Oct 1, 2012

பெண்ணியம் என்பது சிறப்பதற்கோ, பறப்பதற்கோ அல்ல...

எதிர்வினை.


29-9.2012 அன்று தினமணியில் பெண்ணியம் சிறக்க எனும் தலைப்பில் க.சி. அகமுடைநம்பி என்பவர் எழுதிய ஒரு பத்தி வெளிவந்துள்ளது. http://dinamani.com/editorial_articles/article1278627.ece (அல்லது காண்க பின்னிணைப்பு).

பெண்ணியச் சிந்தனைக்கு எதிர்வினை எழுதும் அகமுடைநம்பி தன் பெயரோடு வள்ளுவரையும், பாரதியாரையும் இணைத்துக்கொள்ளும் ஒரு வார்ப்புருவை (template) கைவிடுவதாக இல்லை. திருவள்ளுவரும் பாரதியும் சொல்லா விட்டால் கூட பெண் விடுதலையை முன்வைப்பதாய் இருந்தால் அகமுடைநம்பியின் பரிந்துரைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு சிபாரிசுகள் தேவை இல்லை.  பெண்ணிய எதிர்ப்பு என்பதில் வழக்கமாக நம்பி அவர்கள் எடுத்தாளும் ஒரே விசயம் கற்பு நெறி. அது குறித்த ஆதாரமாக திருவள்ளுவர், பாரதியின் விளக்கம். அதன் மூலம் அவர் எடுத்துரைப்பது இருபாலாருக்கும் அவர்கள் கற்பு பேசினார்கள், ஆனால் அவர்களை இந்தப் பெண்ணியவாதிகள் மறுத்தலிக்கின்றனர். பெண்ணியவாதிகள் ஒழுக்கச் சிதைவை ஊக்குவிக்கிறார்கள். இதேயளவிலான ஆணாதிக்கப் பதிவுகளையே எப்போதும் முன்வைக்கிறார். இவருக்கு எதிர்வினையாற்றுவது சற்று அலுப்பூட்டுவதாய் இருந்தாலும், தினமணி எனும் ஒரு வெகுஜன ஊடகத்தில் அவர் இத்தகையப் பதிவை சற்றும் கூச்சமில்லாது வைத்திருப்பதால் எதிர்வினை அவசியமாகிறது. 

திருவள்ளுவரையும், பாரதியையும் தவிர்த்து நம்பி அவர்கள் வேறெவரையும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். (இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டினால் கற்புள்ள மனைவி பெய் என்றால் பெய்யும் மழை என்று வள்ளுவர் கூறியுள்ளார், இப்போது மழை பொழிவது குறைந்திருப்பதற்கு காரணம் மனைவிகள் யாரும் கற்பு ஒழுக்கத்தை கடைபிப்பதில்லை என்றும் எழுதுவார்). ஔவையாரும் இருபாலாருக்கும் கற்பு பேசியிருக்கிறார். முற்போக்கு கொள்கைகளை பிரச்சாரம் செய்த பெரியாரும் கூட அதையேத்தான் சொல்கிறார். அம்பேத்கரும், ’குடும்ப வாழ்வு என்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக பெண்கள் தமது உடலால் சுரண்டப்படுதலிருந்து தம்மை விடுவிப்பதே சரி என்றும், பாலியல் ரீதியாக ஆண்கள் தம்மைப் பயன்படுத்த அனுமதிப்பது பெண் சுதந்திரத்தின் பாற்பட்டது அன்று. மாறாக, அது ஒரு வகையான ஏமாறுதல் மட்டுமல்ல, தனி மனித ஒழுக்கத்திற்கும், சமூக நலனுக்கும் எதிரானதாகும்; என்று கூறியிருக்கிறார்.  இன்றைக்கு இருக்கும் ஒவ்வொரு பெண்களும் (மனைவிகள், குடும்பப் பெண்கள், பருவம் எய்திய உடன் சிறுமிகள்)  இதையேதான் பேசுகிறார்கள். இதில் அவர்கள் இருவரின் வரிகளுக்கு மட்டும் அத்தனை விசேசம் என்ன இருக்கிறது.

பெண்ணியம் என்றாலே கற்பு நெறி தவறுவதுதான், அது உடலின்ப சுதந்திரத்தை மட்டுமே பேசுகிறது என்று கூறுவதை அறியாமை என்று சொல்வதா இல்லை ஆணாதிக்கத் தடித்தனமென்று சொல்வதாப் புரியவில்லை.  ஒரு வாதத்திற்கு பெண்ணியவாதிகள் பெண்கள் கற்பொழுக்கம் பற்றியக் கேள்விகளை எழுப்புவதால் ஒழுக்கச் சிதைவு ஏற்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். எவரின் பேச்சுக்களாலும் பாடங்களாலும் ஆண்கள் இரண்டு வயது சிறுமி என்று கூட பாராமல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அதோடு கொலையும் செய்கிறார்கள். எவரின் பாடங்களால் மனைவிமார்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்.

காதல் என்ற சொல்லைப் பயன்படுத்தி, பெண்ணை உடமையாக்க முனைவது, அதற்கு இணங்க மறுக்கும் பெண்களின் முகத்தில் திராவகம் வீசுவது, திருமணத்தின் பெயரால் தன் வீட்டுக்கு ஒரு நிரந்தர தொழிலாளியைக் கொண்டுவரும் நிலையில் கூட வரதட்சனை கேட்டு, அதை கொடுக்க முடியாமல் போகும் நிலையில் மண்ணெண்னை ஊற்றி எரிப்பது, கொலை செய்வது போன்ற செயல்களை எவரின் எழுத்துக்களைப் படித்துப் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் என் அமைப்பின் கவனத்திற்கு வந்த செய்தி: தூத்துக்குடியில் இரு நபர்கள் - தாய், மகள் இருவரையும் நிர்வாணப்படுத்தி மிளகாய்த்தூள், சுண்ணாம்பு, கல் இவற்றால் செய்த கலவைகளை அவர்களது பிறப்புறுப்பில் திணித்து, அடித்து துன்புறுத்தியோடு சம்பந்தப்பட்டப் பெண்ணின் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு தப்பியும் ஓடிவிட்டனர். சம்பந்தப்பட்ட அந்த நபர்கள் வேறு யாரும் இல்லை அந்த தாயின் சொந்த தம்பிகள். தம்பிகளில் ஒருவன் அந்த தாயின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார் (அக்காள் மகள்). அவளின் அழகு இவருக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே அவளுக்கு பல்வேறு கொடுமைகளை செய்ததோடு நில்லாமல், உச்சபட்சமாக தன் அண்ணனின் பேச்சைக் கேட்டு மேற்சொன்ன கொடுமையை செய்திருக்கிறார். அதோடு, தனது அக்காளையும் வரச்சொல்லி அவருக்கும் இதேக் கொடுமையை செய்திருக்கிறார். இப்போது அந்தப் பெண் மிக மோசமான காயங்களோடு தூத்துக்குடி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலத்த காயங்கள் என்பதால் அருகில் இருந்து உதவி செய்ய எவருமற்ற நிலையில், அவரது தாயார் (அவரும் பாதிக்கப்பட்டவர்) தனது பாதிப்புக்கு வெளி நோயாளியாக மருத்துவம் செய்து கொண்டு, தனது மகளை கவனித்து வருகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையை செய்த அந்த சகோதரர்களைக் காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை. பிள்ளைகளையும் மீட்டுத் தரவில்லை. இந்தக் கொடுமைகளுக்கும் பெண்ணியவாதிகளின் எழுத்தும், பேச்சும் தான் காரணமா. இது போன்ற போராட்டங்களை எடுத்து நடத்தும் பெண்கள் பெண்ணியவாதிகள் இல்லையா.

பெண்ணானவள் பொதுவெளியிலும், குடும்பத்தாராலும் சிதைவுக்குள்ளாகும் இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக  அகமுடை நம்பி எத்தனை பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் நான் கண்டவரை சம்பந்தப்பட்ட பெண்கள் பிரச்சினையில் பாலியல் என்று வந்துவிட்டால் அவருக்கு வள்ளுவர், மற்றும் பாரதியார் சொன்ன இருபாலார் கற்பு, குடும்ப அமைப்பு இவைகள் ஞாபகத்தில் வந்துவிடுகிறது. குடும்ப அமைப்பில் உள்ள குறைபாடுகள், அதில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளுவதோடு, அதைக் களைவதற்கான கோட்பாடுகள் பற்றி எந்தப் புரிதலும் இன்றி பெண்ணியம் என்ற சொல்லைப் படித்தவுடனேயே அல்லது பெண்கள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள் என்ற செய்தியைப் படித்தவுடனேயே அகமுடைநம்பியின் எதிர்வினை வந்துவிடும்.

பெண்ணியம் பேசுபவர்கள் எந்நேரமும் உடலின்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில்லை. கற்பு என்ற கோட்பாட்டின் கருத்தாக்கத்தை, அதன் ஆணாதிக்கச் சார்பை, கற்பின் பெயரால் எதற்காக பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், அதன் பின்னால் இருக்கும் சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகள் என்ன என்பதை, ஒரு கோட்பாட்டுப் பின்னணியுடன் திறனாய்வு செய்து பேசுகிறார்கள். வள்ளுவரையும், பாரதியையும் மட்டுமே படித்து விட்டுப் பேசுவதில்லை. மேலும் கற்பு என்பதன் பொருளை நம்பி அவர்களுக்கு ஒவ்வொருமுறையும் தெளிவுபடுத்த  வேண்டியுள்ளது. கற்பு என்றால் கல் அல்லது கற்ப்பது என்று பொருள். கற்பை நிராகரிப்பதென்பது இதுவரை கற்றவற்றை தவறென்றால் நிராகரிப்பது, அதாவது கற்றவை அனைத்தும் ஒரு சாராரின் நலனை மட்டுமே பேசுகிறது என்பதை அறிந்தவுடன் அதை நிராகரிப்பது என்று பொருள்.

அடுத்து, அவர் உஷா ராணி எனும் பெண் தற்காப்பிற்காக தாக்கியதில் இறப்பு நேரிட்ட ஒரு சம்பவம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இத்தகையக் கேள்விகளை எழுப்புவது சட்டப்படி தவறு.

கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறதா என்று கேட்கிறார். இக்கேள்வி இவரது ஆணாதிக்க மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வன்புணர்ச்சி செய்யும் நபர்கள் தங்கள் செயலுக்கு பார்வையாளர்களை ஒருங்கிணைத்துக் கொண்டா செய்வார்கள். அப்படி நடந்தால் அது கூட்டு வன்கலவி. என்ன ஒரு வக்கிரத்தனமானக் கேள்வி இது? இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் பெண்ணின் தந்தை. குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைகளுக்கு சாட்சிகளை வைத்துக் கொள்வது எப்படி என்று அவரே விளக்கலாம், குறிப்பாக ஆண் உறவினர்கள் செய்யும் பாலியல் அத்துமீறல்களை எந்த சாட்சியை வைத்துக் கொண்டு விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தலாம்.  ( இங்கு இரண்டு வயது சிறுமிக்கு பாலுறுப்புகள் பற்றிய புரிதலே இருக்காதே...அக்குழந்தை வன்புணர்ச்சிக்கு ஆளானால் விசாரணைக்குச் சாட்சியாக எவற்றை முன்வைப்பது. )

காவல்துறை கண்காணிப்பாளர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார், மகளின் சாட்சியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவரது கேள்வியும் அதோடு அதற்கான தீர்ப்புமாய் நீள்கிறது. இதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம், சட்டப்படி இவர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் சொல்லலாம். இருந்தாலும் அவரது தெளிவிற்காக, இவ்வழக்கு தொடர்பாக ஜோதிபாசுவின் தந்தை சமயமுத்து, முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் சகாயத்திடம் அளித்த மனுவைத் தொடர்ந்து திரு. சகாயம் அவர்களின் அறிக்கை பற்றிய நீதிமன்றக் கருத்தை நாளிதழில் தேடிப்படித்தால் நம்பி அவர்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும். அதில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரனை பற்றி விவரித்துள்ளனர்.

பெண்ணியவாதிகள் பெண்மை போற்றி நடப்பதே சமுதாயம் சிறக்க வழி, பெண்ணியம் சிறக்க வழி என்று வள்ளுவரோடு பாரதியோடு தனது பெயரையும் சேர்த்து அவரது பதிவை நீதியுரையோடு முடித்திருக்கிறார்.

பெண்மை என்றால் என்ன?

அது எந்த உயிரியல், வேதியலின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது? எந்தத் தரவுகளை வைத்து இவர் பெண்மை என்ற ஒன்றை மதிப்பிடுகிறார்? ஆண், பெண் என்பது பாலியல் அடையாளம் (sex). ஆண்மை, பெண்மை என்பது பாலினம் (gender).  பால் அடையாளத்திற்கும், பாலினத் தன்மைக்கும் உயிரியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒரு கருத்தாக்கம். எண்ணற்ற சமூகக் காரணங்களால் ஆண் தலைமையிலான தந்தைவழிக்  சமூக (patriarchal society) அமைப்பு உருவானது. அது  ஆண், பெண் இருவருக்குமான வேலைப் பிரிவினைகளைக் கொண்டு வந்தது. இங்கு தனிச்சொத்துடைமையை தற்காத்துக் கொள்ள ஒரு தாரமணம் தோன்றியது. இந்த ஒருதாரமணத்தை நிறுவ பெண்களுக்கு கற்பொழுக்கம் என்கிற கருத்தாக்கம் முளைத்தது. அதே சொத்துடைமைக் காரணிகளுக்காகவே ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு சதி என்னும் சடங்கையும்,  விதவைத் திருமண எதிர்ப்பையும் கொண்டுவந்தது.

இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஆண், பெண் சமத்துவத்திற்காக களத்திலும் எழுத்திலும் போராடுபவர்கள் பெண்ணியவாதிகள். உடலின்ப சுதந்திரத்தைப் பேசுவது மட்டுமே பெண்ணியம் அல்ல. அது, பொருளாதார தளத்தில் இன்று புதிதாக முன்னேறி வரும் ஒரு கூட்டத்தினரின் பரப்புரையே அன்றி, அதற்கும் பெண்ணியத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எல்லாத் தளங்களிலும் இருப்பது போல் பெண்ணிய தளத்திலும் இது போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் ஊடுருவியுள்ளது. அதற்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவிப்பவர்கள் பெண்களே. இவை எதையுமே ஆராயாமல், எப்பொழுது பார்த்தாலும் பெண்ணியவாதிகளால் சமூகம் சீர்கெடுகிறது என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே அதுவும் கற்பின் பெயரால் முன்வைக்கும் அறிவுடை நம்பிக்கு எனது கேள்விகள் சில..

வண்புணர்ச்சிகளை செய்வது ஆண்களா பெண்களா....
குடும்ப வன்முறைக்கு உள்ளாவது ஆண்களா பெண்களா.....
போபர்ஸ் ஊழல் தொடங்கி இன்றைய நிலக்கரி ஊழல் வரை செய்வது யார் பெண்ணியவாதிகளா.......
கனிம வளங்களுக்காக பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கும் செயல்கள், அந்நிய முதலீட்டிற்காக சொந்த மண்ணை தாரைவார்க்கும் கொடுமைகளை எல்லாம் செய்வது யார்... பெண்ணியவாதிகளா?  

பெண்ணியம் பேசுவது சிறக்கவோ, பறக்கவோ அல்ல...... எல்லோரையும் மனிதர்களாய் உணர்த்த, சமத்துவத்தோடு வாழ.

-      கொற்றவை

பெண்ணியம் சிறக்க...
By க.சி. அகமுடைநம்பி
First Published : 29 September 2012 05:34 AM IST

பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்று வியந்து பாராட்டுகிறார் வள்ளுவர். இந்தப் பெருந்தன்மை ஒரு பெண்ணுக்கு எப்போது கைவரும்? கற்பு என்னும் உறுதிநிலை அவளுக்கு அமையப்பெற்றால் என்கிறார் அவர். இதனாலேயே வள்ளுவரைப் பெண்களின் எதிரியாகப் பெண்ணியவாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பெண்ணுக்கு வற்புறுத்தப்படுகின்ற இந்தக் கற்பை ஆண்களுக்கும் வலியுறுத்துகிறது குறள். தன் கணவனுடன் மனம் ஒன்றி வாழுகின்ற ஒருமை மகளிர்போலத் தன் வாழ்க்கைத் துணைவியுடன் கூடிய இல்லற நெறியில் பிறழாது தன்னை இருத்திக்கொள்கின்ற ஆண் மகனுக்குப் பெருமையும் உளதாகும் என்று குறள் (974) பேசுகிறது.
பெண்ணின் கற்பு அகநிலை என்றால் ஆண் கற்பு புறநிலை என்று சொல்லலாம். பெண் கற்பு குடும்பத்துக்குப் பெருமையையும் இல்வாழ்க்கைக்கு ஏற்றத்தையும் அளிக்கும் என்றால் ஆண் கற்பு குடிமைக்குப் பெருமையையும் அவனுக்குத்தன்மான உணர்வையும் பிறர் பின்பற்றத்தக்க சால்பையும் பெற்றுத்தருவதாகும்.

கற்பொழுக்கத்துடன் வாழவேண்டும் என்று பெண்களை அறிவுறுத்துவது பெண் உரிமைக்கு மாறானது, பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஆண்களால் திணிக்கப்பட்டது என்று பெண்ணிய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். பெண்களிடையே இவர்கள் ஒழுக்கச் சிதைவை ஊக்குவிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

""கற்புநிலை என்று சொல்லவந்தார் - இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்'' என்று முழங்கிய பாரதிகூட குடும்ப வாழ்க்கையையும் ஆண் பெண் கற்பு நிலையையும் பெரிதும் போற்றியே பேசினார், எழுதினார்.

மேலை நாடுகளில் நிலவுகின்ற கட்டுப்பாடற்ற பாலியல் உறவைப் பாரதி கடுமையாகக் கண்டித்தார் என்பதைப் பெண்ணியவாதிகள் கண்டுகொள்வதில்லை.

கிரிக்கெட் மட்டையால் அடித்துத் தன்னுடைய கணவர் ஜோதிபாசுவைத் தானே கொன்றதாகவும் தன் மகளைக் கணவர் பாலியல் இச்சையுடன் அணுகியதால் அவரைக் கொல்ல நேர்ந்ததாகவும் மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் உஷாராணி என்பவர் தெரிவித்தார். அதை அப்படியே ஏற்ற கண்காணிப்பாளர் அந்தப் பெண்ணை கொலைக்குற்றத்துக்கு உள்படுத்தாமல் விடுதலை கொடுத்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

ஜோதிபாசுவின் தந்தை இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்ததுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதை ஆய்வு செய்த ஆட்சியர் மாநில அரசுக்கு அறிக்கை அளித்தார். உஷாராணியை விடுதலை செய்யும் அதிகாரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு இல்லை. அவர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஜோதிபாசுவின் மரணம் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதால் மட்டும் நிகழ்ந்திராது. உஷாராணி அவரது உயிர் உறுப்பை அழுத்திக் கொன்றிருக்கிறார். இது ஒரு தற்காப்பு வினையாகத் தெரியவில்லை என்பதே மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் சுருக்கம்.
ஜோதிபாசு தவறு செய்ய முனைந்ததையோ அதைத் தடுப்பதற்காக உஷாராணி கிரிக்கெட் மட்டையைக் கொண்டு தாக்கியதையோ நேரில் பார்த்த சாட்சி உண்டா?
மகள்தான் சாட்சி என்றால் அதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாமா?

காவல்துறைக் கண்காணிப்பாளர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செயல்பட்டால் அதைத் தெரிந்துகொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் எதுவும் செய்யாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது, கூடாது.

பெண்களின் மேம்பாடுதான் தம் குறிக்கோள் என்றால் பெண்ணியவாதிகள் பெண்மை போற்றிச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் பெண்ணியம் சிறக்கும்; சமுதாயம் மேம்படும்.

(எனது எதிர்வினையை தினமணி ஆசிரியருக்கும் அனுப்பி வைத்தேன் ஆனால்........தெரியவில்லை............)

No comments:

Post a Comment