Apr 12, 2017

அடையாள அரசியலின் உச்சகட்டம்....


உற்பத்தி நடவடிக்கை என்பது மனித நடவடிக்கையின் அடித்தளமாக இருக்கிறது, ஆகவே, உற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடித்தளமாக இருக்க முடியும், அதிலிருந்து உருவாகும் வர்க்கங்கள் மட்டுமே அதன் அடிக்கட்டுமான வகையினமாக இருக்க முடியும். மற்ற சமூக வகையினங்களின்வேர்களில் இந்த வர்க்க சாரம் ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றிருக்கும். இதனால், மனிதர்களுக்கு இடையிலான அனைத்து அடையாளங்களிலும், வர்க்க அடையாளமே அனைத்திலும் மேலெழும் அடையாளம்.

 இந்த அடிப்படையில்தான் பரந்த மக்கள் கூட்டத்தின் அணிதிரட்டல் நடைபெற வேண்டும். வர்க்க அடையாளத்தை பலப்படுத்துதல் எனும்போது, மற்ற அடையாளங்களைப் புறக்கணித்தல் என்று பொருளாகாது, மாறாக நியாயமான பிரச்சினைகளான தேசியம், பாலினம், சாதி போன்ற போராட்டங்களை, முதன்மைப் போராட்டப் பாதையில் ஒருங்கிணைப்பது என்றாகும். வர்க்க அடையாளம் மட்டுமே மற்ற அனைத்து அடையாளங்களைக் காட்டிலும் மேலெழும் சர்வதேசிய அடையாளம்.

முதலாளித்துவமானது அனைத்து அடையாளங்களின் போராட்டங்களையும் தனக்கானப் பாதுகாப்பு அரணாக, புகை-திரையாக, வர்க்க அணிதிரட்டலை குறைப்பதற்காக, தனது வசதிக்கு ஏற்றவாறு கையாள்கிறது. பாட்டாளி வர்க்க முன்னணிப் படையானது தங்களது வர்க்க சாரத்தைப் புரிந்துகொண்டு, பரந்த புரட்சிகரப் போராட்டத்திற்கு துணை நிற்கிறது, அதுவே அவர்களை வர்க்கப் போராட்டத்தின் பிரதான அங்கமாக ஆக்குகிறது. இன்றைக்கு, புதிய நீரோட்டமாக நவ-மார்க்சியர்கள் தோன்றியுள்ளனர். வர்க்க ஆய்வுகள், வர்க்கப் போராட்டம், கட்சி, அரசு, புரட்சி போன்ற அடிப்படை செயல்திட்டங்களிலிருந்து விலகிடவோ அல்லது தப்பிக்க எண்ணியோ, அவர்கள் பின் நவீனத்துவ சொல்லாடல்களின் (அடையாள அரசியலையும் அது உள்ளடக்கியது) வார்த்தை ஜாலங்களைப் பயபடுத்துகின்றனர். இந்த நீரோட்டத்தின் சுபாஷ் கட்டாடே வகையறா சிந்தனையாளர்கள், பல சிறிய அமைப்புகள் மற்றும் தலித் இயக்கங்களின் புதிய சுய அடையாளங்களைக் கொண்டாடுகின்றனர். ஆனால், அத்தகைய அமைப்புகள் அருவருக்கத்தக்க வகையில் பாராளுமன்ற அரசியலின் சந்தர்ப்பவாத ஆட்டக்காரர்களானார்கள் என்பதை இவர்கள் காணத் தவறுகின்றனர்.

இந்த அடையாள அரசியலின் ஒரு உச்சகட்டமாக, தலித் சாதிகள் மற்றும் உட்-சாதிகளுக்கு இடையிலான பாகுபாடாக, மோதல்களாக முன்னுக்கு வருவதை அவர்கள் காண்பதில்லை. (உ.ம் ஆந்திராவில் மாலா மடிகா போராட்டம்) (தமிழ்நாட்டில் பறையர் - அருந்ததியர் போராட்டம் - மொ.ர்). இதுபோன்ற தலித் அடையாள எழுச்சியியை முன் வைத்துதலித் விடுதலைக்கான, சாதி ஒழிப்புக்கான திட்டங்கள் எப்படி உருவாக்கப்படும் என்று அவர்கள் சொல்வதில்லை. தலித் அடையாள உணர்வை ஏற்படுத்தியதால், தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அவர்கள் அம்பேத்ருக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அதேவேளை சாதியப் பிரச்சினையைப் புறக்கணித்ததாகவும், அம்பேத்கரிடமிருந்து விலகி இருந்ததாகவும் குற்றம் சாட்ட அவர்கள் சளைப்பதேயில்லை, ஆனால், அம்பேத்கருடைய அரசியல் கண்ணோட்டம், அரசியல் பாத்திரம், தலித் விடுதலைக்கான அவரது செயல்திட்டம் மற்றும் வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றிய அவரது கண்ணோட்டம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள் ஆய்வு செய்வதேயில்லை.

மார்க்சியத்தை “பன்றித் தத்துவம்” என்றும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றியும், மதம் மற்றும் மார்க்சியத்தைக் காட்டிலும் பௌத்தமே மேன்மையானது என்றும் சொன்ன அவரது சிந்தனைகள் எவ்வளவு உண்மையானது, தர்க்கப்பூர்வமானது என்று அவர்கள் நமக்கு சொல்வதில்லை. தலித்துகளுடன் நின்றதால் அம்பேத்கரை தொழ வேண்டும் என்பதே அவர்களது நம்பிக்கை, மேலும், கம்யூனிஸ்டுகளை வசைபாடுவது அவர்களுக்கு ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. ஒடுக்கப்பட்ட சமூகமானது, அவர்களது பழைய கதாநாயகனின் சிலையை எடுத்துச் செல்வதால் ஒருவரைப் பின் தொடராது மாறாக விடுதலைக்கான உறுதியான திட்டம், தெளிவானதொரு செயல்திட்டத்தைக் கொடுக்க வேண்டும். மற்ற புறவய மற்றும் அகவய காரணங்களால் புரட்சியின் உள்ளார்ந்த சக்திகள் பலவீனமாக இருந்தால், இதை செயல்படுத்த நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் அதற்கு வேறு வழியில்லை. சாதியமைப்பைப் புறக்கணித்தது, அதைப் புரிந்துகொள்ளாததே கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோல்விக்கு முக்கியக் காரணம் எனும் எண்ணமே முற்றிலும் தவறானது. அதன் கருத்தியல் பலவீனத்தால், இந்திய சமூகத்தின் அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் பற்றிய ஆய்வை, பகுப்பாய்வை ஆழமாக மேற்கொள்ள முடியாமல் போனதும், அதன் விளைவாக - மூல உத்தி, பொது உத்தி அடங்கிய- ஒரு முழுமையான வேலை திட்டத்தை வளர்க்க முடியாமல் போனதே அதன் தோல்விக்கான முக்கியக் காரணம். சாதியப் பிரச்சினையை சரியாக பகுப்பாய்வு செய்து உறுதியான நடவடிக்கைகளை வகுக்க முடியாமல் போனதென்பது முக்கிய பலவீனத்தின் ஒரு பகுதி அல்லது அதன் விளை பொருள் எனலாம்.....

(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலிலிருந்து ஒரு பகுதி)


No comments:

Post a Comment