Mar 18, 2016

என்னுடைய இறுதி எழுத்து - கொற்றவை


வணக்கம் தோழர்களே,

இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் - அது என்னுடைய அறிவிற்கும் - சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை. ஆனால் விமர்சனம் என்பது வேறு அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய மனோபாவம் கொண்டவள் எனும் அவதூறு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஏனென்றால் இந்த முற்போக்கு மற்றும் மார்க்சிய தத்துவார்த்த அறிவு கிடைப்பதற்கு முன்னரே கூட சாதி என்றால் என்னவென்று தெரியாத ஒரு சூழலில்தான் நான் வளர்ந்தேன்.  ஆனால் இன்று, அதாவது நிர்மாலா என்ற பெண் கொற்றவையாக மாறிய பின்னர் – இந்த சமூகம் எத்தனை அநீதிகள் நிறைந்ததாக இருக்கிறது எனும் உண்மையை உணர்ந்த பின்னர் மனம் பொறுக்காமல் சமூக மாற்றத்திற்காகப் பங்களிக்க வேண்டும் எனும் உறுதிப்பாட்டோடு எழுதத் தொடங்கினேன். அதன் பின்னர் சில களப்பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

ஆனால் வன்மம் பிடித்த அடையாள அரசியலின் முன் எதுவும் பயனற்று போய்விட்டது.

இனி கொற்றவையாகிய நான் முகநூலில் மட்டுமின்றி. வேறு எந்தத் தளங்களிலும் எழுதப் போவதில்லை. செயல்படப் போவதில்லை.

என்னுடைய இந்த முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படும் என்பதை நான் அறிவேன். (அதற்கும் சேர்த்து) சொல்ல எதுவுமில்லை என்னிடம்... 

என் முடிவு தவறானது, உணர்ச்சிவயப்பட்ட முடிவு என்றெல்லாம் கருதி என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் ஏதும் பேசவோ, தொடர்புகொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ஆதரவாக இருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

வாழ்க போலி தலித் அடையாள அரசியல்!

சாதி… இது தாழ்த்தப்பட்டோரை மட்டும் ஒடுக்குவதில்லை.



25 comments:

  1. மிகுந்த வருத்தத்திற்க்கு உள்ளானேன். நான் தாழ்த்தப் பட்ட சமுகத்தை சேர்ந்தவன். இதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவிதமான பெருமையும் இல்லை! சிறுமையும் இல்லை! நீங்கள் உயர் சாதி பெண் என்று கூறிக் கொண்டதாகக் கூட. இருக்கட்டும்மே அதில் வருத்தப் படவும் மன. உளச்சல் கொள்ளவும் ஏதும் இல்லை! சிறு புன்னகையுடன் இதையும் கடந்து விடுங்கள். எதற்க்காகவும் நம்மைப் போன்ற எழுத்தாளர்கள் முடங்கிப் போகவே கூடாது! இது உங்கள் மீது பொறாமை கொண்ட. சிலர் வெற்றிப் பெற்ற உதவிவிடும். நீங்கள் செயல்படக் கூடாது என்பதற்க்காகத்தான் இப்படி ஒரு சிக்கலை உங்களுக்கு ஏற்ப் படுத்தி இருக்கிறார்கள்! அதை நேற்று முகநூலில் உங்களது நண்பர் பின்னூட்டத்தைப் பார்த்து உணர்ந்தேன். வேறு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை!

    ReplyDelete
  2. உங்கள் அன்பிற்கு நன்றி பாலா :)

    ReplyDelete
  3. இது தவறான முடிவு. தங்கள் வளர்ச்சியை பொறுக்க முடியாத வயித்தெரிச்சல் பிடித்த பிறருக்காக உங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வது ஏற்கத் தக்கதல்ல. தற்காலிகமாக என்றால் ஒப்புக் கொள்ளலாம். இவர்கள் மனித குலம் தோன்றியதில் இருந்தே புறம் பேசிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை எல்லாம் ஒரு பொருட்டா மதித்தால் அப்புறம் இயங்கவே முடியாது. முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. அவதூறுகள் இருந்து கொண்டு தான் இருக்கும் ...
    பெண் என்பவளை முடக்க அவதூறுகள் மட்டுமே இங்கே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் முனை மழுங்கிய ஆயுதம் ...
    அவற்றை ஒரு புறம் தள்ளி விட்டு மீண்டும் எழுதுங்கள்...

    ReplyDelete
  5. சாதி… இது தாழ்த்தப்பட்டோரை மட்டும் ஒடுக்குவதில்லை ... முற்றிலும் உண்மை ... ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்க வாய்ப்புக் கொடுத்து விட வேண்டாம் ... எழுத்தின் வழியே சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று சொல்லித் தெரியும் அளவில் நீங்கள் இல்லை ...மறுபரிசீலனை செய்யுங்கள்

    ReplyDelete
  6. உங்கள் முடிவை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். தலித் தலைவர்கள்,தலித்துகளை வைத்து வெறும் அரசியல் மட்டுமே செய்யும் போது, தலித் அல்லாத முற்போக்கு சிந்தனையாளர்கள் தலித்துகளுக்கு ஆதரவு குரல் கொடுப்பது மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
    வெறும் அவதூறுகளுக்கு பதில் சொல்ல முற்பட்டால் பொது வாழ்வில் இயங்க முடியாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  7. என்ன சொல்வதென்று தெரியவில்லை... பொதுத்தளங்களில் எழுதப்போவதில்லை என்பதையும் ஏற்க இயலவில்லை...

    ReplyDelete
  8. கொற்றவை...
    பெருமாள் முருகன் சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணம். இனி அது போல் இன்னொரு எழுத்தாளர் முடங்கிப் போய் விடக் கூடாதே என்ற ஆதங்கம்தான்... வேறொன்றுமில்லை. ஒரு சமூகம் ஒடுக்கப்படும் போது அதை எதிர்த்து எழும்பும் குரலும், கரமும் பெரும்பாலும் ஒடுக்கப்படும் சமூகத்திலிருந்து உயர்வதில்லை.அது எப்போதும் ஒடுக்கும் சமூகத்தின் மனசாட்சி கொண்ட சிறு பிரிவிலிருந்தே தொடங்குகிறது. அது தன் குரலுக்கும், கரத்துக்கும் துணையாக, இணையாக ஓராயிரம் குரல்களை, கரங்களை ஒடுக்கப்படும் சமூகத்திலிருந்தே பெறுகிறது... ஒடுக்கியே பழகிப் போன சமூகம் முதலில் இம்மூலக் குரலை நசுக்கி, கரத்தினை முறிப்பதே தன் இருப்புக்கான நிபந்தனையாகப் பார்க்கிறது. அதற்கான பல்வேறு சதிகளில் ஒன்றுதான் நீங்களே மறுதலித்து விட்ட உங்களின் சுயசாதியை உரித்துக் காட்டி உங்களையே எதிரியாக நிறுத்திய சதி. அதை மிக வெற்றிகரமாக செய்து முடித்து #இப்போது களித்திருக்கிறார்கள். இதில் உங்களின் வருத்தத்தை, விரக்தியை, கோபத்தை அறுவடையாக்கி மிச்சமுள்ள மனசாட்சிகளிலும் விதைத்திருக்கிறார்கள். இனியொரு குரல் புதிதாய் ஒலிக்காமலும், இனியொரு கரம் உயராமலும் இருந்திட இந்த விதைப்பின் அறுவடைக்காக அரிவாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். உங்களின் கோபக்கனல் எரிக்க வேண்டியது உங்களின் பேனாவையல்ல... அச்சதிகாரர்களின் விளை நிலத்தை...
    உங்களை உரமாக்க நினைக்கும் அந்த உன்மத்தர்களுக்கு சொல்லுங்கள்... உங்கள் நெஞ்சினில் உதைத்தவை பிஞ்சுகளின் கால்கள்தான் என்று... ஆயிரங்காலம் அழுகையைச் சுமந்த பிஞ்சுகளின் கால்கள்...வலியும், வேதனையும், அவமானமுமே வாழ்க்கையென சபிக்கப்பட்ட, சதிகளில் சிக்கிய சமூகத்தின் பிஞ்சுக் கால்கள்... வலியினில் துடிக்கையில் உதைப்பதும் இயல்புதானே... நிர்ப்பந்தம் ஏதுமில்லை. நிதானமாக யோசியுங்கள்... நல்ல முடிவெடுங்கள்..

    ReplyDelete
  9. சாதி எதிர்ப்பில் நான் ஈடுபட என்னை முதன் முதலில் தூண்டியது உயிர் எழுத்து இதழில் சாதி கூறித்து நீங்கள் எழுதிய ஒரு கட்டுரை... இன்று கூட என் நண்பர்களுடன் ஆணவ கொலைகளுக்கு எதிராக ஒரு கருத்தரஙகம் திருச்சியில் நடத்த திட்டமிட்டு பேசும்போது உங்களையும் எவிடென்ஸ் கதிர் அவர்களையும் தான் நான் முன்மொழிந்தேன்... தற்போதைய சூழலில் உங்களது இந்த முடிவு மிகவும் வேதனைக்குரியது... மீண்டெழுங்கள்...
    - Jasem Fathi

    ReplyDelete
  10. தோழர் சாதி என்பது ஒரு சமூக அடையாளம் அல்ல. அது பிறப்பின் அடிப்படையில் நம்மோடு வந்துவிட்ட ஒன்று. அதை செயல்வழியாக துறப்பதே சரியானது. ஒரு மார்க்சியரான நீங்கள் இத்தகைய அவதூறுகளின் பின்னிருப்பது ஒருவகை சாதியம் என்பதை புரிந்துகொள்வது எளிதே. அதனால் இதை நீங்கள் இத்துனை முக்கியத்துவம் தந்து உங்களுக்கு எதிரான கருத்தாளர்களுக்கு உரமிட்டுவிடாதீர்கள். நாம் எழுதுவது யாருக்காகவோ அவர்கள் உங்களை அப்படி பார்க்காதவரை அவர்களுக்காக எழுதுவதை ஏன் நிறுத்த வேண்டும். உங்கள் எழுத்தும் செயல்பாடும் தொடர்வதன்மூலம்தான் அதை சாதிக்க முடியம்.

    ReplyDelete
  11. இது ஒரு தவறான முடிவென்றே தெரிகிறது. சற்றே ஓய்வெடுங்கள், மீண்டு வாருங்கள் - தளரவேண்டாம்!!

    ReplyDelete
  12. ஏன் இப்படி? சமூக நம்மை எப்படி வேண்டுமானாலும் கட்டமைக்க முயலலாம். நாம் நாமாகவே இருந்துவிட்டால்... வானத்தைப்போல... யாரும் சாயம் அடிக்கமுடியாது.

    ReplyDelete
  13. நீங்கள் சொன்னது உங்கள் பிரச்சாரத்தில் தவறாக எடுத்தாளப்பட்டிருந்தால் அதை எளிதாகக் கடந்துபோங்கள். மார்க்சிய தளத்தில் தொடர்ந்து பணியாற்றுங்கள். ஒவ்வொரு எதிர்வினைக்கும் இப்படி கூட்டுக்குள் சுருண்டுகொள்ள முடியுமா? இடதுசாரிகள் அப்படிப்பட்டவர்கள் அல்லரே!

    ReplyDelete
  14. This tamilandu situation is very volatile for intellectuals always. But I felt it is a flawed campaign and created lot of issues. But again I know you for your stands. So pls take a break and comeback. I will pull you all leftists back for sure somehow ! Or I may sit on a dharna in my next Theni visit !

    ReplyDelete
  15. நான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம். களத்தில் இறங்கி வேலை பார்க்கலாம்தானே?

    ReplyDelete
  16. தோழர் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். அதிகாரத்தினால் ஒடுக்கப்பட்ட பட்ட மக்கள் அதிக எண்ணிகையில் இருக்கிறார்கள். அவர்களது நலன்களுக்காக நீங்கள் இயங்க வேண்டும் தோழர். விமர்சிப்பவர்கள்; அவதூறு செய்கிறவர்கள் குறைவான எண்ணிகையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது தோழர். அதிக எண்ணிகையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் தோழர். என்னக்குள் கம்யூனிஸ பெண்ணிய சிந்தனை ஏற்படுத்தியவர் நீங்கள். இந்த உரிமையில் கோரிக்கை வைக்கிறேன் தோழர்.

    ReplyDelete
  17. Dear comrade sorry i have no words to express or console you. please reconsider your decision.Above all the humiliations and sufferings in silence the country and society and our beloved people need women activist and thinker and writer like you to fight against this system during this period of drifting towards fascism .comradely sethu

    ReplyDelete
  18. "விமர்சனம் என்பது வேறு; அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய மனோபாவம் கொண்டவள் எனும் அவதூறு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது". இது வருத்தமடைய வைத்தாலும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு அவ்வருத்தம் அதிக நாள் நீடிக்காது. அதனை கடந்து செல்ல முடியும். ஒரு எழுத்தாளருக்குரிய மன வலிமையே அதுதான். ஒரு பெண் வளருவதை ஆண் சமூகம் விரும்புவதில்லை. அவரை மதம், சாதி, தொடர்பு ரீதியாக தாக்க முற்படும். அதனையும் தாண்டிச் செல்வதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. "இனிமேல் நான் எழுதமாட்டேன். பெருமாள் முருகன் செத்துவிட்டான்" என சொல்வதுபோல் இருக்க வேண்டாம். மாக்சிய தத்துவ அறிவு பலம் அவ்வளவுதான். எழுத்துதான் உங்கள் ஆயுதம். நீங்கள் எழுதுவதை விட்டுவிட்டால் நீங்கள் தோற்றுவிட்டதாக ஆகும். உங்கள் சமூகம் தோற்றதாக ஆகும். எழுத்தாளன் எந்தவொரு விமர்சனத்தையும் தாங்குபவராக இருக்க வேண்டும். தோல்வியை தாங்க முடியாதவர் தேர்தலில் நிற்கக்கூடாது. உங்கள் முன்பு வைக்கப்பட்டிருப்பது சாதிய குற்றச்சாட்டு. அது ஒரு தடைக்கல் அல்ல; மைல்கல். அதன்மீது நடந்து செல்லுங்கள் அல்லது அதனைக் கடந்து பயணியுங்கள். எப்படியாயினும் பொதுத்தளத்தில் உங்கள் நியாயமான கருத்துக்களை முன்வையுங்கள். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் எதிரிகளின் பொய்யான விமர்சனங்கள் வழியாக!

    ReplyDelete
  19. என்றேனும் ஒருநாள்
    நீங்கள் மனமாற்றம் அடைந்து மீண்டும் எழுதாலாம், அதுவரையில் காத்திருப்புகள் இருக்கும்.
    மார்க்சியம் அநீதிகளை சுட்டெரிக்கும் என்பதை அன்று மெய்பிக்கப்படும்.

    ReplyDelete
  20. அக்கறையும் நம்பிக்கையும் மிகுந்த உங்கள் அனைவரது ஆதரவுச் சொற்களுக்கும் நன்றி. இந்த ஒரு சம்பவத்தினால் மட்டும் உணர்ச்சிவயப்பட்டு எடுத்த முடிவல்ல இது. தொடர்ந்து, இன்னும் சொல்லப்போனால் நாள் ஒன்று முதல் எனக்கு எதிர்ப்புகளே அதிகமாக இருந்து வந்திருக்கிறது. அவை அனைத்தும் சக ‘...........’ அவர்களினாளும், அவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட ‘அப்பாவிகளாலும்’ நேர்ந்தவையே. அதிகாரத்திற்கு எதிராகப் போராடுவதும், குரல் கொடுப்பதும் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இப்படி ‘அடையாள அரசியல்’ செய்யும் இலக்கியவாதிகள் / பெண்ணியவாதிகள் / சில தீவிர இடதுசாரி ‘போராளிகளின்’ அவதூறுகளுக்கு எதிர்வினையாற்றுவதால் ஒருவித விரக்தியும்.. உண்மைக்கு இங்கு இவ்வளவுதான் மதிப்பா எனும் கோபமும் ஒன்று சேர வெடித்திருக்கிறது.

    இந்த மனநிலையை நான் பல முறை கடந்திருக்கிறேன்... ஆனால் சாதி முத்திரை குத்தி அவதூறு செய்தபோது நொருங்கிப் போனேன்.

    மார்க்சிய தத்துவத்தை முன் வைத்து மனோ திடம் குறித்த உங்களது கேள்விகள் என்னை உலுக்குகிறது. ஆனால் அதற்கு மேல் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.


    வரலாற்று வளர்ச்சியில் சூழலுக்கேற்ப பின்வாங்கலும் ஒரு போராட்ட முறைதான் (உத்திதான்) என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை... அடுத்தகட்டமாக வளர்ச்சிப் போக்கில் என்னவிதமான தயாரிப்புகளோடு வருகிறோம் என்பதற்கும் அது உதவலாம் :)

    மீண்டும் உங்கள் அனைவரது அன்பிற்கும், ஆதரவுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. You may need a short break... But these are all simple aberrations and u will be back soon. I am off on fb till may1 . So my wish... Take a break and comeback... Kotrvai. Our thinking is our work payback towards a society which is less aware of its threats. So we should not leave them for these ultras . Cheers and see u soon.

    ReplyDelete
  22. நிர்மலா கொற்றவை நல்ல முடிவு

    ReplyDelete