Feb 28, 2012

கூடங்குளம் போராட்டம் - தொடரும் ஒடுக்குமுறை




கூடங்குளம் போராட்டக்காரர்களின் ஐயங்களுக்கு அறிவியல் பூர்வ விளக்கங்களை அளிக்க முடியாத மத்திய அரசு, தன் அவதூறுகளுக்கு ஆதரவு திரட்டும் பணியில் உளவியல் ரீதியான ஒடுக்குமுறையை ஏவுகிறது. ஒரு ஜெர்மானியர் சுப.உதயகுமாரனோடும், போராட்டக்குழுவினரோடும் தொடர்பில் இருந்தார் என்று குற்றம் சாட்டி நாடு கடத்தப்பட்டிருக்கிறார். அது தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளில் ஆதாரப்பூர்வ தகவல்கள் எதுவுமில்லை. ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், விஞ்ஞானி எனும் அடிப்படையில் லால் என்பவருடன் அவர் உரையாடியிருக்கிறார் என்பதாக குழுவினரின் தகவல்கள் சொல்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்.

பன்னாட்டு நிறுவங்கள் சந்தை ஊடுறுவலுக்கான கள ஆய்வை மேற்கொள்ள, மக்களின் நன்மதிப்பைப் பெற, வரி ஏய்ப்பு செய்யவென பல காரணங்களுக்காக தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளன. தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் பல இன்று பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக செயல்படுகின்றன. அவை தங்களுக்கென வசூல் இலக்கை வைத்து, அதற்கென பணியாளர்களை வைத்து செயல்படுவதை நான் கண்டுள்ளேன். அத்தகைய நிறுவனப் பணியாளர்கள் ஒருவித அதிகாரப் போக்கோடு சேவைஎனும் துருப்புச் சீட்டை முன்வைத்து வீடுகளுக்குள் புகுந்து இப்போதே செக்கைகொடுங்கள் என்று அன்பு மிரட்டல்களைவைத்தனர். எத்தனையோ தொண்டு நிறுவனஙகள் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளன. இங்கு செயல்படக்கூடிய பண்பாட்டு காவல் மையங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பணம் நிதியுதவியாகப் பெறப்படுகிறது. நமது பண்பாட்டைக் காக்கும் அக்கறை அவர்களுக்கு ஏன் வருகிறது. Corporate Social Responsibility என்பதே ஒரு ஏய்ப்பு தான்.

அவையெல்லாம் நல்லகாரியங்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும், அரசை எதிர்க்கும் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வீர்களானால் வெளிநாட்டில் நிதியுதவி பெரும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரிடமும் நிதியுதவி பெரும் அணைத்து தொண்டு நிறுவனங்களையும், பண்பாட்டு மையங்களையும், ஆய்வு நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். 

இந்திய நாடு பிச்சைக்காரர்களை உருவாக்கும்.... இந்தியர்கள் பெண்களை, குழந்தைகளை வன்புணர்சி செய்து கொடுமைகளுக்கு ஆளாக்குவர், இந்தியக் குடும்ப வாரிசுகள் தங்கள் பெற்றோர்களைத் தெருவில் கைவிடுவர், இந்தியக் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளைக் கைவிட்டுச் செல்வர்.... இந்திய அரசுகள் கல்வியை தனியார் மையமாக்கும். இந்திய அரசுகள் மருத்துவப் பராமரிப்பை உரிய வசதிகளோடு, போதிய அளவில் வழங்காது, பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கும்.... இவற்றையெல்லாம் களைய வெள்ளைக்காரன் வருவான்....அவனது நிறுவனங்களின் பணம் பெறப்படும்.... இந்திய அரசுகள் செய்ய மறுக்கும் பணியை வெளிநாட்டவர் செய்யலாம்...ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக இந்திய அரசின் பொறுப்பின்மைக்குஉதவி செய்கிறார்கள்.....


ஆனால் இந்திய அரசின் அந்நிய நாட்டு உறவின்விளைவாக மேற்கொள்ளப்படும் உயிர் கொல்லிதிட்டங்களுக்கெதிராக போராடும் மக்கள் அமைப்புகள் வெளிநாட்டவர்ர் எவரிடமும் பணம் பெறக்கூடாது....அவர் தன்னார்வலராக இருந்தாலும் கூட.....கட்டவிழ்த்துவிட்ட அவதூறுக்கு வலு சேர்க்கும் விதமாக இன்னும் எத்தனை உளவியல் தாக்குதல்கள் நடக்கப்போகிறது?

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து நீர் வளங்கள் உள்ளிட்ட அணைத்து வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசுகளின் ஒப்பந்தங்களின்பின்னால் இருப்பது எவரின் பணம்?

தமிழக அரசு இப்பிரச்சனையில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு போராட்டக் குழு அமைத்த வல்லுனர் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் அளித்திருக்கும் அறிக்கையை தமிழ அரசு ஏற்கக்கூடாது. இன்று சுப. உதயகுமாரன் உள்ளிட்ட குழுவினரை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சந்திப்பது போராட்டத்தின் ஒரு முக்கியக் கட்டமாக உள்ளது. அத்தரப்பினரின் கோரிக்கைகள் இதுவரை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்கவேயில்லை. தமிழக முதல்வராவது அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அந்நிய நாட்டு நெருக்கடிகளுகாக அம்மக்கள் கைவிடப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.   உயிர் கொல்லி திட்டத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் தமிழர்கள் உயிர் பறிபோகக்கூடிய சூழலை தமிழக அரசு தடுக்க வேண்டும். 


1 comment:

  1. கொற்றவை, உண்மையில் மக்களுக்கு எது நல்லது எது தீயது என்பது தெரிவதில்லை. அவர்கள், நன்மை தீமை பற்றி ஒரு தெளிவுக்கு வர, நாளிதழ்களையும், வாரயிதழ்களையும் நம்பி இருக்கிறார்கள். ஆனால், அந்த ' இதழ்கள் ' நடுநிலைமையோடு உண்மையை எழுதுவதில்லை. எந்த ஒரு விஷயத்திற்கு ஒரு கூட்டத்தின் ஆதரவு இருக்கிறதோ, அந்த விஷயத்தை மட்டும் நல்ல விஷயமாக நமது பத்திரிக்கைகள் சித்தரிக்கின்றன. அந்தப் பத்திரிக்கைகள் சித்தரிக்கும் அந்த விஷயத்தை நம் நாட்டின் கோடானுகோடி நடுநிலையாளர்கள் நல்ல விஷயம் என நம்பிக் கொள்கிறார்கள். அவ்வாறு நம்புவது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. நல்லதா கெட்டதா என மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்காமல், பத்திரிக்கைகள் நல்லது என்று சொன்னால் அது நல்லது என்று அவசர முடிவுக்கு வருகிறார்கள்.

    கூடங்குளம் பிரச்னையை ஆதரிப்போரும் அப்படிப்பட்ட நடுநிலையாளர்கள் தான் என்பது எனது தாழ்மையான கருத்து. அதற்காக நண்பர், சுப.உதயகுமாரை எதோ ஒரு தீவிரவாதி போல சிலர் பார்ப்பதில் எனக்குத் துளியும் உடன் பாடு இல்லை.

    ReplyDelete