Dec 12, 2011

முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையும், வெகுஜன தமிழ் ஊடகங்களின் சேவையும், ’தமிழர்களும்’:கேரள அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு அம்மாநில மக்கள் மனதில் பீதியை விதைத்து வெகு சாமர்த்தியமாக அவர்களை தமிழ் மக்களுக்கெதிராக முடக்கிவிட்டிருக்கிறது. இங்கிருக்கும் ‘சில’ தமிழ் உணர்வு இயக்கங்களும் ‘தமிழன்னா’ சும்மாவா என்று உணர்ச்சி அரசியலை முன்னெடுக்கிறது. வன்முறைகளை தவிர்க்கச்சொல்லி எழுதும் நபர்களை ‘அறிவுஜீவிகளே’ இன்னும் எத்தனை நாள் எங்களை மௌனம் காக்க சொல்வீர்கள் என்று சில ’இணைய’ போராளிகள் கொந்தளிக்கின்றனர்.  இச்சூழலில் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன:

1.  கடந்த ஒரு வாரமாக முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது. அதே வேளை ஊடகங்களில் ‘திரைப் பிரபலங்களை’ வைத்து நடத்திய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு அதை விட தீவிரமடைந்திருக்கிறது.  சென்ற வாரம் ஏதோ ‘லண்டன்’ நிகழ்ச்சி காட்டப்படுவதாக விளம்பரம் பார்த்தேன். இந்த வாரம் ‘ஃபிலிம்பேர்.  அது தவிர வழக்கம் போல இசை சேனல்களில் ஆண், பெண்களின் கொஞ்சல் பேச்சுக்கள், சினுங்கல் பாடல்கள் எதற்கும் குறைவில்லை.  நிச்சயமாக வானொலிகளும் இப்பிரச்சனையை ஒரு பேச்சுப் பொருளாக பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் அதுவும் படுக்கழைக்கும் குரலில் தான்.  இவர்களில் எவரும் ‘தமிழர்கள்’ இல்லையா. தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரால் இவர்கள் எவருக்கும் ஆதாயம் கிடையாதா.

2.  விஜய் தொலைக்காட்சியில் நேற்று திவ்ய தர்ஷினியை ‘தலைவாஆஆஆஆஆஆஆஆஆ’ என்று கூவ விட்டு ரஜினி காந்தின் பிறந்த நாளை வியாபாரப் பொருளாக்கி ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அங்கும் சில ‘தமிழர்கள்’ தான் வாயப் பிளந்து கொண்டு அமர்ந்திருந்தனர். ரஜினி என்று பெயர் சொல்லும் பொழுதெல்லாம் கைதட்டி, கரகோஷம் எழுப்பி ஏதோ முல்லைப் பெரியார் அணை பிரச்சனையில் நமக்கு வெற்றி கிட்டியது போல் பல் இளித்துக் கொண்டிருந்தனர்.  தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மட்டும்மொழி கடந்த ஒற்றுமையை எவ்வாறு உறுதிசெய்கின்றனர். 

3.  அதேபோல் நிச்சயமாக சூப்பர் சிங்கர், குயில் பாட்டு, அந்த பாட்டு, இந்த பாட்டு, டான்சு, சிரிப்பொலி, நடிகர்களின் முகத்தை கண்டுபிட்க்க சொல்லும் ‘அறிவியல்’ நிகழ்ச்சி என்று ஒரு நிகழ்ச்சிக்கும் குறைவிருந்திருக்காது. தொடர்களுக்கும் குறைவிருந்திருக்காது. 

4.  இன்று தேனீர் அருந்தும் போது எதேச்சையாக பார்க்கிறேன் எஸ்.ஜே. சூர்யா ரஜினியை பற்றி புகழ்ந்து ஏதோ உளரிக்கொண்டிருக்கிறார். இது போன்ற இயக்குனர்கள் தான் ’போராளிகளாகி’ ‘தமிழ்’ உணர்வை ‘கதை’யாக்கி வீரவசனங்களைப் பேசி ஏழாம் அறிவை வளர்த்து புரட்சிக்கு விதை விதைக்கப் போகின்றவர்கள் இல்லையா.

5. இதற்கிடையில் நிச்சயம் சில ‘தமிழ்’ பத்திரிகைகள் வெகு ஜனநாயகத்தோடு நடிகைகளின் மார்புகளையும், தொப்புளையும் அட்டைப்படமாக போட்டு தங்கள் இதழ்களை வெளியிட்டிருக்கும்.

6. 26/11, பாபர் மசூதி, அன்னா ஹசாரே போன்ற விசயங்களில் ‘நாட்டுப் பற்றை’ முன்வைத்து பேசும் ‘தேசிய’ ஆங்கில செய்தி ஊடகங்கள், தமிழர்களின் பிரச்சனைகளை இடது கையால் புறம் தள்ளி (ஓரளவுக்கு ஆந்திராவையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்) சேவாக் எவ்வளவு ரன் அடித்தார், ஷாரூக் கானின் அடுத்த படம் என்ன, கரீனா கபூர் அடுத்து அணியவிருக்கும் உள்ளாடையின் நிறம் என்ன என்று சலிக்காமல் பேசிக்கொண்டிருக்கும். 

7.  இந்தியா இந்தியா என்று கூப்பாடு போடும் இவ்வூடகங்கள் பகையை ஊதிப் பெருசாக்குவதைத் தவிர ஒரு மாநிலம் மற்ற மாநிலத்திற்கு பகிர்ந்தளிக்க மறுக்கும் வளங்களை மீட்டுத்தருவதற்கு இதுவரை என்ன செய்திருக்கிறது. கார்ப்ரேட்டுகளின் படிமத்தை ஏற்றிவைப்பதற்காக அவர்களிடம் நிதியுதவி பெற்று ‘இந்தியா தீர்மானிக்கிறது’ ‘வீர இந்தியன்’ போன்ற ’சமூக அக்கறையுள்ள’ நிகழ்ச்சிகளை நடத்தும் ’தேசிய ஊடகங்கள்’ இரு மாநிலங்களின் பிரச்சனையில் உண்மைத் தகவல்களை எடுத்துரைத்து நியாயத்தின் பக்கம் இதுவரை நின்று தைரியமாக பேசியிருக்கிறதா? வெத்து விவாத நிகழ்ச்சிகள், நடுநிலைமை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் எனும் வகுப்பெடுப்பு இவைகளைத் தவிர ஏதாவது ஒரு ஊடகமாவது இதுவரை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான சட்ட அணுகுமுறையாவது செய்ய உதவியிருக்கிறதா. (தமிழகம் இந்தியாவில் இல்லையோ)

8.  தேசிய ஊடகங்களாவது போகட்டும், தமிழ் ஊடகங்கள் என்ன செய்கின்றன. மக்கள் போராட்ட குழுக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது போல் குறைந்தது ஒரு நாளாவது அடையாள ஆதரவாக தங்களது ‘பொழுது போக்கு’ நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்துவிட்டு, முல்லை பெரியாரின் கட்டமைப்பு பற்றிய தகவல்களை தொடர்ந்து ஒளிபரப்பி, மக்களை இவ்வசியத்தில் கவனம் கொள்ளச்செய்கிறதா. முல்லை பெரியார் பற்றிய ஆவணப் படமும் வெளியாகியிருக்கிறது. கட்டுமான அறிஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் உள்ளன. எத்தனை மக்களிடத்தில் இது கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.   

9. ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்கர் விருதுயிலிருந்து ’கொலைவெறி’ பாடல் வரை செய்தி பரப்பிய ஊடகங்களுக்கு மக்களை ஒரு இடத்தில் ஒருங்கிணைப்பது அவ்வளவு சிரமமான காரியமா. அந்த கொலைவெறிப் பாடலை அறிமுகப்படுத்துவதற்காக சிட்டி செண்டர் மாலில் ‘நவநாகரீக’ அசைவுகளை செய்து ஒலிப்பேழையை வெளியிட்ட அந்த கும்பல் முல்லைப் பெரியார் பிரச்சனையில் ஒரு சிறு துறும்பைக் கூட அசைக்கவில்லை. மற்றொரு சேனலில் ‘ஒஸ்தி’யாக ஒரு கும்பல் ‘தாய்மையை’ பேசிக்கொண்டிருக்கிறது. நாளையே இவர்கள் ’வேறு வழியின்றி’ ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து கூடினால் எந்த வெட்கமுமின்றி அதையும் பார்த்துக்கொண்டிருக்க செய்யப்போகிறது வெகுஜன ஊடகங்கள்.

10.  இவ்வளவு மோசமான சமூக சூழலிலும் கூட ஊரில் உள்ள அத்தனை ’மால்களிலும்’, ’நட்சத்திர உணவகங்களிலும்’, பார்களிலும், பப்புகளிலும், சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ‘தமிழர்கள்’, நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை தங்கள் அடியாளமாக போட்டுக்கொண்டிருக்கும் ‘முகப்புத்தக தமிழர்கள்’, விஜய்க்காகவும், நமிதாவுக்காகவும் எதையும் செய்யத் துணியும் ‘தமிழர்கள்’, ‘ஏழாம் அறிவுத் தமிழர்கள்’ என்று அத்தனை ‘தமிழர்களும்’ தங்கள் சந்தோசங்களில் கவனம் செலுத்திக்கொண்டு சொந்த மண்ணுக்கு செய்யும் துரோகத்தை விடவா மூளை சலவை செய்யப்பட்டதால் பயத்தில் உழலும் அந்த அப்பாவி மலையாள மக்கள் துரோகம் செய்கின்றனர்.

மலையாளிகளின் கடைகளை அடித்து உடைக்கும் ‘தமிழின’  உணர்வாளர்கள் ஏன் இந்த வணிக ஊடகங்களைப் பார்த்து தங்கள் கண்டனங்களை எழுப்புவதில்லை. குறைந்தபட்சம் ஒரு நாளாவது (அரை நாள்!) பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று கோசங்கள் எழுப்புவதில்லை. ‘குத்தாட்ட’ நிகழ்ச்சிகளுக்காக ‘சமூக அக்கறை’ நிறைந்த தொடர்களை நிறுத்தி விட்டு ஒரு பாட்டுக்கு பத்து விளம்பரங்கள் போட்டு கும்மியடிக்கும் அவ்வூடகங்களின் நிலைப்பாடென்னவென எவருக்கும் தெரியாது. கட்சி பேதமின்றி ஒரு மனதாக கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது இடத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு அறிவிப்பையாவது வெளியிடச் சொல்லி நம்மால் அவர்களை நோக்கி குரல் எழுப்ப முடியுமா.

பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் சுரண்டிப் பிழைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மனதில் ‘தாக்கத்தை’ ஏற்படுத்தும் இவர்கள் ஏன் மக்கள் போராட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடிவதில்லை. ஊர் ஊராக வேனை ஓட்டிச் சென்று பங்கேற்பாளர்களை சேர்க்க ஓடும் ஊடகங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான இதில் ஒரே ஒரு போஸ்டராவது அடித்திருப்பார்களா. வட இந்திய ஊடகங்கள் அன்னா ஹசாரேவுக்கு சேகரித்து தந்த ஆதரவைக்கூட இவ்விசயத்தில் ’தமிழ்’ ஊடகங்கள் பெற்றுத்தர இயலவில்லை. தமிழ் நாளிதழ்கள், அரசியல்வாதிகளின் சாகசங்களை ஒரு முழுபக்க அளவு வெளியிட்டு ‘சேவை’ செய்வது போல் ‘முல்லை பெரியார் அணை பாதுபாப்பானதே’ என்று ஒரு பக்க விளம்பரமாவது கொடுத்திருக்கலாமே.  ஈழத்தை வைத்து, பிரபாகரனை வைத்து, ‘தமிழர்களின்’ பிரச்சனையை வைத்து ஆதாயம் தேடும் ஊடகங்கள் கூட இதில் விதிவிலக்கல்ல.

தேனி, கம்பமெட்டு, குமிளி, கேரள எல்லையில் தங்கள் எதிர்ப்பை வன்முறையின்றி தெரிவிக்க குவிந்து அடி உதைகளை வாங்கிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயப் பெருமக்களான அவர்கள் நிச்சயம் ‘மானமுள்ள தமிழர்களாக’ இருக்க முடியாது. ரஜினிகாந்தின் ஃப்ளெக்ஸ் பேனரை மலையளவுக்கு அச்சிட்டு அதற்கு முன் சூடம் ஏற்றி வழிபட்டதை, அன்னதானம் இட்டதை ஒளிபரப்பி ஊக்குவிக்கும் ஊடகத்தினரே மானமுள்ள தமிழர்கள்...

அப்படிபட்ட மானமுள்ள தமிழராய் இருப்பதில் பெறுமை கொள்வோம்...அதையெல்லாம் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள், பாடகிகளின், சூப்பர் சிங்கர்களின், இசை, நடன நிகழ்ச்சிகளுக்கான நீதிபதிகள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் இன்னும் இதர ‘பொதுமக்களாகிய தமிழர்களின்’ கால்களுக்கு நம் பெறுமைகளை சமர்ப்பணம் செய்வோம். 

2 comments:

  1. சகோதரி கொற்றவை அண்மைக்காலமாக உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். உங்கள் பதிவுகளில் இருக்கும் சமுதாய அக்கறையும் நியாயமான கோபங்களும் பிரமிக்க வைக்கிறது. தொடரும் உங்கள் விழிப்புணர்வு பதிவுகளிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தோழர். சமீபத்தில் மாசெஸ் - M.A.S.E.S - பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கெதிரான அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் இணையலாம். அழைப்பு பெற இங்கு நீங்கள் பதிவு செய்யலாம் - நன்றி.
    Reply

    ReplyDelete