Aug 6, 2016

ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை

வணக்கம் ஆதவன் தீட்சண்யா,
ரங்கநாயகம்மா எழுதியுள்ள சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே பதட்டத்திலும் அவசரத்திலும் நீங்கள் ஒரு வலைப்பதிவை (விமர்சனமல்ல – ஏனென்றால் விமர்சனம் என்பது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்) எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி! ஏன் இவ்வளவு பதட்டம் ஆதவன்? எந்த உண்மை உங்களைச் சுடுகிறது?
சாதியப் பிரச்சினை குறித்த ஆய்வை ஒருவர் எந்தத் தலைவரை முன் வைத்து, எவரின் ஆய்வை முன்வைத்து எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவரா இல்லை நீங்களா? ஒருவர் எதை எழுத வேண்டும், எதைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் உரிமையல்லவா? //அம்பேதகரை மட்டும் இவ்வளவு குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?.// எனும் உங்கள் கேள்வி நகைப்புக்குரியதாக இல்லையா? முன்னுரையில் ரங்கநாயகம்மாவே தெளிவாகச் சொல்லியுள்ளார்களே. ஆக, நீங்கள் மூன்னுரையைக் கூட படிக்கவில்லை? அம்பேத்கர் / அம்பேத்கரியம் / தலித் அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுதும் தேவை இந்த சமூக நிலைமையிலிருந்தே வருகிறது ஐயா! ஆனால் எந்த நேரத்தில் எதை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும், எதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. கருத்துச் சுதந்திரம். அதுகுறித்த விமர்சனத்தை எழுதுவது அதேபோல் மற்றவரது தனிப்பட்ட உரிமை.
விமர்சனபூர்வமான ஆய்வுப் புத்தகத்தை இப்படியா எதிர்கொள்வது? அம்பேத்கரின் சிந்தனைகளை, எழுத்துகளை, சாதி ஒழிப்பிற்காக அவர் முன் வைக்கும் தீர்வுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு ரங்கநாயகம்மா விமர்சித்து எழுதியுள்ளாரே தவிர இதில் குதர்க்கம், இளக்காரம் எல்லாம் எங்கிருக்கிறது? //குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம்// ஐயா, விமர்சனம் என்று வரும்பொழுது இதுபோன்ற சொல்லாடல்களை எல்லாரும்தானே பயன்படுத்துகிறோம். அம்பேத்கரை விமர்சித்ததாலேயே அது குதர்க்கமும், இளக்காரமும் ஆகிவிடுகிறதா? நீங்கள் எல்லாரையும் எப்போதும் மிகுந்த மரியாதையுடன்தான் விமர்சிக்கிறீர்களா?
உங்கள் ‘வலைப்பதிவில்’ ஏன் எல்லாமே அனுமானமாகவும், முத்திரைக் குத்தலாகவுமே இருக்கிறது. அறிவுபூர்வமான ஓர் எதிர்வினையாக ஒரு சிறு பத்தியைக் கூட காணமுடியவில்லையே! எந்த இடத்தில் ரங்கநாயகம்மா குறிப்பிட்ட சாதியினர் புத்தி சொன்னால் தாம் கேட்கவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை வைத்துள்ளார்? புத்தகத்திலிருந்து ஆதாரபூர்வமாக முன்வைத்துப் பேசுவதே அறிவுநாணயமாக இருக்க முடியும். அதைவிடுத்து பிறப்பின் அடிப்படையில் இந்த சமூகம் அடையாளப்படுத்தும் சாதியை ‘ஆய்ந்து அறிந்து’ அனுமானங்களின் அடிப்படையில் அவதூறு செய்வது முறையாகாது.
ரங்கநாயகம்மா எனும் பெயர் அவருக்கிருக்க ரங்கநாயகியம்மா என்றெல்லாம் எழுதியுள்ளீர்களே? இந்த பாடத்தை ஜெயமோகனிடமிருந்து கற்றீர்களா அதவன்? ஓ உங்கள் பெயர் ஆதவன் இல்லையா?
உங்கள் ‘வலைப்பதிவில்’ தெரியும் பதட்டத்தையும், அச்சத்தையும் காணும்போது அம்பேத்கரை விமர்சித்திருப்பதால் வந்த அறச்சீற்றம் போல் எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, இங்கு பொதுவாக ‘தலித் அரசியலின்’ பெயரால் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்கள் (அதிலும் குறிப்பாக சாதியப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் மேலடுக்கில் இருக்கும் ‘குறிப்பிட்ட சாதி’ ஆதிக்க அரசியல் – ஒருவகையில் இதுவும் சாதிய அரசியலே), என்.ஜி.ஓ நடத்துபவர்கள், ஒருசில அனுகூலங்களுக்காக தலித் ஆதரவு வேடம் போடும் குழுக்கள், நபர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்கும் பீதி இது.
மார்க்சியர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா என்கிறீர்களே, உண்மையில் சலிப்பாக உள்ளது ஆதவன். இந்தப் புத்தகத்திலேயே இதுபோன்ற முத்திரை குத்தல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக ‘தீண்டாமை எனும் மொண்ணையான ஆயுதம்’ எனும் கட்டுரையையும் ரங்கநாயகம்மா எழுதியுள்ளார். அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான்! ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினை, கீறல் விழுந்த ரெக்கார்ட்!
சாதியம் குறித்து ரங்கநாயகம்மா எதுவுமே கூறவில்லையா? அப்படியென்றால் உங்களுக்குத்தான் சாதியம் குறித்து எதுவும் தெரியவில்லை எனப் பொருளாகிறது. சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் வெளிப்பாடு, ஒவ்வொரு சமூகத்தில் அது ஒவ்வொரு வடிவை எடுக்கிறது, இந்தியாவில் அது இப்படிப்பட்ட ஒரு படிநிலை அமைப்பாக இருக்கிறது என்று மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளாரா இல்லையா? மேலும், மார்க்சியக் கோட்பாட்டை முன் வைத்து ஒரு சமூகக் கட்டமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்பதையும் அதில் விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சாதியின் தோற்றம் குறித்து இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை அம்பேத்கராலும் அதனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார். அதைத்தான் அவர் அம்பேத்கரின் எழுத்துக்களை ஆதாரமாக வைத்துப் பேசியிருக்கிறார். இதில் வெட்டி ஒட்டும் வேலையை செய்திருப்பது நீங்கள்தான்! இல்லை அம்பேத்கரின் ஆய்வுகள் அப்படி ஒட்டி வெட்டப்பட்ட ஆய்வுகள் என்று சொல்ல வருகிறீர்களா? ஏனென்றால் சாதியின் தோற்றம் குறித்து அம்பேத்கரின் ஆய்வுகளும், எழுத்துகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைத்தானே அவர் விளக்குகிறார்.
அம்பேத்கர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்கிறீர்கள்! அப்படியென்றால் அந்த விமர்சனத்தில் என்ன குறை உள்ளது என்பதை ஆசிரியரின் எழுத்துக்களை மேற்கோள்களாக வைத்தல்லவா நீங்கள் பேச வேண்டும். ரங்கநாயகம்மா அதைச் செய்திருக்கிறார், நீங்கள் செய்வது அவதூறு, கடிந்து சொல்வதானால் பிதற்றல். //இந்நூல் இந்நேரத்தில் தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது ஏன் // - மோடிகளும், சோனியாக்களும் தோற்றார்கள் போங்கள் – பாராளுமன்ற அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள் சதி என்று ஆவேசம் பொங்கப் பேசுவார்களே, அதுபோல் இருக்கிறது. எப்பொழுது வந்திருந்தால் நீங்கள் இது சமூகத்திற்கு அவசியம் என்று ஏற்றுக்கொண்டிருப்பீர்கள்? சாதியம் இருக்கும் வரை, சாதிய அரசியல் தொடரும்வரை ஒருவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அந்தப் போக்கில், மார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொள்ளும் ஒருவர் அக்கண்ணோட்டத்திலிருந்து எவரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதிலும் குறிப்பாக சாதியப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைத்திருப்பதாகக் கோரும்போது, அவரே குறிப்பிட்ட மக்களுக்கான தலைவர் என்று அரசியல் நடக்கும்போது, அத்தலைவர் சாதியப் பரச்சினைக்கான தீர்வைப் பேசும்போது மார்க்சியம் குறித்த தவறான கருத்துகளை முன்வைத்து பேசியிருக்கும்போது ஒரு மார்க்சியராக ஏன் மற்றவர் எதிர்வினையாற்றக்கூடாது?
அம்பேத்கருக்கோ, உங்களுக்கோ, தலித் செயல்பாட்டாளர்களுக்கோ இருந்தால் அது சமூக அக்கறை மற்றவர்களுக்கு இருந்தால் அது சாதிய வெறியாட்டமா? //வெறிகொண்டு ஆடுகிறார்// இதுமட்டும் மிகுந்த மரியாதைக்குரிய சொல்லாடலா ஆதவன்? பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பரிகாசம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் பெண் என்பதால் ஆடுகிறார் என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று நான் முத்திரை குத்தினால் அபத்தமாக இருக்காதா? விமர்சனம் என்பது இருசாராரையும் ஒருவர் படித்து அவரவரின் சொந்த அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து ஒரு முடிவுக்கு வரும்படி இருக்க வேண்டும், இல்லையா? ரங்கநாயகம்மாவின் புத்தகம் அதற்கு உதவும். உங்களது பதிவு அதற்கு உதவுமா?
ஒவ்வொரு முறை தலித்தியம் குறித்த அல்லது அம்பேத்கர் குறித்த விமர்சனங்களை வைக்கும்போதும் கம்யூனிஸ்டுகள் மட்டுமென்ன ஒழுங்கா? இந்தியக் கம்யூனிஸ்டுகள் சாதியப் புத்தியோடு இருக்கிறார்கள் என்பது தொடங்கி இங்குள்ள கட்சிகளின் தவறுகளை முன்வைத்து பேசப்படுகிறது. கட்சிகள், அமைப்புகள் குறித்த விமர்சனம் என்பது வேறு, தத்துவம் குறித்த விமர்சனம் என்பது வேறு. அது போன்ற விமர்சனம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அம்பேத்கர் மார்க்சியத் தத்துவம் குறித்த விமர்சனத்தை வைத்துள்ளார். அதற்கு ரங்கநாயகம்மா எதிர்வினையாற்றியுள்ளார். மார்க்சியம் ஓர் உலகக் கண்ணோட்டத்தை வழங்குகிறது, இந்த உலகக் கண்ணோட்டம் அனைத்து நாடுகளுக்கும், சமூகத்திற்கும் பொருந்துவதாக இருப்பதாலேயே அதை விஞ்ஞானபூர்வ தத்துவம் என்கிறோம். ஏற்றத்தாழ்வை ஒழிக்க, சமத்துவத்தை எய்திட ஒரு கோட்பாட்டை, செயல்திட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் விரும்புவதும் சமத்துவத்தைத்தானே. ஆனால் அவர் அதற்கான பாதையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் தவறிவிட்டார், அவரது உலகக் கண்ணோட்டத்தில் போதாமை உள்ளது இதைத்தானே அந்தப் புத்தகம் விளக்குகிறது. இதில் என்ன சாதியவெறி?
இதில் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ள என்ன இருக்கிறது? ஒருவேளை நீங்கள் புத்தகம் எழுதினால் உங்களை அப்படித்தான் ஒவ்வொரு முறையும் பாராட்டிக்கொள்வீர்களோ? அவ்வளவு சுயமோகம் கொண்டவரா நீங்கள்! புதிய தகவலாக இருக்கிறது.
//அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார்// ஐயா பெரிய மனது பண்ணி அம்பேத்கரின் கண்ணோட்டம், அம்பேத்கரின் தத்துவம், அம்பேத்கரியம் என்றால் என்னவென்று விளக்க முடியுமா? சாதியத்திற்கெதிரான போராட்டத்திற்காக அம்பேத்கர் முன்வைத்துள்ள செயல்திட்டங்கள் என்னென்னவென்று விவரிக்க முடியுமா? சாதியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஆய்வில் - அகமணமுறை, சமபந்தி விருந்து, இட ஒதுக்கீடு, அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம், அரச சோஷலிசம் இறுதியில் ஆன்மீகம் அதாவது பவுத்தத்தை தழுவுதல் இதைத்தான் அம்பேத்கர் பேசியிருக்கிறார். இதைத்தான் நீங்கள் தத்துவம் என்கிறீர்களா ஆதவன்? இவற்றில் இடஒதுக்கீடு தவிர மற்றவையெல்லாம் எவ்வாறு பயனற்றது (அதுவும் தற்காலிகமானது, அதன் சிக்கல்கள் என்ன என்பதையும் விளக்குகிறார்), குறிப்பாக அரச சோஷலிசம் என்பது மாற்று கிடையாது, தனியுடைமைக்கு சாதகமாக இருக்கும் அதே நிலையை வேறொரு விதமாக அது ஊக்கப்படுத்துகிறது என்றுதானே ரங்கநாயகம்மா விளக்குகிறார். இதில் என்ன திரிபுவாதத்தை, சாதிய வெறியை நீங்கள் கண்டீர்கள்?
தலித்தாய் பிறந்ததாலேயே எப்போது பார்த்தாலும் எதிர் தரப்பினரை சாதிவெறி பிடித்தவர்கள், தலித் விரோதி என்று இங்குள்ள ‘தலித் போராளிகள்’ விமர்சிக்கிறார்களே. அம்பேத்கரின் எழுத்துகளில் வருணத்திற்கு ஆதரவாக உள்ள கருத்துகளை, மநு பற்றிய புகழ்ச்சிகளை, இன்னும் இதர விவரணைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்கள் குறித்த அவரது முடிவுகளை, மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம், அது வன்முறை நிறைந்தது என்ற அம்பேத்கரின் அவதூறை என்னவென்று சொல்வீர்கள்? ஏன் இந்த பாரபட்சம்? ஏன் இந்த மழுப்பல்வாதம்? ஏன் இந்த ஒற்றைக் கண் பார்வை?
முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன? நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா? // சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது.// - உண்மையில், இங்குதான் உங்கள் திரிபுவாதம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. புத்தகத்தைப் படிக்கும் எவரும் (தன்னலவாத அரசியல் உள்நோக்கம் இன்றி படிக்கும் எவரும்) பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் குறித்து ரங்கநாயகம்மா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். சமூகத்தில் எந்தப் பிரச்சினையும் தனித்ததொரு பிரச்சினை கிடையாது, ஆகவே எது முதன்மைப் பிரச்சினை எனும் வாதம் பொருளற்றது, அவரவர் அல்லது அந்தந்த அமைப்புகள் தாம் எடுத்துக்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்ப செயல்திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து செயல்பட வேண்டும். ஆனால், நிரந்தரமாக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எல்லா ஏற்றத்தாழ்விற்கும் காரணமாக இருக்கும் அடிக்கட்டுமானத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அதுதான் தனியுடைமையை ஒழிப்பது. அந்த இலக்கினை அடைய, அதற்கு வழிகாட்டும் கோட்பாடான மார்க்சியக் கோட்பாட்டை ஏன் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ரங்கநாயகம்மா கோட்பாட்டுபூர்வமாக, அறிவுபூர்வமாக விளக்கியுள்ளார். இதில் எங்கு அவர் மார்க்சிய வேடமணிந்திருக்கிறார். அவர் வேடமணிவதை நீங்கள் எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
ரங்கநாயகம்மா யார் என்றும், இதுவரை அவரது பங்களிப்புகள் என்னவென்பதும் தெரியுமா உங்களுக்கு? (பார்க்க http://ranganayakamma.org/) ஏன் ஆதவன் இப்படி ஒரு நிலைக்கு உங்களை நீங்களே தாழ்த்திக்கொண்டீர்கள்? உண்மையில், உங்களை எண்ணி எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
உங்களது அந்த வலைப்பதிவில் வெளிப்படுவது அம்பேத்கர் மீதான விமர்சனத்திற்கெதிரான கோபமோ, அறச்சீற்றமோ அல்ல! மாறாக, அவரை முன் வைத்து நீங்களும், உங்களைப் போன்றோர் மேற்கொண்டு வந்த அடையாள அரசியலும், திரிபுவாத அரசியலும் அம்பலத்திற்கு வருகிறதே எனும் பதட்டம்!
ஆம்! திரிபுவாதமே. உழைக்கும் வர்க்க மக்களை ‘தலித்’ என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதன் மூலம் இந்தியாவில் இன்று ‘குறிப்பிட்ட சாதியினர்’ தலைமையிலான கட்சிகள், அமைப்புகள், அச்சாதியில் பிறந்த தனி நபர்கள், என்.ஜி.ஓக்கள் பல ஆதாயங்களைப் பெற்று வருகின்றன. அவர்களே இந்நூல் குறித்தும், ரங்கநாயகம்மா குறித்தும் அவதூறுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் அதுபோன்ற அனுகூலங்களைக் கணக்கில் கொண்டு இயங்குபவர் அல்ல என்றே கருதுகிறேன். இது ஒருவகையான ரசிக மனோபாவத்தின் வெளிப்பாடு. கபாலி ரசிகர்களுக்கும், உங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அறிவுப்புலத்தில், தலித் மக்களுக்கான போராட்டங்களில் உங்களின் செயல்பாடுகள் முக்கியமானது. அத்தகைய சமூக அக்கறை கொண்டவர் அறிவு நாணயத்தோடு எதிர்வினையாற்ற வேண்டும். உண்மையில் ஒருவருக்கு தலித் மக்கள் விடுதலையில் அக்கறை இருப்பின் அப்படித்தான் இயங்க முடியும். எங்களுக்கு உழைக்கும் வர்க்க மக்கள் மீது அக்கறை இருப்பதால்தான் நாங்கள் அவர்களின் விடுதலைக்கான பாதையைக் காட்டும் தத்துவம் எது என்பதை அவர்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புகிறோம். அந்த தத்துவமே அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யவும், பண்புடன் எதிர்வினையாற்றவும் எங்களை வழிநடத்துகிறது.
அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்! இதற்கு ‘Rejectionism’ உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நிராகரிப்புவாதம் எனப் பொருள்.
அம்பேத்கரின் சொற்களில் இறுதியாக, சாதி ஒழிப்பிற்காக தலைமை தாங்கி செயல்படுவதாகச் சொல்லும் நபர்களின் வண்டி தவறான பாதையில் செல்கிறது, அப்பாதையில் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வழிகாட்டிகள் எனும் பெயரில் மக்களிடம் அறியாமையை விதைத்து, திரிபுவாதங்கள் செய்து, பிளவுபடுத்தி, சாதி ஒழிப்பின் பெயரால் மீண்டும் சாதிய அரசியல் பாதையில் எம் உழைக்கும் வர்க்க மக்களையும் உங்களோடு சேர்த்து இழுத்துச் செல்ல எவருக்கும் உரிமை இல்லை. அப்படி அவர்கள் செய்வார்களே ஆயின் சரியான பாதையை அடையாளம் காட்டும் உரிமை அம்பேத்கருக்கு மட்டுமன்று, இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. மேலும் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இழப்பதற்கு பலதும் இருக்கலாம். அதனால் அவர்கள் அம்பேத்கரை திருவுருவாக முன்வைத்து போலியாகவோ அல்லது அறியாமையின் விளைவாகவோ தூக்கிப் பிடிக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கமான எங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அந்த அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிய உதவும் ஒரு தத்துவதைக் கற்கும் உரிமையும், அதை போதிக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு. அத்தத்துவத்தை தவறாக சித்தரிப்போர் குறித்து விமர்சிக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு. அவ்விமர்சனத்தில் தலித் விரோத கருத்துகள், சாதி வெறி இருப்பின் ஆதாரபூர்வமாக எடுத்து விவாதிக்க வாருங்கள், பேசத் தயாராக இருக்கிறோம்.
ஒரு ஆய்வுக் கட்டுரையையே (முழுதாகப் படிக்காமல்-) குப்பை என்று சொல்லும் கர்வம் உங்களுக்கு இருப்பினும், உங்களது வாதங்கள் குப்பையே ஆனாலும், உள்நோக்கம் கொண்டதாக இருப்பினும் அதைப் பொருட்படுத்தி விவாதிப்போம்.
பி.கு: புத்தகத்தைப் படிப்பதென்பது முன்முடிவுகளுடன் ஆங்காங்கே புரட்டுவது கிடையாது. திறந்த மனதுடன் உண்மையாக முழுமையாக ‘ஆழ்ந்து படிப்பது’ என்பதாகும். அவசரகதியில் ஒரு பதிவு எழுதிவிட்டு, அதற்குள் ஆத்திரமா என்று எங்கோ சென்று பதிலளிக்கிறீர்கள். முழுவதுமாகப் படிக்கமலேயே இவ்வளவு முன்முடிவுகளோடு வசை பாடும் நீங்கள் முழுவதும் படித்துவிட்டு என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

No comments:

Post a Comment