Jan 13, 2010

ஆணின் பெண் - பாகம் 1

பெண் உறுப்பைப்பற்றி, பெண் எழுதக்கூடாது என்ற ஆணின் அதிகாரத்தை முன் வைத்து...

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும் , வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண் கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைப்புகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருவள் அறைகூவல் விடும் பொழுது, பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எரிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பது தான்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் குறித்து கற்க வேண்டும். பின்பு பெண் ஏன் அடிமை ஆனால் எனும் பெரியாரின் புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின்பு ஆண் பெண் உயிரியல், உளவியல் குறித்து ப்ராயிட், சிமோன் தே பொவ்வார் போன்றோரின் கூற்றுகளை படிக்க வேண்டும். இக்கல்வி பெண்ணுக்குரிய தாழ்வு நிலைகளை ஆண் சமூகம் எவ்வாறு கட்டமைத்திருக்கிறது என்று அறிய உதவும். இவற்றை உணர்ந்தவுடன் ஆணுக்கெதிராய் நாம் போர்க்களத்தில் குதிக்கவேண்டியதில்லை எனும் நிதானம் பிறக்கும். பண்டைய காலத்தில், அறிந்தே பெண்ணை அடிமையாக்கிய ஆணாதிக்கத்தை, அறியாமல் பின்பற்றிவரும் நம் சக இனமான ஆண்களுக்கு எடுத்துச்சொல்லும் பக்குவமும் , தன்னம்பிக்கை பிறக்கவும் இது போன்ற வாசிப்புகள் உதவும் என்று நான் கருதுகிறேன்.

உறுப்புகளும், கருப்பையும் மட்டுமே ஆணிடமிருந்து, பெண்ணை வேறுபடுத்திக்காட்டுகிறது. இயற்கை மிகவும் அழகாக ஒரு உயிருக்கு மற்றொரு உயிரை துணையாக படைத்துள்ளது. ஆதி காலத்தில் இவ்வுண்மைக்கு குறை ஏதுமின்றி, ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்துவந்ததாக பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

எங்கல்ஸ் - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - தமிழில் நா. தர்மராஜன். இப்புத்தகத்தில் பாஹா பென்னின் கருத்தை குறிப்பிடுகிறார் ஆசிரியர்:
 1. தொடக்கத்தில் மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இருந்தது. இந்நிலைக்கு ஆசிரியர் பொதுமகளின் முறை (hetaerism) என்று பெயரிட்டுருக்கிறார்.
 2. இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை ஆகவே மரபு வழியைத் தாய்வழியாகவே - தாய் உரிமைப்படிதான் - கணக்கிட முடியும்.
(மேலும் ஒரு பெண் பிள்ளை பெறுவதற்கு, ஆண் தான் தான் காரணம் என்று அறியவே பல காலங்கள் ஆனதாக நான் படித்தது நினைவுக்கு வருகிறது)

3. எனவே தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக உறுதிப்படுத்தப்பட முடிந்த காரணத்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த சலுகையுடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள் என்கிறார். (gynaecocracy) (இது போன்ற வரலாற்றை நான் 'பெண் தெய்வ வழிப்பாடு' குறித்து ஆராய்ச்சி செய்த போதும் படித்திருக்கிறேன்)

4. ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒரு தார மனத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிகால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது. இந்த மதக் கட்டளையை மீறியதற்கு கழுவாய் செய்தாக வேண்டும், அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி கொடுப்பதற்குப் பரிசம் தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணைக் குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் துயிப்பதற்கு ஒப்படைக்கவேண்டும் என்று பாஹா பெயினின் சாட்சியங்களுடன் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

சிமோன் தே பொவ்வார் அவர்கள் தன் புத்தகத்தில் - மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது பெண்கள் கருவுற்ற காலத்தில், வேட்டைக்குச் செல்வதும், இடம் பெயர்தலும் கடினமாக இருந்த காரணத்தால் வாழ்க்கை வசதிமுறைக்காக (மனமுவந்து) பணிகளை பகிர்ந்துகொண்டதாகவும் (பாலியியல் வேற்றுமையும், அடிமைத்தனமும் ஏதுமின்றி), அதுவே பின்பு ஆண்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டும் உரிமைப்பெற்றவராகவும், பெண்கள் வீட்டை பேணும் அடிமையாகவும் மாற்றியமைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

பின்பு ஆண்டான் அடிமை, நிலப் பிரபுத்துவம், மன்னராட்சி, அரசமைப்பு என்று குழு மேலாண்மை முறை அதிகாரத்தின் கைக்கு மாறி வரும் பொழுது திருமணம், குடும்பம் ஆகிய வாழ்வியல் முறை சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் உள்நோக்கோடு மாற்றியமைக்கப்பட்டன. இம்மாற்றங்களுக்கேற்ப பெண்களை தயார் படுத்த தந்தை வழி சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டு, பெண்கள் தங்களை பலகீனமானவர்களாகவும் ஆண்களுக்கு சேவகர்களாகவும், புணர்ச்சித்துணையாகவும் ஆக்கப்படுகிறாள். உலகம் மிக எளிதாக ஆண்களின் உலகமாக அவர்களின் சிந்தனையாக மாறுகிறது. படைத்த, படைக்கப்பட்ட எல்லாம் பெண்ணுக்கு அடிமைக்கோலமாகவே ஆணுலகம் புனைந்தது . இலக்கியமும் விதிவிலக்கல்ல. அவள் பெண்ணுறுப்பை புனிதப்படுத்தும் போர்வையில், அதையே அவளுக்கெதிராக திருப்பி ஏவி விட்டிருக்கிறார்கள். தனிமனிதப் பேராசை, பின்பு கூட்டு விதியாக மாறி அதிகாரத்தின் துணையோடு கட்டமைப்பாக மருவி நிற்கிறது. ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது என்ற மார்க்சின் கூற்றை நாம் இக்கணத்தில் நினைத்தாலும் பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்பதை நாம் நம்பக்கூடாதென்ற லெனினின் மேற்கோளையும் நாம் மறக்கமுடியாது.

பல மணமுறை எண்ணற்ற ஆண்டுகளாய் வழக்கிலிருந்து வந்துள்ளது, மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வியல் மாற்றங்களும்,ஆணின் உளவியல் காரணமாய் பொறாமைக் குணமும் ஒரு தார முறையை ஒரு மாற்றாக பரிந்துரைத்திருக்ககூடும், பின்பு பல அரசியல் காரணங்களால் ஒழுக்க விதிகள் புகுத்தப்பட்டு இன்று அது உச்ச நிலையை அடைந்து, மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது.

4 comments:

 1. கொற்றவை மேடம்,

  இந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் " மனமுவந்து " என்ற வார்த்தையை அடைப்புக் குறிக்குள் இட்டுக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆண், வேட்டையாடுதல் என்ற கடினப் பணியை மேற்கொண்டு வருவது, பெண், வீட்டைப் பராமரிக்கும் எளிய வேலையைச் செய்து கொண்டு வீட்டிலேயே இருப்பது என்ற ' ஒப்பந்தம் ' இருபாலராலும் அன்றே மனமுவந்து ஏற்படுத்தப் பட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். சரி.

  ஏன் மனமுவந்து அதை ஏற்றுக் கொண்டார்கள் என்றால், கருவுற்ற காலத்தில் கடினப் பணிகளைச் செய்வது கடினமாக இருந்தது என்கிறீர்கள்., அதுவும் சரியே. அதை அத்தோடு முடித்துக் கொண்டீர்கள்., அதற்குப் பிறகு அதன் போக்கிலேயே நீங்கள் யோசித்திருந்தால் உங்களுக்கு ஒரு ' யதார்த்தம் ' விளங்கியிருக்கும்.

  கருவுற்ற பெண், குழந்தை பெறுகிறாள், பின்பு குழந்தையைப் பராமரிக்கும் வேலை இருக்கும்., இன்னும் சில காலம் வீட்டிலேயே இருக்கிறாள், இப்படி இருந்து இருந்து, வீட்டு வேலைகளை மட்டும் பார்ப்பதற்கு அவள் பழகியிருப்பாள். அதற்கு மேல் வேட்டைக்குப் போவது என்பது அவளுக்கு மலைப்பாக இருந்திருக்கும். " இப்படியே வீட்டோடவே எளிய வேலைகள் செய்து கொண்டு இருந்து விடுகிறேனே " என்று தனக்கான ஆண் துணையிடம் கேட்டிருப்பாள் அல்லது ஆண்களும் பெண்களும் ' குழுவாக ' இருந்திருந்தால், பெண்கள் ஆண்களிடம் அப்படி ஒரு விண்ணப்பம் வைத்திருப்பார்கள்., அவ்வளவு காலம் வேட்டைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்த பெண்கள் நன்கு மெருகேறி அந்த ஆண்களின் பார்வைக்கு அழகானவர்களாக இருந்திருப்பார்கள்., ( அந்த ஆண்களின் பார்வைக்கு ) அதோடு வேட்டை முடிந்து அவன் வீடு திரும்பிய போது பிள்ளை பெற்று வீட்டில் இருந்த பெண்கள் அவனுக்கு உணவு சமைத்து வைத்து அவனை நன்றாக கவனித்துக் கொண்டார்கள் அந்த ' மனவுவந்த ' ஒப்பந்தப்படி. நாளெல்லாம் ஓடியாடி வேட்டை முடித்து விட்டு வரும் ஆணுக்கு, நளினமான மென்மையான பெண்மையான பெண்ணின் கவனிப்புகள் தேவைப்பட்டன. ஒரு சௌகரியத்துக்காக இருபாலரும்மும் இது இப்படியே " பழகி " விட்டது.

  அப்போது ஒருவனுக்கு ஒருத்தி என்ற ' கற்பு நெறிகள் ' இல்லை என வைத்துக் கொள்வோம். வேட்டை முடிந்து வீடு திரும்பும் ஒரு ஆண், ஒரு குறிப்பிட்ட பெண்ணோடு அன்றிரவு " உறவு " கொள்ளலாம் என்ற ஆசையில் இருக்கிறான். அதே பெண் மீது அதே ஆசை அவனது சகாவிற்கும் ஏற்பட்டிருக்கும். ஒரு பெண்ணுக்காக இரண்டு பேர் அடித்துக் கொள்கிறார்கள். சண்டை முத்திப் போய், இரு அணியாகப் பிரிந்து, வெட்டு, குத்து, உதிரம் என விஷயம் தீவிரப் படுகிறது. அதுவரை அந்தக் குழுவில் இருந்த மகிழ்ச்சி, நிம்மதி, அனைத்தும் நொடிப்பொழுதில் காணாமல் போகின்றன. இதுவே பின்னாளில் " ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் " என்ற கோட்பாடு தோன்றக் காரணமாயிருந்திருக்கலாம்.

  தான், தனது, தனக்கேயானது என்ற உணர்வை ஒருவிதத்தில் ஒரு போதை எனலாம். அந்த போதைக்கு அடிமாகிப் போன அப்போதைய மானுட சமூகம், குழுக்களாக இருந்து தனித்தனியாக குடும்பமாக வாழ ஆரம்பித்தனர். அப்போதும் பெண்கள் வீட்டில் இருப்பதும், ஆண்கள் வெளியில் வேட்டைக்குப் போவதும் தொடர்ந்தது. வேட்டை முடிந்து ஆண், எல்லா தினங்களிலும் ஒரே மனநிலையோடு வீடு திரும்புவதில்லை. சில நாட்களில் கடுமையாக முயன்றும் வெறும் கையேடு வீடு திரும்ப நேர்ந்திருக்கலாம். ஆனால் அவனோடு வேட்டைக்கு வந்த அவனது சகா விற்கு அன்று விசேஷமாக ஏதாவது கிடைத்திருக்கலாம்., அந்தக் கடுப்பில் இந்த ஆணானவன் வீட்டிற்கு வருகிறான். வீட்டில் மெல்லிய வேலைகளையே செய்து பழக்கப் பட்ட பெண், வேலை செய்த அசதியில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என வைத்துக் கொள்வோம். அப்போது கோபமாக வந்த அந்த ஆணுக்கு கோபம் வருகிறது. ( அவன் சாதாரணன், உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தும் அறிவில்லாதவன் )

  " நான் கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் நாயாய் பேயாய் அலைந்து வருகிறேன்., நீ இங்கு சொகுசாகத் தூங்குகிறாயா " என்று அந்தப் பெண்ணோடு சண்டை போடுகிறான். இருவருக்கும் சண்டை நடக்கிறது. ஊடல் முடிந்து பிறகு கூடல் நடக்கிறது என்பது வேறு விஷயம். என்றைக்கும் இல்லாமல் ஊடலுக்குப் பிறகான அந்தக் கூடல் அதிக சுகமாக இருந்து விடுகிறது. இது இப்படியே தொடர, மென்மையான பெண், உடலளவில் வலிமை வாய்ந்தவனாகக் கருதப் பட்ட அந்த ஆணுக்கு அடங்கிப் போவது என்பது ஒரு எழுதப்படாத விதியாகிறது. இதே இந்தக் குடும்ப அமைப்பு முறை தான் தற்போதும் பின்பற்றப் பட்டு வருகிறது. இதில் எதுவும் ' சதி ' இல்லை. இது இயல்பானது. அதே இயல்புதான் தற்போதும் இருக்கிறது. இது தான் " யதார்த்தம் " !

  ReplyDelete
 2. சரி ...... இதை நீ ஏன் இப்படி எனது ஒவ்வொரு பதிவிற்கும் " ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து " மிகவும் மெனக் கேட்டு எனது வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறாய் என்கிறீர்களா ? அதில் தான் எனது " ஒட்டுண்ணித்தனம் " இருக்கிறது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் தற்போது சமூகத்தில் பிரபல்யமாக இருக்கிறீர்கள். உங்களது வலைப்பூவை சிலராவது பார்ப்பார்கள். தற்போது நான் சமூகத்தில் பிரபல்யமாக வில்லை. நானெல்லாம் வலைப்பூவில் எழுதினால், இரண்டு நாட்கள் கழித்து நானே அதைப் படிப்பேனா என்பது சந்தேகம். எழுத ஆர்வமே ஏற்படாது. ஆனால், பிரபலமாக இருக்கும் உங்கள் வலைப்பூவில் எழுதுவதன் மூலம், சிலர் எனது எழுத்துக்களையும் படிக்கலாம், மிகக் குறைந்த பட்சம் தாங்களாவது படிக்கலாம்., படித்து எனது கருத்துக்களுக்கு ' எதிர் வினையாக ' பின்னூட்டம் இடலாம். ஒரு எழுத்தாளனாக எனக்கு அது ஒரு மகிழ்ச்சி ! அதற்காகத்தான் இப்படி " ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து " எழுத வேண்டி இருக்கிறது. தயவு செய்து சகித்துக் கொள்ளவும்.

  ReplyDelete
 3. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" - எங்கெல்ஸ் எழுதிய புத்தகம், முடிந்தால் வாங்கிப் படிக்கவும். நன்றி.

  ReplyDelete
 4. தோழர் எனக்கு அதுபோன்ற எந்த கேள்விகளும் வராது..... எழுத வாழ்த்துக்கள்.. கட்டுரைகளை வாசித்தமைக்கு நன்றி...

  //தயவு செய்து சகித்துக் கொள்ளவும்.// - இது போன்ற தன் இரக்க குறிப்புகளை தவிர்க்கவும். இது பொது வெளி யார் வேண்டுமானாலும் படிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான தளம் இது... ஆபாசமற்ற எழுத்துக்கள் இருக்கும் வரை எனக்கு பிரச்சனையில்லை...

  ’நான்’ - என்ற சுய மரியாதை எண்ணம் அவசியம்...அது திமிர் எனப்படுகிறது...அது பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை... நான் மட்டுமே என்ற எண்ணம் தவிர்க்கப்படலாம்.... நான் என்பது அவசியம்... உங்கள் ஆளுமையை கண்டடைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete