Apr 1, 2017

நானும் கதை எழுதினேன்!....

மௌனம், பிரிவு, அமைதி, இடைவெளி, விலகல், வலி போன்ற சொற்களுக்கு ஒரு பொருள் உண்டு. ஆனால் அதை அனுபவிக்கும் நபரை பொறுத்து அந்தப் பொருளுக்கு மாறாக வேறொரு பொருளாகவோ / உணர்வாகவோ அது மாறக்கூடும். அத்தகையதொரு அனுபவம் உண்மையில் இனிமையானது. ஏனென்றால் இச்சொற்கள் உணர்த்தும் பொருளுக்கு மாறாக அந்நபர் முற்றிலும் வேறான ஓர் அனுபவத்தை பெற்று வருகையில்…. ஆம்! அப்போது நகைச்சுவை உணர்வு மேலெழுகிறது! விந்தையானதே!
நான் எழுத வாசிக்கத் தொடங்கிய பின்னணியை அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறேன். (கொடுமையான!) கவிதையில் தொடங்கி, தீவிர அரசியல் கட்டுரைகள் என்று தொடரும் பயணம் அது. கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடும் நீங்கள் ஏன் இன்னும் கதை எழுதாமல் இருக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் கேட்பதுண்டு. “அய்யோ! எனக்கு பொறுமையில்லை” என்பேன். (தாங்கள் என்ன விபரீதத்திற்கு வழி வகுக்கிறோம் என்று தெரியாமல் தவறு செய்த அந்த ஆத்மாக்களை மன்னிக்கவும் கர்த்தரே!) 

“என்னால் புனைவுகளை படிக்கக்கூட முடிவதில்லை, இதில் எழுதுவது வேறா” என்பேன்.
“எதையும் அப்படி ஒதுக்காதே” என்பான் வசுமித்ர “புனைவுகளை படிப்பதன் மூலம் மொழி வளம் பெறும்” என்றார்கள் வசுமித்ரவும், பாலச்சந்திரனும். சில எழுத்துகளை பரிந்துரையும் செய்தார்கள். வாசிக்க முயற்சி செய்தேன். செக்காவ். கார்க்கி தொடங்கி கீ.ரா, தி.ஜா என்று கொஞ்சம் பயணித்தேன்… ஏனோ முடியவில்லை! (மன்னிக்கவும், புனைவுகள் மேல் தாழ்வான மதிப்பு ஏதும் எனக்கு கிடையாது. மனநிலை அப்படி! பருவம் நாவல் வாசிக்க வேண்டும் என்பது தற்போதைய இலக்கு).

தேனியில் வசித்த காலம் இலக்கிய சூழல் கொஞ்சம் அதிகரித்தது. நிறைய நேரம் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது!

ஆம்! 2013இல் நாமும் கதை எழுதினால் என்ன என்னும் ‘பேராசை’ மேலெழுந்தது. சூழலும் அதற்கு ஒத்துழைத்தது!

மூன்று கதைகள் எழுதினேன். உண்மை விளங்கியது! “மரியாதையாக இந்த பேராசையைக் கைவிடு” என்று உள்ளே ஒரு குரல் ஓங்கி என் மண்டையில் அடித்தது. ஆகவே, அந்தக் கதைகளை கணினியில் புதைத்து வைத்து விட்டேன். ஒரு வருடம் கழித்து வசுமித்ரவிடம் பகிர்ந்தேன். நல்ல முயற்சி, ஆனால் போதாது என்றான்! (வேறு என்ன எதிர்பார்க்க முடியும் அவனிடம்!).
பிறகு சில தோழர்களுக்கு அனுப்பினேன். பாவம் அவர்கள்!

இப்போது நான் ஒரு இடைவெளிக் காலத்தில் இருப்பதால், அந்தக் காலமும், கதையும் நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றிலும் கற்றுக்கொள்ள ஏதோ இருக்கிறது என்று நம்பும் ‘பெரிய மனது’ படைத்தவர்களல்லவா நாம்! (எமது வட்டம்). ஆகவே நான் எழுதிய கதைகளை எனது வலைப்பூவில் பகிர்வது என்னும் முடிவெடுத்துவிட்டேன்.

எப்படி கதை எழுதக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணப் பாடமாக அது திகழும் என்னும் நம்பிக்கையில் :D

எச்சரிக்கை! இதயம் பலவீனமானவர்கள்! தீவிர இலக்கிய ஆர்வலர்கள் இக்கதைகளை படிப்பீர்கள் என்றால் அது அவ்ர்கள் சொந்த அபாயத் தேர்வு!

சில விபரீத முயற்சிகளாலும் மகிழட்டும் வாழ்க்கை!

No comments:

Post a Comment