Feb 12, 2012

காதலின் மீதான அவதூறுகள்:
காதலர் தினத்தை முன் வைத்து சமீப காலங்களில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க ஆகிய இந்துத்துவ அரசியல் கட்சிகள் நகைப்புக்குறிய ஒரு அரசியலை நடத்தி வருகின்றனர். காதலர் தினம் பண்பாட்டு சீரழிவு என்கிறார் இராம. கோபாலன். பண்பாட்டு சீரழிவை பற்றி இந்த்துவ அமைப்பு பேசுவதுதான் நகைப்புரியது. புரோகித கும்பல் இம்மண்ணில் செய்த பண்பாட்டு ஆக்கிரமிப்பைவிட, சீரழிவைவிட வேறெவரும் பண்பாட்டு சீரழிவை மேற்கொண்டுவிட முடியாது. இம்மண்ணின் பன்மைத் தன்மையை, தாய்வழிச் சமூக மரபை சீர்குலைத்து அரசியல் லாபங்களுக்காக மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்கள், மதவாதத்தை முன்னெடுப்பவர்கள் பொது மக்களுக்கு, சமூகத்திற்கு ஒரு விதியை வைத்து விட்டு புழக்கடையில் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பவர்கள் சமூகம் பற்றியும், பண்பாட்டு சீரழிவு பற்றியும் கவலை கொள்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

உயிரினங்களின் இயல்பூக்க வெளிப்பாடு காதல், காமம் ஆகிய உணர்ச்சிகள். உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக சமூக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி ஒவ்வொரு முறை சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படும்பொழுது பண்பாட்டு மாற்றங்களும் நிகழ்கின்றன.  இந்த பண்பாட்டு மாற்றங்களில் வெகுசில இயல்பானவையாக இருந்தாலும், பெரும்பாலும் அவை பண்பாட்டு அதிகார மையங்களால் தீர்மானிக்கப்படுபவையாக இருக்கின்றன. உழைப்பு, உழைப்புக் கருவி, உற்பத்தி, மிகை மதிப்பு (surplus) ஆகியவற்றை கையகப்படுத்தி, பின்பு அதை தக்கவத்துக்கொள்ளவும், தடையின்றி அனுபவிக்கவும் முயற்சித்து, பல்வேறு செயல்திட்டங்களின் வழியாக அதில் வெற்றியும் பெற்றுவிட்ட ஒரு பிரிவினர் அதிகார வர்க்கமாக தலையெடுத்தனர். அவர்களை இன்றைய பொருளாதார அமைப்பின் படி முதலாளிகள் என்று சொல்கிறோம். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பு வெவ்வேறு சமூக அமைப்பிலிருந்து பரிணாமம் பெற்று இந்த நிலையை அடைந்திருக்கிறது. இந்த அதிகார மையமானது சமூகத்தில் பல்வேறு கட்டுமானங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆளும் வர்கங்களாக வடிவெடுத்து சமூகத்தின் மதிப்பீடுகளை அவைகளே உருவாக்குகின்றன. அதன்காரணமாக சமூக நலன் என்பது புதைக்கப்பட்டு ஆளும் வர்கங்களுக்கு சார்பான நலன்கள் ’பொது நலன்’ என்ற போர்வையில் உலவவிடப்பட்டன, அவ்வதிகார ஊடுறுவல் என்றென்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதற்கென பல நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டது, அதில் ஒன்று தான் மதம் எனும் நிறுவனம். இந்த மதம் எனும் நிறுவனமே ‘பண்பாடு’ என்பதை தீர்மானிக்கும் அதிகாரப்பூர்வ சக்தியாக விளங்குகிறது. அந்த மதவாத பண்பாடு பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து தனது பண்பாட்டு ஆதிக்கத்தை பூர்வகுடிகள் மேல் திணித்து தீண்டத்தகாதவர்களாக சித்தரித்தது. பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றிய அந்நிறுவனம் இந்திய சூழலில் இந்துத்துவம் எனும் கொடுங்கோன்மை மதமாக இருக்கிறது. நூற்றாண்டு கால போராட்டங்கள், உயிரிழப்புகளுக்குப் பின்னர் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வெகு சில உரிமைகள் நிலைநாட்டப்பட்டது.

மதம் எனும் நிறுவனமானது (எல்லா மதங்களுமே)  மதத்தை மறுப்பவருக்கும் கூட ஒரு ‘பண்பாடு’ இருக்ககூடும் என்பதை கணக்கில் கொள்வதில்லை. அதற்கான சுதந்திரத்தையும் வழங்குவதில்லை.

பண்பாட்டு ஆதிக்க சக்திகள் சமூக நலன் என்ற பெயரில் தனிமனித இயல்பூக்க உணர்வுகளை பொதுமைப்படுத்தி அதை கட்டுப்படுத்தும் நிபந்தனைகளை உருவாக்கி, அதைச் சுற்றி கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதையும் ஒரு அரசியல் பிரகடனமாக மாற்றி வருகின்றனர். வெவ்வேறு இனங்களின் நம்பிக்கைகளை, சடங்குகளை உட்செறித்து இந்திய மண்ணில் அதற்கு ‘இந்து மதம்’ என்று அச்சக்திகள் பெயர் சூட்டி தொடர்ந்து எல்லா தளங்களிலும் மதவாத அரசியலை நிகழ்த்திவருகிறது. அதில் ஒரு அரசியல் தந்திரமே காதலர் தின எதிர்ப்பு என்பதாகும். இந்த காதலர் தின எதிர்ப்புக்கு பண்பாட்டு சீரழிவு, அந்நியர்களின் பழக்கம் என்றெல்லாம் கவலை கொள்கிறது இந்து முன்னணி. நாட்டு மக்கள் மீதும், பண்பாட்டின் மீதும் அவர்களுக்கு இருக்கும் அக்கறை வரவேற்கத்தக்கது, ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்த காலம் தொடங்கி இண்றைய பன்னாட்டு நிறுவனங்கள் வரை உயர் பதவிகளில் இருப்பது பெரும்பாலும் அவர்கள் குலம் தானே. அந்நியர்களின் பணத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துவது பண்பாட்டு சீரழிவில் சேர்த்தியில்லையோ. சரி அதாவது பொது மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்கிற அளவில் கருணைக் காட்டலாம் ஆனால் இந்த நாட்டு மக்களின் வரிப்பணங்களை வசூலித்து அந்நிய நிறுவங்களின் உயிர் கொல்லித் திட்டமான கூடங்குள அணு உலை அமைத்ததோடு மட்டுமல்லாமல், ருஷிய நாட்டு அரசுக்கு விசுவாசமாய் இப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் ருஷியா சென்று அணு உலையை இன்னும் இரண்டு வாரங்களில் திறப்போம் என்று சொல்வது எந்த சீரழிவில் சேர்த்தி. அனுக்கதிர் வீச்சின் தன்மையால், இரத்தமும் சதையுமாக இருக்கும் உயிர்கள் துர்மரணங்களை எதிர்கொள்கின்றனர், குழந்தைகள் ஊனமாய் பிறக்கின்றனர் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் உயிரற்ற கருத்துமுதல்வாத கொள்கைக்காக கவலைப்படுகிறார்கள். இந்த ஒரு திட்டம் மட்டுமா, இன்று இந்தியா ஒட்டு மொத்தமாக அந்நிய ஏகாதிபத்திய வளர்ச்சிக்கான இலக்காகிவிட்டது, இதற்கு காங்கிரஸ், பா.ஜா.க என்று வலதுசாரி கட்சிகள், பெரு முதலாளிகள் துணை என்பது மறுக்கமுடியாத உண்மை.

இப்படி முதலாளித்துவ பொருளாதார அடித்தளம் குலைந்து போகாமல் இருக்கவும், அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்துத்துவ பெரும்பான்மை, அதிகாரம் மழுங்கிப்போகாமல் இருக்கவும் ஆர்.எஸ்.எஸ் காதலர் தினத்தை அவதூறு செய்கிறது. அரசியல் காரணிகள் மட்டுமல்லாது காதலின் மூலம் ஏற்படும் சாதியக் கலப்பை முடக்கி ’பார்ப்பன இந்துத்துவ தூய்மைவாதத்திற்கு’ பங்கம் நேராமல் காப்பதும் இவர்களது நோக்கம். 

காதல் எனும் போது அங்கு முக்கியமாக நிகழ்வது சாதியக் கலப்பு, அதை சகித்துக்கொள்ள முடியாமலேயே அவர்கள் இதை பண்பாட்டுச் சீரழிவு என்கின்றனர். பார்பனப் பண்பாடு சீரழிவு பற்றியக் கவலை இது. உயிர் தோன்றிய காலம் முதல் உயிர் சேர்க்கை இருந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு காதல் என்ற பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம், அதற்கு அப்போது ஒரு அடையாளம் தேவைப்படவுமில்லை. ஆதிச்சமூகங்கள் முழுச்சுதந்திரமாக காதலையும், காமத்தையும் அனுபவித்து வந்தனர் என்பதற்கு சாட்சியாக தொன்மைக் காலம் தொட்டு இருக்கும் இலக்கிய ஆதாரங்களை, வரலாற்று நிகழ்வுகளைச்சொல்லலாம்.  காதலை பொது வெளியில் அறிவித்து, காதலி ஏற்க மறுத்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிறப்பு மிக்க மடல் ஏறுதல் எனும் பண்பாட்டைக் கொண்டது தமிழ்சமூகம். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், காதலை கொச்சைப்படுத்துவதும், காதலர்களை துன்புறுத்துவதும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் பண்பாட்டு அக்கறையன்று இது முழுக்க முழுக்க பார்ப்பன-இந்துத்துவ வெறி என்று தான் சொல்ல வேண்டும்.  இன்னும் இவர்களே இம்மண்ணில் பிறந்தவர்களா அந்நியர்களா என்று விவாதம் முடிவுறாமல் இருக்கிறது. இவர்கள் அந்நிய தலையீடு பற்றிக் கவலை கொள்கின்றனர். வேடிக்கையாக உள்ளது. 

காதலர் தினக் கொண்டாட்டம் என்பது அந்நியர்களின் மரபுதான், அந்த தினம் மட்டுமல்லாது பல்வேறு தினங்களும் அந்நியர்களின் பாணியே. அத்தகைய தினங்களை ‘பிரபலப்படுத்தியது’ யார்? அதன் மூலம் அனுகூலம் பெருவது எந்த வர்க்கம் என்று பார்த்தோமானால் அது முதலாளித்துவம் என்பது வெட்டவெளிச்சமாக தெரியும் ஒன்று. இந்த தினங்களை ஓயாது பிரபலப்படுத்தி முதலாளிகள் பரிசுப் பொருள்களால் சந்தைகளை நிரப்புகின்றனர். அந்த தினத்தை அனுசரிக்காமல் போனால் நாம் மனிதர்களே இல்லை என்கிற அளவிற்கு நம் மீது திணிக்கப்படுகிறது. அன்னையர் தினம், பெண்கள் தினம் என எல்லாம் ‘முதலாளிகளின்’ நலனுக்கான தினமே. இதில் நாம் கூர்ந்து கவனித்தோமானால் அன்னை, பெண், காதலி என்று எல்லாப் பெண்களுக்குமே பரிசுகளை வாங்கிக் கொடுத்து கவருங்கள், அவர்கள் அறிவற்றவர்கள், பரிசு பொருளுக்காக தங்களையே ஒப்புவிக்கத் தயாராய் இருப்பவர்கள் எனும் பரிந்துரையே இருக்கும். இந்த முதலாளித்துவ அரசியலை இந்து முன்னணி எதிர்க்காது. அந்நிய முதலாளிகள் நாட்டுக்கள் முதலீடு செய்யக்கூடாது எனும் அறிவிப்புகளை வெளியிடாது. ஆனால் ‘பண்பாட்டு சீரழிவு’ எனும் பெயரால் காதலர் தின எதிர்ப்பு, ஏன் இந்த தேர்ந்தெடுத்த எதிர்ப்பு வாதம். சாதியக் கலப்பு நிகழ்வது அத்தனை பெரியக் குற்றமா.

பார்கள், டிஸ்கோதெக்குகளில் குடித்து விட்டு கூத்தடிக்கும் நபர்கள், காதலர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பது இருக்கட்டும், இந்த ‘வியாபாரங்களுக்கு’ உரிமும், இடமும் கொடுத்திருக்கும் அரசு, முதலீட்டியலாளர்கள், அவற்றை தங்களின் ஓயாத விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் திணிக்கும் முதலாளிகள், முதலாளித்துவ வெகுஜன ஊடகங்கள் இவற்றை ஏன் இந்து முன்னணி கண்டிப்பதில்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் குடிப்பதால் பார்களில் புகுந்து அப்பாவிகளை அடிக்கும் அளவுக்கு செல்லும் இவர்கள் முதலாளிகள் நடத்தும் ‘கேளிக்கை விருந்துகளில்’ சென்று ஏன் கலகம் செய்வதில்லை.  சட்டபூர்வமாக காதலுக்குத் தடையோ, காதலர்கள் பொதுவெளியில் தங்கள் அன்பை பரிமாரிக்கொள்ளவோ, சந்தித்துக்கொள்ளவோ தடையேதுமில்லையே, அப்படி இருக்கும் போது இந்து முன்னணி எந்த உரிமையின் அடிப்படையில் காதலர்களை அச்சுறுத்தி, வலிய தாலியை கட்டச் சொல்லி மிரட்டுகிறது.  சாதிய வெறி, மதத் தூய்மைவாதம் அன்றி இதற்கு வேறேதும் காரணமில்லை.

பொது வெளியில் காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாரிக் கொள்ளும் போக்கில் பொது புத்தியில் ‘அந்தரங்கம்’ என்று சொல்லக்கூடிய, காமத்தின் வெளிப்பாடான சில செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் அதை ஆபாசாம், பொறுக்கித்தனம், தறுதலைகள் என்று சொல்வது சரியானதன்று.  துணை தேடுதல் என்பது இயல்பூக்க விதிகளில் ஒன்று அதற்கு நாம் தான் காதல், காமம் என்றெல்லாம் பெயர்கள் சூட்டிக் கொள்கிறோம். ஹார்மோன்களுக்கு அவை தெரியாது. பதின்பருவ வயதிலேயே அவ்வுணர்ச்சிகள் பெருக்கெடுக்க துவங்குகின்றன. அவற்றை மேலும் மேலும் தூண்டும் விதமாக பொது வெளியெங்கிலும் தொலைகாட்சி, பத்திரிகைகள், சினிமா இதழ்கள், திரைப்படங்கள், இணையதளங்கள் என்று ’காமத் திணிப்பு’ நிரம்பி வழிகிறது. காமம் என்பதை ‘தவறான’ ஒரு உணர்ச்சியாக மதவாதம் சித்தரிக்கிறது, அதைச் சுற்றி ஒரு இறுக்கமான கருத்துமுதல்வாத கட்டுப்பாடுகள் இயற்கையை மறுத்தலிக்கும் விதமாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதேவேளை மற்றொருபுரத்தில் அது கட்டுப்பாடில்லாமல் திணிக்கவும் படுகிறது. அத்தகைய திணிப்புகளை இந்த மதவாத அரசியல் எதிர்ப்பதில்லை. 13 வயதில் காதல், காம உணர்வுகள் (அதற்கு முன்னரே கூட சாத்தியம்) ஏற்பட்டுவிடுகின்றன, ஆனால் நம் சமூகத்தில் பொருளாதார படிநிலை அச்சம் காரணமாக ஒருவருக்கு திருமணம் நிகழ்வது 25 வயதுக்குப் பின்னர். அப்படியிருக்க குறைந்தது பத்து வருட காலம் மக்கள் தங்கள் இயல்பூக்க உணர்வுகளுக்கு வடிகாலின்றி இருக்கின்றனர், மறுபுரம் காமத்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த சீரற்ற தன்மையை எந்தவித்திலும் நியாயப்படுத்த முடியாது.  உடனே கட்டுக்கடங்காத காமத்தை முன்மொழிகிறேன் என்று அவசரகதியில் புரிந்து கொள்வது தவறாகிவிடும்.

காதலை மறுப்பதை விட, காதல் எனும் உணர்வில் உயிரியல்-வேதியலின் பங்கினை பாலியல் கல்வி மூலமாக புகட்ட வேண்டும். அவ்வுணர்வை கையாளும் வழிமுறைகளை வெளிப்படையாக கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் ‘காதல்’ என்பதை ஏதோ பாவகாரியமாக பார்க்காமல் அவ்வுணர்வை சோதித்துப் பார்ப்பது குறித்து, வெல்வது குறித்து, ஒத்திப்போடுவது குறித்து மேலும் அவ்வுறவை சிலக் கட்டுப்பாடுகளுடன் கையாள்வதின் அவசியம் குறித்தும் தங்கள் பிள்ளைகளிடம் பேசலாம்.  அதேபோல் பொதுவெளியில் ‘காமம்’ என்று பார்க்கப்படும் சில செய்கைகளை தவிர்ப்பதன் அவசியத்தை விளக்கலாம். ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் நிலைமையினாலும், பொருளாதார காரணிகளாலும் ‘காதலர் / காதலி’ என்பது எல்லோருக்கும் கிடைப்பது சாத்தியமில்லாத போது, ஒரு சிலர் மட்டும் தங்களது அன்பை மிக நெருக்கமான தன்மைகளோடு வெளிப்படுத்தும் பொழுது அது எப்படி மற்றவரின் மனதைப் புன்படுத்தும் எனும் விதமாக ‘இல்லாதவர்களுக்கு’ சேர்த்து யோசிக்கும் பண்பை காதல் எனும் உணர்வு மூலமும் விதைக்கலாம். இந்த பொதுவெளியில் குழந்தைகளும் உலவுகின்றனர், அவர்கள் மனதை அது பாதிக்கும் என்கிற வகையில் எடுத்துச்சொல்லலாம் (ஆனால் எல்லாவற்றையும் தான் திரைப்படங்கள் காட்டி விடுகிறதே)

சமூகமும் அவரவர்க்கென்று இருக்கும் நியாயமான உரிமைகளை மதிக்கும் விதமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. அரசானது இந்த மதவாத அரசியலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனும் அறிவிப்பை வெளியிட வேண்டும். காதலர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு காதலர்கள் மட்டும் சுதந்திரமாக சந்திப்பதற்கான பூங்காக்களை உருவாக்கலாம்.

காதல் என்பது மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கும் ஒன்று. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றுவதற்கு முன்னர் மனித இன விருத்தியில் முக்கியப் பங்கு வகித்தது காதல். இங்கு சாதிய சட்டங்கள் தோன்றிய பின்னரே காதல் என்பது தவறான ஒன்றாக கற்பிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகிறது. இலக்கியங்களில் காதலையும், காமத்தையும் பொழிந்து தள்ளியுள்ளனர் நம் சமூகத்தினர். காமத்தினை வெளிப்படுத்தும் சிற்பங்கள் நிறைந்த  காமக்கோயில் உள்ள ஒரே நாடு இந்தியநாடுபொருளாதார ரீதியில், சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரே விசயம் காதல்தான், ஆனால் இந்த மதவாதப் பிரச்சாரங்களாலும், சாதியப் பிடிப்பினாலும் காதலர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், சில வேளைகளில் எரித்துக் கொல்லவும் படுகின்றனர். மதவாத அரசியலுக்காகவும், இனத்தூய்மைக்காகவும் இந்து முன்னணி முன்வைக்கும் இந்த காதலர் தின எதிர்ப்பை அனுமதிக்கக்கூடாது. காதல் வெளிப்பாட்டில் தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரைப்போம் ஆனால் அணைவரும் ஒன்றிணைந்து காதலர் தின ’இந்துத்துவ தூய்மைவாத’ எதிர்ப்பை புறக்கணிப்போம். 

4 comments:

 1. நல்ல பதிவு தோழர்.அவசியமான கட்டுரை.மிக பயனுள்ளதாக உள்ளது.கொஞ்சம் நீளத்தை மட்டும் குறைத்திருக்கலாம் தோழர்.

  ReplyDelete
 2. நன்றி சமநிலை தோழர்...

  ReplyDelete
 3. நல்ல கட்டுரை... வாழ்த்துக்கள்:)

  மடலேறுதல் மட்டுமே சிறிது உறுத்தலாக உள்ளது:)

  பொது வெளியில் காதலை அறிவித்தல் என்பது மிகவும் ஆரோக்கியமான பண்பு... நினைவில் கொள்ளவேண்டிய பண்பாடு...

  ஆனால் இன்றளவும், மேன்மையான காதல் மற்றும் மணமுடித்தல் பண்புகளை கொண்டுள்ள தொல்குடி சமூகங்களிடமும் நாம் கற்க வேண்டிய பண்புகள் பல உள்ளன...

  உதாரணத்திற்கு, மணமுறிவு ஏற்ப்பட்டால், பிறிதொரு மனமொத்த துணையை சமூகத்திற்கு அறிவித்து தேர்ந்தெடுக்கும் சமூக ஒழுக்கமும் உண்டு...

  இந்த இந்துத்வவாத சக்திகளின் பிடியில் அந்த தொல்குடி சமூகங்கள் எப்படி தங்கள் மேன்மையான பண்பாட்டை காப்பாற்ற போகிறார்கள் என்பது தான் எதிர்காலத்தில் உள்ள சவால்...

  ReplyDelete
 4. நன்றி விவேக்.. மடலேறுதலை நான் ஆதரிக்கவில்லை.. அப்படியும் ஒரு பழக்கம் இருந்த மண் இது என்று சுட்டிக்காட்ட விரும்பினேன். //உதாரணத்திற்கு, மணமுறிவு ஏற்ப்பட்டால், பிறிதொரு மனமொத்த துணையை சமூகத்திற்கு அறிவித்து தேர்ந்தெடுக்கும் சமூக ஒழுக்கமும் உண்டு... // உண்மை... அதையும் இவர்கள் மாற்றி விட்டார்கள். அத்தோடு கணவனை இழந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து, சூடேற்றிய பூசனியை கடிக்க வைத்து பற்கள் உதிறும்படி செய்வதை ஒரு பழக்கமாக்கினர். அவளின் ‘அழகு’ குலைக்கப்பட்டால் அவளை எவறும் விரும்பமாட்டார்கள் எனும் ஒரு கொடூர சிந்தனை....!!

  ReplyDelete