“நான் உயர்சாதி பெண்’ என சொன்னேனா?”: கொற்றவை மறுப்பு!
உடுமலை சாதிய ஆணவக் கொலையையொட்டி சில பெண்ணியவாதிகள் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள், இணைய இதழ் ஒன்றிடம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலையை கண்டிக்கிறேன்” என்று குட்டி ரேவதியும், “நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலைகள் என்னை பெருமையடையச் செய்யாது” என்று நிர்மலா கொற்றவையும், “நான் சீர்திருத்த மரபினள். நான் ஆணவக்கொலைகளை எதிர்க்கிறேன்” என்று சுமதி தங்கப்பாண்டியனும், “நான் ஆதிக்க சாதி. ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்” என்று ஜோதிமணியும், இதுபோல் வேறு சில பெண்களும் கருத்துக் கூறியதாக அந்த இணைய இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பான காணொலி:- (காணொலியை நீக்கி விட்டேன்)
ஆனால், உண்மையில் இவர்கள் யாரும் தங்களை “உயர்சாதிப் பெண்” என்றோ, “ஆதிக்கசாதிப் பெண்” என்றோ கூறவே இல்லையாம். இது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் கொற்றவை. அவரது விளக்கம்:-
“Ippodhu.com எனும் தளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு பிரச்சாரம் நடத்தவிருப்பதாகவும், அதில் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளலாமா என்றும் பீர் முகமது அவர்கள் காலையில் இன்பாக்சில் ஒரு செய்தி வைத்தார்.
எப்போதும் எல்லாவிதமான வன்முறைக்கும், மனித உரிமைப் பிரச்சினைகளுக்கும், அதிகாரத்திற்கும் எதிரான பிரச்சாரங்களுக்கும் கேட்பவரோடு இருக்கும் அறிமுகத்தை வைத்து இதுபோன்ற முயற்சிகளில் எங்களுடைய பெயரை சேர்த்துக்கொள்ளச் சொல்வது வழக்கம்.
அந்த அடிப்படையில் பீர் முகமது அவர்கள் வைத்த தகவலில் உள்ள செய்தியை மட்டுமே, அதாவது சாதி ஆணவக் கொலையை எதிர்க்கிறோம் எனும் கருத்தை வலியுறுத்தும் எனும் நோக்கத்தில்தான் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளவும் என்று சொல்லி இருந்தேன். அதிலும் கூட, இது வழக்கமாக தயாரிக்கப்படும் ஒரு கடிதமாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ இருக்கும் என்றே எண்ணினேன்.
இந்த உரையாடல்கள் நான் அலுவலகப் பணியில் இருக்கும்பொழுது நடைபெற்றது. கேட்பவர் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே பெயரைக் கொடுத்ததற்கான காரணம்.
இந்தப் பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்படும், என்ன வகையில் மேற்கொள்ளப்படும் என்று எதையுமே கேட்டறியவில்லை.
மாலை வசுமித்ர தொடர்பு கொண்டு “நான் உயர் சாதிப் பெண்” என்று நீ சொல்லி இருக்கிறாயா என்று கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகே அந்த தளத்தை சென்று பார்த்தேன். இடையில் நந்தினி வெள்ளைச்சாமி என்பவர் என் பெயரை டேக் செய்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அப்போதுதான் எனக்கு இந்தப் பிரச்சாரத்தின் ‘ஊடகத் தன்மை’ புரிந்தது.
அதன் வெளிப்பாட்டு தன்மை குறித்த விவாதத்தில் நானும் வசுவும் ஈடுபட்டிருந்தபோது இப்பிரச்சாரத்தில் உள்ள ‘Tonality’ & ‘Message’ எத்தனை ஆபத்தானது என்றும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்கிறது என்பதையும் உணர நேர்ந்தது. உடனே பீர் முகமதுக்கு தகவலும் வைத்தேன். ஆனால் அவர்கள் தங்கள் நோக்கத்தை விளக்குவதற்குள் Damage is already Done என்பதுபோல் எம் நோக்கத்திற்கே களங்கம் கற்பிப்பதாக சென்றுகொண்டிருக்கிறது.
ஆகவே, இந்தப் பிரச்சாரத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். என்னுடைய புகைப்படத்தையும், நான் சொல்வதாக அவர்கள் சொல்லியிருக்கும் செய்தியையும் நீக்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நல்ல நோக்கத்திற்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்போது, பெயர் சேர்த்துக்கொள்ளலாமா என்று எவரேனும் கேட்டால் அதில் கேள்விகள் கேட்பது அகந்தை நிறைந்த செயலாக இருக்குமோ என்றெண்ணி நபரைப் பொறுத்து ஒப்புதல் அளித்துவிடுவதுண்டு. அது மாபெரும் தவறு என்பதை இந்த பிரச்சினை உணர்த்தியிருக்கிறது.
சாதியை அல்லது இன்னபிற அடையாளங்களைச் சொல்லி வன்முறையை கண்டிப்பதன் மூலம் ஒருவரின் கவனத்தை ஈர்த்து விட முடியும் எனும் இந்த அணுகுமுறை தவறானது. அதற்கு நான் துணை நிற்க விரும்பவில்லை. முழுமையாக கேட்டறியாமல் பெயர் கொடுத்தமைக்கு வருந்துகிறேன்.
அதே சமயம் பீர்முகம்மது மற்றும் நந்தினி அவர்களின் செயல்பாடுகள் எப்போதும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவே இருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். அவர்களும் இந்த பிரச்சாரம் குறித்த பல்வேறு கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கொற்றவை கூறியுள்ளார்.
சுமதி தங்கப்பாண்டியன் விளக்கம்: “ஆணவக் கொலைக்கு கண்டனங்கள் என்று மட்டுமே இருக்க வேண்டும் என நான் மிகத் தெளிவாக இதற்காக என்னைத் தொடர்பு கொண்ட Peer Mohamedஇடம் கூறினேன். அந்த முதல் வாக்கியத்தில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.”
சம்பந்தப்பட்ட மற்ற பெண்களின் விளக்கமும் இதுவாகத் தான் இருக்கும் என்பதால், இவர்களின் விளக்கத்தை ஏற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அறிவுடைமை.
ஊடகவியலாளன் என்ற முறையில் நாம் “பீர் முகமது’களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், முற்போக்காளர்கள் மீது “சாதிப்பெருமிதம்” என்ற கேவலமான ஸ்டிக்கரை நீங்களாக ஒட்டி தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். மிகுந்த பொறுப்புணர்வுடன் பணியாற்றுங்கள்.
Source: http://heronewsonline.com/kotravai-denial/
வருத்தப்பட ஒன்றும் இல்லை. சமத்துவத்துக்காக தொடந்து போராடுங்கள்.
ReplyDelete