Sep 16, 2013

காதல், திருமணம், பெண்ணுரிமை



தமிழ் சமூகத்தின் வரலாற்று பெருமை இந்த உலகறிந்ததே. குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் வழி நாம் தமிழ் சமூகத்தை அனுகும்பொழுது, வீரமும் காதலும் அதன் நாடித்துடிப்பாக இருந்துள்ளது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். வீரமும் காதலும் தமிழ் சமூகம் மட்டுமல்லாது உலகெங்குமுள்ள அனைத்து சமூகங்களிலும் ஒரு வாழ்வுமுறையாகவே இருந்திருக்கிறது.

வீரம் என்று ஒன்றும் கூட மனிதப் பேராசைகளின் விளைவாக தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்ட ஒன்றாக இருக்கையில் காதல் மட்டுமே இயல்பூக்கம் சார்ந்ததாக இருக்கிறது. உயிரை வேட்டையாடுதலை மனிதச் சமூகம் வீரம் என்று பறை சாற்றுகிறது. உணவுக்காக வேட்டையாடும் விலங்குகள் கூட தன் உணவுத் தேவைக்கு வேட்டையாடிவிட்டு ஓய்ந்துவிடுகிறது , ஆனால் மனிதச் சமூகமோ எல்லை விஸ்தரிப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும், யுத்தங்களையும், போர்களையும் வீரம் என்று கொண்டாடி மகிழ்கிறது. வீரம் குறித்த கட்டுடைப்புகளை வேறொரு சமயத்தில் பார்ப்போம்.

மனிதச் சமூகம் விருத்தியடைய ஆன், பெண் என்ற எதிரிடைகள் அவசியமாகின்றனர். எதிர்பாலினச் சேர்ப்பு என்பது இயற்கையின் விதி. குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஆன் பெண் சேர்ப்பு விசயத்தில் மனிதனானவன் பல்வேறு விதிகளைப் புகுத்தினான். அவ்விதிகளுக்கான வரலாற்று காரணிகளை ஆய்ந்து பார்ப்போமானால் அங்கு பொருளாதாரம் என்பது முக்கியப் பங்கு வகிப்பதை நாம் காண முடிகிறது. திருமணம் என்று மட்டுமல்லாது சமூக அமைப்பில் நிலவும் அனைத்து விதிகளிலும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் அதன் உள்ளார்ந்த வடிவமான உழைப்புப் பிரிவினை என்பது வகிக்கும் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. ஒவ்வொரு சமூகத்திலும் உழைப்புப் பிரிவினையானது ஒவ்வொரு வடிவமெடுத்துள்ளது, இந்திய சமூகத்தில் அது சாதிய வடிவமெடுத்துள்ளது என்பதை பல்வேறு அறிஞர்கள் ஆய்ந்து விளக்கியுள்ளனர். பின்வரும் காலங்களில் சாதியமைப்பு கெட்டித் தட்டிப்போய் இணை சேர்ப்பு விசயங்களில் அது பிரதான பங்கு வகிக்கத் தொடங்கியது.

பெரும்பாலும், சாதியடுக்கில் கீழ் நிலையில் உள்ளோர் பொருளாதார ரீதியிலும் கீழ்நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் கண்டு வந்திருக்கிறோம். அரிதாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கின்றனர். அப்பொழுதும் கூட சாதிய அடுக்கில் மேல் உள்ள சாதியினர், கீழ் சாதியினரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பு மனோபாவத்தின் பின்னால் இருக்கும் காரணத்தை ஆய்வு செய்வோமானால், கீழ்வரும்  காரணங்களை நாம் அவதானிக்கலாம்:

1.  பொருளாதாரப் படிநிலை, சாதிப் படிநிலை இவற்றில் ஏதேனும் ஒரு தரப்பு கீழ் நிலையில் இருப்பது.

2.  இரு தரப்பினரும் சமமான பொருளாதார படிநிலையில் இருந்து, ஆண் தாழ்த்தப்பட்ட சாதியினராய் இருப்பது.

3.  இரு தரப்பினரும் சமமானப் படிநிலையில் இருந்தாலும், பெண் என்பவள் காதல்வயப்படுவது குடும்ப கௌரவத்திற்குக் கேடானது.

மேற்சொன்ன காரணங்களில் அடிப்படையாகத் தொக்கிக் கொண்டிருப்பது பொருளாதாரம், சாதி மற்றும் ஆணாதிக்கம். ஆனால் இந்த மூன்று காரணங்களும் தனித்தனியானவையோ அல்லது இவற்றில் ஒன்று மட்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகக்கூடும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பை நாம் பொருளாதார தளத்திலிருந்தே, அதாவது பொருள் உற்பத்தி முறையில் எவ்வகையான உறவுகள் நிலவுகிறது, அவ்வுறவுகள் என்ன வகையான விதிகளின் கீழ் செயல்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயங்குமுறையில் அவ்விதிகளில், அல்லது வடிவங்களில் ஏதேனும் ஒன்று மற்றொன்றை விட ஆதிக்கம் செலுத்துவதாக மாறி இதுவே இந்த சமூகத்தின் இயல்பு, பண்பாடு, கட்டமைப்பு என்று மக்கள் மனதில் பதிந்து விடும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சமூக விதிகளுக்கு இதுதான் ஒற்றைக் காரணம் என்று நாம் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், நடைமுறை அமைப்பில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், அதில் வெளிப்படும் பிரதான வேறுபாடு, அதனோடு உலகெங்கிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளில் வெளிப்படும் பிரதான வேறுபாடு, சமூக உறவு முறைகள் இவற்றை நாம் கணக்கில் கொண்டு காண்போமானால் அங்கு பொருளாதாரம் பிரதான பங்கு வகிப்பதையும், அதன் உள்ளார்ந்த ஏற்றத் தாழ்வு வடிவமான எஜமானர்-அடிமை உறவு முறையை (முதலாளி-தொழிலாளி, ஆண்-பெண்) நாம் காணலாம். இந்த உறவுகளில் பொருளாதார பலம் கொண்டோர் எஜமானராக இருப்பது நிதர்சனம். பெண்ணடிமைத்தனம் என்பது இயல்பிலேயே இருந்தது என்று சொல்வது எத்தனை அபத்தமோ, அதேபோல் சாதியமைப்பும் இந்த மண்ணில் இயல்பிலேயே இருந்தது என்று சொல்வது அபத்தம். இரண்டிற்கும் வரலாற்று காரணிகள் உண்டு, நாளடைவில் அந்தக் காரணிகள் இயல்பானது, இறைவன் விதித்தது, முன் ஜென்ம வினையின் விளைவு என்று ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது.

இனம், மதம், மொழி, அந்தஸ்து, சாதி, நிறம், தோற்றம் ஆகியவை ஒரு படிநிலை வடிவத்தை எடுத்துள்ள அமைப்பில் காதல் என்று வரும்பொழுது இவையெல்லாம் தீர்மானிக்கும் சக்திகளாகின்றன.  இவையெல்லாம் பொருளாதாரம் எனும் பந்திற்குள் சுருங்குவதையும், அந்தக் குறிப்பிட்ட பொருளாதார அமைப்பு கண்டெடுத்த ஒரு சமூக அமைப்பு ஆண் தலைமையிலான ஒரு குடும்ப அமைப்பை உருவாக்கியதையும், அந்தச் சமூக அமைப்பில், குடும்ப அமைப்பில் ஆண் அல்லது ஆணின் நலன்களை உள்ளடக்கிய மதிப்பீடுகள் தீர்மானிக்கும் சக்தியானதையும் நாம் ஆணாதிக்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஆணாதிக்க மதிப்பீடுகள் ஆண் பெண் இருவரின் மூளைகளையும் சலவை செய்துள்ளது, அதிலும் குறிப்பாக பெண்களின் மனதை, ஏனென்றால் ஆண், குடும்பம், சமூகம் இவற்றை ‘ஒழுக்கத்துடன்’ காப்பது பெண்ணின் கடமை என்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு பெண்ணும் தானறியாமல் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டாள்.

இந்தப் பின்னணிகளிலிருந்தே காதல் விவகாரங்களில் தந்தைமார்கள் காதலை எதிர்ப்பதையும், தாய்மார்கள் தம் பெண்களை ‘சம்ஹாரம்’ செய்யும் நாயகிகளாக மாறுவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் சில காதல் விவகாரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திவ்யா இளவரசன் மற்றும் தாமினி சந்த்ரு இவர்களின் காதல் உறவுகள் நமக்கு பல்வேறு கோர முகங்களை அடையாளம் காட்டியுள்ளது. திவ்யா இளவரசன் விசயத்தில் சாதிதான் பிரச்சனை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் தாமினி சந்த்ரு விசயத்தில், எது பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்வதற்குள் பல குழப்பங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.

திவ்யா இளவரசன் விசயத்தில் மட்டுமல்லாது கன்னகி முருகேசன், கோகிலா கார்த்திகேயன், இன்னும் பல காதல் ஜோடிகளில் சம்பந்தப்பட்ட ஆண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவர்களில் ஒன்று அந்த ஆண் அல்லது பெண் அல்லது இருவரும் கொல்லப்படுகின்றனர். சில தருணங்களில் அம்மரணம் தற்கொலை என்றும் சொல்லப்படுகிறது. எதுவாகினும் இவற்றை நாம் கௌரவக் கொலை, சமூகப் படுகொலை என்றே கூற முடியும். இதுபோன்ற கௌரவக் கொலைகள் இந்தியா முழுமையிலும் நடைபெறுகிறது. கௌரவக் கொலைகளுக்கென தனிச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

சாதி மறுப்பு காதலில் ஈடுபட்ட ஜோடிகளில் பெரும்பாலும் சம்பந்தப்பட பெண்களே அதிக கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பெண் வீட்டார் அதைப் பெறும் கௌரவப் பிரச்சனையாகக் எடுத்துக் கொண்டு பெண்ணை வீட்டுக் காவல் வைப்பதும், அவளது கல்வியை பாதியில் நிறுத்துவதும், அவசர அவசரமாக தம் அந்தஸ்திற்கு ஏற்ற வேறொரு ஆணிற்கு திருமணம் பேசுவதையும் செய்கின்றனர். தன் காதலில் மற்றும் தன் உரிமையை அடைவதில்  உறுதியோடு இருக்கும் பெண்கள் அந்தக் கொடுமைகளைத் துணிந்து எதிர்க்கையில் அப்பெண்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர் அல்லது விசம் கொடுத்துக் கொல்லப்படுகின்றனர். கோகிலா கார்த்திகேயன் விசயத்தில், கோகிலா பறையர் சமூகப் பெண், கார்த்திகேயன் அருந்ததியர் சமூகத்தவர். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் உதவியோடு இவர்களது காதலை ஏற்றுக்கொள்வது போல் நாடகமாடி, கோகிலாவை அடித்துக் கொன்றிருக்கின்றனர் என்பதே எமது உண்மை அறியும் குழுவினரின் அவதானிப்பாக உள்ளது. இந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அவளது உடலை பிரதேப்பரிசோதனைக்கும் கொடுக்க மறுத்து அந்த சமூகத்தவர் உடனடியாக பெட்ரோல் ஊற்றி எரித்தும் விட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவரை அவருடைய தந்தை பல்கலைக்கழக வளாகத்திலேயே கத்தியால் குத்திய செய்தியும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது திருச்செல்வி, தலித் சமூகத்தைச் சார்ந்த டேனியல் ராஜ் என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் ஒரு தொழிற் சாலையில் வேலை செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது மாமியார், திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி நாடகமாடியதை நம்பி, அம்மை நோயுடன் பெண் வீடு திரும்பியபோது, தாயும், மாமியாரும் பூச்சி மருந்தை பெண்ணின் வாயில் திணித்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அந்தப் பெண் மறுக்கவே, கையையும் காலையும் பிடித்துக் கொண்டு, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி, பிறகு கழுத்தை நெறித்து கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்து விட்டனர். ‘எவிடென்ஸ்’’ உண்மை அறியும் குழு தந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணை நடத்தி கொலை தான் என்று உறுதி செய்து, வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளது.

தற்போது தாமினி சந்துரு காதல் விவகாரத்தில் சாதியா, பொருளாதாரமா, குணநலனா எது பிரச்சனை என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும். மறைமுகமாக அங்கு பொருளாதாரம் மற்றும் சாதி ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சேரன் தரப்பு சந்துருவின் குணநலனையும், அவரது குடும்பத்தார், குறிப்பாக அவரது சகோதரியின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய செய்திகளை வெளியிட்டு இக்காரணங்களாலேயே தாங்கள் இக்காதலை மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

பெண்ணை உடைமையாகக் கருதும் ஒரு ஆணாதிக்க மனோபாவத்தை எஜமானர்-அடிமை உறவுமுறையை அடித்தளமாகக் கொண்ட சமூக அமைப்பு விதித்திருக்கிறது. பொதுவாக எஜமானர் ‘நிலையில்’ இருக்கும் நபர்கள் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் கூடுதலாக இந்த அதிகாரப் படிநிலையை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் அரசியல் கட்சிகள் (சாதிக் கட்சிகள்) தற்போது இந்த காதல் எதிர்ப்பை (சாதி எதிர்ப்பை) ஓர் அரசியல் போராட்ட உத்தியாகக் கையில் எடுத்திருக்கிறது.

சட்டம் ஒரு பெண்ணிற்கு (மனிதருக்கு) அளித்திருக்கும் அடிப்படை உரிமையை இவர்கள் கிஞ்சித்தும் மதிப்பதில்லை. சொல்லப்போனால், வெளிப்படையாகவே வெட்டுவோம், குத்துவோம் என்று அச்சுறுத்தலும் விடுகின்றனர். 18 வயதை அடைந்த எந்தவொரு பெண்ணும் தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதில் குணநலன், அந்தஸ்து இவற்றின் அடிப்படையில் விலக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை.   

இது இவ்வாறு இருக்க, வழக்கமாக காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் மதிப்பீடுகளல்லாமல் தாமினி சந்த்ரு விசயத்தில் ‘அப்பா’, ‘பொறுப்பு’, ‘பாசம்’, ’குண நலன்’ ஆகிய உணர்வுபூர்வமான விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் சில முற்போக்காளர்கள் மத்தியிலும் சில தயங்கங்கள் எழுந்துள்ளன. ‘மகளின் வாழ்க்கை நலனை கணக்கில் கொள்ளும் உரிமை தந்தைக்கு இல்லையா?’ என்பன போன்ற உருக்கமான கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

பெண் உரிமை எதிர் மணமகன் குணநலன் விவகாரம் என்பதால் இதை சற்று விரிவாகப்  பேச வேண்டியுள்ளது. திருமண வயதை எட்டிய நபர் தனக்கு விருப்பமான நபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை சட்டம் வழங்குகிறது. Conduct Certificate பெற்றுவிட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றோ, இன்ன இன்ன குணநலன்கள் ‘கெட்டவை’ என்றோ சட்டம் வகுக்கவில்லை. குடி, புகைப் பழக்கம் இவற்றை கெட்ட பழக்கம் என்று சொல்வோர் அதை விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வர்? அரசே மதுபானக் கடைகளை நடத்துகிறது! 

அடுத்ததாக சம்பந்தப்பட்ட ஆணின் - பெண் தொடர்பு. பல காதல் புரிந்தவர், ஏமாற்றியவர், பெண் பித்தர் என்று சொல்லப்படும் விசயங்களில் அது உண்மையாக இருப்பின், அந்த ஆணை ஏற்பதும், மறுப்பதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் முடிவு. அவளுக்கு மட்டுமே தனது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. எப்படிப்பட்ட ‘கேடு கெட்டவனையும்’ திருத்தும் வல்லமை ‘ஒரு பெண்ணின் காதலுக்கு உண்டு’ என்று சொல்லும் திரைப்படங்களை எடுப்போர் அவற்றை நடைமுறையில் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்?

கதாநாயகனாக நடிக்கும் ஆண் (சமூகத்தின் பார்வையில் கெட்டவர் என்று சொல்லப்படுகிற பழக்கங்களை உடையவர்) புகைப்பிடித்தாலும், கஞ்சா இழுத்தாலும், மதுப் பழக்கம் உள்ளவராய் இருந்தாலும், மது அருந்திய பின் வல்லாங்கு செய்பவராய் இருந்தாலும், ரவுடியாய் இருந்தாலும், ஜாலியாக பல பெண்களோடு குத்தாட்டம் போடுபவராய் இருந்தாலும், ஏழையாய் இருந்தாலும், தாத்தா வயதுடையவராய் இருந்தாலும், அவரை காதலிப்பதே உண்மையான காதல் என்றும், அதுவே தூய்மையான காதல் என்றும், ‘பொறுக்கிகளை, ஏழைகளை, ரவுடிகளை’ மறுத்தலிக்கும் பெண் திமிர் பிடித்தவள், பணப் பித்து பிடித்தவள், கேடு கெட்டவள், இத்யாதி, இத்யாதி என்று சொல்லும் இயக்குனர்கள் தங்கள் குடும்பப் பெண்கள் ‘அத்தகைய’ ஆண்களை காதலிப்பதை எதிர்ப்பது ஏன்?

சேரனோடு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இயக்குனர்கள் கூட்டத்தினர் ‘படைத்தருளிய’ கதாநாயகர்களுக்கு எந்தக் ‘கெட்டப் பழக்கமும்’ இருக்கவில்லையா? அவர்களின் திரைப்படங்களில் கதாநாயகன் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றாலும், கதாநாயகிகள் வலிய வந்து இந்த ‘பொறுக்கிகளை’க் காதல் செய்வார்களே! ஏன் இந்த அய்யாமார்களின் செயல்பாடுகளில் இத்தனை முரண்?

ஒரு பேச்சிற்காக இந்தக் கேள்வியைக் கேட்போம்: சேரன் மீது ஒரு வன்புணர்வு வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனால் அவரது மனைவி அவரை விட்டு நீங்கிச் சென்று விட்டாரா? இல்லையே! அப்படியென்றால் அப்பெண்ணின் தந்தையாருக்கு தன் பெண்ணின் ‘வாழ்க்கை’ மீது அக்கறை இல்லையா? தன் கணவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை என்று வாழ்வும் உரிமை சேரனின் மனைவிக்கு இருக்கும்பொழுது தாமினிக்கு அது இல்லையா? ஒருவேளை தாமினிக்கு திருமணம் நடந்த பின்னர் சந்த்ரு திடீரென்று ‘பாதை மாறி’ இப்படிச் சென்றிருந்தால் சேரனின் மனைவி போல் தாமினியும் பொறுத்துக் கொண்டு வாழ சேரன் மற்றும் அவரது நட்பு வட்டம் உடன்படுமா?  இதுவரை திருமணம் செய்து வந்திருக்கிற திரைத்துறையினர் அனைவரும் ‘ஒழுக்கமானவர்களே’ என்று அவர்களைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் எங்கேனும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனரா? அவர்கள் பற்றி எத்தனை ‘கிசு கிசுக்கள்’ வந்தாலும், எதன் அடிப்படையில் அவர்களைப் பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்?  அல்லது திருமணத்திற்குப் பின் எத்தனை செய்திகள் வெளிவந்தாலும், எதன் காரணமாக அப்பெண்கள் சேர்ந்து வாழ்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

இந்த வழக்கில் கூடுதலாக சந்த்ருவின் அக்காள் கவுரி பற்றி, அவர் தாய் பற்றியெல்லாம் வெளிவந்துள்ள செய்திகளில், அவர்கள் ‘துணை நடிகர்கள், நடனக்காரி, நடனக்குடும்பம்’ அதனால் அவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கலாம் என்று பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனும் வகையிலான தொணியும், கவுரியின் விவாகரத்து, மதமாற்றம், சொத்தில் பங்கு கேட்டது என்ற வகையிலான செய்திகளும் வெளிவந்துள்ளன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆண் பெண் உறவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அந்த உறவின் ஏற்பாடுகள் என்னவென்பது தெரியும், அதைத் தீர்மானிப்பது அவர்கள் உரிமை. சேர்ந்து வாழ்ந்து பின் விவாகரத்துப் பெறும் போது சொத்தில் பங்கு கேட்கும் உரிமையை சட்டம்தானே வழங்குகிறது. அவர் எத்தனை முறை திருமணம் செய்திருக்கிறார், எத்தனை முறை விவாகரத்து செய்திருக்கிறார் என்பதை சட்டம் கேட்பதில்லை.

மேலும், தாமினிக்கு சந்த்ரு பற்றியும், அவர் குடும்பத்தாரின் பின்னணி பற்றியும் ஏதும் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் அவர் ஏன் தந்தைக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். பெண்ணுக்கு மனநலன் சரியில்லை என்கிறது சேரன் தரப்பு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாக சொல்கிறார் தாமினி. எத்தனை முரண்பாடுகள். இந்த வழக்கைப் பொறுத்தவரை தாமினி மட்டுமே தனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை கொண்டவர். ஒருவேளை அவர் எவரின் மிரட்டலுக்கோ (இரு தரப்பில் எவராய் இருந்தாலும்) பயந்து செய்வதறியாது தத்தளிக்கிறார் என்றால், அதிலிருந்து விடுபட சட்டபூர்வமாக நிறைய வழிகள் உள்ளது என்பதை அவர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. தனது வழக்குறைஞரின் உதவியோடோ அல்லது தாமாகவோ அவர் தனது பிரச்சனைகளை நிச்சயம் நீதிபதியிடம் விளக்க முடியும். இத்தனை ஊடகங்கள் அவரைச் சுற்றி இருக்கையில் அவர் அதுபற்றி பேசாமல் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதையெல்லாம் தாண்டி பலர் சொல்வது போல் சந்த்ரு ஏதோ பதிவு செய்துவைத்து மிரட்டுகிறார், அதனால் தாமினி பயப்படுகிறார் என்றாலும், அதையும் அவரே பகிரங்கமாகப் பேசுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. தாமினி என்ன செய்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (இந்தக் கட்டுரை வெளிவருவதற்குள் வழக்கு முடிந்து, தாமினி தன் தந்தையாருடன் சென்றுவிட்டார்!!!)

இறுதியாக,

1.  தமிழ் பற்று, தமிழ் தேசியம், காதல், சமூகப் பற்று, மாற்று சினிமா என்று அறைகூவல் விடும் திரைத்துறையினரின் உண்மை முகம் வேறாக இருக்கிறது. குறிப்பாக காதலுக்கு இலக்கணம் வகுத்து, ‘கேடு கெட்டவனாய் இருந்தாலும்’ அவனை காதலித்தே ஆகவேண்டும் என்று பெண்ணுக்கு கட்டளை இடும் இயக்குனர்கள் தம் நிஜ வாழ்வில் அதை கைகழுவி விடுகின்றனர். திரைத்துறை வாய்ப்பிற்காக அதுபோன்ற இயக்குனர்களின் ஆணாதிக்க மனோபாவங்களையும், இரட்டை முகங்களையும் கண்டும் காணாமல் இருப்பதோடு, இவர்களைப் போல் மனிதருண்டா, படைப்பாளி உண்டா என்று இலவச விளம்பரம் செய்கின்றனர் ’சில’ ’படைப்பாளிகள்’ . இனியாவது இந்தச் சமூகம் இதுபோன்ற இயக்குனர்களையும், படைப்பாளிகளையும் எச்சரிக்கையுடன் அனுக வேண்டும். ‘போராளி’ பட்டங்களையும், ‘வீர வணக்கங்களையும்’ வழங்கும் முன்னர் அவர்களின் படைப்பு, செயல்பாடு இவற்றில் உள்ள முரண்களை குறைந்தபட்ச நேர்மையோடு விமர்சிக்க வேண்டும் என்பதே முதல் பாடமாக இருக்கிறது.

2.  ஒரு நபர் (ஆணோ / பெண்ணோ) நல்லவரோ, கெட்டவரோ அவருடன் வாழும் அல்லது விலகும் முடிவை சம்பந்தப்பட்ட நபரே எடுக்க வேண்டும். பிடித்த ஒருவரை மறுக்கும் உரிமையும், பிடிக்காத ஒருவரை திணிக்கும் உரிமையும் எவருக்கும் கிடையாது. காதலை ஏற்க மறுத்தால் அதை திணிப்பதும், மிரட்டுவதும், ஆசிட் ஊற்றுவதும் எவ்வளவு தவறோ, அதேபோல் விரும்பும் நபர்களை பிரிக்க முயல்வதும் தவறு. உறவுகள், நண்பர்கள் அறிவுறை கூறலாம், ஆனால் முடிவை சம்பந்தப்பட்ட நபரே எடுக்க வேண்டும். அதைவிடுத்து மிரட்டல் விடுவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது முற்றிலும் குற்றமே.

3. திருமணத்திற்குப் பின் ஒரு ஆணோ பெண்ணோ திசை மாறிப் போவதை எப்படி ஒருவர் கணிக்க முடியாதோ, அதேபோல் ஒரு ‘பொறுக்கி’ திருமணத்திற்குப் பின் திருந்தமாட்டார் என்பதையும் எவரும் கணிக்க முடியாது.  குணநலன், பெற்றோரின் அக்கறை, கடமை ஆகியவற்றைக்  காரணம் காட்டி சேரன் தரப்பிற்கு நாம் ஆதரவு தருவோமெனில், ஆசிட் ஊற்றுபவன், கள்ளக் காதல் என்று சொல்லி கொலை செய்பவன், கலாச்சாரக் காவல் செய்யும் அடிப்படைவாத அமைப்புகள், தம் சாதிப் பெண்களின் நலன் கருதி என்று சொல்லி அழித்தொழிப்பு செய்யும் சாதி-அரசியல் கட்சிகள் இவர்கள் எல்லோருக்கும் நாம் ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்படும்.

இதுதான் உண்மைக் காதல், இதுதான் தூயக் காதல், ஒரு பெண் ஒருவனை ஒருமுறை மனதில் நினைத்துவிட்டால் சாகும் வரை அவனே அவளுக்குக் கணவன், அந்தஸ்து, குணநலன், சாதி பார்த்து வருவதில்லை காதல் என்றெல்லாம் காதல் வகுப்பெடுத்த திரைப்படங்களின் பாதிப்பினால் கூட தாமினி தாக்கம் பெற்றிருக்கலாம்!!! சொல்வதற்கில்லை!! இனியாவது இயக்குனர்கள் திருந்துவார்களாக!

எதுவாகினும், சம்பந்தப்பட்ட பெண் (அல்லது ஆண்) தான் வாழ விரும்பிய அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற நபரிடமிருந்து விலக மனப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் ஒழிய ஒரு உறவை விலக்கும் அல்லது திணிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. 

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்


-       (ஆதி பகவன் படப்பாடல் வரிகள்!) 

 (நன்றி: புதிய கோடங்கி



(

4 comments:

  1. சமூகமே இயக்குனர் சேரனுக்கு ஆதரவாக இருந்தும், தாங்கள் அதை மாற்றுக்
    கோணத்தில் பார்த்து விமர்சனம் செய்துள்ளீர்கள். வரவேற்கத்தக்கதே !
    மற்றபடி காதல் என்பதெல்லாம் வெறும் கப்சா ! ஒரு பெண்ணோ அல்லது ஆணோ , ஒரே
    ஒருவரை மட்டுமே காலம் முழுக்க காதலர்களாக வரித்துக் கொள்வதில்லை, மேலும்
    காதல் இப்போதெல்லாம் அந்தஸ்து, அழகு, ஜாதி, பார்த்தே வருகிறது. இந்தப்
    பெற்றோர்கள், காதலை எதிர்பதற்கு பதிலாக, " சரிப்பா தங்கம் , செல்லம் ,
    கண்ணு ! நீ காதலிக்கற பொண்ணையே மருமகளா ஏத்துக்கறோம் " என்று உடனே
    பச்சைக் கொடி காட்டி விட்டால், அந்தப் பையன் அதே பெண்ணை உறுதியுடன்
    காதலித்து கரம் பிடிப்பானா என்பது சந்தேகம் தான் ! பெண்ணுக்கும் இது
    பொருந்தும் !

    ReplyDelete
  2. மார்க்சிய அடிப்படையில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரை... நிறைய எழுதுங்கள்!!

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete