Jul 1, 2020

சமஸ்திருத்த வாதங்கள்.. எச்சரிக்கை!


தமிழ் இந்துவில் அரச வன்முறையின் ஊற்றுக்கண் என்று சமஸ் எழுதியிருக்கும் கட்டுரை ஆகப்பெரிய வன்முறையாக இருக்கிறது. வார்த்தை ஜாலங்களுடன் கூடிய ‘நல்லது சொல்றேன் கேட்டுக்கோ’ வகையிலான ’கருத்து’ சொல்லி ஓர் அவியலை சமைத்திருக்கிறார்.

நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் என்னும் புரிதலே பரவாயில்லை என்னும் அளவுக்கு இருக்கிறது இவரது நல்ல அரசு கெட்ட அரசு வியாக்கியானம்.

ஆயுதப்படை அல்லது காவல் துறை வழியே நாம் காணும் வன்முறைகள் யாவுமே அரசின் வன்முறைதான் என்று சரியாகத் தொடங்கி பின்னர் அதை ஜனநாயக விழுமியங்கள் குறைந்த பிரச்சினையாகக் காண்கிறார் (விழுமியம் விழுமியம்…ஸ்ஸ்ஸ்). “சமத்துவமும், அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமும், ஜனநாயக விழுமியங்களும் குறைந்த சமூகங்களில் தன்னுடைய அரசாங்கம் வழியே அந்த வன்முறையை அடிக்கடி வெளிப்படுத்துவதாக இருக்கிறது” என்கிறார்! எது? அரசு? சரி அரசு என்றால் என்ன? அதை மட்டும் கேட்டுவிடாதீர்கள்… அரசு என்றால் மக்களைக் காக்க இருக்கும் ஓர் அமைப்பு, அதில் “விழுமியங்கள்” பிரச்சினையால் வன்முறை நிலவுகிறது! அவ்வளவுதான்!

இடதுசாரி புரிதல்களையெல்லாம் முன் வைத்து எஸ்.என்.நாகராஜனிடம் மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்த ஒருவருக்கு அரசு என்றால் என்னவென்று தெரியாதா?

இதற்கு அடுத்தகட்ட பத்தி உச்சபட்ச நகைச்சுவை! “அரசின் எந்தத் துறையைக் காட்டிலும் காவல்துறை அதிகமான வன்முறையை நாட்டு மக்களின் மீது வெளிப்படுத்துவதற்கான முக்கியமான காரணம், ஒரு அரசின் கருத்தியல் சாய்வுகளைக் காவல் துறைதான் மிக அதிகமான அளவில் பிரதிபலிக்கிறது. ஆக, ஒரு கருத்தை எப்படி உள்வாங்குவது என்ற பயிற்சி அரசின் எல்லா அங்கங்களுக்கும், முக்கியமாகக் காவல் துறைக்கு அத்தியாவசியமானதாகிறது”.

என்ன மாதிரியான வார்த்தை ஜாலம் இது? வன்முறை என்பது கருத்தியல் பிரச்சினை, கருத்தை உள்வாங்கிக் கொள்ளும் பிரச்சினை? போலிக் கட்டுரை என்பார்களே, அதற்கு சிறந்த உதாரணம் இக்கட்டுரை! கீ வேர்ட்ஸ்களைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பி, இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல், அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்கும்… அதான் ஜனநாயகம்… ஜனநாயகம் என்னும் புளி கரைச்சல் இருக்கிறதே என்று நினைக்க வைப்பதோடு இத்தகையோரின் “அறம்” முடிந்துவிடுகிறது!.

அடுத்ததாக அப்படியே கொஞ்சம் காலனியம், ஏகாதிபத்தியம்னு ரெண்டு கருவேப்பிலை, கொத்தமல்லியை தூவியாச்சு “காலனியக் காலகட்டத்தில் ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையையும் வன்முறையையும் குழைத்து அடிமை விழுமியங்களால் கட்டப்பட்ட இந்திய அரசாங்க அமைப்பானது சுதந்திரத்துக்குப் பிறகு முற்றிலுமாகக் கலைத்துப்போடப்பட்டு, தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகார வேட்கையோடு ஆட்சியில் அமர்ந்த நம்முடைய அரசியலர்களுக்கு ஏற்கெனவே இருந்த அமைப்பே வசதியானதாக இருந்ததன் விளைவாக அது நடக்காமலேயே போனது. இனி தொடர் சீர்திருத்தங்கள் வழியிலேனும் அது நடக்க வேண்டும்.”

அந்த இறுதி வரியில் இருக்கிறது அவர் சமைக்கும் குழம்பு எத்தகையது என்று! ”சீர்திருத்தம்” அதாவது ஒரு அரசின் கருத்தியல் சாய்வினை சரியாக உள்வாங்கிக் கொள்ளும் “சீர்திருத்தம்”.. நிலவும் அரசின் கருத்தியல் சாய்வு என்ன?

அரசு பற்றிய மார்க்ஸ், எங்க்ல்ஸ், லெனினின் மேற்கோளை எடுத்துப் போட்டிருந்தாலே போதும் மக்களுக்குப் புரிந்துவிடும். இவ்வளவு நீள “ரெசிப்பி” எதற்கு என்று தெரியவில்லை.

வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இப்போதைய உடனடி தேவை.

சொத்துடைமை வர்க்கத்தின் நலன் காக்க உருவானதே அரசு. (நிலவுடைமை, முதலாளித்துவ அரசுகள்). அதனால் தான் அடக்குமுறை, வன்முறை இதெல்லாம் அதன் உள்ளார்ந்த பண்புகளாக இருக்கின்றன. எளிய மொழியில் சொல்வதெனில், பணக்காரப் பயபுள்ளைகளோட வளர்ச்சிக்கு உழைச்சுக் கொட்டுற கூட்டத்தை அடக்கி வைக்க உருவானது தான் அரசு. அதன் “அங்கங்கள்” அனைத்தும் அதற்காக உருவானவையே. எனவே ஒரு முதலாளித்துவ ஆட்சியின் ”விழுமியங்கள்” என்பது அடக்குமுறையும் சுரண்டலும் மட்டுமே. அப்படியெனில் பயிற்சி, உளவியல் ஆலோசனைகள், சீரிதிருத்தங்களை யாருக்கு செய்ய வேண்டும்? மீண்டும் மீண்டும் வன்முறை நிறைந்த உற்பத்தி முறையான முதலாளித்துவத்திற்கு ஜல்லி அடிக்கும் வேலையைத் தவிர சமஸ் போன்ற நவ-தாராளவாதிகள் வேறு எதுவும் செய்வதில்லை.

அவருடைய கட்டுரையே அதற்கு சாட்சி!   “தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்.” மேற்சொன்ன பத்தியில் ஏற்கனவே இருந்த அமைப்பு சரியில்லை என்று சொல்ல முடிபவரால் சீர்திருத்தத்தையே தீர்வாக முன்வைக்க முடிகிறது. முன்மாதிரியான சமூகம் என்று சோசலிச சமூகம், பொதுவுடைமை, மக்கள் அதிகாரம் என்பதெல்லாம் “ஜாலத்திற்காக”க் கூட குறிப்பிட முடியாத அளவுக்கு இவருக்கு ஒவ்வாமை!

அவியலில் அடுத்த கலவை சாதி, வர்க்கம் என்னும் மஞ்சள் பொடி! இந்திய சமூகத்தின் ஆகப் பெரும் கேடு சாதி என்பதிலும், அது ஒவ்வொரு துறையிலும் அதிகாரத்திற்கு எப்படி துணை நிற்கிறது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த சாதியை சீர்திருத்தத்தால் ஒழித்துவிட முடியுமா என்ன? நவதாராளவாதிகளுக்கு வியாக்கியானம் மட்டுமே எத்தனை இன்பத்தை தருகிறது! கற்பனாவாதிகள்!

அடுத்து ஒரு சொல் வருகிறது! ’அரசியல் வர்க்கம்’ இது என்னப்பா அரசியல் வர்க்கம்! பின்நவீனத்துவ ஊறுகாயா? போகிற போக்கில் வர்க்கம் என்னும் சொல்லை “வற்றலாகப் பிழிந்துவிட்டால்” கடமை முடிந்தது!

அரசியல் வர்க்கம் என்று ஒரு வர்க்கம் இருக்கிறதா? என்னமாதிரியான சித்து விளையாட்டு இது? ஏன் தனியுடைமை வர்க்கத்தின் அரசியல் என்று இவரைப் போன்றவர்களால் எழுத இயலவில்லை? சமூக நடவடிக்கைகளில், குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத் தேவைக்கான பொருள் உற்பத்தி நடவடிக்கைகளின் விளைவாக உண்டான பிரிவுகள் வர்க்கம். அது பிரதானமாக இரண்டு வகைப்பட்டது, உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் மூலதனத்தைக் கொண்டு மக்களை, வளங்களை சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம். உழைக்காத வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உருவானது அரசு என்னும் போது அரசியல் வர்க்கம் என்றால் என்ன?

கம்யூனிசத்தை ஏற்க வேண்டியதில்லை, ஆனால் வர்க்கம் என்பதை அதன் சரியான பொருளில் விளக்க வேண்டும், அல்லவா?

வர்க்கம் என்னும் சொல்லை பொருளற்ற வகையில் நீர்த்துப் போகச் செய்யும் இது போன்ற அறிவுஜீவித்தனங்களை கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை எனில், மக்கள் எல்லாவற்றையும் நிர்வாகக் கோளாறாக, நல்லவர் கெட்டவர் பிரச்சினையாகவே காண நேரிடும்.

அடுத்து அமெரிக்கா, ஏகாதிபத்தியம், ஜார்ஃப்ளாய்ட் போராட்டப் பாடங்கள் என்று உலா செல்லும் கட்டுரை கடைசியில் மீண்டும் “கருத்தில்” வந்து நிற்கிறது! இவர் வெறும் கருத்தை உண்டே வாழ்பவர் போல! பொருள் தேவையின்றி கருத்தால் மட்டுமே வாழ முடிவதென்பது பெரும் கொடுப்பினை!

“நெகிழ்வான அரசியல் தலைவர்கள் அமைப்பை மேலும் ஜனநாயகமயமாக்குகின்றனர். ஆனால், பலவீனமான தலைவர்கள் காவல் துறைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்குவதன் வாயிலாகத் தங்களைப் பலமானவர்களாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள்…”


சுரண்டல் வர்க்கத்திற்கான அரசு அமைப்பில் யாரந்த நெகிழ்வான அரசியல் தலைவர்களாக இருக்கக் கூடும்!

சரி அதைக் கூட விடுங்கள், அடுத்ததாக “கருத்து வேறுபாடு என்பது தேச விரோதம் அல்ல. மாறாக, தேசத்தை இப்படியும் பார்க்கலாம் என்பதற்கான இன்னொரு செயல்திட்டம். போராட்டச் செயல்பாடுகள் பயங்கரவாதம் அல்ல. அவைதான் சமூகத்தின் குரலற்றவர்களின் குரலை ஆட்சியாளர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. ஒரு கருத்தை எப்படிப் பார்ப்பது? இதைக் கற்பிப்பதுதான் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், மிக முக்கியமாக காவல் துறையினருக்கும் கற்பிக்க வேண்டிய அடிப்படையான சீர்திருத்தம் என்று நினைக்கிறேன்.” என்கிறார்.

நிலவும் அமைப்பின் தன்மை, அதன் ஆபத்து, அது என்ன மாதிரியான அமைப்பாக மாற வேண்டும் என்று சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி இடதுசாரிகள் குரல் எழுப்பி வருகிறார்களே. அத்தகைய குரல்கள் முன்வைக்கும் சோசலிச சமூகமே நமக்கான மாற்று என்று சொல்ல இயலாத இவர்கள் எதைக் காக்க இப்படி கயிறு திரிக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

கருத்து கருத்து, கருத்திற்கு மதிப்பு கொடுப்பதே ஜனநாயகம்… கருத்தை மதிக்கக் கற்றுக்கொண்டால் இந்த இந்து இந்திய திருநாட்டில் ஜனநாயகமும், சமத்துவமும் மலர்ந்துவிடும். குறிப்பாக ஏழ்மை, வறுமை, சாதியக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள், மதச் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு எல்லாம் ஒழிந்துவிடும்… மக்களே வாருங்கள் கருத்து மாலை உருட்டி ஜபம் செய்வோம்!

“ஒரு குடியரசு நாட்டில் இன்னமும் காவல் துறையானது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாகவும், மக்களிடமிருந்து இவ்வளவு அந்நியமாகவும் செயல்படுவது தொடர்பில் அவர்கள் வெட்கப்பட வேண்டும். காவல் துறையின் தவறுகளுக்காகவும் சீரமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். சமூகம் ஜனநாயகமாக மாறுவதற்கும் அரசு ஜனநாயகமாக மாறுவதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது...”

காட்டுமிராண்டித்தனமான செல்வக் குவிப்பை காக்க உருவான அரசு ஜனநாயகமாக மாறும் என்று பொய்யானதொரு நம்பிக்கையைக் கொடுக்க ஒரு நெஞ்சுறம் வேண்டும். அரசு தன்னைத்தானே சீர்திருத்திக் கொண்டு காவல்துறையையும் சீர்திருத்தம்… அடடா அதோ அந்த மரத்தில் தான் அந்த ஜனநாயகக் கனி தொங்கிக் கொண்டிருக்கிறது… வாருங்கள் பரித்து உண்போம்! அரசுக்கும் கொஞ்சம் கொடுப்போம். அந்த ஞானக் கனியை உண்டதும் அரசானது மக்கள் ஜனநாயக அரசாக புதுப் பிறவி எடுத்துவிடும்…

“இதையும் மௌனமாகக் கடந்துபோகத் தூண்டும் யத்தனம் அதற்கான உயிரோட்டமான சாட்சியம்” – சமஸ் போன்றவர்கள் இப்படி ஒரு போலியான கட்டுரையை எழுதுவதை விட மௌனமாக கடந்துபோவதே மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்யும் பேருதவியாக இருக்கும். நன்றி.
 #JusticeforJayarajandBenix #JusticforJayrajandBennicks #JusticeForJayarajandFenix #PoliceBrutality #SathaankulamCase 


No comments:

Post a Comment