4. கொலை
கார்ல்
லீப்னெஹ்ட்டும், ரோசா லுக்சம்பர்க்கும் வில்மெர்ஸ்டார்ஃபை அடைந்த போது
அவர்களைச் சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருந்தது. எதிர்ப் புரட்சிக் குழுக்களின் எண்ணற்ற கூலிப் படைகள்
அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ரஷ்ய உயர் குடியினரால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விஸ்ட்
எதிர்ப்புக் கழகம், இதர பகுதிகளிலிருந்து நன்கொடைகளைப்
பெற்றுக்கொண்டு கொலை முயற்சியைத் தொடங்கியது. அதற்கு ஜெர்மனி முழுக்க கூலிப்படைகள்
இருந்தன, கார்ல் லீப்னெஹ்ட், ரோசா லுக்சம்பர்க் மற்றும் கார்ல் ரடேக்கின் தலைக்கு விலை
நிர்ணயித்தது. டிசம்பர் 7 அன்று கார்ல் லீப்னெஹ்ட்டைக் கைப்பற்ற முனைந்த பெர்லின் நகர
கமாண்டட்டின் கூலி பெற்ற தரகரான ஃபான் டிஸ்காவும் அதில் இருந்தார். நகர கமாண்டண்டின் ஆணையின் பேரில் எர்னஸ்ட் மேயர் மற்றும்
ஜியார்ஜ் லெடெபாரைக் கைது செய்தவர்களில் ஃபான் டிஸ்காவும் ஒருவர், லெப்டினன்ட் கியுர்கென் மற்றொருவர். பெர்லினின்
ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நகரம் முழுவதும் மற்றும் வில்மேர்ஸ்டார்ஃப்
உட்பட நடுத்தர வர்க்க புற நகர்
பகுதிகளிலும் தங்களது தரகர்களை நியமித்திருந்தது. குதிரைப்படைப் பிரிவின் தற்காலிகத் தலைமையகம் இருந்த எடென்
ஹோட்டலில் இருந்து ஐந்தாம் படைத் தரகர்களும் இதர உளவு நிறுவனப்
பிரதிநிதிகளும் ஏவப்பட்டனர். சமூக ஜனநாயகக் கட்சியால் உருவாக்கப்பட்ட “சமூக ஜனநாயகக் கட்சியின் துணை அமைப்பு, பிரிவு 14” என்று அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட ரீஷ்டாக் படைவகுப்பும்
ஒரு உளவு நிறுவனத்தை வைத்திருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பின்னர் அவதூறு வழக்கின் கீழ்
விசாரிக்கப்பட்டன. அப்போது, ஃபிலிப் ஷீடெமான் மற்றும் ஜியார்ஜ்
ஸ்க்லார்ஜ் (ஊழல்வாதி
என்று பின்னர் பொதுத் தளத்தில் அடையாளம் காட்டப்பட்டவர்) ஆகியோர்களால் கார்ல் லீப்னெஹ்ட் மற்றும் ரோசா
லுக்சம்பர்க்கின் தலைகளுக்கு 1,00,000 மார்க்
பணம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது
நீதிமன்றப் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிவு 14 இன் தலைவர் ஹெசல்,படை வகுப்பின்
சம்பள அதிகரி சொன்னென்ஃபெல்,க்ராஸ்னிக் எனும் அதிகாரி எல்லோரும் சேர்ந்து, ஃபிலிப் ஷீடெமானின் மருமகனான ஃப்ரிட்ஜ் ஹென்க் என்பவர் அந்த இரண்டு
புரட்சிகரத் தலைவர்களின் தலைகளுக்கும் விலை நிர்ணயித்தார் என்றும், காரியம் முடிந்த அடுத்த கணம் பணம் கைக்கு வரும் என்று
கூறியதாகவும் சத்தியப் பிரமாணம் செய்தனர். படை வகுப்பின் மற்ற உறுப்பினர்களில் பலரும் சாட்சிக்
கூண்டில் ஏறி முந்தய சத்தியப் பிரமாணத்தை உறுதி செய்தனர். லீப்னெஹ்ட் மற்றும் லுக்சம்பர்கின் கொலை ஆணை
எழுத்துப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும், படை வகுப்பு முழுதும் அது பொதுவாக அறியப்பட்டிருந்தது, இரண்டில் எவர் ஒருவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து
வந்தால் 1,00,000மார்க்குகள் காத்திருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தது.
பூர்ஷுவாக்கள்
மற்றும் சமூக ஜனநாயக நிறுவனங்கள் என்று இரு தரப்பும் பாட்டாளி வர்க்கத்தின் அந்த
இரு புரட்சித் தலைவர்களையும் கொன்று குவிக்கப் போட்டி போட்டுக் கொண்டு தங்களால்
இயன்றதைச் செய்தனர். அவர்களுடைய
இணைப்பு அலுவலர்கள் பெர்லின் நகர கமாண்டண்ட் அலுவலகத்தில் நாற்காலிகளிட்டு
அமர்ந்திருந்தனர்.
கொலைக்கான
சூழலும் தயார்படுத்தப்பட வேண்டியிருந்தது. புரட்சியின் தொடக்க நாளில் இருந்து, ஒரு அபஸ்வரத்தில் இசைக்கப்பட்டு வந்த ஸ்பார்ட்டகஸ்
எதிர்ப்புப் பிரச்சாரமானது இப்போது ஒரு
வெறிபிடித்த பிரச்சாரமாக மாறியது. எதிரப் புரட்சியின் தூதுக்குழுவினர் சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகளைக்
கொன்று குவித்தனர்.
பத்திரிகைகள் ”மீட்பர்களைப்”
புகழ்ந்து கீதம் இசைத்தன. இரத்தமும், மூளையும் சிதறிக் கிடந்த அந்தக் கோட்டைகளில் தொழிலாளர்கள்
வீழ்த்தப்படுவதைப் பத்திரிகைகள் ஒரு இன்பவெறியுடன் வர்ணித்துக் கொண்டிருந்தன. இந்த மனசாட்சியற்ற தூண்டுதல் பிரச்சாரத்தின் விளைவால், நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர வர்க்கங்களுள் கொலைத் தாகம் மேலோங்கியது. சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்நபர் கமாண்டோக்களின் துப்பாக்கிகளின் முன்
நிறுத்தப்பட்டார்.
இறந்த புரட்சிகரத் தொழிலாளர்கள் மத்தியில் பல அப்பாவி
மக்களும் இருந்தனர். இந்த “அறப்போர்” இறுதியில் லீப்னெஹ்ட்
மற்றும் லுக்சம்பர்க்கின் குருதியை வேண்டுவதாக, சச்சூர்லீனியாவுக்கு (சனிக் கடவுளுக்கு பலி கொடுத்து மேற்கொள்ளப்படும் ஒரு விழா) மணிமுடி சூட்ட வேண்டும் எனும் அளவுக்குப் பெருகியது. சமூக ஜனநாயக ஃபோர்வார்ட்ஸ் இதழ் ஜனவரி 13
அன்று ஆர்துர் ஜிக்லரின் ஒரு கவிதையை வெளியிட்டு இந்த
வெட்கங்கெட்ட செயலை மூடி மறைக்க முனைந்தது:
“வீல் ஹுண்டர்ட் டோடே இன் ஐனர் ரீஹ்’-
ப்ரொலேடெரியெர்!
கார்ல், ரோசா, ரடேக் உண்ட் கும்பனியே
எஸ்
இஸ்ட் கெய்னர் டாபேய், எஸ் இஸ்ட் கெனர் டாபெய்!
ப்ரொலெடரியெர்!” 1
1 நூற்றுக்
கணக்கானப் பிணங்கள் ஒரு வரிசையில் –
பாட்டாளிகளே!
கார்ல், ரோசா, ரடேக் மற்றும் இதர உறுப்பினர்கள்., -
அங்கு ஒருவரும் இல்லை, அங்கு ஒருவரும் இல்லை!
பாட்டாளிகளே!”
லீப்னெஹ்ட்
”தப்பிக்க முனைந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்” மேலும், லுக்சம்பர்க் “மக்களால் கொல்லப்பட்டார்” என்று ஜனவரி 16 அன்று, மற்ற பத்திரிகைகளை முந்திக் கொண்டு செய்தி வெளியிடும் ஒரு ‘கௌரவத்தைப்’ பெற்றிருந்தது ஃபோர்வார்ட்ஸ்.
கொலைக்
குற்றத்தின் ஒவ்வொரு விவரமும் துல்லியமாகத் தெரியும். முழு உண்மையையும் கண்டறிய லியோ ஜொகிச்செஸ் அயராது உழைத்து, ரோடே ஃபானேவில் அதை வெளியிட்டார். அரசு
வழக்குரைஞர் ஜார்ன்ஸோடு புலனாய்வில், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் படை
வீரர்கள் குழுவின் சமூக ஜனநாயக செயற்குழு உறுப்பினர்களோடு இணைந்து செயல்பட்டார்
ஜொகிச்செஸ்.
முடிந்தவரை ஆதாரங்களை மூடி மறைக்க முனைந்த ஜார்னின் இழிவான
முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இறுதியில் அவர்கள் பின்வாங்குமாறு
கட்டாயப்படுத்தப்பட்டாலும், அவர்களுடைய தொடக்கக்கட்ட ஒத்துழைப்பு ஜொகிச்செசுக்கு
உதவியாக இருந்தது. இருந்தாலும், அதைத் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைகளில் மேற்கொண்டு
தகவல்கள் வெளிவந்தன. உதாரணமாக ஹீடெமான் (எதிர்) பிரின்ஸ் மற்றும் பலர் எனும்
வழக்கு டிசம்பர் 1920
அன்று விசாரணைக்கு வந்தது. ப்ரஷ்ய சட்டசபையால் (Diet) அமர்த்தப்பட்ட சிறப்பு குழுவால் மொத்த விவரங்களும் மிகவும் ஆழமாக
பரீசிலிக்கப்பட்டன.
அந்த
வழக்கு விவரங்கள் பின்னர் பிரஷ்ய சட்டமன்றத்தால்
அதிகாரப்பூர்வ ஆவணத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1929-30 ஆம்
ஆண்டுகளில் டாகெபுகின் ஆசிரியர் போர்ன்ஸ்டைனுக்கெதிராக ஜோர்ன்ஸ் கொண்டு வந்த
நிறைவேறாத அவதூறு வழக்கின் போது இறுதி பூச்சுகள் கொடூரமானகாட்சியாக முன்வைக்கப்பட்டது.
ஜனவரி 15
அன்று இரவு ஒன்பது மணிக்கு கார்ல் லீப்னெஹ்ட், ரோசா லுக்சம்பர்க் மற்றும் வில்ஹெல்ம் பீக் ஆகியோர்
வில்மெர்ஸ்டார்ஃபின் மன்ஹைமர் தெருவில் உள்ள எண்53 கட்டிடத்தில் வைத்துச் சில படைவீரர்களால் கைது
செய்யப்பட்டனர்.
முதலில் லீப்னெஹ்ட்டும், ரோசா லுக்சம்பர்க்கும் அது ஒரு தற்செயலான சோதனை என்று நினைத்துப் பொய்ப் பெயர்களைக்
கொடுத்தனர்.
எனினும், லீப்னெஹ்ட்டின் நம்பிக்கையை வென்றிருந்த உளவாளி ஒருவனால் காட்டிக்
கொடுக்கப்பட்டனர்.
ஒழுங்கு முறைக்
குழுவினரின் தலைமையகத்திற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டார் கார்ல்
லீப்னெஹ்ட், அங்கிருந்து பின்னர் ஈடன் ஹோட்டலில் உள்ள குதிரைப்படைப்
பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரோசா லுக்சம்பர்க்கும், வில்ஹெல்ம் பீக்கும் அங்கு பின்னர் அழைத்துச்
செல்லப்பட்டனர்.
கைது
பற்றிய முதல் செய்தி ஈடன் ஹோட்டலை அடைந்தவுடன், கார்ல் லீப்னெஹ்ட்டையும், ரோசா லுக்சம்பர்க்கையும் கொல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்
காப்டன் பப்ஸ்ட்.
உள்ளே அழைத்துவரப்பட்ட அடுத்த கணம் கார்ல் லீப்னெஹ்ட்
துப்பாக்கிப் பின்முனையால் இரண்டு முறை தாக்கப்பட்டார். உடனே அவர் தனது காயத்திற்கு கட்டுப் போடும்படி கேட்டார், ஆனால் அது மறுக்கப்பட்டது. பிறகு ரோசா லுக்சம்பர்க் அழைத்து வரப்பட்டார். கூச்சல்களாலும், மோசமான வசைகளாலும் அவர் வரவேற்கப்பட்டார். பீக் அந்தக் கட்டிடத்தின் நடைபாதையில் காவலரின் பிடியில்
இருந்தார்.
கார்ல் லீப்னெஹ்ட்டும் ரோசா லுக்சம்பர்க்கும் காப்டன்
பப்ஸ்டின் அறைக்கு ”விசாரணைக்காக” அழைத்துச் செல்லப்பட்டனர். சில மணித்துளிகளில் லீப்னெஹ்ட் ஹோட்டலில் இருந்து வெளியே
அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது மீண்டும் துப்பாக்கியின்
பின்முனையால் தாக்கப்பட்டு, காருக்குள் இழுத்துப் போடப்பட்டார். காப்டன் ஹோர்ஸ்ட் ஃபான்
ஃப்ளுக்-ஹர்டுங், அவனுடைய சகோதரன் கேப்டன் ஹெய்ன்ஸ் ஃபான்
ஃப்ளுக்-ஹர்டுங், லெப்டினன்ட்கள் லீப்மன், ஃபான் ரிட்கன், ஸ்டீகெ, ஸ்லுஸ் மற்றும் ஃப்ரீட்ரிஹ் எனும் ஒரு படை
வீரன் ஆகியோர் அதைச் செய்தனர். டியர்கார்ட்டனில் வைத்து, லீப்னெஹ்ட் அரை மயக்கத்தில் காரிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, சிறிது தொலைவில் கொலை செய்யப்பட்டார். காப்டன் ஹார்ஸ்ட் ஃபான் ஃப்லுக்-ஹர்டுங் முதல் குண்டைச் சுட்டான். பிணம் மீண்டும் சீருந்தில் ஏற்றப்பட்டு, அருகில் இருந்த பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு “டியர்கார்ட்டனில் அடையாளம் தெரியாத ஒரு பிணம் கண்டெடுக்கப்பட்டது” என்று சொல்லிச் சேர்க்கப்பட்டது.
சில
மணித்துளிகளில், லெப்டினன்ட் ஃபொகெலின் வழிநடத்தலின் கீழ் ரோசா லுக்சம்பர்க்
ஈடென் ஹோட்டலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். லெப்டினன்ட் ஃபாகல் மற்றும் காப்டன் ஹார்ஸ்ட் ஃபான் ஃப்ளுக்-ஹர்டுங் ஆகியோரின் ஆணைப்படி ருங்கே எனும் படை வீரர் ரோசா
லுக்சம்பர்க் வெளிவந்தவுடன் தனது துப்பாக்கி கொண்டு அவரை பின் மண்டையில் அடித்து
தரையில் வீழ்த்துவதற்காகக் கதவருகில் காத்துக் கொண்டிருந்தார். ரோசாவின்
மண்டையோட்டை இரண்டு வீச்சுகளால் தகர்த்து அவரை வீழ்த்தினான் அவன். பின்னர் அரைப் பிணமான அவரை லெப்டினன்ட் ஃபோகெல் மற்றும் இதர
அதிகாரிகளோடு காத்திருந்த பேருந்தில் ஏற்றினான். அவர்களுள்
ஒருவன், தனது துப்பாக்கியின் பின்புறம் கொண்டு மீண்டும் தாக்கினான். லெப்டினன்ட் ஃபாகெல் சுடும் தூரத்தில் வைத்து (point-blank
range) ரோசா லுக்சம்பர்க்கை தலையில் சுட்டுக் கொன்றான்.
லாண்ட்வெர் கால்வாயின் மீதுள்ள லீஹ்டென்ஸ்டைன் பாலத்தில் வண்டி நின்றது. அங்கிருந்த கால்வாயில் ரோசாவின் பிணம் வீசி எறியப்பட்டது.
அதன் பிறகு மே மாதம் வரை அப்பிணம் மீட்கப்படவே இல்லை.
ரோசா லுக்சம்பர்க்: வாழ்வும் பணிகளும், பால் ஃப்ராலிச், தமிழாக்கம் - கொற்றவை, நூலிலிருந்து, பக். 423
சிந்தன் புக்ஸ் வெளியீடு, விலை ரூ. 350. ph: 9445123164
No comments:
Post a Comment