Oct 17, 2012

மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,

வணக்கம்.

தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக  நீங்கள் உங்கள் குரலை ஒலித்து வருகிறீர்கள். அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், முதலாளிகள், கிரிமினல்கள், பெண்டாளர்கள், ஊழல்வாதிகள் ஆகியோரின் முகத்திரைகளைக் கிழித்து உண்மையை ‘வெளிச்சம்’ போட்டு காட்டும் உங்களது சேவை அளப்பறியது.  நான்காம் தூணாக உங்கள் எழுதுகோல்கள் செயல்படுவதால் இந்தச் சமூகம் அடைந்திருக்கும் பயனை விவரிப்பதற்கு என்னிடம் எந்தச் சொற்களும் இல்லை.

கூடங்குளம் போராட்டத்தில் ஏவப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை குறித்த உங்கள் இதழின் அட்டைப்படம் நீங்கள் அம்மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது. அதேபோல் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த தண்டனை, ஜெ கொடுக்கும் மிரட்டல், காங்கிரசின் கடைசி அஸ்திரம் என்று அதிகார வர்க்கத்தின் இருண்ட பக்கங்களை புலனாய்ந்து மக்களுக்கு அறிவூட்ட நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி ஈடு இணையற்ற சேவை.  ஆனால் உங்களின் இந்த சேவை முகம் ஏன் பெரும்பாலும் ஆண் முகமாக இருக்கிறது என்பதே எனது கேள்வியாய் இருக்கிறது.

கண்ணீர் மல்க வைக்கும் அட்டைப்படம், அநீதியைக் கண்டு கொதித்தெழும் அட்டைப்படம், நியாயத்திற்காக குரல் கொடுக்கும் அட்டைப்படம் இவைகளுக்கு நடுவே உங்களுக்கு பெண் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் நடுப்பக்கம் ஏன் தேவைப்படுகிறது. அச்சு வார்த்தது போல் எல்லா புலனாய்வு அரசியல் பத்திரிகைகளும் நடுப்பக்கங்களை ஒரே மாதிரி வடிவமைக்கிறீர்கள். ‘போர்னோ’ படங்களைப் போடுவதற்கான தேவை எங்கிருக்கிறதென்று உங்களால் விளக்கமுடியுமா. அதனால் பத்திரிக்கை பிரதிகள் அதிகம் விற்கிறது என்கிற காரணமாக இருக்கிறது என்பதாக இருந்தால், ஆளும் வர்க்கமும் முதலாளி வர்க்கமும் அதே பணத்திற்காகத்தானே மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இதில் நீங்கள் எங்கிருந்து வேறுபடுகிறீர்கள்.

அந்த போர்னோ புகைப்படங்களை அச்சில் கோர்க்கும் எந்த ஒரு பொழுதிலும் உங்கள் குடும்பப் பெண்களின் முகங்கள் உங்கள் கண் முன் வந்தது இல்லையா. ஒரு பொழுது கூட உங்களின் மனசாட்சி உங்களை நோக்கி எந்த குரலையும் எழுப்பியதில்லையா இதை ஆணாதிக்கம் என்று சொல்வதா இல்லை பாலியல் சுரண்டல் என்று சொல்வதா. இல்லை பெண் உடலை முதலீட்டாக்கி பிழைக்கும் வாழ்க்கை என்று சொல்வதா.  இந்த கீழ்த்தரமான உடல் சுரண்டலுக்கு என்ன பேர்வைக்க முடியும்.

உங்கள் வீட்டுப் பெண்கள் நீங்கள் நடத்தும் இதழ்களைப் படிப்பதுண்டா? அவர்கள் அந்த நடுப்பக்கத்தைக் கண்டு என்ன சொல்வார்கள். குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகள் அந்த புகைப்படங்களைப் பற்றி என்ன சொல்வார்கள். இது காலத்தின் தேவை என நீங்கள் கருதும் பட்சத்தில் அவர்களும் அது போன்ற உடைகளை அணிந்து உடலை வெளிக்காட்டும் சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குவீர்களா.

நடிகைகளின் பாலியல் உறவுகள் குறித்த, அயல் உறவுகள் குறித்த  ‘ஒழுக்கவாத’ தீர்ப்புகளை எழுதுகையில் உங்கள் விரல்கள் உங்களை நோக்கி எதையும் சுட்டுவதில்லையா?

தொழிலுக்காக உங்களுக்கு நீங்களே தளர்வு விதிகளை வகுத்துக் கொள்வீர்களானால் ஏன் நடிகைகள், கணவன், மனைவிகள், அல்லது ஆண் பெண் ஆகியோர் தங்களது விருப்பங்களுக்காக பாலியல் சுதந்திரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அடுத்தவர் அந்தரங்கங்களை நோக்கி வெளிச்சம் பாய்ச்ச  படுக்கையறைக்குள் நுழையும் உங்களது அதிநவீன கேமாரக்கள், உங்கள் இல்லத்தை நோக்கி வெளிச்சத்தை உமிழ்ந்தால் கொந்தளிக்கமாட்டீர்களா.

நான் உங்களின் மூலம்  நாட்டு நடப்புக்களை அறிந்து வருகிறேன். அதே சமயம் அதை வெளிப்படுத்தும் உங்கள் நோக்கங்கள் குறித்து எனக்கு உங்களிடமிருந்து சில விளக்கங்கள் வேண்டும். உங்கள் பத்திரிக்கையின் வாசகியாகவே இதை முன் வைக்கிறேன்.

1. உங்களின் சமூக அக்கறை எவருக்கானது, அந்த சமூகத்தில் பெண்களுக்கு இடம் உண்டா.

2.  தாய்க்குலம், மங்கலப் பெண், இல்லத்தரசி, புனிதவதி என்றெல்லாம் பெண்களுக்கான மதிப்பீடுகளை முன்வைத்து தீர்ப்பெழுதும் நீங்கள் எந்த மனநிலையின் அடிப்படையிலிருந்து நடுப்பக்கங்களை திட்டமிடுகிறீர்கள்.

3.  தமிழினம், தமிழர், தன்மானத் தமிழர், வீரத் தமிழர் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க எழுதும் நீங்கள் அதே தமிழினச் சகோதரர்களின் கண்களுக்கு, நுகர்வுக்கு என்ன காரணங்களுக்காக நடிகைகளின் ஆபாசமானப் புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்.

4.  உங்கள் எழுத்தின் மீது, உங்கள் இதழின் மீது நம்பிக்கை இல்லாத காரணங்களால்தான் இந்த அற்ப பிழைப்புவாதம் என்று நான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமா.

5.  உங்களின் அலுவலகங்களில் பெண் பணியாளர்கள் உள்ளனரா.  அவர்களின் உடலை நீங்கள் எவ்வாறு காண்பீர்கள்.

6.  நடிகைகளின் உடல் வெளிக்காட்டும் புகைப்படங்களைப் போடுவதின் மூலம் நீங்கள் அடைய விரும்பும் சமூக மாற்றம் என்ன?


 கடவுளின் பெயரால், ஆன்மீகம் வளர்க்க, பக்தி ஒழுக உங்களது மற்ற இதழ்களில் எழுதுகிறீர்கள் அதே கையோடு நீங்கள் பெண் உடல்களை ஆபாசமாக அச்சுகோர்த்து, கிசு கிசுக்களையும் எழுதுகிறீர்கள். உங்களின் பன்முகத் தன்மை எனக்கு வியப்பளிப்பதோடு வருத்தத்தையும் அளிக்கிறது. கடவுள் மறுப்பாளர்கள், இடதுசாரிகள் தங்களின் கைக்காசுகளைப் போட்டு ‘அரசியல்’ இதழ்களை வெளியிடுகிறார்கள். கைக்காசுகளை இழக்கும் நிலையில் கூட அவர்கள் ஒரு பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிடுவதில்லை, இது ஏன்.

உங்கள் இதழ்கள் அரசியல் வார இதழ் என்று சொல்லப்படுகிறது. அரசியல் வார இதழில் ஆபாசப் பெண் புகைப்படத்தின் அவசியம் என்ன இருக்கப்போகிறது.  அப்படி வெளியிடுவதுதான் இந்த சமூகம் பற்றிய உங்களது மதிப்பீடா என்ன.

அரசியல் என்றால் அது ஆணின் களம் என்று தானே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள், ஆகவே உங்கள் இதழ்களுக்கான இலக்கு ஆண்கள். பெண்கள் உங்கள் இதழ்களைப் படிப்பதில்லை என்பதில் தான் எத்தனை உறுதியாக இருக்கிறீர்கள். ஆண் வாசிப்பாளர்களுக்கு அரசியல் ஆர்வம் ஊட்ட நீங்கள் இப்புகைப்படங்கள் மூலமாக  ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்.  . 

குற்றம் செய்பவரைக் காட்டிலும் குற்றம் செய்யத் தூண்டுகோலாய் இருந்தவர்களே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல நீங்கள். 

1.   நடிகைகளின் உடலை வெளிக்காட்டும் புகைப்படங்களைப் போடுவதின் மூலம் ஆண்களின் மனதில் தூண்டப் பெறும் பாலியல் உணர்ச்சியில் உங்களுக்கு பங்கிருக்கிறதா?
2.   பெண் உடல் மீது நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு உங்களையும் நாங்கள் பொறுப்பாளர் ஆக்கலாமா?
3.   பெண் உடலை வெறும் பாலியல் பண்டமாகவே காணும் ஆண் மனதின் புரிதலுக்கு உங்களைப் போன்றோரே விதை விதைக்கின்றனர் என்று சொல்லலாமா?
4.   நடிகைகளைத் தரக்குறைவானவர்களாக இந்த சமூகம் கருதுவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் அப்படி கீழ்த்தரமாக எழுதிவிட்டு நீங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வந்து ‘குத்து விளக்கு’ ஏற்ற வேண்டும் என்ற அவாவோடு காத்திருக்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள். 
5.   வன்புணர்வு குற்றங்களில் உங்களது இதழ்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்லலமா.

சுதந்திரம் என்றால் பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதுதானா. இறுதியாக நீங்கள் நடத்துவது அரசியல் வார இதழ் என்று சொல்லிக் கொள்வதை நான் எப்படி உணரவேண்டும். அதை எப்படி புரிந்து கொள்வது. என்னால் உங்களின் வல்லமையை அறிந்துகொள்ளமுடியும். நீங்கள் நினைத்தால் போர்னோ படங்களின் பின்னால் ஒரு இனத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் அவமானத்தை அதன் பின்புலத்தை ஒரு நொடியில் விளக்கிவிடமுடியும். யோசித்துப் பாருங்கள் அது நிகழ்ந்தால் நீங்கள் மக்களின் மனச்சாட்சியல்லவா. என்னைப் பொருத்தவரையில் பாமர மக்கள் கடவுளும் மருத்துவருக்கும் கொடுக்கும் இடத்தை விட ஓரளவு படித்தவளாக உங்களுக்கே அவ்விடத்தை வழங்குவேன். அரசுக்கு, நீதித்துறைக்கு பயப்படாது இறுக மூடியிருக்கும் அரசின் கதவுகள் பத்திரிக்கையாளர்கள் என்றால் இன்றும் சற்று பதட்டத்தோடு திறந்து கொள்வது ஏன். ஒரு கேமரா…ஒற்றை வெளிச்சம், ஒரு எழுதுகோலாவது உண்மையைச் சொன்னால் அரசு கவிழும் என்கிற பயம்தானே. கறுப்பாடுகள் மத்தியில் சில வெள்ளாடுகளும் இருந்துவிடக்கூடும் என்கிற அச்சம்தானே. ஏன் நீங்கள் முழுமுற்றான வெண்மைக்கு மாறக்கூடாது.

நண்பர்களே…உங்களது கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் அக்கருத்தைச் சொல்லும் உங்களது உரிமைக்காக எனது உயிரையும் கொடுப்பேன் எனச் சொன்னா வால்டேரின் வாசகங்களை நீங்கள் தேர்வு செய்திருந்தால் மக்களுக்குப் போராட வேண்டிய அவசியமே இருக்காதென்று நினைக்கிறேன். வாள் முனையை விட எழுதுகோலின் முனை கூர்மையானதல்லவா. கூடங்குளம், முதற்கொண்டு எந்த பாதிப்பும் உள்ளே நுழையாதாவாறு தடுக்கும் வல்லமை உங்களது எழுதுகோலுக்கு உண்டு. ஆண்டு தோறும் நீங்கள் வழங்கும் காலண்டர்கள் நாட்காட்டிகளுக்குப் பதில் மக்களே உங்கள் பத்திரிக்கைகளை அல்லவா இல்லங்களில் தொங்க விடுவார்கள். இதுதானே மக்களின் பத்திரிக்கை என்பதற்கு மகத்தான சாட்சியாக இருக்கமுடியும்.

இறுதியாக, பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதை தடை செய்யும் சட்டத்தின் இணைப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். http://wcd.nic.in/irwp.htm ஒரு பத்திரிகை ஆசிரியராக சட்டத்தின் வலிமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

வணக்கம்.

மிக்க மரியாதையுடன்
தோழர் கொற்றவை.

வேறு வழியின்றி உங்கள் இதழ்களின் ஆபாசப் புகைப்படங்களை இங்கு இணைக்கிறேன், அட்டைப்படத்திற்கும், நடுப்பக்கத்திற்கும் உள்ள முரண்களை அது உங்களுக்கு எடுத்துரைக்கும்.

      


 

18 comments:

 1. தவறு நம் மீது தான்...

  இவற்றை எல்லாம் வாங்குவதே இல்லை...

  ReplyDelete
 2. என்னண்ணா இது நான் எழுத நினைத்த பதிவ காட்டமா வீரியமா எழுதிட்டேங்க .இந்த அளவுக்கு எழுத முடியாதுனாலும் இத பத்தி எழுத நினைத்தேன்...நீங்க விளாசிட்டிங்க....இத அப்படியே ஆளுக்கொரு காபி எடுத்து பத்திரிகை அலுவலங்களுக்கு அனுப்பினால் நலம்.இந்த மாதிரி நடுப்பக்க படங்களை பதிவேற்றியிருக்க என்னிடம் வசதி இல்லை.....சிறந்த பதிவு அண்ணா.

  ReplyDelete
 3. தோழர் சதீஷ் செல்லதுரை நன்றி.... நான் அண்ணா இல்லை... பத்திரைக்கைகளின் மின் முகவரிகளுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.

  நன்றி
  கொற்றவை.

  ReplyDelete
 4. இந்த கலியில் ஒரு பெண்ணாகிய தங்களின் வீரிய எழுத்துக்கள் போரட்டகுணம் பாராட்டதகுந்தது தோழியே இனியாவது மாறட்டும் மானங்கெட்ட மதியாளர்கள் .

  ReplyDelete
 5. வியாபாரம் என்ற நோக்கில் மக்களும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறேன்.அல்லது மனதில் புழுங்கி கொண்டிருக்கலாம். நீங்கள் வெளிக்கொண்டு வந்துவிட்டீர்கள்.உங்கள் பதிவின் நோக்கம் சரியே:)

  ReplyDelete
 6. மிக காட்டமான பதிவு.. இதழ்களை வாங்கியதும் முதலில் நடுப்பக்கத்தைதான் பார்ப்போம். இளைஞர்களை கவர இதழ்கள் கையாளும் முயற்சி..

  அவர்களுக்கு இதழ்கள் விற்க வேண்டும், அதுதான் குறிக்கோள்..சினமாத்தனமாகிவிட்ட தமிழ் ஊடகச்சூழலலில் இது சகஜமாகிவிட்டது..:(:(..

  ReplyDelete
 7. மிக காட்டமான பதிவு.. இதழ்களை வாங்கியதும் முதலில் நடுப்பக்கத்தைதான் பார்ப்போம். இளைஞர்களை கவர இதழ்கள் கையாளும் முயற்சி..

  அவர்களுக்கு இதழ்கள் விற்க வேண்டும், அதுதான் குறிக்கோள்..சினமாத்தனமாகிவிட்ட தமிழ் ஊடகச்சூழலலில் இது சகஜமாகிவிட்டது..:(:(..

  ReplyDelete
 8. சகோதரி கொற்றவை அவர்களுக்கு!

  2. தாய்க்குலம், மங்கலப் பெண், இல்லத்தரசி, புனிதவதி என்றெல்லாம் பெண்களுக்கான மதிப்பீடுகளை முன்வைத்து தீர்ப்பெழுதும் நீங்கள் எந்த மனநிலையின் அடிப்படையிலிருந்து நடுப்பக்கங்களை திட்டமிடுகிறீர்கள்.

  மேற்கண்ட தங்கள் கேள்வியின் மீதான எனது ஐயம்:

  பெண்களின் கவர்ச்சிப் படங்களை பிரசுரிக்கும் பத்திரிகைகளைத் தாங்கள் கடுமையாய்ச் சாடியிருப்பது வரவேற்கத் தகுந்ததே. ஆனால் ஒன்றைத் தாங்கள் மறந்து விட்டீர் பாருங்கள். அந்தப் புகைப்படத்தில் 'போஸ்' தந்திருக்கும் பெண்மணி தனது முழு ஈடுபாட்டுடனும் மிகுந்த தொழில் தர்மத்தோடு அதைச் செய்திருக்கிறார் என்பதையும் அப்படிச் செய்ய அவர் ஊதியமும் பெற்றிருக்கிறார் என்பதைத் தாங்கள் மறுக்க மாட்டீர்களென நம்புகிறேன். தாங்கள் அத்தகைய கீழ்த்தரமான பெண்மணிகளைத் திருத்தி விட்டு பிறகு ஆணாதிக்கம் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
  பின்குறிப்பு : நான் ஆணாதிக்கவாதியுமல்ல பெண்ணாதிக்கவாதியுமல்ல. என் மனதுக்குத் தவறென்று தோன்றியதைச் சுட்டிக்காட்டினேன் அவ்வளவே. பிழையிருப்பின் மன்னிக்கவும்.

  ReplyDelete
 9. நல்லதொரு கட்டுரை! பத்திரிக்கைகள் வியாபாரத்திற்காக சினிமா கதம்பங்களாகி விட்டன.ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கூட கதைகளை குறைத்து சதைகளை ஆக்ரமித்து இருப்பது வேதனைதான். நானும் என்ப்ளாக்கில் சினிமா செய்திகள் காப்பி பேஸ்ட் செய்து வந்தேன். அதை நிறைய பேர் படிப்பதால். இப்போது நிறுத்திவிட்டேன்! பத்திரிக்கைகள் திருந்த முதலில் நாமும் திருந்த வேண்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி! என்வலைப்பூவில் இன்று பேச்சியம்மனான சரஸ்வதி http://thalirssb.blogspot.in/2012/10/blog-post_24.html நேரமிருப்பின் வந்து கருத்திடுங்கள்! நன்றி!

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. தோழர் பி.எஸ். வேலு. பிழையிருப்பின் மன்னிக்கவும் போன்ற தன்னடக்க பேச்சுக்களை நான் வரவேற்பதில்லை. மற்றபடி இது ஒரு பொது வெளி இதில் எல்லா கருத்துக்கும் இடமுண்டு. நீங்கள் சுட்டும் கேள்வி சரியானதே, ஆனால் திரைத்துறை, ஊடகத்தில் பணி புரியும் பெண்கள் நிலை குறித்தும், அதில் முதலாளித்துவ ஆதிக்கம் குறித்தும் எழுதியுள்ளேன்... இங்கு பெண் பண்டமாக்கப்படுகிறாள்....அப்படிச் செய்பவர்களைத் தான் நாம் முதலில் கண்டிக்க வேண்டும், குறிப்பாக பத்திரிக்கை என்பதற்கு ஒரு தர்மம், பொறுப்பு உள்ளதல்லவா.

  http://saavinudhadugal.blogspot.in/2011/01/blog-post_16.html

  http://saavinudhadugal.blogspot.in/2011/09/blog-post_29.html

  http://saavinudhadugal.blogspot.in/2012/07/blog-post_424.html

  http://www.youtube.com/thekotravai

  ReplyDelete
 12. mazhai.net, karthi, suresh, mani maran. நன்றி. மணி மாறன் உங்களது கேள்விக்கு மேலே பதில் உள்ளது.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. நன்றி மணி மாறன்... கொற்றவை அல்லது தோழர் என்றே அழைக்கவும்..

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete