Jan 19, 2010

சமுக அறமும் , தற்கொலைகளும்.


சில நாட்களாக பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணத்தை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. கள்ளக்காதல் செய்தியும், விபச்சார அழகி கைது என்றும், கற்பழிப்பு விபரங்களும் நாள் தவறாமல் வந்துவிடுகிறது. அவர்கள் உபயோகிக்கும் 'உல்லாசம்', 'பகீர்' போன்ற வார்த்தைகளும், கைது செய்யப்பட்டதாக பிரசுரிக்கப்படும் வாக்குமூல நடையும் மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. இச்செய்திகளை படிப்பவர்கள் மனதில் வலியை ஏற்படுத்துவதற்கு பதில, அச்செயல்களை அவர்கள் எப்படி புரிந்திருப்பார்கள் (.ம் கற்பழிப்பென்று வைத்துகொள்ளுங்கள்) என்று மனதில் காட்சி ஓடச்செய்து மேலும் காம வெறியைப் புகுத்துவதாகவே உள்ளது.

ஒவ்வொரு சொற்களும் விவாதத்துக்குரியதாய் உள்ளது. முதலில் 'கள்ளக்காதல்' - காதல் என்பது எவருடன் வந்தாலும் அது காதலாகத்தானே இருக்கவேண்டும், அது கள்ளகாதலாய் குறியிடப்படுவதற்கு எது காரணம்? 'ஒழுக்க' விதிகள் எவ்வாறு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று விவாதிக்க விரும்புகிறேன். சுதந்திரநாடு என்று நாம் பறைசாற்றிக்கொள்ளும் நிலையில், தனி மனித சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் பெயரால் நசுக்கப்படுவதை நான் உணர்கிறேன். திருமணம் என்பது இருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம், (திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது - குடும்பம் எனும் அமைப்பு வன்முறைக் களமாக மாறும் சித்திரம் ). சில பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் உரிமை மானம், அவமானம் எனும் அர்த்தமற்ற கூற்றுகளால் முடக்கப்படுகிறது.

ஆகவே விருப்பமின்றி சகித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கு. இங்கு எப்பொழுதும் ஒரு மனிதனை வீழ்த்த அவமானம் எனும் ஆயுதமே கையில் எடுக்கப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலும் அந்தரங்கம் என்பது காமம் சார்ந்தே இருக்கிறது, காமம் என்பதை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி, புனிதப்படுத்தி பின்பு அதையே ஒரு இழி செயலாகவும் விவரிக்கிறது சமூகம். எத்தனை ஒழுக்க முறைகள் விதிக்கப்பட்டாலும், பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க எதுவும் உபயோகப்படவில்லை.

வசதி திருமணம் பற்றிய எங்கல்சின் கருத்து "வசதித் திருமணம் பெரும்பாலும் படு மோசமான விபசாரமாகி விடுகிறது. இது சில சமயங்களில் கணவன், மனைவி, இருவர் தரப்பிலும் நடக்கும்; ஆனால் மனைவியின் தரப்பில் மிகவும் பொதுவாக நடைபெறுகிறது. அவளுக்கும் சாதாரண விலைமகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவள், ஒரு கூலித் தொழிலாளி தனது உழைப்பை விற்பதைப் போலன்றி நிரந்தர அடிமைத்தனத்துக்குத் தன்னுடைய உடலை விற்பனை செய்கிறாள் என்பதே".

திருமணத்தை அதன் வாழ்வுமுறையை சகித்துக்கொள்ளும் நிலையில் , பெண்ணோ, ஆணோ அவரவர் மனதில் இருக்கும் கனவு நபரை காணும் பொழுது மனம் அவரை நாடுவது இயல்பான ஒன்று. நேசிப்பவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு அவர்களின் விருப்பத்துக்கேற்ப அமையும் போது ஆணாய் இருந்தால் அலைபவன், பெண்ணாய் இருந்தால் விபச்சாரி. அவர்களின் உறவுக்கு கள்ளக்காதல் என பெயரிட்டு அவர்களை கேலி செய்கிறது. கேலிக்கும், அவச் சொற்களுக்கும் பயந்து அவர்கள் தங்கள் நேசத்தை மறைக்கவேண்டிய நிலை உருவாகிறது. சமுகம் ஒழுக்கம் என திணிக்கும் வன்முறையால் அவர்கள் தற்கொலை செய்யத் தூண்டி, அதில் வெற்றி பெற்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறது. பிடிக்காத துணையை நீங்கிவிட்டு வரவும் உரிமை இல்லை, தனக்கான துணையை நேசிக்கவும் உரிமை இல்லை. விளைவு சாவு.

சில நேரங்களில் காதலர்கள் பிரிக்கப்பட்டு , வெவ்வேறு நபர்களை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆழ்ந்த காதலாக (இதை சமுகம் கொடுக்கும் அழுத்தத்தோடு நான் கூறவில்லை. உண்மை காதல் என்ற கூற்றை நான் விரும்பவில்லை...ஏனென்றால் உண்மை என்பதும் கற்பிதமே,அதற்கப்பால் எவரின் உண்மை ...என நீண்டு கொண்டே போகும் .) இருந்த பட்சத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க இயலாமல் தங்கள் காதலை தொடர நினைக்கிறார்கள். குடும்பம், குழந்தை போன்ற உறவுகளை மதித்து அவர்கள் கடமையாற்றுகிறார்கள். அதே நேரம் அவர்கள் நேசத்தையும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தொடர்கிறார்கள்.

எந்தவொரு சட்டத்திலும் காதலோ,காமமோ குற்றமாக அறிவிக்கப்படவில்லை, இதை வகையில் பிரித்துப்பார்த்து விமர்சிப்பது முறையற்றது. குறிப்பாக 'உல்லாசம்' எனும் வார்த்தையை இவர்கள் உபயோகிக்கும் முறை குமட்டுகிறது. காதல் கொண்ட இருவர் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்வதும் , உடல் உறவு வைத்துக்கொள்வதையும் 'கணவனுக்கு அல்லது மனைவிக்குத் தெரியாமல் உல்லாசமாக இருந்துவந்தர்கள்' என்று விவரிக்கிறார்கள்.

அறிவித்துவிட்டு செய்யவும் அக்காதலர்கள் தயார் என்றால் அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்? அல்லது தன்னுடன் வாழ விருப்பம் இல்லாத துணையை பெருந்தண்மையுடன் அவர்களுக்குப் பிடித்தவருடன் அனுப்பிவைப்பர்களா?

அடம் பிடிக்கும் கணவனுக்கும், மனிவிக்கும் என்ன தேவை அவர்கள் துணையிடம் இருந்து, மனமொத்த அன்பா அல்லது சமூக குழுக்கள் கற்பித்த மான, அவமான கூற்றுக்கு அடிபணியும் ஓர் அடிமையா? ஓர் ஆணும், பெண்ணும் விருப்பமுள்ள வரை மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும், இல்லாத பட்சத்தில் விருப்பமானவர்களுடன் சேர்த்துவைக்கவேண்டும் எனும் பெரியாரின் கூற்றை நான் முன்மொழிகிறேன். (ஒருவேளை கணவனோ மனைவியோ புரிதலின் பேரில் அதற்குத் தயார் என்றால், அவன் கூட்டிக்கொடுக்கிறான் என்றும் வசைமாறி பொழியும் இந்த சமுதாயம்).

குடும்பம் என்ற நிறுவனம் (institution) தோன்ற காரணமும், அரசியலும் அறிவதே இதற்கான தீர்வாய் அமையும். படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் அல்லது பார்த்தது போல் விவரிக்கும் போக்கை பத்திரிக்கைகள் கைவிடவேண்டும். இது ஒரு தனிமனித சுதந்திரம் சார்ந்த விஷயம், அங்கே ஒருவேளை கொலைகள் நிகழ்ந்து விட்டாலும் கூட கொலைக்கான விசாரணைகளை சட்டம் மேற்கொள்ளட்டும் அதை நீலப்படம் ஓட்டுவது போல் வியாபார நோக்கோடு பிரசுரிப்பது தவிர்க்கப்படவேண்டும்.



"இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன"
பூரியே.



சிறு குறிப்பு.

1. கற்பழிப்பு என்பது ஆணாதிக்கச்சொல். அதை வன்புணர்ச்சி என்றே அழைக்கவேண்டும்.
2. சிறிமி கற்பழிப்பு. இச்சொல்லில் இருக்கும் வன்முறையின் உச்சத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா...

முடிவாக...
கற்பு, ஒழுக்கம் ,தூய்மை, புனிதம், தாய்மை, பெண்மை, விபச்சாரி, இவை போன்ற சமுகம் சார் வார்த்தைகளுக்கு அஞ்சி பெண்கள், இவ்வுறவோடு தொடர்புடைய ஆண்கள், குழந்தைகள் தங்களுக்கு நேரும் வன்முறையை சொல்லப்பயந்து நாளும் இதே சமூகத்தின் முன் செத்து செத்துப் பிழைக்கிறார்களோ, அல்லது தற்கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு இக்கட்டுரை....இனி இது தொடர்பாய் விரிவாகவும் எழுதுவேன்.

6 comments:

  1. Clear thinking. Crisp writing. Keep it coming, kotravai!

    ReplyDelete
  2. nice nerration, good to read. thanks

    ReplyDelete
  3. அவ்வளவு அழகு நிர்மலா இந்த கட்டுரை
    எத்தனையோ நாட்கள் இந்த கள்ள காதல் வார்த்தை பார்த்து எரிச்சலடைந்த நொடிகளும் நேரங்களும் உண்டு
    காதல் எப்போது வந்தாலும் காதலாக மட்டும்தானே இருக்க வேண்டும்
    அழகிகள்
    கைதாகும் போது மட்டும் அழகிகளாக தெரிபவர்கள்
    அவர்களிடம் போகும் ஆணை என்ன சொல்வது
    படுக்கைகாக மட்டுமே ஒரு ஆணை காதலிப்பாள் பெண் என்ற ஆணின் வக்கிர புத்தியால் உல்லாசம்

    நல்ல பண்ணுடா உன்ன விட்டுட்டு இன்னொருத்தன் கிட்ட போ மாட்ட
    எத்தனை ஆண்கள் அவர்களின் நண்பர்களிடம் இதை கூறாமல் இருந்திருப்பார்கள்



    இத்தனை ஆதங்கங்களையும் உங்கள் கட்டுரையிலும் பார்த்த போது
    அவ்வளவு வலி
    அவ்வளவு மன உளைச்சல்
    சொல்ல தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. பிடிக்காத துணையோடு வாழ இப்போதெல்லாம் எந்தப் பெண்ணும் நிர்பந்திக்கப் படுவதில்லை. இப்போதெல்லாம் குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து கேட்டு மனு செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.

      ஏதேது, விட்டால் ' கள்ளக் காதலை ' நீங்கள் ஆதரிப்பீகள் போல. இப்போது, ' கள்ளக் காதல்களை ' விட, ' கள்ளக் காமமே ' அதிகளவில் நடைமுறையில் உள்ளது. தினசரியைப் படித்தால், கணவர்களை விட மனைவிகளே அதிகளவில் ' கள்ளக் காதலில் ' ஈடுபடும் புள்ளி விபரம் அதிர்ச்சியூட்டுகிறது. இது ஏன் ? இந்த இடத்தில் " ஆண்- பெண் விகிதாச்சாரம் " குறித்து குறிப்பிட்டே ஆகவேண்டும். சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. நீங்கள் சொன்னது போல, தன் " கனவு எதிர்பாலின நபரை " காணும் பாக்கியம் ஒரு ஆணை விட பெண்ணுக்கே அதிகளவில் இருக்கிறது. காரணம் எண்ணிக்கை. அதிகளவிலான ஆண்களின் எண்ணிக்கை !

      திருமணமாகி, குழந்தை பெற்றுவிட்ட ஒரு பெண், ' தன் கனவு எதிர் பாலினர் ' ஒருவரைப் பார்க்க நேர்கையில், அவர் அவளின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக் காரராக இருக்கும்போது, அவள் தன் கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு அந்த கனவு எதிர் பாலினரோடு ஒரு மாற்று வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம், என்று சொல்கிறீர்களா ? அப்படிப்பட்ட ஒரு வாழ்வை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? அந்தக் குழந்தைகளின் நிலை ? அந்தக் கணவனின் நிலை ? அதுவரை இருந்த அந்தக் குடும்ப அமைப்பின் நிலை

      நீங்கள் சொல்வது போல இப்போதெல்லாம் எந்தப் பெண்ணும் தன் கணவனைச் ' சகித்துக் ' கொண்டு வாழவில்லை. திருமணத்திற்கு முன்பு தனக்குக் கணவனாக வரப்போகின்றவனை நன்கு ' அலசி ஆராய்ந்து ' அவன் தனக்குப் பிடித்தவனாக இருக்கிறான் என்ற திருப்தி வந்த பிறகே அந்தப் பெண் அவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். திருமண சந்தையில், ஆண்களுக்கு என பெண்கள் முன்வைக்கும் " எதிர்பார்ப்புக்கள் " இப்போதெல்லாம் அதிகம். எனக்கு முப்பது வயது ஆகிறது. வீட்டில் திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இருநூறு பெண்களாவது என்னை நிராகரித்திருபார்கள். எனக்கு என் மீது " சுயபச்சாதாபம் " ஏற்பட அவர்கள் தான் வழிவகுத்தார்கள். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், ' சகித்துக் ' கொண்டு வாழ எந்தப் பெண்ணும் தயாராக இல்லை. தனக்குப் பிடித்தே தன் துணையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுத்து, சில பல வருடங்கள் கழித்து அந்தத் துணையின் மீது ஏற்படும் இயல்பான சலிப்பின் காரணமாக அப்பெண் தனக்கு எதிர்வீட்டில் இருக்கும் திருமணமாகாத ஒரு வாலிபனை தன் மன விருப்பத்திற்கு எந்தக் கடிவாளமும் போடாமல் தன் இச்சைப்படியே ஒரு மாற்று வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொள்வதை நியாயம் என்கிறீர்களா ?

      கொற்றவை, சமூகத்தின் கட்டுப்பாடுகள், ஒழுக்க நியதிகள் குறித்து நீங்கள் விமர்சிக்கிறீர்கள். நாம் ஒரு சமூக அமைப்பில் வாழ " ஒழுக்க நியதிகள் " கட்டாயம் தேவை. சாலையில் நம் சொந்த வாகனத்தில் நம் விருப்பப்படி, நம் சுதந்திரப்படி செல்லலாம் தான். ஆனால் நம்மைப் போல இன்னும் சிலரும் வாகனங்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களும் நம் உடன் பயணிக்கிறார்கள், கூடவே சில பாதசாரிகளும் அந்த சாலையில் தென்படுகிறார்கள், அதோ ஒரு பேருந்து இருக்கிறது, அதனுள் பள்ளிக்குழந்தைகள் அழகாகப் புன்னகைக்கின்றன, ஒரு மூதாட்டி, இன்று தனக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருக்கிறாள். நாம் நமக்கிருக்கும் பெருந்தன்மை மனதோடு இவைகளை எல்லாம் அனுசரித்து வாகனம் ஓட்டலாம். ஆனால் அதே பெருந்தன்மை நம் பக்கத்து வாகன ஒட்டிக்கும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனவே, இங்கு கட்டாயமாகப் பின்பற்றவேண்டிய " சாலை விதிகள் " அவசியமாகின்றன. விதிகளை மீறுவோருக்கு " தண்டனைகளும் " அவசியமாகின்றன. ஆனால் அந்த தண்டனைகள் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

      கொற்றவை, உங்களுக்கு அறிவுரை சொல்லும் அருகதை எனக்கு இல்லை. என் மனதிற்குப் பட்டதைச் சொல்கிறேன். " பெண்ணியம் " என்ற குறுகிய வட்டத்திற்குள் நீங்கள் இயங்குவதாக எனக்குப் படுகிறது. சமூகம் சார்ந்த உங்களின் பல கருத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன. நம் சமூகத்திற்கு நீங்கள் நிச்சயம் தேவை. பெண்ணியம் என்ற தங்கக் குடத்திற்குள் அடைபட்டுவிட்ட சூரியனாய் நீங்கள் இருக்கிறீர்கள் ( என்னைப் பொறுத்தவரை ). சீக்கிரம் வெளியே வாருங்கள். இருட்டான ஒரு உலகம் உங்களின் வெளிச்சம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

      Delete
  4. தோழர் குரு சந்திரன்... உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி.. விரிவாக பதில் எழுத முடியாத அளவுக்கு பணிகள் இருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    நேரில் சந்திக்கும் தருணம் வாய்த்தால், விரிவாக உரையாடுவோம்.

    காதல் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்...விரைவில் வெளிவரும்..

    ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.. நீங்கள் ஒரு சில பெண்களையும், ஒரு சில ஆண்களையும் வைத்து எதையும் பொதுமை படுத்த முடியாது. நான் சமூக ‘நீதி’ குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன்...சமூகம் என்பதின் உளவ்வியல்...அதனூடாக தனிமனித உளவியல்...

    மருத்துவர் ஷாலினி மட்டுமல்ல...ரோசலிண்ட் மைல்ஸ், சிமோன் தே பொவ்வா ஆகியோரின் புத்தகங்களையும் படித்து பாருங்கள்...

    நன்றி.

    ReplyDelete