Jul 1, 2010

செம்மொழியும், தமிழ் வாழ்வும்...


சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி..கிளியே
செம்மை மறந்தாரடி. - மாகவி பாரதி.

தமிழ் பேசிச்சாவடைந்த மக்களை நோக்கி, வாழ்வாதாரம் ஏதுமின்றி பேச்சற்ற மக்களின் முன் ஓங்கியொலிக்கிறது..செம்மொழியான தமிழ் மொழியே..

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தான் செம்மொழி கீதம் கேட்டோம். அதில் தமிழ் உச்சரிப்பையும், தமிழ் இசையையும் தேடவேண்டியிருந்தது. அதைக் கேட்ட பின்பு இதையா செம்மொழிப்பாடலென்று சொல்கிறார்கள் என சந்தேகம் வந்தது. அதனால் மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டோம்.

அந்தப் பாடலில் (பொருந்தச் சொல்வதென்றால் கூச்சலில்முதலில் எங்களுக்கு ஏற்பட்டது வருத்தம். உலகில் உள்ள அத்தனை இசைக் கருவிகளும் காதுகளை நோக்கி படை எடுப்பது போன்ற ஒரு மிரட்சி. தமிழிசை என்றோ தமிழர்களுக்கான இசை என்றோ சற்றும் உணரமுடியாத ஒரு இசையாகவே உள்ளது அது. பார்ப்பன கர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் சூபி இசையும் சேர்த்து அமைத்த இசையில் எங்களால் தமிழ் மணத்தை உணரவேமுடியவில்லை. அதன் பாடலாக்கத்திலும் நவீனத்துவம் மேலோங்கி இருக்கிறதே தவிர, தமிழ் மண் சார்ந்த காட்சிகள் ஓரிரு இடங்களில் (கிராமிய நடனம், பொய்க்கால் குதிரை, கே.ஏ. குணசேகரனின் குரல் மற்றும் முகம் ) மட்டுமே இடம்பெறுகின்றன. பாடுபவர்களில், இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களின் உடல் மொழியில், உடையில் கூட (ரஹ்மானின் உடை உட்பட) மேற்கத்திய தாக்கம் மேலோங்கி இருக்கிறது. இடையில் ஒரு குழந்தை சுவற்றில் அம்மா அப்பா என்று எழுதி வைக்கும் காட்சி கூட நவீன பணக்கார வாழ்க்கைமுறையை ஒட்டி இருக்கிறதே ஒழிய (மிகவும் செயற்கைத்தனம்), தமிழ் வீடு என்று சொல்ல இயலவில்லை. கிராமியப் பாடகியான மதுரைச் சின்னப்பொண்ணுவிற்கும் கூட அரிதாரம் பூசி அவருடைய மண் வாசனையையும் பிடுங்கி விட்டார்கள். உள்ளபடி சொன்னால் தமிழ் மக்களல்லாதோர் இப்பாடலைக் கேட்டும், பார்த்தும் தமிழ் மக்கள் வாழ்வு நவீன நாகரீகத்தின் உச்சியில் இருக்கிறது என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

மண்ணின் இசையை கிராமத்தில் தொடங்கி உலகின் கடைக்கோடி வரை எடுத்துச்சென்ற இளையராஜாவை விடுத்து, இப்படி நவீனத்தின் கையில் செம்மொழி கீதம் இசைக்கபெற்றது வருத்தத்துக்குரியது. வெள்ளைக்காரன் அங்கீகரித்த ஒரே காரணத்தால் ரஹ்மானுக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. பார்பனிய கர்நாடக இசையைக் கூட அதன் சாயல் ஏதுமின்றி மீட்டெடுத்து, திரை இசை பாடல்களாய்த் தந்த இசைஞானியை எவ்வாறு அரசு நினைவு கூறவில்லை என்பது வியப்பாக உள்ளது. பாடும் இசைக்கலைஞர்களின் குரலும், இசைகருவிகளின் இசையும் எவ்வித உறுத்தலும் இன்றி ஒருங்கிணைத்து அவர் தந்த பாடல்கள் தமிழனுக்கு உலகளாவிய பெயர் பெற்றுத் தந்துள்ளது யாவரும் அறிந்ததே ஆனால் இச்செம்மொழி கீதத்தில் இசைக்கருவிகளின் ஆதிக்கமும், நாகரீகத்தின் ஆதிக்கமும், பார்ப்பனிய இசை மற்றும் இசைகலைஞர்களின் ஆதிக்கமுமே காண முடிகிறது.

ஒருவேளை அதைத் தான் நாம் தமிழிசை என்று கொள்ள வேண்டுமோ. இதில் மகாக் கொடுமை, இடையில் வரும் ராப் வகைப் பத்தி. கிராமங்களிலும் கூத்து என்ற வகைப்பாடல்களில் 7 1/2 கட்டையில் பாடுவார்கள், ஆனால் அது கூச்சல் போல் இருக்காது, இங்கே ஓர் பெண் 'ஒபேரா சிங்கிங்' என்ற ஒரு மேற்கத்திய பாணியில் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்று ஆங்கில தொனியோடு கூச்சலிடுகிறார்.

இதை 'தனியார் ஒலிநாடா' (Private Album) என்ற வகையில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம், அதுவும் உலகளாவிய நவீன இசைப் போக்கை மனதில் கொண்டு தொலைக்காட்சிகள் அல்லது திரையரங்குகளில் ஒளிபரப்ப வைத்துக்கொள்ளலாமே ஒழிய, 2000 வருட தொன்மையை பறை சாற்றும் நிகழ்வாக அறிவிக்கப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கான இசையாய்க் கொள்வது தமிழ் இசையை அவமானப்படுத்துவதற்கு சமம்.

செம்மொழி மாநாட்டுச் செலவு 300 கோடிகள் அல்லது 500 கோடிகள் என்று சொல்லுகிறார்கள். அவ்வளவு காசைக்கொட்டி
மொழிக்குசெய்ய வேண்டியது அவ்வளவு ஒன்றும் உயிராதார பிரச்சினையில்லை. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கையின் பிரச்சினைகள் அவர்களை பேசமுடியாதவர்களாய் ஆக்கியிருக்கிறது. ஆக்கப் பூர்வமான வழிகளில் தமிழக அரசு
மக்களுக்குச் செலவு செய்திருக்கலாம்..இதை உரத்த குரலிலும் சொல்லலாம் ஏனாயின் அது அவர்களின் வரிப்பணமே.

{செம்மொழிப் பாடலுக்கு இயக்குனர் என்று கௌதம் வாசுதேவ மேனன் என்றதும் சந்தேகம் தெளிந்தது. தமிழ் படம் எடுக்கமாட்டேன் என ஒரு வாரப்பத்திரிக்கையில் இவர் படம் போட்டு எழுதியிருந்தார்கள். புத்தகம் வாங்கி படிக்கும் முன்பே மனதில் தோன்றியது அவர் எப்போது தமிழ் படம் எடுத்தார்.}

- கொற்றவை - வசுமித்ர

1 comment: