக் கலப்பை தடுத்தது, மன்னர்கள் அதை நிலைத்திருக்கச் செய்தனர்.

பிராமணர்களை, பிராமணிய வாழ்க்கை முறையை உயரிய பீடத்தில் வைத்துப் போற்றுவதும் மன்னனின் கடமையாக வகுக்கப்பட்டது. ஒரு நாள் தசரதன் வேட்டைக்குச் சென்றபோது, அஜாக்கிரதையான அவனுடைய அம்பெய்தலால் ஒரு முனிவரின் மகனான கரனனை தாக்கிக் கொன்றான். கொல்லப்பட்ட மகனே அரசனுக்கு எப்படி ஆறுதல் சொல்கிறான் என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா: “கவலைப்படாதீர்கள் மன்னா ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் உங்களைச் சாராது, ஏனென்றால் நான் ஒரு சூத்திரப் பெண்ணிற்கும், வைசிய ஆணிற்கும் பிறந்தவன் தான்

சாதியமைப்பானது அன்றாட வாழ்வில் மிகவும் வலிமையுடன் தாக்கம் செலுத்தியது. அது, மேல்நிலையில் உள்ள சாதிகளின் பண்புகளும், மதிப்பீடுகளுமே சிறந்தது என்று கீழ்நிலையில் தள்ளப்பட்ட சாதிகள் நினைக்குமளவுக்கு உட்செறிக்கப்பட்டது. மதத்தைக் கட்டிக்காக்கும் பிராமணர்கள், முனிவர்கள், பூசாரிகள் ஆகியோர் மன்னர்களுடன் கூடிக் குலாவினர். பதிலுக்கு மன்னர்கள் பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் பாதுகாவலர்களாக இருந்தார்கள். போர் மற்றும் இராணுவக் கட்டாய சேவைகளின் மூலமாக சத்ரிய உணர்வைக் கட்டிக்காதார்கள். தாழ்த்தப்பட்ட சூத்திரர்கள் மேல்நிலைக்கு முன்னேற முடியாத வகையில் தடுக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறைகளாக அவர்கள் சொத்தோ செல்வமோ இல்லாத வர்க்கங்களாக நிலைத்திருந்தனர்.

இராமன் தான தர்மங்களைச் செய்தான் என்பது உண்மையே, இருப்பினும், அதிலும் பிராமணர்களுக்கே முன்னுரிமை (அயோத்திய காண்டம், சர்க்கம் 32, ஸ்லோகம் 45) [1] ஏனென்றால் அது புண்ணியம், அது தெய்வீகப் பலன்களைத் தரக்கூடியது என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமை சமூகங்களும், முதலாளித்துவ சமூகங்களும் தான தர்மத்தை ஒரு புண்ணிய செயலாக கருதுகின்றன. ஒரு சமத்துவமான சமூகத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக யாரும் யாருடைய தயையையும் கொடையையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை இருக்காது; மாறாக உரிமைகளின் அடிப்படையிலான ஏற்பாடுகளே நிலவும்.

ஆர்வமூட்டும் வகையில் அடுத்துவந்த காலங்களில் இராமாயணக் கதை பெண்கள் பலராலும் மறுகதையாடல் செய்யப்பட்டுள்ளது. சந்த்ரபதி இராமாயணமானது சீதையின் கண்ணோட்டத்தில் அவளுக்கு நிகழ்ந்த அநீதிகளைப் பேசுகிறது. அதில் இராமன் “ஒரு குழப்பவாதி, பலவீனமானவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில், மொல்லா என்னும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் ஒருவர் பிராமணக் கவிகளுக்கு சவால் விடும் வகையில் இராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து செவ்வியல் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார். அதன் மூலம் அந்த புராணக் கதைகளின் மீது இருந்து வந்த ஆதிக்க சாதி ஆண் மைய அதிகாரத்தை தகர்த்தார். அதேபோல் சம்ஹித ஆர்னியின் சீதா இராமாயணம் பட்டுவா சுருள் பட ஓவியர் மொய்னா சித்ரகர் என்பவரால் படக்கதையாக சொல்லப்பட்டது. அதில் சீதை தன்னுடைய பிறப்பு முதல் திருமணம் வரை, கடத்தப்பட்டது முதல் திரும்பி வந்தது வரை, அதன் பின்னர் கைவிடப்பட்டு குழந்தைப் பெற்றது வரையிலான கதை ஓவியங்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

மார்க்சியப் பெண்ணியவாதியான ரங்கநாயகம்மா பிராமணிய ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துவதோடு, இராமாயணமானது அடிமைகளும், விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், பெண்களும் அடங்கி இருக்கச் செய்ய ஆளும் வர்க்க எஜமானர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டினை கட்டிக்காக்கும் வகையில் அதனை பிரச்சாரம் செய்கிறது என்று கூறுகிறார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்க கருத்தியல்களே ஆளும் கருத்தியல்களாக இருக்கின்றன” என்று மார்க்ஸும் எங்கல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதினார்கள். “சுதந்திரமானவனும், அடிமையும், உயர்குடியும், சாமானியரும், நிலப்பிரபுவும் அடிமையும், பட்டரை முதலாளியும் தொழிலாளியும்” எதிர் எதிராக இருக்கினறனர்; அவர்கள் வர்க்க உணர்வால் பிரிந்து முரண்பட்டு நிற்கினர்னர். மிகப் பெரிய இந்த சமூக ஏற்றத்தாழ்வு இராமாயணத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இராமாயணத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் மறுகதையாடல் செய்வதானது இங்கு சலசலப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் அவரது கடுமையான ஆய்வு அத்தகையோருக்குத் தேவையான விடையை அளிக்கவல்லது.

ஆங்கிலத்தில்: லாவண்யா ஷன்போக் அரவிந்த்
தமிழாக்கம்: கொற்றவை

No comments:

Post a Comment