Apr 1, 2017

விடியலுக்கு முன் ஒரு கதை….

தாம்பரம் சானிடோரியம் சித்த மருத்துவ கல்லூரி வாயில், ஞாயிறு காலை 11 மணி, மீன்கள் விற்பனை சூடாக நடந்து கொண்டிருந்தது.செங்கல் சுடும் வேளையில் சூளைக்கு அருகில் நடப்பது போன்று சுடும் வெயில், தனது தோளில் கிடந்த சிகப்புத் துண்டை எடுத்து வடியும் வியர்வையைதுடைத்துக் கொண்டே பத்தாம் கடையாக இருக்கும் தங்கம்மா அக்காவின் கடையில் வந்து நின்றார் ஜீவானந்தம்.

”என்னக்கா இன்னைக்கு என்ன மீனு விசேசமா வந்திருக்கு”
”கணவா வந்திருக்கு, சுக்கா செய்ய கடம்பா வாங்கிக்கங்க”
”சரி கணவா ஒரு கிலோ, கடம்பா அரை கிலோ கொடுக்கா”
”310 ரூவா கொடுங்க தம்பி”

மீன்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றார் ஜீவானந்தம். ஒரகடம் செல்லும் பகுதியில், கட்டவாக்கத்தில்தன் ஓய்வூதியப் பணத்தில் 10 வருடங்களுக்கு முன் ஒரு அரை செண்ட் இடத்தைப் பிடித்து போட்டிருந்தார். பிள்ளைகள் தலையெடுத்து அதில் ஒரு வீடு கட்டியிருந்தது.

டோரா புஜ்ஜி கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த பேரன் பேத்திகளைக் கொஞ்சியவாறு, மருமகளிடம் “அம்மா கணவா கொழம்புக்கு, கடம்பா சுக்காவுக்கு” என்று சொல்லி கொடுத்தார்.

ஞாயிற்று கிழமையாதலால் அனைவரும் வீட்டில் இருக்கும் நாள்.அன்று ஏதோ ஒரு அசைவச் சமையல் நிச்சயம் உண்டு.மணக்கும் மீன் உணவை உண்டு, ஒரு மதியத் தூக்கம் போட்டு எழுந்து, தொலைக்காட்சியில் மாலை ஒளிபரப்பப்படும் திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.
தன் மகனைப் பார்த்து ஜீவானந்தம், “தம்பி ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த இடம் ஒரே காடா இருந்துச்சு, இப்ப பாருங்க இது தொழில் நகரமா மாறிட்டு வருது, மீனு வாங்கிட்டு வரைல பாத்தேன் இந்த ஊரச் சுத்தி வீடு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க, இப்ப அங்கங்கன்னு வீடுங்க தள்ளி தள்ளி இருக்குது, இன்னும் இரண்டு வருசத்துல காத்து போக எடமில்லாம வீடுங்க நெறஞ்சுடும், ”

“ஆமாம் மாமா, போற போக்க பாத்தா மும்பை, தில்லி மாதிரி சென்னையும் புது சென்னை, பழைய சென்னைன்னு மாறி, ஜனங்க கூட்டமும் அதிகமாகிடும் போல இருக்கு. அப்புறம் இந்த மெட்ரோ ரயில் வேற வருது, மும்பை மாதிரியே, நாம டிரெயின்ல ஏற சிரமப் பட வேண்டாம், மக்கள் கூட்டமே நம்மள உள்ள தள்ளி, எங்க இறங்கணுமோ அங்க வெளிய தள்ளியும் விட்டுடும்”

“அதுமட்டுமா” என்றார் ஜீவானந்தத்தின் மனைவி ”வீடுன்னா ஒரு மாடி ரெண்டு மாடி கட்டுவாங்க, இப்ப என்னடான்னா 30 மாடி நாப்பது மாடின்னு கட்டுறாங்க, ஸ்விம்மிங் பூல், ஜிம்மு, கடை, கன்னின்னு எல்லாத்தையும் உள்ளைய கட்டிட்டு மெய்ண்டனன்ஸுன்னு ரெண்டு வீட்டுக்கு கட்டுற வாடகை காசல்ல கேக்குறாங்க”

“அந்த நாப்பதாவது மாடிய விக்கும் போது என்ன சொல்றாங்களாம் தெரியுமா அத்தை, நீங்க நேரடியா அந்தக் கடவுளோட அப்படியே தினம் தினம் ஃப்ரீயா செல் ஃபோன் இல்லாம பேசலாம்னு சொல்றாங்களாம்”

ஓய்வு நாள் இப்படி அசைவ உணவும், நையாண்டியுமாகக் கழியும்.மறுநாள் சுழற்சிக்குத் தயாராக எல்லோரும் உறங்கச் சென்றனர்.

அதிகாலை 3 மணி, நான்கு பேர் கருப்பு போர்வையை போர்த்திக் கொண்டு ஜீவானநந்தத்தின் வீட்டுக் கதவை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.பேரன் பேத்திகள் ஜீவாவின் மனைவியோடு ஒரு அறையில் படுத்திருக்க, மகனும் மகளும் ஓர் அறையில் படுத்திருக்க ஜீவானந்தம் எப்போதும் ஹாலில் படுத்துக் கொள்வதே வழக்கம்.

யாரோ கதவைத் திறக்க முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜீவானந்தம் உடனே அதை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டார்.கதவைத் திறந்து அந்த நான்கு பேர் உள் நுழைந்தனர்.அதில் ஒருவன் ஜீவானந்தம் விழித்திருப்பதைக் கண்டு சுதாரித்து தன் கையில் இருக்கும் உருட்டுக்கட்டையை ஓங்கினான்.உடனே ஜீவானந்தம் தன் கைகளில் இருக்கும் அந்த பலகையை தூக்கிப் பிடித்து “பொருமை, பொருமை, அடிக்காதீங்க, நான் கத்தமாட்டேன்” என்று டார்ச் லைட்டை அடித்தவாறு சொன்னார்.

“உங்கள் நிலைமைக்கு நானும் ஒரு காரணம், அதனால் நான் உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன். வீட்டில் என்ன இருக்கிறதோ அதை எல்லாம் கொடுத்துடுறேன்.எங்கள அடிக்காம, துன்புறுத்தாம அதை வாங்கிட்டுப் போங்க” என்று அந்த பலகையில் எழுதியிருந்தது கண்டு திருடர்கள் துணுக்குற்றார்கள்.

செய்வதறியாது குழம்பி நிற்கையில், ஒருவன் “டேய் என்னடா பாத்துக்குட்டிருக்க, ஒண்ணு இந்த பெருசு நம்மள போட்டு பாக்குது, இல்ல அது லூசா இருக்கணும், ரெண்டும் நமக்கு ஆபத்து. அடிக்கு பயப்படுது போல! பேசாம மயக்க மருந்த மூக்குல வச்சி அமுத்து, சோலிய முடிச்சிட்டு களம்புவோம், விடியப் போகுது”

“ஐயோ இல்ல தம்பி என்னை நம்புங்க, உங்களோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம், அதனால தான் உங்ககிட்ட பேசுணும்னு சொல்றேன். நான் பேசுனப்புறம் சொன்ன சொல் தவறுனா என்ன என்ன வேணா செய்யுங்க”

”இத பாரு பெருசு, நாங்க ரொம்ப மோசமானவனுங்க, எங்ககிட்ட சும்மா லந்து பண்ண குறவளைய கடிச்சி துப்பிடுவோம் சொல்லிபுட்டேன் ஆமா”

“அய்யோ நீங்க மோசமானவங்க இல்லப்பா, உங்கள அவனுக அப்படி ஆக்கிபுட்டானுங்க”
“யோவ் என்னையா நீ லூசா, எங்கள எவன்யா அப்படி செஞ்சது, எங்க கதைய எவனும் எங்கயாவது எழுதி வச்சிருக்கானா, நீ எப்பையா படிச்ச, சும்மா கடுப்பேத்ற”

“தம்பிங்களா, அதோ அந்த சுவத்துல ஒரு போட்டோ இருக்குது பாருங்க, அதுல ஒரு தாடிக் காரரு மேஜ மேல கைய வச்ச மாதிரி சாஞ்சி உக்காந்திருக்காரில்ல, அவருதான்பா நம்ம கதையெல்லாம் எழுதி வச்சுருக்காறு. அதைப் படிச்சிட்டு தான் நான் உறுதியா சொல்றேன்”
நால்வரும் அந்த புகைப்படத்தை திரும்பிப் பார்த்தனர்.புகைப்படத்தின் வழியே ஒருவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

“யோவ் இன்னா நக்கலா, போட்டோ கருப்பு வெள்ளைல இருக்கு, நாங்க பொறந்து 20 வருசம்தான் ஆகுது, அவருக்கு எப்படியா எங்க கத தெரியும்”

“அதுதான் தம்பி அவருடைய விசேசம். சரி என்னைய நீங்க நம்புறீங்கல்ல. மொதல்ல உக்காருங்க. எங்க வீட்டுல இன்னைக்கு மீன் கொழம்பு, மொதல்ல சாப்புடுங்க. நான் எம் புளையையும், மருமகளையும் எழுப்புறேன்”

“யோவ் யோவ், இது தான் உன் திட்டமா, தனியா இருக்குறதால பேசுறாப்புல பேசி, எங்கள தெச திருப்பி, ஆள் சேக்குறியா”

“அட போங்கப்பா, அவங்களுக்கும் உங்க கதையெல்லாம் தெரியும், நான் அவங்கள கூப்பிடுறேன், உங்களுக்கே புரியும்”

திருடர்கள் குழம்பி நிற்கையில், ஜீவானந்தம் அனைவரையும் எழுப்பினார்.
“என்னப்பா அவங்கல்லாம் வந்துட்டாங்களா”

ஒன்றும் புரியாமல் திருடர்கள் தலையைச் சொறிந்து கொண்டு நிற்க
“என்ன மாமா வந்துட்டாங்களா, சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா”
“ஆமாம்மா எடுத்து வை.. தம்பிகளா கைகால் கழுவிட்டு வாங்க, சாப்பிடுவீங்க”
”அண்ணே சோத்துல விசத்த கிசத்த கலந்து வச்சிருப்பாய்ங்களோ… குடும்பமே சொல்லி வச்சாப்புல பேசுதேண்ண”
“தம்பிகளா விசம், கிசம்லாம் கலக்குற அவசியம் இல்ல தம்பி, உங்களோட நானும் வேணா ஒரு வாய் சாப்புடுறேன். உக்காருங்க”

குழப்பத்தோடு கை கழுவிவிட்டு திருடர்கள் வந்து உட்கார்ந்தார்கள்.மருமகளும், மகனும் உணவு பரிமாற திருடர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அனைவரும் அமைதியாக இருந்தனர்.
“தம்பி, உங்களோட இந்த நிலமைக்கு நானும் ஒரு காரணம்னு சொன்னேன் இல்லையா, அதனால எங்கிட்ட என்ன இருக்கோ அத நான் கொடுத்துடுறேன். சொந்த வீடு இருக்குறதால பெரிய பணக்காரங்க இல்ல தம்பி, புள்ள லோன்லதான் இந்த வீட்ட கட்டியிருக்கான். என்ன வீட்டுல ஒரு 10,000 ரூபா பணம் இருக்கும், மருமக கழுத்துல காதுல தங்கமெல்லாம் போடுற பழக்கம் இல்ல, அதனால அதுக்கு பதிலா வேணா இந்த டி.வி, அப்புறம் கொஞ்சம் பித்தள பாத்திரம் இப்படி ஏதாவது இருக்குறத எடுத்து மூட்ட கட்டிக்கங்க”

“பெருசு, என்னதான்யா உன் பிரச்சனை”
“இது எம் பிரச்சன இல்ல தம்பி, உங்க பிரச்சனை”

“நீங்க உங்கள ஏதோ பெரிய திருடன், கொள்ளைக்காரன்னு நினைச்சுட்டு இப்படி இருட்டுல வந்து கஷ்டப்படுறீங்க, ஆனா அவங்க பட்டப் பகல்ல ஏ.சி ரூம் போட்டு உக்காந்து என் பையன மாதிரி, எம் மருமகள மாதிரி ஆளுங்கள வேலைக்கு வச்சுகுட்டு, உங்கள மாதிரி ஆளுங்கக்கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்குறாங்க”

“எங்ககிட்ட கொள்ளையடிக்க என்னயா இருக்கு, இதோ எங்க ஆத்தா கட்டிவுட்ட அரணாக் கயிறு கூட வெளுத்துப் போச்சு”

“என்ன தம்பிகளா நீங்க, உங்ககிட்ட அவனுங்ககிட்ட இல்லாத ஒரு சொத்து இருக்கே, அத புடுங்கிக்கிட்டு தான அவனுங்க கார் பங்களான்னு சேத்து வச்சிருக்கானுங்க”

“அய்யோ, அண்ணேன் இந்தாலு நம்மள லூசாக்கப்பாக்குறாண்ண”

“தம்பிகளா உங்கக்கிட்ட ஒரு உடம்பும், இரண்டு கையும் இருக்கே அது எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

திருடர்கள் விழித்தனர்...

“உங்களப் போல, என்னப் போல உள்ளவங்க உழைச்சு கொட்டுறோம்..அதுல கொஞ்சம் கிள்ளிக் கொடுத்துட்டு அவனுக கொள்ளையடிச்சுக்குறானுக தலைமுறை, தலைமுறைக்கா”
“யோவ் நீ இன்னா ஏதாவது அரசியல் கட்சிக்கு ஆள் சேக்குற ஏஜண்டா”

சிரித்துக் கொண்டே ஜீவானந்தம், தம்பிகளா, “நீங்க ஏன் திருட வந்தீங்க”

“ஆங், முடியெறக்க காசில்ல, அதான் போலீஸ்ல மாட்டிக்கிட்டா அவனுக எல்லாத்தையும் எறக்கிடுவானுங்கல்ல, செலவு மிச்சம் பாருங்க, அதான்”

“அதில்ல, வயத்துக்கு கஞ்சி இல்ல, கஞ்சி இருந்தா, போட்டுக்க நல்ல துணி இல்ல, நல்ல துணி இருந்தா, ஆத்தாக்கு வைத்தியம் பாக்க துட்டில்ல, இதெல்லாம் இருந்தா, கார் பங்களா இல்லையேன்னு அவனுகளப் பாத்து ஆச வருதில்ல”

“ஆமா இன்னா இப்ப, நீ இன்னா புத்தரா ஆசப்படக் கூடாதுன்னு சொல்லப் போறியா”
“நிச்சயமா இல்ல தம்பி, ஆசப்படனும், அவனுக ஒரு வீடு, ஒரு கார் இருந்தாலும் போதாதுன்னு வீடு, காடு, தோப்பு, ப்ளைட்டுன்னு வாங்கிப் போடுறாங்களே, அப்ப நமக்கு மட்டும் ஆச வரக்கூடாதா? நல்லக் கதையா இருக்கே… நீங்க நல்லா ஆசப் படனும் தம்பி”

“அட இன்னாய உன்னோடா பெரிய பேஜாரா கீது”

”ஆசையோட சேத்து கொஞ்சம் அறிவையும் வளத்துக்கிட்டா, அவனுங்கக் கிட்ட மட்டும் எப்படி இம்புட்டு காசு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்ல”

“அந்த அறிவு மட்டும் வந்துட்டா தம்பி, திருடப் போய் மாட்டிகுட்டு, ஜெயிலுக்கு போய் அடி வாங்குறது, இல்ல அள் கிடக்காத கேசுல உள்ள போய் என்கவுண்டர்ல சாகுறது இதுக்கெல்லாம் அவசியமே இருக்காது”

“அவனுக தொழில் செய்றானுக, அதுக்கு தேவைப்படுற மொதல் அவனுங்கக் கிட்ட இருக்கு, நம்மகிட்ட இன்னா நைனா இருக்கு.. நீ சொன்னா மாதிரி குண்டி கழுவ ஒரு கையும், துண்ண ஒரு கைய்யும் இருக்கு”

“ம் அப்ப அந்த மொதல் அவனுங்கக் கிட்ட எப்படி வந்துச்சு? நமக்கு ஏன் கிடைக்க மாட்டேங்குது?”

“ம், அவனுக, பாட்டன், பூட்டன், அப்ப, ஆயிக சேத்து வச்ச சொத்து அது”

“சேத்து வச்சதில்ல தம்பி, எல்லாம் அடிச்சு புடுங்குனது, ஏமாத்திப் புடுங்குனது”

“என்ன பெரிசு அடிச்சுப் புடுங்குனாங்கங்கிற, அடிமைங்குற… ஒண்ணும் விளங்கலையே”

“மாமா, நீங்க அவங்களோட பேசிட்டிருங்க, நாங்க தூங்கப் போறோம், காலைல வேலைக்குப் போலனா, மெமோ கொடுத்துடுவானுக”

“ஏய் இரு இரு மொதல்ல உங்க செல் போன எல்லாம் இங்க குடுத்துட்டு போங்க,கதவ தொறந்தே வச்சிருக்குனும் சொல்லிபுட்டேன், ஆமா”

“அட ஆமா சாமிகளா, ஜமீன்தாரு, பண்ணையாரு, மில் ஓனருங்கல்லாம் பின்ன என்ன பண்ணினாங்கன்னு நெனக்குறீங்க?”

“நம்ம பாட்டன், பூட்டன்கள அடிமைகளாக்கி, அவங்கள கடன் காரர்களாக்கி, நிரந்தர அடிமைகளாவும், பிச்சைக்காரனுங்களும் ஆக்கிபுட்டானுங்க, இதுல மேல் சாதிக் காரவுக புள்ளைங்க அப்படி இப்படின்னு படிச்சு, சர்க்கார் உத்தியோகம், வெள்ளக்கார பய புள்ளைங்ககிட்ட உத்தியோகம்னு பாத்து ஏதோ கொஞ்சம் தப்பிச்சுட்டானுங்க, சொத்தும் சேத்துப்புட்டானுங்க”

“சாதி, தீட்டுன்னு உங்களப் போலவுகள படிக்கவுடாம பண்ணி, அவங்களுக்கு எப்பவும் நிரந்தர கூலிகளா வச்சிகிட்டானுங்க, அதனாலதான் உங்களவுக பரம்பரையா இன்னும் தல தூக்க முடியாம இருக்கீங்க, அதுல சில பேரு இப்படி திருட, கொலை செய்ய, அடியாள் வேல பாக்க கிளம்பிடுறிங்க”

“நாங்க மட்டுமா இதச் செய்யுறோம், இஞ்சினீறிங்க் படிச்சவக, அரசியல்வாதிப் புள்ளைங்க கூட திருடலையா, சூதாடலையா”

“ம் அதுவும் பேராசதான் தம்பி, இங்க பணத்தவச்சு தானே மதிப்பு, அதான் எல்லா பயலும் பணத்துக்கு பின்னாடி கண்ணு முன்னு தெரியாம ஓடுறான்”

“அதான் இருக்குறவன்கிட்ட இருந்து எல்லாத்தையும் புடுங்கிட்டா, எல்லாம் சரியாகிடும்”

“ஓஹோ இப்பத்தான புரியுது, பெரிசு… பெரிய திட்டமாத்தான்யா போடுற, நீ ராபின் ஹூட் ஆகுறதுக்கு எங்கள உங்கிட்ட வேலைக்கு கூப்புடத்தான இத்தனக் கதையச் சொல்லிக்குனு இருக்க”

“அடப் போங்கப்பா, என் வயசுக்கு இனி நான் சொவரு ஏறி குதிச்சு புடுங்கப் போறனாக்கும், எல்லாத்தையும் பறிக்குறதுன்னா அப்படியில்ல தம்பி, எவன்கிட்டையும் சொத்தே இல்லாம செய்யுறது, எல்லா பயலும் உழைச்சித்தான் சாப்புடனும்னு ஒரு நிலைமையக் கொண்டுவரதுன்னு அர்த்தம்”

“அய்யோ அப்ப நாங்களுமுல்ல  உழைக்கனும், உழைச்சா என்னய்யா பெரிசா கிடக்கும், ஒரு நாளைக்கு 50 ரூபா கிடைக்குமா”

“தேவைக்கு ஏத்த மாதிரி பிரிச்சுக்கும்போது அதுவே நமக்கும் போதுமானதா இருக்கும் தம்பி, அடுத்தவன்கிட்ட அதிகமா இருக்குறதாலத் தான நமக்கும் அதிகமா தேவைப்படுது”

நால்வரும் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.ஜீவானந்தம் தன் பேச்சைத் தொடர்ந்தார்.  ஒரு கட்டத்தில் வந்த நால்வரும் கண் கலங்கி நிற்க...

“யோசிங்க, உங்கள மாதிரி இருக்குறவுகளையும் இங்க கூட்டிட்டு வாங்க நான் சில கதைகள சொல்றேன், அப்புறம் அவங்களுக்கும் புரியும்”

“பெரிசு, மீன் குழும்போட ஏதாவது வசிய மருந்து வச்சிட்டியா தெரியாது, ஏதோ காத்து புடுங்கிவிட்ட டையரு மாதிரி ஆகிட்டோம். இத பாரு, நாங்க நல்லா யோசிக்குறோம், நீ டுபாக்கூர் வேல பண்ணினன்னு தெரிஞ்சுச்சு, நாளைக்கு வந்து மொத்தத்தையும் அள்ளிக்குட்டு உன் குடும்பத்தையே வீட்ட விட்டு தொறத்திட்டு நாங்க வந்து இங்க உக்காந்துக்குவோம் புரிஞ்சுதா”

”தாராளமா தம்பிகளா, நான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன்”

நால்வரும் கிளம்பினர். போகும் வழியில்...

“ஏண்ணேன், இந்த பெரிசு இரகசிய காமரா ஏதாவது வச்சு நம்மளா போட்டோ கீட்டோ புடுச்சிருக்குமோ, அவன் வீட்டுல எவனும் நம்மள ஒரு பைசாக்கு மதிக்கலையேண்ணே, சோத்தப் போட்டாய்ங்க, பெரிச உட்டுட்டு தூங்கப் போயிட்டாய்ங்க… அது நமக்கு உடுக்கை அடிச்சுது”

“இல்லடா, அந்த தாடிக்காரனோட போட்டோவ நான் நிறைய இடத்துல போஸ்டரா பாத்துருக்கேன், அருவா சுத்தி போட்டு, அது பக்கதுல கூட ஏதோ கொட்டேஷன் போட்டிருப்பாங்கடா”

“ஏதோ, உலக…. உலக… ஆங்.. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், அப்படின்னு”

“சரிண்ணே....  உலகத் தொழிலாளர்களத் தான கூப்பிடுறாங்க, நாமதான் திருடனுங்களாச்சே, உலகத் திருடர்களே ஒன்று கூடுங்கள்னு நம்மள எவன் கூப்பிடப் போறான்”

“அதாண்டா… ஒரிஜினல் திருடணுங்க ஏ.சி ரூமுக்குள்ள உக்காந்திருக்கனுங்க, நாம தெருவுல நிக்குறதாலத்தான் திருடுறோம்னு சொன்னாருல்ல”

“ஆமா, அதனால”

“நாம அவனுங்ககிட்ட இருந்து புடுங்குற வழியப் பாப்போம்லே”

“அண்ணே அவனுக வீடுங்கள்ள பெரிய பெரிய நாய் இருக்கும், செக்கூரிட்டி இருப்பானுக, நாம எங்க அங்க போறது”

“டேய் ஒத்தையா போனாதான உள்ள நுழைய முடியாது, கூட்டமா போனா, நாய் மட்டுமில்ல அந்த செக்கூரிட்டி பயலுகளும் ஒண்ணுக்கடுச்சுபுடுவானுக…இப்ப நான் போஸ்டர் அடிக்கப் போறன்..ஆமா”

“என்னனு அடிக்கபோறீய”

“திருடர்களாக்கப்பட்டவர்களே! பரம்பரைக் கொள்ளைக்காரர்களுக்கெதிராக, ஒன்று சேருங்கள்னு.. அப்புறம் பாரு நம்ம பயலுக, அந்த சிகப்பு சட்டக்காரவுக எல்லாரும் ஒண்ணு சேர்ந்தா என்ன நடக்குதுன்னு”

- கொற்றவை

2013 June 

No comments:

Post a Comment