Apr 6, 2011

பூனையின் வகுப்பில் பொய்கள் வெளியேறியது…....



பூனைகள் தலைவர்களை சரியாக
அடையாளம்
காண்கிறது
தலைவர்களைக் கொண்டே
மக்களையும்
அடையாளம் காண்கிறது

பயம் நிறைந்த மஞ்சள் விழிகள்
மனித நிழல்களை வேவு பார்க்கிறது
அந்நிழல் மிருகத்தோடு ஒத்திருப்பதை
குகைச் சுவற்றில் வரைந்து வைத்து
குட்டிப் பூனைகளுக்கு வகுப்பெடுத்தது பூனை

பூனையின் வகுப்பில்
எச்சரிக்கை சின்னமாய் மனிதனின்
குவிந்த உதடுகள்
அபாய ஒலியாக முத்தச் சத்தம்
நாற்றத்தின் குறியீடாய் நாக்கு
மரணத்தின் குறியீடாய்
மனித சொற்கள்

குருதி வடியும் விலங்குகளின் பற்களைக் காட்டிலும்
மனித சொற்களின் முன்
கூறிய நகங்களை தயாராய் வைத்திருக்க
கற்றுத் தந்தது
வாத்தியார் பூனை

அதிகாரத்தின் வரைபடமாய் இடம் பெற்றது கைகள்
வருடும் மனித விரல்கள்
சுதந்திரமானவை..
அது
என்றும்
அடிமைகளைத் தேடிக் கொண்டே இருக்கும் என்றும்
சிறந்த
அடிமைகளுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு
இறகுகள் தானமாய்
வழங்கப்படும்
மனித
நேயம் பற்றிய குறிப்போடும்

வகுப்பை முடித்தது பூனை
வாலை
ச்
சு
ழற்றியது
பூ
னை.




4 comments:

  1. கவிதையை அழகா முடிச்சிருக்கீங்க கொற்றவை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடிமைக்கு ஏன் இறகுகள் அதுவும் தங்கத்தாலான இரண்டு இறகுகள் ?

    ReplyDelete
  3. @நாய்க்குட்டி மனசு.... உண்மையிலேயே புரியவில்லையா?

    ReplyDelete