வேலை நிறுத்தங்கள் குறித்த எதிர்மறையான உணர்வை ஏற்படுத்துவதில்தான்
அரசு குறியாக இருக்கிறது. அரியலூரில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்து
பள்ளி மாணவர்கள் சாலைப் போராட்டம் என்றொரு செய்தியைப் பார்த்தேன். இது அறியாமையால்
நிகழ்ததா அல்லது ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக திட்டமிட்டு
அரங்கேற்றப்பட்டதா தெரியவில்லை. மேலும், 6,500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப் போவதாகவும் (கல்விச் சேவைக்கு
இடையூறு ஏற்படாதிருக்க) அரசு சார்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில்
மாற்றுகருத்தில்லை. ஆனால் அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ அல்லது தனியார் தொழிலாளர்களோ
வேலை நிறுத்தம் செய்கையில் அவர்களை ஒடுக்கும் வண்ணம் வேறொருவரை வேலைக்கு
எடுப்பதென்பது தொழிலாளர் விதிகளில் அடிப்படை உரிமை மீறலாகும். தம் உரிமைகளுக்காகப்
போராடுவது, வேலை நிறுத்தம் செய்வதென்பது தொழிலாளர்களின்
அடிப்படை உரிமை.
பேராசை நிறைந்த தனியுடைமை பொருளாதார உற்பத்தி முறையினால் இங்கு
ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட இல்லாமை
தலைவிரித்தாடுகிறது. ஆகவே மக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அரசுகளும், தனியார் முதலாளிகளும் தங்களுடைய கையாலாகாதனத்தை, உழைப்புச்
சுரண்டலை மூடி மறைக்க வேலை நிறுத்தம் என்பது ஏதோ தொழிலாளர்களின் பேராசை செயல்
என்பதாக கட்டமைக்கின்றன. இதனால் பொதுமக்களிடையே ஒரு வெறுப்பை உண்டாக்கிவிட
முடிகிறது. ஒருபக்கம் போட்டி மனப்பான்மை, மறுபக்கம் வெறுப்பு
இரண்டையும் ஊட்டி வளர்த்து தொழிலாளர் வர்க்கத்தையே பிளவுபடுத்தி, ஒருவரோடு மற்றொருவர் மோதச் செய்து குளிர் காய்கின்றனர்.
இந்த சூழ்சிக்கு பொதுமக்கள் பலியாகக் கூடாது. வேலைவாய்ப்பு தேடும்
புதியோர், மற்றோர் யாராக இருப்பினும், தொழிலாளர்களின்
வேலை நிறுத்தம் என்பதை நம் அனைவருக்குமான உரிமைப் போராட்டமாக காண வேண்டும்.
நண்பர்களே, அரசு விடுக்கும் இந்த தற்காலிக ஆசிரியர் பணிக்கான
அழைப்பு (எந்தப் பணியாயினும்) நம் சக தொழிலாளர்களை, தோழர்களை
வஞ்சிக்கவும், ஒடுக்கவும், அச்சுறுத்தவுமே
என்பதை புரிந்துகொண்டு அரசின் அழைப்பை புறக்கணியுங்கள். இந்தப் புரிதலை மேலும்
பரவலாக்குவது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழர்களின் கடமையாகும்.
எந்த ஒரு வேலை நிறுத்தமும் அதிகாரத்திற்கும் உழைப்புச்
சுரண்டலுக்கும் எதிரான போராட்டமே. அதற்கு சுரண்டப்படும் வர்க்கத்தை சேர்ந்த
அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்.
உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக!
(25.1.2019)
புகைப்படம்: விகடன் தளம்
#ஜாக்டோ_ஜியோ #JACTO_GEO #Workers_Strike
புகைப்படம்: விகடன் தளம்
#ஜாக்டோ_ஜியோ #JACTO_GEO #Workers_Strike
No comments:
Post a Comment