அம்பேத்கரும் அவரது தம்மமும்
வசுமித்ர-வின் நூலுக்கு ஒரு முன்னுரை
தி.சு. நடராசன்
இன்றைய சமூகம் பற்றியும், சமூகநீதி பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிற
உங்களுடைய வாசிப்புக்கு இப்போது வசுமித்ரவின் இந்த நூல் தயாராக இருக்கிறது. அம்பேத்கர்
மற்றும் அவருடைய புத்தர் பற்றி விமர்சிக்கின்ற சாக்கில்,
வளர்ந்துவரும் இந்த சமூகத்தின் கரடுமுரடுகளையும் கன
பரிமாணங்களையும் தீவிரமாக ஆராய்கின்றது, இந்த நூல்; தனது நிலைப்பாடுகளை அறிவறிந்து உங்கள் முன் வைக்கிறது. சாதி
சமயம் இரண்டும் இந்த நாட்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகள். ஆயிரத்தெட்டு
விவாதங்கள்; ஆனாலும் தீர்ந்து போகாத சொல்லாடல்கள். தொடரும் இந்தச் சொல்லாடல்கள்
தலித்துக்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தமைவுக்குள்
சிக்கிக்கொண்டுள்ளன. இன்றைய சமூக அரசியலில் முக்கியமாக அம்பேத்கரின் இது பற்றிய
நிலைபாடுகளும் செயல்பாடுகளும் பரிசீலனைகளுக்கும் மறுவிவாதங்களுக்கும் உரியவையாக
உள்ளன. இவை அவசியமாகவும் உள்ளன. வசுமித்ர இதன் அவசியத்தை உணர்ந்துள்ளார்.
தீவிரமாகப் பரிசீலனை செய்கிறார். யாரும் புனிதமானவர் இல்லை. எதுவும் புனிதமானது
இல்லை. விவாதங்களை மேற்கொள்ளுகிற போது, விளக்கங்கள் மேலெழுந்து வருகின்றன. சமயம் - சாதி - அரசியல்
என்ற இந்த மூன்றையும் அடிமொத்தமாக ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என்பது
தர்மசங்கடமானது. துணிச்சலுடன் இந்தக் காரியத்தைச் செய்கிறது இந்த நூல். சமூகத்தைக்
கூறுபடுத்திக் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலையில் நின்று கொண்டு சிந்தனைகளையும்
செயல்பாடுகளையும் கட்டமைக்கின்ற ஒரு போக்கில் எழுந்த அம்பேத்கரின் நோக்கத்தையும்,
முறையியலையும் வசுமித்ரவின் இந்த நூல் மறுவாசிப்பு
செய்கின்றது. விரிவாகத் தனது விமர்சனத்தை முன்வைக்கின்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதன் அரசியல் நிர்ணய
சபையில் முதல் சட்ட அமைச்சராக நியமனம் பெற்றவர் அம்பேத்கர். இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர். மேலை நாட்டுப்
பல்கலைக்கழகங்களில் மூன்றுமுறை டாக்டர் பட்டம் பெற்ற அம்பேத்கர்,
மகாராஷ்டிராவில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர்.
அங்கே தலித் இயக்கம் ஒன்றை உருவாக்கியவர். அரசியல் சட்டம் இயற்றுவதற்கு முன்னும்
அதன் பின்னும் இந்த இயக்கமே அவருடைய செயற்பாடுகளின் மையமாக இருந்தது. தன்னுடைய
உயர்ந்த கல்விக்கும் அதன் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகளுக்கும் காரணம்
மதவுணர்வுகளே என்று சொல்லிக்கொள்ளும் அம்பேத்கர், அதே சமயம் வைதீக சமயமே சாதிய உருவாக்கத்திற்குக் காரணம்
என்று காணும் அம்பேத்கர், புத்த சமயத்தில் சேர்ந்தார். ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற ஒரு விரிவான நூலை எழுதினார். புத்தர் பற்றியும்
அவருடைய சித்தாந்தம் பற்றியும் விளக்கமாக எழுதினார். பல தலித் மக்களை நாட்டார்
மரபு வழிபாடுகளிலிருந்து மீட்டுப் பெருஞ்சமய நெறியாகிய புத்தசமயத்தில் இணைத்தார்.
சாதி,
சமயம் அவற்றின் அரசியல் என்று மூன்றிலும் காலூன்றிய
அம்பேத்கர், அதனையே தன்னுடைய அரசியலாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும்,
இவர் இன்றும் இவற்றின் கருத்தமைவுகளில் மையமாக
இருக்கின்றார்.
சைவம், வைணவம் உள்ளிட்ட இந்து சமயம் மற்றும் சமண சமயம்
ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவின் வடக்கே, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்த
சமயம்,
உலகின் பெரும் சமயங்களில் ஒன்றாக,
மக்கள் தொகையில் ஏழு சதவீதம் அதாவது 490 மில்லியன் மக்கள் பெருக்கத்தோடு விளங்குகிறது. முக்கியமாக
இது ஆசிய சமயமாகக் கருதப்படுகிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, மங்கோலியா, பூடான், ஜப்பான், சைனா, வியட்நாம் முதலிய நாடுகளில் இது ஆதிக்கம் செலுத்துகிறது.
சமயங்கள், அவற்றின் பிறப்பினடிப்படையில் பொதுவாக அன்பு,
அறம், அமைதி, புனிதம் முதலியவற்றைக் கொள்கைகளாகவும்,
ஆதாரங்களாகவும் கொண்டவை என்று பிரகடனப்படுத்திக்
கொள்கின்றன. உடல், உள்ளம், சொல், செயல் எனும் இவற்றில் நேர்மையையும்,
ஒன்றிணைவையும் வலியுறுத்தும் சமயம்,
ஆன்மீகத்தையும் அப்பாலைத் தத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
ஆனால் பின்னர், தெளிவற்ற முரண்மை முதலியவற்றில் ஈடுபட்டு நடைமுறையில் அதிகார சக்தியாகப்
பரிணமித்துள்ளது. கடவுளின் பெயர்களாலும் மற்றும் நம்பிக்கைகள் சடங்குகள்
முதலியவற்றாலும் மனிதனை பேதப்படுத்துவதாகவும் அந்த பேதங்களிடையே ஆதாயங்களைத்
தேடுவதாகவும், இவற்றின் பொருட்டு வன்முறைகளைத் தூண்டுவதாகவும் - இப்பொழுது என்று இல்லை -
இங்கு - அல்லது அங்கு என்று இல்லை - நீண்ட காலமாகவே - பரவலாக - இது ஆகியுள்ளது.
இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தும். பவுத்தத்திற்கும் இது பொருந்தும்.
கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உள்ள முரண்பாடுகளே இயல்பாகிவிடுகிறபோது,
சமயம் அழகான போர்வைகளை இறுகப் போர்த்திக் கொள்கின்றது.
சமீபத்திய உதாரணங்கள், இலங்கை, பர்மா என்ற மியான்மார். அங்கு நடந்த இனக்கலவரங்கள்,
அராஜகங்கள். இது பிக்குகளாலும்,
போதகர்களாலும், அரசு அதிகாரிகளின் கனமான நடைமுறைகளாலும் அவற்றின்
துணையோடும் நிகழ்ந்திருக்கின்றது என்பதை யாவரும் அறிவர்.
வரலாற்றுப் போக்கில் எது சமயத்தை வழிநடத்துகிறது?
அதனுடைய எந்த இயல்பு அல்லது நடைமுறை அதனை வழிநடத்துகிறது?
அறிவு அல்ல, தர்க்கம் சார்ந்த கொள்கை அல்ல. ஆனால் உணர்ச்சிதான்;
நம்பிக்கைதான். இது அறிவாளியாகிய அம்பேத்கருக்கு நன்றாகத்
தெரியும். வெள்ளைக்கார நாட்டில் படித்து, இங்கு உள்நாட்டில் சமூக ஆதிக்கம் குறித்து அரசியல் பண்ணத்
தெரிந்த அம்பேத்கர் எதனை ஆயுதமாகத் தரித்துக்கொண்டார்?
சமயம்; அதற்கான உணர்ச்சி; அதற்கான நம்பிக்கை. இது தனக்கென ஓர் உள்ளுணர்வினை அல்லது
தெளிவினை ஒழுங்குபடுத்திக்கொள்ள அல்ல; பிறரின் அத்தகைய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும்
எளியதாகவும் வலியதாகவும் செயல்படவைக்கக் கூடிய குறிப்பிட்ட சில குழுவினரை
இலக்காகக் கொண்டது. அவருடைய ஆங்கிலக் கல்வியும் திட்டமிட்ட செயல் திறனும் அவரை
இந்தச் சமூகத்தின் மீது செயல்படவும் சிந்திக்கவும் வைத்தன. ஆனால் இதற்கான அரசியலை
- அரசியல் இயக்கத்தை - அவர் கண்டறியவில்லை. அதற்கான தேடுதலில் ஈடுபடவில்லை.
சமயத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த அவர் சமூக மாற்றத்திற்குச் சமயமே
ஆதாரமாக இருக்க முடியும் என்று கருதினார்; நம்பினார். ஒரு சமயத்தை இதற்கெனத் தேர்ந்தெடுக்க
வேண்டியவரானார். இந்திய தேசியத்தில் பெருத்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட
அவருக்கு,
வெளிநாடுகளோடு சேர்ந்து பிறந்த கிறித்தவமோ,
இசுலாமியமோ மாற்றுக்களாகத் தோன்றவில்லை. அதேபோது,
இந்தியாவில் பிறந்த வைதீக சமயமோ பிறப்பிலேயே ஆச்சாரங்கள்
மூடநம்பிக்கைகளால் அழுந்திக்கிடந்தது. ஆனால் இந்தியாவில் பிறந்த இன்னொரு சமயமாகிய
புத்தசமயம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. மாற்றாகத் தோன்றியது. தன்னுடைய
வெளிப்பாடுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாகத் தெரிந்தது. இதன் காரணமாக
அம்பேத்கர் புத்த சமயத்தில் சேர்ந்தார். புத்த சமயத்தை விளக்கினார். புத்தர் பற்றி
நிறைய எழுதினார்; புத்த சமயத்தில் தன் பகுதித் தலித் மக்களை மதமாற்றம்
செய்தார்.
அப்படியானால், என்ன எதிர்பார்க்கத் தோன்றுகிறது?
சாதி வேறுபாடுகள் இல்லாத மனிதகுல விடுதலையை இவர்கள்
முன்மொழிந்தார்கள் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. ஆனால் பேதங்களும் பிளவுகளும்
சண்டைகளும் சச்சரவுகளும் வெவ்வேறு வடிவங்களில் பெருகிக் கிடக்கும் இந்தச்
சமூகத்தில் அதற்கான காரணங்கள் என்னவாக, எப்படியாக இருந்தன என்றோ, அந்தக் காரணங்களை வேரோடு சாய்த்து அழிப்பது எப்படி என்றோ
புத்தரோ,
அம்பேத்கரோ பேசினார்களா என்ற ஒரு வினா எழுகிறது. புதிய
சமூகக் கட்டுமானத்தை முன்மொழிவதற்கு, வரலாற்றியல், அறிவியல் பார்வைகள் அவசியப்படுகின்றன. அதெல்லாம் இல்லாமல்
மாறி மாறிச் சமயத்தைத் தோளில் சுமந்து கொண்டு மனிதமேம்பாட்டை எப்படியாக்கும் சமைத்திடமுடியும்?
எதன் மீது பேதமற்ற சமூகத்தைக் கட்ட முடியும்?
மேலும் இந்தப் பேதம் என்பது - வேறுபாடு என்பது - வெறுமனே
சாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையா? அப்படியானால் இந்து சமயத்தைச் சாதிகளற்ற சமயமாக மாற்றினால்
இது தீர்ந்துவிடுமா? கருத்து அடிப்படையிலான சிந்தனைகளுக்கு மாற்றாகப் பொருள் அடிப்படையிலான
ஆய்வுமுறைகளை முதன்மைப்படுத்துகின்ற போதுதான், இந்தச் சமூக முரண்பாடுகளின் உண்மைகளை உசாவ முடியும்.
முரண்பாடுகளின் உண்மைகளை அறிகின்ற போதுதான் அந்த முரண்பாடுகளை வேரோடு களைய
முடியும். ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கவுதம புத்தருக்கு இது
அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சர்வதேச தொழில் குழும முதலாளித்துவம் வளர்ந்து,
தனது சாதுரியங்களையும் சாதனைகளையும் காட்டி வருகின்ற இந்த
நவீன காலத்தில் வாழ்ந்து, செயல்பட்ட அம்பேத்கருக்கு இது மிகவும் அவசியமல்லவா?
சமூக அமைப்பினைக் கூறுபடுத்திச் சாதியப் பிரச்சினையை
மட்டும் தனிமைப்படுத்தி அதனைத் தனித்துவமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது.
சமூக மாற்றம் என்பது, ஒன்றிணைந்த ஒரு ஒட்டுமொத்தமான செயல்பாடு ஆகும்.
அப்படியென்றால் சமூகத்தை கூறுபடுத்திச் சாதியப் பிரச்சினையை மட்டும் தனியே
எடுத்துக்கொண்டு கருதுகோளை உருவாக்குவது என்பது சொல்லாடலின் நோக்கத்தைப்
பிறழ்பட்டதாக ஆக்கிவிடும். அதுவும் பொருளாதார உறவுகள் அடித்தளமாக இருக்கின்றபோது
சட்டம்,
சாதி, சமயம் முதலியவை மேல்தளங்கள் என்ற நிலையில் அடித்தளத்தின்
செயல்பாட்டையும் உறவுகளையும் சார்ந்தே அமைகின்றன. இதனைப் பிறழ்பட விளக்க
முற்படுகிறபோது விவாதத்தின் நோக்கம் வேறுபட்டதாக - பிழைபட்டதாகவே - அமையும். சட்ட
அமைச்சராக இருந்த அம்பேத்கர் இதனைச் செய்தாலும், அவருடைய நோக்கம் அப்படிப் பிழைபட்டதாகத்தான் அமையும்.
இப்படியிருக்கின்ற போது மக்களின் வேதனைகள் பற்றியும்,
சாதிப் பிரச்சினைகளின் வன்கொடுமைகள் பற்றியும் தீர்வு
கண்டிட முடியுமா?
எனவே சாதியத்தை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
அம்பேத்கரியத்தில் இல்லை; பொருளியல் சார்ந்த உறவுகளையும் அவற்றிற்கிடையேயுள்ள,
தர்க்க ரீதியான முரண்பாடுகளையும் பற்றிப் பேசுகிற விஞ்ஞானத்தில்
அதாவது மார்க்சியத்தில்தான் இருக்கிறது. இதனுடைய அவசியத்தை,
வகை தொகைபட விளக்குகின்றார், மார்க்சிய அறிஞர் ரங்கநாயகம்மா. (சாதியப் பிரச்சினைக்குத்
தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை;
தமிழ் மொழிபெயர்ப்பு, கொற்றவை) ரங்கநாயகம்மாவின் விளக்கமும் விமர்சனமும் அண்டை
மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கு தேசம் மாநிலங்களில் பிரசித்தமானவை. அம்பேத்கரையும்,
புத்தர் அவரால் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்,
எவ்வாறு வழிபடப்படுகிறார் என்பதையும் ரங்கநாயகம்மாவின் வழி
நின்று தமிழ்ச் சூழலில் வைத்து விளக்கிப் பேசுகின்றார் வசுமித்ர.
இப்படி உரையாடலின் அவசியத்தை தமிழ் உலகம் அறிந்து கொள்ள
வேண்டியுள்ளது. நம்மோடு அண்மையில் வாழ்ந்த அம்பேத்கர்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவுதம புத்தரைத்
தன்னோடு அரவணைத்துக்கொண்டு பேசுகிறார். புத்தரை ஒரு வரலாற்று நாயகர் என்று
பார்ப்பது ஒருவகை. இது ஒரு முக்கியமான இயல்பு. அப்படிப் பார்ப்போமானால்,
வரலாற்று மெய்மைகளோடும் தேவைகளோடும் தாக்கங்களோடும்,
தர்க்கங்களோடும் பார்த்தும் பேச வேண்டும். அப்படியில்லாமல்
வழிபடு பொருளாகப் பார்ப்பது என்பது, அதுவும் குறிப்பாகப், பெரும்பாலும் ஒரு பகுத்தறிவாளராகவே தன்னை முன்னிறுத்திய ஒரு
பெரும் சிந்தனையாளரைப் பார்ப்பது என்பது, தங்கக் கூண்டுக்கள் அவரை அடைப்பது போன்றது.
கர்ப்பகிருகத்துக்குள் பூட்டிவைத்து பூசிப்பது போன்றது. இந்திய அரசாங்கத்துக்கு
அரசியல் சட்டநிர்ணயம் செய்திட்ட அம்பேத்கர், புத்தரை இப்படிக் கொண்டு வருகிறார். மேலும்,
இங்கே காவிய நாயகனாக வருணிக்கிறார்;
இறுதியில் ஆகப் பெரும் கடவுளாக உருமாற்றுகிறார்,
வழிபடுகிறார்.
புத்தரை அழகுடையவராக ஆராதனை செய்கிறார் அம்பேத்கர். உடலின்
குறிகள் என அழகின் அம்சங்களைச் சித்தரிக்கின்றார். அவருடைய உயரம்,
கம்பீரமான தோற்றம் எல்லாமே வருணிக்கப்படுகின்றது. புத்தரைக்
கண்ட யாரும் அவருடைய கால்களைக் கழுவிவிட வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் காட்டுகிறார்.
பெண்ணோ,
ஆணோ யார் பார்த்தாலும் புத்தரிடம் மறுயோசனையின்றி மயங்குவர்,
சேவிப்பர் என்று அம்பேத்கர் சொல்லுகிறார். இவரை
மயக்குவதற்காக அழகிய பெண்களை ஏவினாலும் கொஞ்சமும் அசையாதவர் புத்தர். அவரை அணுகும்
யாரும் அவருடைய பவுத்த நெறிக்கு மாறிவிடுவர். அவருடைய உருவத்தைச் சுற்றி எப்போதும்
ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இவ்வாறு மீமனிதராக அவரைக் காட்டுகிறார் அம்பேத்கர்.
புத்தருடைய பேச்சைக் கேட்டு அடிமைகள் ஒவ்வொருவரும் சுதந்திர மனிதர்களாகிறார்கள்.
மன்னர்கள் பிரபுக்கள் எல்லோரும் புத்தருடைய நெறிக்கு மாறிவிடுகிறார்கள் புத்தர் பல
அற்புதங்கள் நிகழ்த்துகிறார். இப்படிப்பட்ட சொல்லாடல்கள் மூலம் அம்பேத்கர் புத்தரை
முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அவருடைய நியாயங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.
இதற்காக, வரலாற்றியல், அறிவியல் வழிப்பட்ட முறையியல்களை அவர் ஒதுக்கி வைத்து
விடுகிறார். அகவயப்பட்ட - உணர்ச்சிவயப்பட்ட - பக்திவயப்பட்ட - வழியே அவர்
பயணிக்கிறார். நாட்டார் வழிப்பட்ட மரபுகளையும், வழிபாடுகளையும் சார்ந்திருந்த தலித் இனமக்களை
ஈர்ப்பதற்குரிய ஒரு திட்ட வழிபட்ட சமயப் பனுவலாக ஆக்குவதற்கே ‘புத்தரின் தம்மம்’ பற்றிய அம்பேத்கரின் விளக்கம் அமைந்துள்ளது என்று சொல்ல
வேண்டும்.
பெருஞ் சமயங்கள் பேசப்படுகின்ற வெளியில்,
கடவுள்கள் பெயராலும் மகான்கள் பெயராலும்,
அவ்வப்போது கட்டமைக்கப்பட்ட புராணிக மரபுக் கதைகள்
மூலமாகவும், வரலாற்றுத் துளிகள் மூலமாகவும், போதனைகள் மூலமாகவும் புனிதங்கள் கற்பிப்பது தொடர்ந்து
காணப்படுகின்றது. நம்மிடம் வார்த்தைகளுக்கோ பஞ்சம்? வார்த்தைகள் வக்கிரம் தெரியாமல் வெளிப்படுகின்றபோது,
வக்கணைகள் வரலாறுகளை மறைத்துவிடுகின்றன. மினுமினுப்புகள்
மேதாவிலாசங்களின் முகவரிகள் ஆகின்றபோது, செயல்பாடுகளின் திசைகள் சிதறிப்போகின்றன.
அம்பேத்கர், புத்தரின் கதைகளையும், போதனைகளையும், அவருடைய வாழ்க்கைப் பயணங்களையும் அவை தந்துவிட்டுப் போன செய்திகளையும்
மறுயோசனையின்றிப் - பரிசீலனை எதுவுமின்றி - ஜோடனையுடன் அழகுபடுத்தித் தருகிறார்.
உங்கள் கையிலே இருக்கும் இந்த நூலில்,
ஆசிரியர் வசுமித்ரவின் சொல்லாடல்,
அம்பேத்கர் பற்றியும் புத்தர் பற்றியும் திட்டவட்டத்தோடு
மறுவாசிப்புச் செய்யத் தூண்டுகிறது. யாரும் எதுவும் புனிதமில்லை என்று
ஆகிப்போகிறபோது, வழிமறித்து மறுபரிசீலனை செய்வதும், தொடர்ந்து விவாதமின்றி பேசப்பட்டு வருகின்றவற்றை வம்புக்கு
இழுப்பதும், அதன் மூலம் மறுகட்டமைவுக்குத் தூண்டுவதும் தவிர்க்க முடியாதவை. தேவையானவை,
ஆசிரியர் வசுமித்ரவின் வார்த்தைகள்,
யோசிக்க வைக்கும் வார்த்தைகள். அம்பேத்கரின்
பார்வையிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றும் புத்தரின் முகம் பார்த்துப் பேசுவது
ஆசிரியரின் இலக்கு. தமிழ்ச்சூழலில் இதற்கான ஒரு தேவையிருக்கின்றது என்பதாக
உணர்த்திக்கொண்டு போகிறார் ஆசிரியர்.
“அம்பேத்கரும் அவரது தம்மமும்” என்னும் இந்நூலின் மூலமாக, ஆசிரியர் வசுமித்ர இந்தத் தேவையை சமரசமின்றி
அறியப்படுத்துகிறார். விரிவான, விளக்கமான விவாதப் பொருட்களுடன் தன்னுடைய கருத்தாடலை
முன்வைக்கிறார். இது நிச்சயமாக சாதி, சமயம் உள்ளிட்ட வெளிப்படையானதொரு உரையாடலை இங்கு
நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கிறார். இது நியாயமான எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment