வணக்கம் தோழர்களே,
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு இன்று முகநூலில் மீண்டும் இணைகிறேன். அதற்கான வலுவான காரணம் ஒன்று உள்ளது. ஒரு முக்கியமான புத்தகத்தை மொழிபெயர்த்து, 2 வருடங்களுக்கும் மேலாக வடிவமைப்பிற்காகக் காத்திருந்து இன்றைக்கு அந்தப் புத்தகம் வெளியாகிவிட்டது. நான் நேரடியாக எழுதுவதைக் காட்டிலும் மார்க்சிய எழுத்தாளர்கள், குறிப்பாக மார்க்சிய பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதை ஒரு முக்கிய கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தேன். அந்த வகையில் நான் மிக முக்கியமான ஆளுமையாக, அறிவுஜீவியாகக் கருதும் ரங்கநாயகம்மாவின் “For the Solution of the ‘Caste’ Question: Buddha is not enough! Ambedkar is not enough either! Marx is a must!” எனும் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். சாதியப் பிரச்சினை குறித்த விவாதத்தில் இது ஒரு முக்கியமானப் புத்தகம். அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளையும், அவரது கருத்துகளையும், ஆய்வுகளையும் முழுமையாகப் படித்து, ரங்காஜி அவர்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சித்துள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட இப்புத்தகம் அவரது துணைவர் பி.ஆர். பாபுஜி மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம் வழி தமிழில் நான் மொழிபெயர்த்துள்ளேன்.
இந்தப் புத்தகம் வெளிவர பலர் உதவி செய்திருக்கின்றனர். முதன்மையில் தோழர் எஸ். பாலசந்திரன் அவர்கள் மொழிபெயர்ப்பை சரிபார்த்து கொடுத்ததோடு எனக்குப் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கினார். அவருக்கு எனது முதற்கண் நன்றி. குறிப்பிட்ட வடிவமைப்பை மேற்கொள்வதில் சில சவால்களும் சிரமங்களும் இருந்தன. இருப்பினும் ஒரு புத்தகம் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்று உணர்ந்து பல தோழர்கள் உதவி செய்ய முன் வந்தனர். தோழர் வெய்யில், தோழர் கருணா பிரசாத் மற்றும் தோழர் ஜீவமணி ஆகியோருக்கு எனது நன்றிகள். தோழர் ஜீவமணி உதவவில்லையெனில் இந்தப் புத்தகம் இன்றைக்கும் வெளிவந்திருக்குமா என்று சொல்ல இயலாது.
இப்புத்தகத்தின் தலைப்பே விவாதத்தைக் கிளப்பக்கூடியதாக இருக்கலாம். ஏனென்றால் ரங்காஜி இப்புத்தகத்திற்காக கடுமையான எதிர்வினைகளை எதிர்கொண்டார் (அவர் எழுதும் அனைத்து புத்தகங்களும் அப்படியே). அவ்விமர்சனங்களுக்கும் இறுதியில் அவர் ஒரு கட்டுரை வடிவிலேயே பதில் கொடுத்துள்ளார். அதுவும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தக வெளியீட்டு விழா போன்ற நிகழ்வுகளில் ரங்காஜிக்கு உடன்பாடில்லை. ஆகவே சமூக வலைதளங்களில் அறிவிப்பை வைக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அறியப்பட்ட புத்தகக் கடைகளுக்கு இந்த வாரத்தில் புத்தகங்களை அனுப்பி விடுவோம். வேறு எவருக்கேனும் புத்தகங்கள் வேண்டுமெனில்: முகநூல் வழியாகவோ, kotravaiwrites@gmail.com எனும் மின்முகவரியிலோ அல்லது 9500150047 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். புத்தகத்தின் விலை ரூ.80/- பக்கங்கள்: 416/- புத்தகத்தை முழுமையாகப் படித்து எவரேனும் விமர்சனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தால் அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும்.
நன்றி கொற்றவை
No comments:
Post a Comment