Jan 13, 2010

ஆணின் பெண் - பாகம் 2


நான் படித்த, கேட்ட பண்டைய இலக்கியங்களில் பெரும்பாலும் இல்லை முடிவாகவே சொல்லலாம் பெண் எப்பொழுதும் உணர்ச்சியை மட்டும் உணர்கிற வெளிப்படுத்துகிற ஒரு பிராணியாகவே சித்தரிக்கப்படுகிறாள். பெண்ணைப்பற்றி வரும் ஆண் சிந்தனைகள் [ இதில் சாபக்கேடு என்பது சக பெண்ணே இந்த ஆண்களின் வார்த்தைகளை நம்பி அவளும் அப்படியே எழுதத்தொடங்கியதுதான் ] அவள் அழகியலை வர்ணிப்பதாகவும், காதலன் பிரிவால் விரகதாபத்தின் உச்சியில் அவளும், அவளுக்கு ஒரு தோழியும் அறைகூவல் விடுவதாகவுமே உள்ளது. இதிலும் அழகு என்பது ஆண்களின் காமத்தை பேணுகிற ஒன்று மட்டுமே. ஏதோ ஓரிடத்தில் மட்டுமே அவளின் வீரம் (அதுவும் ஆண், பெண் தன்னை ஆண்டுவிடக்கூடாதென்ற நோக்கத்தில் கருணைக் கொள்கையை முன்வைத்து) குறித்து பேசுகின்றனர். மேலும் புராணங்கள், பதிவிரதைக் கதைகள் எல்லாம் பெண் மேற்கொள்ளவேண்டிய சகிப்புத்தன்மைகளை பட்டியலிடுகிறது. அவ்வாறு அவள் நடக்கும் பட்சத்தில் அவள் பத்தினித் தெய்வமாகிறாள். ஆண்களுக்கு கட்டுப்பட்ட தெய்வம். இல்லையேல் பிடாரி.

ஒரு முனையில் அழகியலை வர்ணித்து பெண்ணுக்கு ஆடை, ஆபரணங்கள் , அலங்காரங்கள் இவற்றின் மேல் மோகம் வரவழைத்தும், மறுமுனையில் ஒழுக்கம், பத்தினித்தன்மை ஆகிய அர்த்தமற்ற கூற்றுகளை அரங்கேற்றி அவள் தெய்வீகத்தன்மைக்கு உயரும் மோகத்தையும் சிறிது சிறிதாக ஏற்றியுள்ளர்கள் ஆண்கள். அழகியல் வர்ணிப்புகள் எல்லாமே ஓர் ஆணின் கண்களுக்கு விருந்தாக எவ்வாறெல்லாம் அவள் காட்சியளிக்க வேண்டும் எனும் விதியாக உள்ளதை நாம் அறியா வண்ணம் திறம்பட வகுத்துள்ளனர். அந்த கருத்து ஊசி ஏற்றிய விஷ மருந்து ஆண்டாண்டு காலமாய் பெண் மரபணுக்குள் புகுந்துகொண்டு, அணுக்களையே மாற்றியமைக்கும் வல்லமைப்பெற்று திகழ்கிறது.

இந்தியாவில் பெண்ணை அடிமைப்படுத்தியதில், பார்ப்பனியர்களின் பங்கு பெரிதும் உள்ளதாக நான் காண்கிறேன். (கடவுளின் பெயரால் மொத்த மக்கள் இனத்தையும் அடிமைப் படுத்திய பேருள்ளம் கொண்டவர்களாயிற்றே அவர்கள்). பெண்ணை தனிக் கடவுளாக வழிபாட்டு வந்த காலத்தில் (கொற்றவை), அவளை ஆண் கடவுளின் மனைவியாக கதைகள் புனைந்து, ஆடவும் பாடவும் கணவனின் காலடி பிடித்து சேவை செய்யவும், அவன் கோபம் கொண்டு சபிக்கும் பொழுது சாப விமோசனம் கேட்டு மன்றாடவும் வைத்து பெண்ணின் நிலையை இழிவாக விதித்தனர். பின்பு உழைப்புக்கு அஞ்சி, சோற்றுக்கு வழி வேண்டி கோவில்களை நிறுவி அங்கே பெண் தெய்வ சிலைகளை ததும்பும் முலைகளையும், வடிவமான இடையும் வைத்து வடித்து அப்பாவி மக்களுக்கு வக்கிரத்தை கடவுளின் பெயரால் அறிமுகம் செய்தனர்.

ஒவ்வொரு சாங்கியங்களாக தோற்றுவித்து, அதற்கு பின் பெரும் தத்துவங்கள் இருப்பதாக பொய் கூறி, கயமைகளைக் கற்பித்து அற்பமாக வயிற்றை கழுவிவந்த இவர்கள், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் புராணங்களில் கூறியுள்ளது போல் தன் மனைவி பெரும் சகிப்புத்தன்மை உள்ளவள்ளக, பதிபக்தியுடன் அடிமையாக திகழவேண்டும் எனும் பேராசையை அறியாமையை பயன்படுத்தி, அரசுகளை கையில் போட்டுக்கொண்டு விதைத்தனர்.

ஓர் ஆண், அவன் அடையப்போகும் பெண்ணுக்கு இப்படியெல்லாம் விதிகள் வைத்துவிட்டு, அவன் புணர்ச்சி அரிப்புக்கு தாசி குல மரபை அதிகார போக்குக்கொண்டு நிறுவி அனுபவித்து வந்திருக்கிறான், கடவுளின் பெயரால். இங்கு பெண்ணுக்கெதிரான எல்லா அநியாயங்களும் கடவுளின் பெயராலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். படுக்கைக்கு ஒத்துழைப்பவளை தேவதை என்றும், மறுப்பவளை தேவடியாள் என்றும் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர் நம் உடன்பிறப்புகள்.

பெண்களை அனுபவிக்கவும், அடிமைபடுத்தவும், அவமானப்படுத்தவும் ஆண்கள் அவள் உறுப்பையே கையில் எடுக்கும் துற்பக்கியத்திற்கு ஆளாகியுள்ளர்கள். எதை அவர்கள் சாதனையாக கருதினார்களோ அதுவே அவர்களுக்கெதிராய் திரும்பும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment