Jan 7, 2010

எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

நான் நாயாக வளர்க்கப்பட்டதாகவே உணர்ந்திருந்தேன். நன்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய். எவ்வாறு மனிதத்தசைகளின் சுருக்கங்களுக்கேற்ப வினைசெய்ய வேண்டுமென வலிக்க வலிக்க பழக்கப்படுத்தப் பட்ட நாய். சொற்களற்ற நாய்.

நாகரீகத்தாலும், பழக்கவழக்கத்தாலும் கலாச்சாரத்தின் பெயராலும், பால்வகைப்பிரிவுகளாலும், பாரம்பரியத்தின் பெயராலும் நடக்கும் கற்பிதங்களை சந்தேகிக்கவோ, கேள்விகேட்கவோ, அதற்காக நான் வாயைத்திறக்க எண்ணும்போதெல்லாம் என்வாயில் திணிக்கப்பட்ட நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

என்னைக் குளிப்பாட்டி ஓர்நாள் நடுவீட்டில் வைத்தார்கள். ஆவலாய் மலம் ஊண்பேன் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் மிள்ர்வதையும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு பதிலாய் நானென் குலைந்த வாலை சற்றும் அசைக்காது நீங்கள் உண்ட மலம் எனக்கானதில்லையென்பதை எனக்கு போதித்திருந்த நடத்தைகளைக் காறி உமிழ்ந்துவிட்டு பற்கள் நெறிபடச் சொன்னேன். பழக்கப்பட்ட வெற்று நாயாகிய என் மனதில் ஏன் இப்படி எனை நாயாக உணர்கிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் எழுமென்றோ, அவர்களிடம் கற்றுக்கொண்ட என் விதிகளின்படி அவர்களையே வேவு பார்ப்பேனென்றோ அவர்கள் அறிய வாய்ப்பில்லை.

என் அனுமதியை என் குழைந்த உடலால் அறிந்து பழக்கப்படுத்தியவர்களுக்கு என் உடல் சுபாவம் ஒன்றே என்னை அறிதலின் விதி. சுபாவன் என் குணமல்ல வளர்க்கும் விதியறிந்தவர்களே. நீங்கள் வினைச்செயல்களைப் பழக்கம் என்று நம்பி அதன் பின் உங்கள் கால்களை ஓடவைப்பது காண்டு நான் அறுவெறுக்கிறேன். நான் வெற்று நாய் உங்கள் வாயசைவுகளுக்கு ஒட்டுமொத்த உடலையும், என்னையும் ஒப்படைத்த வெறும் நாய். நன்றியுள்ள மிருகம் வெற்றுநாய்.


7 comments:

  1. One of the most liberated women speaks up for the not-so-liberated! The power in your writing is amazing. Keep it up.

    ReplyDelete
  2. // அதற்காக நான் வாயைத்திறக்க எண்ணும்போதெல்லாம் என்வாயில் திணிக்கப்பட்ட நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய். //
    அற்புதமான வரிகள். சிறுமை கண்ட போது எல்லாம் அடங்கிப் போகும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் இது பொருந்தும்.

    நிறைய முரன்பட்ட சிந்தனைகள் காணப்படுகின்றன. ஊரேடு ஒத்துவாழ் என்பது முதுமொழி. எதிர்ப்பது என்பது எல்லாத்தையும் எதிர்ப்பது ஆகாது. அநியாங்களை எதிர்ப்பது மட்டும் எதிர்ப்பு. நன்றி கொற்றவை.

    ReplyDelete
  3. அருமை நல்லா இருக்குங்க அக்கா
    ( ஓரிரண்டு இடத்துல எழுத்து பிழை , சுட்டி காட்டலாமா நான் ????)
    ""நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.""'
    ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  4. நான் சர்வாதிகாரி அல்ல பாலா அவர்களே...எழுத்துப்பிழை திருத்ததுக்குரியதே

    ReplyDelete
  5. திரு பித்தன் அவர்களே..நான் கணவன் மனைவி உறவை விவரிப்பதாக கூறுவது உங்கள் கண்ணோட்டம்

    ReplyDelete
  6. யாரின் விளக்கமான நியாம்? யாருக்கெதிரான அநியாயம்...நீங்கள் என் எழுத்துக்களுக்கு விமர்சனம் செய்வதோடு ஊருக்கு நீதியும் சொல்கிறீர்கள் தோழரே...

    ReplyDelete
  7. பெண்களை " நன்கு பழக்கப்படுத்தப் பட்ட நாய்கள் " என்கிறீர்கள் கொற்றவை. இது எப்படி இருக்கிறது தெரியுமா ? " களிமண்ணை வைத்து கிளி பொம்மை செய்வதற்கு பதிலாக, குரங்கு பொம்மை செய்துவிட்டான் சிற்பி " என்று சிற்பியின் மீது குற்றம் சாட்டும் போது, களிமண்ணை நாம் வெறும் களிமண்ணாகவே பார்ப்பது போல இருக்கிறது.

    தங்கள் மீது எதையும் பிரயோகிக்க அனுமதிக்கும் களிமண்ணைப் போன்றவர்களா பெண்கள் ? அவர்களுக்கு ' அறிவே ' கிடையாதா ? ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் அறிவு மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது என்பீர்கள். மழுங்கடிக்கப்பட பட அவர்கள் ஏன் அனுமதித்தார்கள் ? பெண்களுக்கென கட்டுப்பாடுகள், கற்புநெறிகள், ஆணாதிக்க அரசியல் சாணக்கியத்தனத்தினால் உருவான போது, அப்போதே ஏன் பெண்களின் கூட்டம் அதை எதிர்த்துப் போராடவில்லை. டாக்டர் ஷாலினி என்னவென்றால், பெண்கள் தான் ஆண்களை விட உண்மையிலேயே வலிமை வாய்ந்தவர்கள், உலக வரலாறுகளை அவர்கள் தான் தீர்மானித்தார்கள் என்கிறார். அப்படி வலிமை வாய்ந்த பெண்களுக்கு தங்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சிந்தனை அப்போது ஏற்பட்டிருக்காது என்றா நினைக்கிறீர்கள் ?

    உண்மையில், ஒரு ஆணை விட, ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணை அதிகமாக வெறுக்க முடியும். தற்போதைய பெண்களின் ' அவல ' நிலைக்கு ஆண்களின் சமுதாயத்தை விட, பெண்களின் சமுதாயமே அதிகளவில் ' பங்காற்றி ' இருக்கிறது. பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை " மாமியார் கொடுமை " என்று தான் சொல்லப் பட்டிருக்கிறதே ஒழிய " மாமனார் கொடுமை " என்று சொல்லப்படவில்லை. அதையும் ஆண்களின் தந்திரம் என்பீர்கள். அதுவரை தான் அன்பு செலுத்தி வந்த தன் மகன் மீது தனக்குப் போட்டியாக அன்பு செலுத்த இன்னொருத்தி வந்து விட்டாளே என்ற ஆற்றாமை தான் ஒரு பெண்ணைத் தன் மருமகளைக் கொடுமைப்படுத்தத் தூண்டுகோலாய் அமைகிறது. இதை நான் சொல்லவில்லை. டாக்டர் ஷாலினியே சொல்லி இருக்கிறார்.

    பெண்களை ஆண்கள், தந்திரமாக அடிமைப்படுத்தினார்கள் என்றால், பெண்களும் அந்த அடிமைப்படுத்துதலைத் தந்திரமாக அனுமதித்தார்கள். இதில் ஆண்களின் பங்கு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவுக்குப் பெண்களின் பங்கும் உள்ளது.

    தற்போதைய குடும்ப அமைப்பு பெண்களை அடிமைப்படுத்துவதற்கென்றே ஏற்படுத்தப் பட்டது என்கிறீர்கள். குடும்ப அமைப்பினால் பாதிக்கப் பட்ட பெண்களும் இருக்கிறார்கள், இதே குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே சாதித்த பெண்களும் இருக்கிறார்கள்.

    ReplyDelete