Aug 20, 2013

குறளி இதழ் - விமர்சனம் மற்றும் எதிர்வினை

குறளி இரண்டாம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு குறித்து திரு. நோபிள் செல்லதுரை அவர்கள் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அந்தக் கேள்விகளும், பதிலும்:


ரங்கநாயக்கம்மாளின் இரண்டு கட்டுரைகளை கொற்றவை மொழிபெயர்த்துள்ளார். சாதி குறித்து  மார்க்ஸ், சாதீயப்போர்வையில் வர்க்கப் போராட்டம். இவற்றுள், இரண்டாம் கட்டுரை எனது கவனத்தைக் கவர்ந்தது. சாதீயக் கலவரங்களை வர்க்கப் போராட்டமாக மட்டும் காண்பதில் எனக்கு உடன்பாடில்லை. சாதீயத்தைப் பற்றி நமது அறிவு குறைவு. சாதீயத்தைப் பற்றி ஆய்வு நடத்தத் தமிழ்நாடு என்னும் வளமான ஆய்வுக்கூடம் இருக்கும்போது, அண்டை மாநிலத்தில் நிகழ்ந்த சாதிக் கலவரத்தைக் களனாக கையாண்டிருப்பது வியப்பளிக்கிறது.

வணக்கம் ஐயா,

குறளி இதழைப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. எனது எழுத்துக்கள் குறித்த உங்களது விமர்சனத்திற்கு எனது பதில் பின்வருமாறு:

சாதீயக் கலவரங்களை வர்க்கப் போராட்டமாக மட்டும் காண்பதில் உங்களுக்கு உடன்பாடிருக்கிறதோ இல்லையோ, ஒரு சமூகத்தில் நிலவும் உழைப்புப் பிரிவினை மற்றும் ஏணையப் பிரிவினைகளுக்கு காரணமாய் இருப்பது எது, அதன் அடிக்கட்டுமானம் என்ன என்பதனை ரங்கநாயக்கம்மாவின் கட்டுரை விளக்குகிறது. 

மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம், அது சமூகத்தின் கட்டமைப்புகளை எப்படி புரிந்து கொள்வது, ஆய்வு செய்வது என்று நமக்கு வழிகாட்டுகிறது. மேலும் சாதிப் பிரச்சனை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியதன்று, அது இந்தியா முழுதும் நிலவும் ஒரு கொடுமை, மாநிலம் சார்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணியிருப்பதே எமக்கு வியப்பளிக்கிறது. மனிதருக்கு மனிதர் செய்யும் கொடுமையை விளக்க, எதிர்க்க எல்லைகள் தேர்வு தேவையா? எகிப்து புரட்சி குறித்து ஆய்வுப் பார்வையில் பேசினால் இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது எகிப்து பற்றி பேசி நேரம் விரையம் செய்ய வேண்டுமா என்று சொல்வது சரியாக இருக்குமா?

ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும், அது வீடோ, தெருவோ, ஊரோ, மாநிலமோ, நாடோ, உலகமோ, எங்கு கொடுமைகள் நடந்தாலும் அதைப் பேச வேண்டும். ரங்கநாயக்கம்மாவின் ஆய்வு முறை எனக்கு முக்கியமான ஒன்றாகத் தோன்றுவதால், அதனை தமிழ்படுத்துவதை நான் முக்கியம் எனக் கருதுகிறேன். உடல், காதல், காமம் மற்றும் சிலத் தீண்டத்தகாத சொற்கள் என்றக் கொற்றவையின் கட்டுரை நிறைவைத் தருகிறது. இவ்வளவு வெளிப்படையானக் கட்டுரைகளை ஏன் ஆண்கள் எழுதுவதில்லை என்ற வினா எழுகிறது.
‘ஊடகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் எடுத்துரைக்கும் ‘காதல் மாயையிலிருந்து’, விடுபட்டு, நமக்கான உணர்வை,  உறவுத் தேடலில் நமக்கான வழிமுறைகளை நம் சொந்த அனுபவத்திலிருந்து வகுத்துக் கொள்வதன் மூலம் உறவுகளை செழுமைப்படுத்திக்கொள்ளமுடியும்,’ என்ற கருத்து எனக்கு உடன்பாடே. இது போன்ற கட்டுரைகள் கொற்றவைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

மிக்க நன்றி.


ஒரு விமர்சனம். கொற்றவையின் நடை கல்வியியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரை போல் தோற்றமளிக்கிறது. தற்கால ஆண்பெண் உறவு பற்றிய செய்திகள் இருப்பதால், அவர் நடையை சற்றே எளிமைப் படுத்தியிருக்கலாம். (அதற்காக, பாமரனும் புரிந்துகொள்ளும் அளவு என்று நான் சொல்லவில்லை)

இது எனக்குப் புதியத் தகவல். பொதுவாக என்னுடைய எழுத்து மிகவும் எளிய தமிழில் இருப்பதாகவே எண்ணியிருந்தேன். கவனத்தில் கொள்கிறேன்.

மேலும், கொற்றவை பெண்ணியத்தை மார்க்ஸீயப் பின்னணியில் பார்க்கிறார். மார்க்ஸீயம் பெண்ணியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஐயா மார்க்சியம் குறித்து பேசுவோரில் இங்கு மூன்று வகையினர் இருக்கின்றனர். மார்க்சிய மூல நூல்களைப் படித்து மார்க்சியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள், இரண்டாமவர், மார்க்சிய சுருக்க நூல்கள் அல்லது அறிமுக நூல்கள் ஆகியவற்றைப் படித்து அது சமூகத்தைப் பற்றி அவசியமான சில விசயங்களைப் பேசுகிறது, இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பரந்த தளத்தில் மட்டும் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மூன்றாமவர் பெரும்பாலும் மார்க்சியம் குறித்த விமர்ச்ன நூல்கள், மற்றவரின் பேச்சுகள் இவற்றை மட்டும் படித்தோ, கேட்டோ மார்க்சியம் குறித்த ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். 

தமிழகச் சூழலில் (இந்தியச் சூழலில்) மார்க்சியம் சாதி பற்றி பேசவில்லை என்றொரு வாதம் உண்டு, சர்வதேசச் சூழலில் மார்க்சியம் பெண்கள் பற்றி பேசவில்லை என்றொரு வாதம் உண்டு,. இரண்டிற்கும் ஒரே பதில், மார்க்சிய நூல்களை, மார்க்சியப்-புரட்சியாளர்களின் போராட்ட வரலாறு ஆகியவற்றைப் படியுங்கள் என்பதே. எந்த இடத்திலும் மார்க்சியம் பெண்கள் எங்கே அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர், அவர்களுக்கு எதற்கு சுதந்திரம் வேண்டும் என்றோ, சாதி என்பது இம்மண்ணில் இயல்பிலேயே பரிணமித்த ஒன்று அதனை ஒன்றும் செய்ய முடியாது என்றோ பேசவில்லை. 

மேலும் மதங்களைப் போல் மார்க்சியம் பெண்களுக்கு இன்ன கடமைகள் உண்டு, பண்புகள் உண்டு, பெண்மை குலையாமல் நடக்க வேண்டும் என்று எங்காவது வகுத்துள்ளதா?

மீண்டும் சொல்கிறேன் அது சமூகத்தில் நிலவும் பிரிவினைகளின் அடிப்படையைப் ஆய்வுபூர்வமாகப் பேசுகிறது. அது ஒரு கணித வடிவம் என்றும் வைத்துக் கொள்ளலாம், அதனைக் கொண்டு நமக்கு வேண்டிய கணக்குகளுக்கு நாம் விடை கண்டுபிடிக்கலாம்.


//200 ஆண்டுகால மார்க்ஸீய வரலாற்றில் பெண்தலைமைகள் மிகக்குறைவே.// -


தயவு செய்து Marxists.org தளத்தைப் பார்க்கவும். மேலும் 200 ஆண்டுகாலம் முன்னர் சமூகம் என்னமாதிரியான கட்டமைப்பில் இருந்திருக்கும், அன்றைய சூழலுக்கு பொதுவெளியில் அரசியலில் பெண்கள் பங்கேற்கும் சூழல் எப்படி இருந்திருக்கும் அதைக் கணக்கில் கொண்டு பெண் புரட்சியாளர்கள், தலைமைகள் குறித்து அனுகவும்.


// ரோஸா லக்ஸம்பர்க் லெனினுடன் மாறுபட்டார் என்று கேள்விப் பட்டுள்ளேன்.//

முரண்படுவது ஒரு குற்றமா? ரோசாவுக்கும், லெனினுக்குமான உரையாடல்கள் குறித்தும், ரோசா குறித்து லெனின் கூறியவற்றையும் படிப்பது உங்களுக்கு உதவும். மற்றவர் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஒரு புரிதலுக்கு வந்திருந்தால், அதனை நிராகரித்து, நீங்கள் மூல நூல்களைத் தேடிப் படியுங்கள் என்று சொல்லவேண்டியிருக்கிறது.


ஐயா நீங்கள் தனிமனிதப் பண்புகளையும், அரசியல் போட்டிகளையும், இயக்கங்களின் குறைபாடுகளையும் மார்க்சியத்தோடு ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மார்க்சியம் – மார்க்ஸ் / எங்கல்ஸ் / லெனின் – எங்காவது பெண்கள் தலைமைப் பதவியில் வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்களா?


சீனக்கலாச்சாரப் புரட்சியில் பெரும் பங்கு வகித்த ஜியாங்க் க்விங், மாவோவின் மனைவி ஆவார். பிற்காலத்தில் அவர் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்; தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்.

இந்த அளவுக்கு வரலாற்றைப் படித்துள்ள நீங்கள் ஜியாங் க்விங்கை சிறையிலடைத்த நபர்களின் அரசியல் செயல்பாடு குறித்தும் படித்திருப்பீர்கள். சம்பந்தப்பட்ட டென் ஜியபோங் ஒரு திருத்தல்வாதி, மாவோ செய்த பெரும் தவறே, அவர் அந்த டெங்கை வெளியேற்றாததுதான் என்று ஜியாங் சொல்லியிருக்கிறார்.

பெண்களை அரசியலில் ஏற்க மறுக்கும் சீனாவின் பழமைவாத, பூர்ஷுவா கலாச்சாரத்தை ஜியாங் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார், இது அந்தக் காலகட்டம் மற்றும் மண் சார்ந்த பிரச்சனை. அதனையும் முறியடித்து மாவோ 1966 இல் அவரை கலாச்சார புரட்சியின் முதல் துணைத் தலைவராக்கி, எல்லையற்ற அதிகாரத்தையும் வழங்கினார். (ஒரு தலைவராக இருப்பவர் தம் மனைவிக்கு அதிகாரம் கொடுக்க தயங்குவதை நாம் அவரின் நேர்மைக் குணத்தோடும், தலைமைப் பதவிக்குறிய பொறுப்பின் அடிப்படையிலும், தம் மக்கள், சக தோழர்கள் அனைவரது கருத்தையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்கும் நிலையில் உள்ளார் என்பதாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும் இல்லையா? இல்லையேல், “பெண்டாட்டியை தூக்கி வைத்து ஆடுகிறார்” என்றும் ஒரு விமர்சனம் வருமில்லையா… வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்….)

மேலும் இதில் மார்க்சியத்தின் பிரச்சனை என்ன?


கேரளாவில், கௌரியம்மா தலைமைப் பதவிக்குத் தயாராகும்போது, பொதுவுடமை இயக்கத்திலிருந்தே விலக்கப்படுகிறார்.

இதுவும் இங்கிருக்கக்கூடிய மதிப்பீடுகளின் விளைவாக நேர்வதே…வரதராஜனுக்கு என்ன நடந்தது? கூடங்குளம் பிரச்சனையில் தா. பாண்டியன் என்ன பேசினார்? இதற்கு மார்க்சியம் பொறுப்பாக முடியுமா? ராஜபக்‌ஷே அல்லது இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழித்தொழித்ததற்கு பௌத்தம் பொறுப்பாக முடியுமா? பௌத்தத்திலும் பெண்கள் பிக்குனிகளாக அனுமதிக்கபப்ட்டனர், ஆனால் தலைமையில் பெண்?????? எனக்குத் தெரிந்து இதுவரை பெண் (தலாய்) லாமாவாக வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆணாதிக்கம் என்பது பன்நெடுங்காலமாய் ஊறிப்போன விசயமில்லையா..போராடத்தான் வேண்டியிருக்கிறது..

தோழர்கள் வட்டத்தில் பேசும் போது நீங்கள் லெனினை பேசுமளவுக்கு ஏன் லுக்சம்பர்கை பேசுவதில்லை என்று கடுமையாக வாதம் செய்துள்ளேன், அது இங்கிருக்ககூடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்ந்து பேச வேண்டிய விசயம், அதற்கும் மார்க்சியத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் ரோசாவை தமிழில் அறிமுகம் செய்யும் நூல்களையும், லெனின் ரோசா உரையாடலை தமிழில் பதிவு செய்யும் நூல்களையும் இங்கிருக்கும் அதே அமைப்புகள் தானே கொண்டுவந்திருக்கிறது.

சர்வதேசிய அளவிலும் சரி, இங்கும் சரி பெண்களின் உரிமைகளுக்காக மார்ச்கியர்கள் நடத்தியுள்ள போராட்டத்தின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.


மிக்க நன்றி

கொற்றவை

Related Links:

No comments:

Post a Comment