Jul 17, 2010

கள்ளக்காதலின் கொலையுணர்வு.
பாகம் 1

கள்ளக் காதல் (அந்த பெயர் குறிப்பில் எனக்கு உடன் பாடில்லை என்று ஏற்கனவே எழுதியுள்ளேன்) கொலைகள் அதிகரித்து வருவது வருத்தத்தை தருகிறது. தன் விருப்பத்திற்காக கணவனை கொலை செய்வதென்பது அனுமதிக்க முடியாத குற்றம். ஒர் உயிரைக் கொன்று மற்றொரு உயிர் மேல் அன்பு கொள்வது எவ்வாறு காதலாக முடியும்? காதலோ அன்போ ஒர் மனிதனை மிருகமாக மாற்ற இயலாதென நம்புகிறேன். அப்படி கொலையுணர்வு தோன்றுகிறதெனின் அவ்வுணர்வுக்குப் பெயர் சுயநலம், பேராசை, உடல் சார்ந்த வெறி, பொருளாதார இருப்பு.

ஒரு குற்றம் நிகழும் போது அதன் பின்னணியில் இருந்து செயல் படுவது எது என்று அறிவது, அக்குற்றங்களைத் தடுக்க உதவும். திருமணத்திற்கப்பாற்பட்ட உறவுகள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான தேவைகள் என்ன? அப்படி ஓர் உறவு ஏற்பட்ட பின்னர் திருமண உறவை முறித்துக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் எவை ? அதைக் கொலை வரைக் கொண்டு செல்வதில் ஆணின் பங்கு (காதலன்) இப்படி பல. மாறாய் பத்திரிகைகள் தலையங்கம் போட்டு எழுதுவது கட்டிய மனைவியே கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற அவலம், பெண்ணின் வெறிச்செயல், என்ற ரீதியில் செய்தி பதியப்படுகிறது. அதன் வார்த்தை விவரிப்பிலும் குற்றச்சாட்டு மனைவியாகிய அப்பெண்ணின் குணத்தையும், நடத்தையையும் விவரிப்பதாய் இருக்கிறதே ஒழிய, அதில் ஆணின் பங்கு (தந்தை, கணவன், காதலன்) பற்றி குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் வெறும் பார்வையாளர்களைப் போல் சித்தரித்துவிட்டு பெண்ணை மட்டும் கற்பு அடிப்படையில் சித்தரிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதரத்தை ஊழல் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்துச் சம்பாதிக்கும் முதலாளிகளின் மன
இயல்பை இப்படி வார்த்தைகளால் பத்திரிக்கைகள் விவரிப்பதில்லை. ஆயிரம் கோடி ஊழல். விசாரணை இவை மட்டுமே..இதில் ஆயிரம் கோடியை ஊழல் செய்த நபர், அச்சொத்தை அனுபவித்த அவரது மகன்கள், மகள்கள் மனைவி யாரிடமும் பத்திரிக்கைகள் குறுக்குக் கேள்வி கேட்ப்பதில்லை. அதில் கேட்பதற்கு சுவராசியமாகவும் எதுவும் இல்லை என்று நினைக்கலாம். மனித மாண்புகளை கேவலத்துக்குட்படுத்தும் சாதிய பிரச்சினைகள், அவற்றால் சகமனிதன் அடையும் மன வேதனைகளை இதே அளவுக்கு பத்திரிக்கைகள் எழுதுவதில்லை. காரணம் விரைவில் விற்றுத்தீரும் விசயம் அந்தரங்கமே. அதுவும் அது பெண் தரப்பென்றால் இன்னும் மகிழ்ச்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கை உலகில் தொலைக்காட்சி ஊடகங்களில் வெவ்வேறு முறைகளில் நடக்கும் கொலைகள் பற்றிய செய்தி வர்ணனையை விட இந்த கள்ளக் காதல், விபச்சாரம், பெண்ணின் கற்பு, உறவு சார்ந்து வரும் செய்திகளின் ஆண் வர்ணனை மொழி படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தவே உதவுகிறது. குற்றப்பின்புலத்தை ஆராய்ந்து அதில் உள்ள பிரச்சினைகளை விளக்கினால் மாற்றம் நிகழும் அதை பத்திரிக்கைகள் செய்வதில்லை.. மேலும், இந்த மொழிகள் ஏற்றிவைக்கும் அவமான கருத்தியலால் கொலைகளும், தற்கொலைகளும்தான் பெருகும். அவர்களுக்கு வணிகமும் பெருகும். திருணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏற்படக் காரணமாய் இருப்பதாய் நான் படித்தவரையில், கேட்டவரையில் அறிவது :
1. பெண்ணுக்கு விருப்பமில்லாமல் தந்தை செய்துவைக்கும் கட்டாயத்திருமணம்.
2. கொடுமைக்காரக் கணவர், குடிகாரர், பொறுப்பற்ற கணவர்.
3. பணம், புகழ் என்று சுற்றித் திரிந்து மனைவியை வெறும் ஒரு பொருளாக மட்டும் நடத்தும் கணவர். (lack of care)
4. விவாகரத்துப் பெறுவதில் உள்ள சிக்கல் (கணவன், பெற்றோர், மாமியார், குழந்தைகள், சமுதாய நிலை, கலாச்சார முடக்கு மற்றும் பெண் தரப்பு கேவலப்படுத்தப்படுதல். இவைகளால்)
5. சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஆண். ஏற்படுத்தித்தரும் பெண்.
6. பெண்ணின் அறியாமை.
(இவற்றில் ஊடகங்கள், அவை போதிக்கும் விசயங்கள், தொடர்புக் கருவிகள். செல்போன், நெட் இதர.)

மாதிரி;1

குடும்ப அந்தஸ்த்து, மானம் என்று காரணம் காட்டி பெண்ணின் காதலை நிராகரிக்கும் தந்தைகளையே முதல் குற்றவாளியாக கருதவேண்டியிருக்கிறது. ஒருவேளை அந்த காதலன் மகளுக்கு பொருத்தமானவர் அல்ல (பொருளாதார அடிப்படையில் இல்ல, பண்பு சார்ந்து) என்று பெற்றோர் கருதினால் மகளின் விருப்பமின்றி வேறொருவரை திருமணம் செய்து வைப்பதை தவிர்த்து அவளை வீட்டில் வைத்துக்கொள்ளலாமே. அதை விடுத்து ஓர் ஆண் மகனை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிடுகிறார். அந்த தந்தை திருமணத்தை ஒரு கடமையாக நினைத்து அதை நிறைவேற்றிவிடுகிறார். பின்பு கலாச்சாரத்தின் பெயர் சொல்லி கைகழுவியும்விடுகிறார். பெரும்பாலோனோருக்கு தனது மகள்,மகன் காதல் வயப்பட்டது தெரிந்ததுமே திருமண நாளை அவசரமாக குறிக்கின்றனர். இதில் காதலை வயசுக்கோளாறாகப் பார்க்கும் பெற்றோர்கள் அவ்வயசுக்கோளாறில் அவர்கள் எதுவும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். திருமணம் முடிந்துவிட்டால் சமுதாயத்திற்கு பயந்து அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என நம்புகிறார்கள். (இதில் சமுதாயம் ஒழுக்கம் என்பது புரிந்து ஏற்றுக்கொண்டு நல்லியல்புகளை வளர்க்கும் ஒன்றாக இல்லாமல் பயமுறுத்தும் ஒன்றாக இருப்பதை நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.)இந்த மாதிரியில், 2 ஆவது குற்றவாளி மகள். விருப்பமில்லாமல் திருமணத்திற்கு இசைவு தரவேண்டியதில்லை, பெற்றோர்கள் மிரட்டினால் சட்டத்தையும், மனித உரிமை கழகங்களையும் நாடுவதை விடுத்து ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு போவதென்பது கயமை. போராடும் குணமில்லாது சந்தர்ப்பவாதத்தை கைகொள்வது மன்னிக்க முடியாத குற்றம். பெற்றோரை, சூழலை எதிர்த்துப் போராடத் துணிவில்லாத ஒரு பெண்ணுக்கு கணவனைக் கொல்லுமளவுக்கு துணிவு வருவது எப்படி? காதலனாகிய ஆண் தரும் தைரியமா? தடயங்களின்றி தப்பிவிடலாமென்ற குருட்டு நம்பிக்கையா? பொருளாதார பலமா? ஒரு மனித உயிரை அகற்றுகிறோம் என்ற பதைப்பின்றி யோசிக்கவியலாத அவசரமா?. அப்படித் தப்பினாலும் மனக்குரல் விட்டுவிடுமா? உங்கள் மகிழ்விற்காகவும், உங்கள் தந்தையின் கவுரவத்திற்காகவும் அப்பாவி ஒருவர் கொல்லப்படுவது நியாமற்ற செயல்.


மாதிரி 2, 3:

விரும்பி திருமணம் செய்த பின்னர், விரும்பத்தகாதவராக கணவர் மாறும் பொழுது, அவர் ஏன் விரும்பத்தாகாதவராக மாறினார், அப்படி தாங்கள் உணர்ந்த மாற்றம் என்ன என்ற கேள்விகளை ஆராயாமல், அல்லது அதை தவறாக புரிந்துகொண்டு வீட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சண்டைகள் போட்டு அலுத்து நமக்கு கிடைத்த வாழ்க்கை இவ்வளவுதான் என கழிவிரக்கம் கொண்டு அப்போது ஆறுதலாய் கிடைக்கும் ஆண், மற்றும் பெண்ணின் துணை தேடி, சந்தர்ப்பத்தை பயன்படுத்துவது நடந்து விடுகிறது,

ஆனால் அப்படி தனக்கு பிடித்த மாதிரி ஒரு துணையை கண்டவுடன் கணவனோ அல்லது மனைவியோ மனம் விட்டுப் பேசி நேர்மையாக உறவுகளை கைக்கொள்வதில்லை. இதற்குள் அவர்கள் தங்களுக்குள் விடுபடாத உறவென குழந்தைகளை சாட்சியாய் வைத்து சமூக ஒழுக்கத்திற்கு பயந்து மறைக்கிறார்கள். ஒருவரை ஏமாற்றி ஒருவர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது கூடுவதால் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள முடியுமே தவிர பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இயலாது. கணவணுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவணும் இது போன்ற தவ்றுகளைச் செய்வதில் பலனாகக் கிடைப்பது திருட்டுத்தனம் செய்கிறோம் என்ற குற்றவுணர்வு, மனஅழுத்தம், யாருக்கும் உண்மையாய் இருக்கமுடியாத நிலை. அதுவே இயலாமையாக உருவெடுத்து, தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் நிலை.


மேலும் மனக் குழப்பங்கள் அதிகரித்து அந்தப் புது உறவிலும் விரிசல் ஏற்படுத்தும். பின்பு அதுவும் முடிந்து போய், நாளை வேறொரு ஆள், முறிவு, உறவு, முறிவு என தொடர்ந்து கொண்டே செல்லும். இதற்கிடையில் தனது துணைக்கு இவ்விசயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற மரணபயம், அல்லது தீர்வு காண துணையையும், குழந்தைகளையும் கொல்லச் சொல்லும் தீவீரம், அல்லது தற்கொலை எண்ணம்.


ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதை சரியான முறையில் தீர்க்க வழியும் இருக்கையில் இதுபோன்ற முறைகளில் ஈடுபடுவது எவ்வகையில் சரி எனத்தெரியவில்லை. ஒத்துவரவில்லையா, முறைப்படி பேசி விவாகரத்துப் பெற்றுவிடுங்கள். விவாகரத்துக்கு முட்டுக்கட்டையாக துணைகள் இருப்பார்களேயானால், பிரிந்து உங்கள் சுயத்தோடு வாழும் உங்கள் உரிமைக்காக போராடுங்கள். சமூகத்திற்காக அஞ்சி போலியாக குடும்ப உறவை ஒரு போதும் காக்க இயலாது. அது குற்றவுணர்வுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

இந்தக் கணத்தில் தான் நாம் மனசாட்சியை தர்க்கம் செய்து ஏமாற்றுகிறோம். ஆமாம் கனவனைப் பிடிக்கவில்லை, ஆனால் அவன் சம்பாத்தியத்தில் உண்டு, களிப்பது, கூடி இருப்பது – அதே போல் மனைவியைப் பிடிக்காது ஆனால் அவள் வகை வகையாய் சமைப்பது வேண்டும், பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். (பிச்சை பொருளாதாரத்திற்காக) கணவனை தெய்வமாக மதிக்க வேண்டும். ஏமாற்றமளிக்கும் கனவனின் / மனைவியின் குணத்திற்கு மாற்றாக மற்றொருவருடன் உறவு கொள்வதென்பது நோகாமல் நோன்பு கும்பிடும் பேராசை. நற்பெயர் வேண்டும், சமூதாய அந்தஸ்த்து வேண்டும், குழந்தை வேண்டும், கூடுதல் உறவும் வேண்டுமென்பது கூழிற்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல். குழந்தைக்காக சகித்துக்கொண்டு வாழ்வதாக கூறிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, மாற்றுத் தேவையாக மனம் ஏன் மீண்டும் ஓர் எதிர்பாலையேத் தேடுகிறது? அது ஏன் மாற்றுச் சிந்தனைகளை, பாதைகளை நாடுவதில்லை? இது போன்ற கேள்விகளை யோசிக்கவேண்டியிருக்கிறது. மனித மனத்திற்கு தேவை குற்றங்களை நியாயப்படுத்த ஏதாவது காரணம். அதுவும் குற்றத்தை திருத்திக்கொள்ள அல்ல, குற்றத்தை தொடர்வதற்காக அல்லது குற்றத்தை குற்றவிணர்வில்லாது துவக்குவதற்காக.

2 comments:

 1. உளவியல் ரீதியான நுட்பமான கட்டுரை,வேறு இலக்கிய இதழ்களுக்கு கூட அனுப்பலாம்...

  ReplyDelete
  Replies
  1. கொற்றவை,

   ' கள்ளக்காதல் ' ஓ ஸாரி .............. ' கள்ளக்காமம் ' ஏற்படுவதற்கான காரணங்களாக நீங்கள் சொல்லியிருப்பவைகளோடு ' ஒரே இணையுடனான சலிப்பு, புதிய தொடர்பு கொடுக்கும் குறுகுறுப்பான குற்றவுணர்வுடன் கூடிய கிளர்ச்சி ' என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ? ' காதல் ' என்பதுதான் உலகத்தின் மிகப் பிரதானமான மூடநம்பிக்கை. அப்படி ஒன்று இல்லவே இல்லை. ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆண் மீதான " நீடித்த ஈர்ப்பு " தான் காதலாக பாவிக்கப் படுகிறது. அந்தத் " நீடித்த ஈர்ப்பு " ஒரு பெண்ணுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட பல ஆண்களின் மீதும் வரலாம். ஆனால், அவள் தன் வாழ்நாளில் அப்படிப்பட்ட ஆண்களைத் " தொடர்ந்து " சந்தித்துக் கொண்டிருப்பதற்கான சூழலை காலம் அவளுக்கு எத்தனை முறை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து அவள் காதல்வயப் படுகிறாள். ஆணுக்கும் இது அப்படியே டிட்டோ.

   x என்ற ஆணும் y என்ற பெண்ணும் காதலிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். y என்ற பெண் x என்ற ஆணை z என்ற சூழலில் " தொடர்ந்து " சந்திக்காமல், v என்ற ஆணை அந்த z என்ற சூழலில் " தொடர்ந்து " சந்தித்திருந்தால், v என்ற ஆணும் y என்ற பெண்ணும் காதலித்துக் கொண்டிருக்கலாம். நமக்கான " இலட்சிய இணை " யோடு மேக்சிமம் பொருந்திப் போகிறவர்களை எல்லாம் நம்மால் காதலிக்க முடியும், அதாவது அவர்கள் மீதான ஈர்ப்பு நம்மிடம் தொடர்ந்து நீடித்திருக்கும். இந்த " ஈர்ப்பு நீடித்தலை " தான் காதல் என்று பொய்யாகக் கருதிக் கொள்கிறோம்.

   அதிலும், இந்தக் காலக் காதல்களில் தொண்ணூற்று ஒன்பது புள்ளி ஒன்பது ஒன்பது சதவிகிதம் " இனக்கவர்ச்சி " தான். x ஐக் காதலிக்கும் y , x உடனான காதல் கசந்த பிறகு, சில காலம் சும்மாயிருந்து விட்டு பிறகு z ஐக் காதலிக்க ஆரம்பித்து விடுவார். இதை அனுபவ ரீதியாக, கண்கூடாகப் பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறேன். இப்போது சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுவது இனக்கவர்ச்சி மட்டுமே.

   பெண் தவறு செய்தால், ஆண் தான் அதற்கு முழுமுதற்காரணம். ஆண் தான் அவளை அவ்வாறு செய்யத் தூண்டுகிறான். அதுவே ஆண், தவறு செய்தால் அது அவன் பெண்ணின் மீது பிரயோகிக்கும் அரசியல், ஆதிக்கம், கொழுப்பு ......... எந்த ஊர் நியாயம் இது ? சொல்லுங்கள் கொற்றவை !

   இந்தக் கட்டுரையில் " மாதிரி 2 , 3 சிறப்பாக நடுவுநிலைமையோடு வந்திருக்கிறது. அருமை ! " கூழுக்கும் ஆசை மீனுக்கும் ஆசை " என்ற உதாரணம் மூலம் இன்றைய மக்களின் மனநிலையை அப்படியே படம் பிடிக்கிறீர்கள். " மாற்றுத்தேவையாக மனம் ஏன் எதிர்பாலையே தேடுகிறது ? " என்பது உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் கேள்வி ! " குற்றத்தைக் குற்ற உணர்வின்றித் தொடர்வதற்காகவே நாம் காரணங்கள் தேடுகிறோம் " - இந்த ஒரு வரிக்காகவே இந்தக் கட்டுரைக்கு நோபெல் பரிசு கொடுக்கலாம்.

   Delete