Sep 6, 2013

ஆடைக் கட்டுப்பாடு தேவை எனும் பரிந்துரை மீதான விவாதம்



5 செப்டம்பர், 2013 – ஆசிரியர் தினமன்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை மாணவ மாணவியருக்கு #ஆடைக் கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருப்பதாக வந்த ஒரு செய்தி குறித்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் காட்சிப் பதிவும், அதை ஒட்டிய எனது பார்வையும்:

நம் சமூகத்தில், ஏன் உலகெங்கிலும் கூட குற்றங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்குவதற் பதில் அவரையே குற்றவாளியாக்கி, அவர்கள் மீது ‘கட்டுப்பாடுகள்’ கொண்டுவருவது என்பது வழக்கமாக நடந்துவருகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான குற்றங்களில் எப்போதும் அவளது நடை, உடை, பாவனை, நடத்தை இவையே குற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது என்றொரு ‘ஆணாதிக்க’ கூச்சல் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெண்ணை ஒடுக்கினால், கொச்சையாகச் சொல்லப்போனால், ”பொம்பளையக் கையக் கால ஒடிச்சு வீட்டுக்குள்ள உக்காரவச்சா எல்லாம் சரியாப் போகும்பா” என்பதே பொதுபுத்தியின் வரையரை.

இதை அப்படியே முன்மொழியுமாறு இருக்கிறது உயர்கல்வித் துறை இயக்குனர் செந்தமிழ் செல்வியின் பரிந்துரை.  கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்தத் தடை வரவிருக்கிறது, சில பொறியியல் கல்லூரியில் இது ஏற்கணவே நடைமுறையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மருத்துவக் கல்லூரி, மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அது தேவை இல்லையா?

கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்கவும், பாலியல் அத்துமீறலிலிருந்து பெண்களைக் காக்கவும், சில ஒழுங்குகளை போதிக்கவுமே இதைப் பரிந்துரைப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணின் உடையைப் பார்த்து ஒரு ஆணுக்கு கவனச் சிதறல் ஏற்படும் என்றால், ஒரு ஆணுக்கு ஆணின் உடையையப் பார்த்தும் கவனச் சிதறல் ஏற்படும். அந்த ஆடையின் ’ரகத்தைப்’ பொறுத்து அந்த ஆடை குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானது. இதற்கு பாலியல் பேதமில்லை.  அதேபோல் அந்த வாதத்தில் மனுஷ்யபுத்திரன் சொன்னதுபோல், தம் சக மானவரின் உடலமைப்பு, ‘அழகு’ இவற்றாலும் ஒருவருக்கு ‘கவனச் சிதறல்’ ஏற்படும். இவ்வளவு ஏன் ஆசிரியர்கள் அணிந்துவரும் உடைகளைக் கண்டு, ஆசியர்கள் பாடம் நடத்தும் விதத்திலிருந்து, ஆசிரியர்களின் கையாளும் திறன், அவர்களது மனப்பான்மை, இத்யாதி இத்யாதி காரணங்களாலும் கவனச் சிதறல் ஏற்படும். வீட்டில் ஏற்பட்ட ஒரு சண்டை காரணமாக, ஏன் அன்று நடந்த ஏதோ ஒரு சமூகப் பிரச்சனையின் காரணமாகக் கூட ஒரு மாணவருக்கு கவனச் சிதறல் ஏற்படலாம். கவனச் சிதறல் ஏற்பட்டால் உன்னை கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிடுவோம் என்றொரு சட்டம் கொண்டுவந்தாலும் வியப்பில்லை. ஆற்றலோடு இயங்கும் ஒரு மூளை ஒரே நேரத்தில் பல்வேறு விசயங்களை சிந்திப்பது என்பது வெகு இயல்பானது, மூளை பயணிக்கும் வேகத்தில் ஒலி கூட பயணிக்க முடியாது. இந்தச் செயல்பாட்டை எவரும் தடுக்கவும் முடியாது, ‘மூடிய’ ஆடைகளை அணிந்து வந்தாலும், சரி, ‘ஃபார்மல்ஸ்’ அணிந்துவந்தாலும் சரி, ஒருவர் தனக்கான உலகில் மூழ்குவதை எவரும் தடுக்கவியலாது. ஆசிரியரின் பாடம் நடத்தும் தன்மையும், அந்தக் கல்லூரி தரும் அனுபவம் மட்டுமே இதற்கு ஓரளவுக்கு தீர்வாக அமையும்.

இரண்டாவது வாதம், பாலியல் ஒழுங்கு பற்றியது. உலகமயமாக்கல் சூழலிலும், முதலாளித்துவத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் ‘சுதந்திரம்’ குறித்து நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். கடுமையான சில கேள்விகளையும் வாதங்களையும்கூட முன்வைத்திருக்கிறேன். ஆனால் அது எல்லாமே எமது இனத்தோடும், எம் சக மனிதர்களோடும் நான் உரையாடலுக்காக முன் வைக்கும் எனது அவதானிப்புகள், கேள்விகள். உடை என்பது ஒருவித அடையாள மொழியாகிவிட்டச் சூழலில், அது அறிவு, அந்தஸ்து, முற்போக்கு, ஆளுமை என்று புறச் சூழல், ஊடகங்கள், சந்தைகள் கட்டமைத்துவருவதையும், அது தொடர்ந்து பெண்களைப் பாலியல் பண்டம் என்றே வரையறுத்து வருவதையும் எவரும் மறுத்துவிட முடியாது. பெண்களுக்கு அழகொன்றே அடையாளம் என்பதை வலியுறுத்தும் அரசியலே ஆடைகளின் வழி ஏற்றிவைக்கப்படுகிறது. நுகர்வுக் கலாச்சார அடிமைகளாகிப் போவதின் ஆபத்துகளை நாம் பேசுவது அவசியம். அதை உரையாடலுக்கு உட்படுத்தி, அறிவூட்டும் செயலையும், சுய-மரியாதை மீட்பையும் மேற்கொள்ள வேண்டுமே ஒழிய இதைக் கட்டுப்பாடுகள் மூலம் செய்வதை நான் சர்வாதிகாரம் என்றே சொல்வேன். மேலும் இந்தப் பரிந்துரையை மேற்கொள்வோர் யாருமே இதை ‘சந்தைப் பொருளாதாரச்’ சிக்கலாகப் பார்ப்பதில்லை. ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து வெளிப்படும் ஒரு கூற்றே.

கல்லூரிகளில் ஒரு 5 மணி நேரம் ஆடைக் கட்டுபாடு கொண்டுவருவதால் மாணவர்களின் மனநிலை மாறிவிடுமா? அது பாலியல் குற்றங்களைத் தடுக்க எந்த வகையில் உதவப்போகிறது? கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது, ஆடை ஒரு பிரச்சனையா? கல்லூரிக்கு வெளியே மாணவியர் என்ன உடை அணிந்தாலும் பரவாயில்லையா? எனும் கேள்விகள் பரவலாக வைக்கப்படுகின்றன. இது நியாயமான கேள்விகள். என் இடத்திற்கு வரும்போது நீ இப்படித்தான் இருக்க வேண்டும், வெளியே போய் நீ எக்கேடு கெட்டால் என்ன என்பது என்ன வகையான சமூக அக்கறை? இங்கு வந்தால், அங்கும் ஒழுக்கம் வந்துவிடும் என்றொரு அபத்த வாதத்தை ரேவதி வைத்தார். ஒரு பேராசிரியருக்கு ஆணாதிக்க சமூக கட்டமைப்பு பற்றிய சிறு புரிதலுமில்லை என்பது வேதனை தரும் ஒரு விசயம். கல்விக் கூடங்களின் தரம் இதுதான். பெண்ணியத்தின் உச்சம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார். சிரிப்பு வருகிறது. பெண்ணியம் என்றால் என்ன? பெண்ணாக இருப்பது, பெண்மையோடு இருப்பதா? பெண்மை என்றால் என்ன என்பது பற்றி எத்தனை விவாதங்களைப் பெண்ணியவாதிகள் எடுத்துரைத்துள்ளனர். இதையெல்லாம் இவரைப் போன்ற பேராசிரியர்கள் படிப்பதே இல்லை போலும். 

பானு கோம்ஸ் அவர்கள் ஒரு பெண்ணின் உடற்கூறின் காரணமாக ஆண் தூண்டப்படுவான், அதனால் ‘புரொவோக்’ செய்யும் விதமாக உடை அணியக் கூடாது என்றார். பெண் உடல் மீது ஆணாதிக்க முதலாளித்துவம் செலுத்தும் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தால் அறிவுள்ளதாய் இருந்திருக்கும், அதைவிடுத்து தூண்டப்படும் உணர்ச்சி ‘அறிவியல்பூர்வமாக’  மெய்ப்பிக்கப்பட்டது என்றொரு வாதத்தை வைத்தார். ‘உயிரியல்’ உணர்வுகளுக்கு அறிவியல் பூர்வ உண்மை என்பதற்கும் வேறுபாடு தெரியாதிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், பெண்களுக்கும் அத்தகைய தூண்டுதல் உணர்வுகள் ஏற்படும், சமூக ஒடுக்குமுறை காரனமாகவே பெண்கள் ஆண்டாண்டு காலமாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்துள்ளனர். அது அவர்களின் மரபு வழி பயணித்துவருகிறது என்பதே உண்மை. தாய் குனிந்து உணவு பரிமாறும்போது ஒரு ஆணுக்கு உணர்ச்சி எழாதா என்ற சுசீந்திராவின் கேள்விக்கு கலாச்சார அதிர்ச்சியடைந்தவராக என்ன இவ்வளவு ஆபாசமாகப் பேசுகிறீர்கள் என்ற இவரது கேள்வி ஒன்றே போதும் இவருடைய மனப்பான்மையை விளக்குவதற்கு. பெண்களுக்கும் ‘உச்ச உணர்வு’ (orgasm) ஏற்படும் தெரியுமா என்று கேட்டிருந்தால், என்ன இப்படி காம வெறி பிடித்துப் பேசுகிறீர்கள் என்று கேட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

மனுஷ்யபுத்திரன் சீருடை சம்பந்தமாக ஒரு மாற்றுக் கருத்து வைத்தார். சாதி, பொருளாதாரம் போன்ற ஏற்றத்தாழ்வு மிக்க நமது சமூகத்தில் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அந்தப் பார்வைகளை நாம் கணக்கில் கொண்டு விவாதம் மேற்கொள்வதும் அவசியமே. உடைகள் மூலம் தமது அந்தஸ்த்தை பறை சாற்றிக் கொள்ளும் ஒரு வேட்கையில் அனைவரும் மூளைச் சலவைக்குள்ளாகிவிட்ட சூழலில், சீருடை தேவையில்லை என்று அவ்வளவு எளிதில் புறம் தள்ளிவிட முடியாதென்றே நான் நினைக்கிறேன்.  

ஒழுக்கம் என்பது மனதில் இருக்கிறது என்று ஒரு சாராறும், இல்லை இல்லை உடல் கெட்டால் எல்லாம் போச்சு என்று மறு சாராறும் பேசுகின்றனர். மனது, உடல் எல்லாம் ஒன்றுதான். இரண்டிற்கும் மூளை தான் அடிப்படை. மூளை தேக்கி வைக்கும் பதிவுகளே நமக்கு காட்சியாகவும், நினைவாகவும் வருகிறது. அதையே நாம் மனம் என்கிறோம்.  அந்த மூளையில் என்ன ஏற்றிவைக்கப்படுகிறதோ அதனை மாற்றி வைப்பது அத்தனை எளிதானதல்ல. ஆண்மை, பெண்மை, ஒழுக்கம், சமூகம், பொறுப்பு, பார்வை, என எல்லாப் புரிதல்களும் சமூகமயமாக்கலின் விளைவே. இந்த விவாதம் முடித்து வெளியே வரும்பொழுது வசுமித்ர தொலைபேசியில் அழைத்து ஒரு கேள்வி கேட்டான்: “கல்விக் கூடங்களில் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆடைக் கட்டுப்பாடு என்கிறார்களே.. ஆனால் கல்லூரி பேராசிரியர்களும், முதல்வர்களும் தம்மிடம் படிக்கும் மாணவிகளை வன்புணர்வு செய்து, கொன்று அவள் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டால் என்று நாடகமாடி முடிக்கிறார்களே. அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் ‘மூடிக் கொண்டு’ வரும் மாணவிகளை வன்புணர்வு செய்ய மாட்டார்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று உனக்கு கேட்கத் தோன்றவில்லையா” என்றார். உண்மைதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் ஒருவேளை பேராசியரும், சமூக ஆர்வலரும் வாயடைத்துப் போயிருக்கலாம். வாய்ப்புகள் குறைவு, அதற்கும் அவர்கள் மாணவியின் உடையையும், ‘attitude’ ஐயுமே குறை சொல்லியிருப்பார்களோ என்னவோ..

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு மரணமடைந்தார் என்று சொல்லப்பட்ட அருந்ததியர் சமூக மாணவி காயத்ரியின் நினைவாக……நிச்சயமாக அவர் ‘கவர்ச்சியாக’ உடை அணிந்திருக்க வாயிப்பில்லை……


நேர்பட பேசு , புதிய தலைமுறை தொலைக்காட்சியில் - ஆடைக் கட்டுப்பாடு பரிந்துரை குறித்த விவாதம் -  










2 comments:

  1. பெண்களின் உடை கலாச்சாரம் குறித்த தங்களின் பார்வை மிகவும் சரி !
    பெண்களின் கண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றன என்றொரு கருத்தை
    முன்வைத்தால், " இனி அனைத்து பெண்களும் கண்களைக் கட்டிக்கொண்டு தான்
    சமூகத்தில் நடமாட வேண்டும் " என்றொரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தாலும்
    வருவார்கள் நமது சீர்திருத்தவாதிகள். இந்த அளவுக்குக் கூட நுட்பமாக
    சிந்திக்கத் தெரியாத சிகாமணிகள் தான் நமது நாட்டின் அனைத்து துறைகளிலும்
    உயர் பதவிகளை வகிக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கான தேர்வு முறைகள் வெறும்
    மனப்பாடத்தையும், ஞாபகத் திறனையும், அதிர்ஷ்டத்தையும், செல்வாக்கையும்
    மட்டுமே கொண்டவையாக இருப்பது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
    அதனால் தான் அவர்கள்  இப்படி பொத்தாம் பொதுவாகத் சிந்தித்து இது போன்ற
    அபத்தமான கட்டுப்பாடுகளை சமூகத்தில் விதைக்கிறார்கள்.


    மற்றபடி, " வேண்டுமென்றே " சில பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து வருவதையும்
    மறுக்க முடியாது. பெண் சுதந்திரம் என்ற வார்த்தையை நான் பிரயோகிப்பதைத்
    தாங்கள் ஏற்றுக் கொண்டால், அந்த " சுதந்திரத்தை " ஆரோக்கியமான
    ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை பெண்களுக்கு
    ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  2. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

    ReplyDelete