Apr 11, 2011

ஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சுஆண்களுக்கான முகப்பூச்சு (கொல்லி) ஒன்றின் விளம்பரத்தில் பெண் தன்மையை மிகவும் அவமானகரமானது என்று முன்வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. பெண்கள் உபயோகிக்கும் நகப் பூச்சு, தாவணி இவைகளை இழிவு படுத்துகிறது. இவைகளை பெரும்பாலும் ஆண் முதலாளிகள் தானே பெண்களுக்கான பண்டம்என்று உருவாக்கியிருக்கிறார்கள். ஆணின் சருமம் கடிமானது அதற்கு பெண்கள் (after all women) கிரீம் மலினமானது என்று சொல்வதோடு அப்பூச்சை உபயோகிக்கும் ஆணின் பின்னால் பெண்கள் வரமாட்டார்கள் என்கிற ரீதியில், ஆணுக்கான பூச்சை உபயோகிக்கும் மீசைவைத்த ஆணைப் பார்த்து பெண்கள் ஆசை படுவது போல் காண்பிக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் நடிகர், தன்னைப் பெற்றவள் ஒரு பெண், தான் திருமணம் செய்திருப்பதும் ஒரு பெண், தனக்கும் ஒரு பெண் பிறந்திருக்கிறாள் என்பதை எல்லாம் இதில் நடிக்கும் பொழுது நிணைவில் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை.  இவர்களது குடும்பம் தான் சிறந்த மாதிரிகுடும்பமாக ஊடகங்கள் முன் வைக்கின்றன. 

தலா 50 ரூபாய்க்கு உலக அழகிகள் தங்கள் உடலை திறந்து போட்டு ஆடுகிறார்கள் என்றால் தலா 20 ரூபாய் காசுக்கு நடிகர்கள் பெண்களை இழிவு படுத்தி, பெண்மையை தாழ்த்தி பிரகண்டனம் செய்கிறார்கள். அதோடு, குழந்தைகளுக்கும் பண்டங்களை பரிந்துரை செய்கிறார்கள் தலா 2 ரூபாய் காசுக்காக. இவர்கள் பரிந்துரை செய்யும் எந்தப் பொருளையும் இவர்கள் பயன்படுத்துகிறார்களா, தங்களது குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே.

நடிகர்கள், அரசியல்வாதிகளுக்கிணையாக எதிர்கால நாற்காலியை குறிவைத்து, வருமான வரியை தவிர்ப்பதற்கு என்று பிறந்த நாள் இலவசங்களை அள்ளி வழங்கி மக்களின் அறியாமையை, எளிய மனங்களின் அன்பை ஏய்த்துப் பிழைக்கிறார்கள். பின்னணி, வரலாறு ஏதும் தெரியாமல் மீனவப் பிரச்சனை, தமிழர் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை, தனித் தமிழ் தேசியம், இசுலாமியர் தீவிரவாதம் என்று எதையாவது உளறி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

திரைப்படங்களில் அரசியல்வாதியை எதிர்த்து அதிரடி செய்பவர்கள், நிஜ வாழ்க்கையில் கோழைகளாக அவர்களுக்கு ஜால்ரா தட்டி சுயமரியாதையற்ற பிழைப்பு நடத்துகிறார்கள்.  

பெண் தன்மையைக் கேவலப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஆண்களையும் இவ்விளம்பரங்கள் தரக்குறைவாக சித்தரிக்கிறது, பெண்களைக் கவர்வதையும், கிண்டல் செய்வதையும் தவிர ஆண்களுக்கு வேறு நினைப்பே கிடையாதா என்ன? இவர்களின் தவறான கதாநாயகத் தன்மை, ஆண் தன்மைகள் பற்றிய சித்தரிப்பு ஆண்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கிறது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பெண் தன்மைக் கேவலமானது எனும் திரைப்படங்களின் கேளிக்கைகள், திருநங்கைகளை மக்கள் கிண்டல் செய்வதற்கான முக்கியக் காரணமாய் இருக்கிறது.


Fair & Handsome எனும் அந்த விளம்பரத்தை, திமிர் பிடித்த இவர்களின் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து சுயமரியாதை உள்ளவர்களாக நாம் ஏதாவது செய்யவேண்டும். 

http://www.facebook.com/home.php?sk=group_202859906403065&ap=1 - Oppose Male Chauvinistic Fair & Handsome Advertisement

2 comments:

 1. சூர்யாவையா சொல்றீங்க ? அவரே மீசையில்லாமல் "பெண்தன்மையுடன்" இருப்பதால்தான் இளமையாகவும் அழகாகவும் காட்டிக் கொண்டு பல பெண்களையும் கவரமுடிகிறது. இதில் ஆண்மையுடன் இருப்பது பெருமையா இருக்கும்னு நமக்கு சொல்றார். இது ஒரு முரண்நகை. அடுத்து அரசியல்வாதிகளை திரைப்படங்களில் கிழித்துது தொங்கவிடும் நடிகர்கள் அரசியல்வாதிகள் தயாரிக்கும், கதை எழுதும் படங்களில் நடித்து அவர்களைக் கொண்டே வெளியிடுகிறார்கள். ஒருவர் நடிகராகும்போதோ இருக்கும் கொஞ்ச அறவுணர்ச்சியையும் கைவிட்டுத்தான் நடிக்கிறார்கள். நடிகைகளை சொல்லவே தேவையில்லை, எல்லா உணர்ச்சியையும் கைவிடாமல் நடிகையாகவே முடியாது. திரைப்படங்களில்தான் கொள்கைப்படி நடிக்கமுடியாது தொலையட்டும் என விட்டால் விளம்பரத்திலும் வந்து இதைப்பூசு, இதைத் தேய்த்துக்குளி, இதைக்குடி, இதைத் தின்னு, என்று நச்சரிக்கிறார்கள். பெண்கள் நகைகளை மாட்டும் ஸ்டேண்டா எனக் கேட்ட பெரியாரின் சீடரான சத்யராசும், உலக இன்பங்களின் நிலையாமையை பேசும் ஆன்மிகவாதி இளையராஜாவும் தங்கநகை விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். அழகுசாதன பொருள்களுக்கான விளம்பரங்களின் கருப்பொருள் எதிர்பாலினரை கவர்வதே, பெண்களென்றால் கருப்பாக காண்பிப்பார்கள் மற்றவர்கள் கேலி செய்வார்கள் ஆண்கள் கண்டுகொள்ளமாட்டார்கள், இவர்களது தயாரிப்பை பயன்படுத்தினால் அடுத்தநாளே வெள்ளையாகி விடுவாள். நான்கு பேர் வாயைப்பிளப்பார்கள், 2 பேர் பூங்கொத்துக்களுடன் வருவார்கள். ஆண்களுக்கான பொருளென்றால் முதல் நாள் கண்டுகொள்ளாதபெண் குறிப்பிட்ட சரக்கை உபயோகித்தவுடன் அவளுடைய பாய்ஃபிரண்டைவிட்டு இவனிடம் வருவாள். வாசனைத்திரவியங்கள் என்றால் அதை அடித்தவுடன் மூன்று பெண்கள் மடியில் வந்து வீழ்வார்கள் அல்லது எங்கோ போய்க்கொண்டிருக்கும் ஒருத்தி அருகில் வந்து உடைகளைத் தளர்த்துவாள். ஆணாதிக்கமும் வக்கிரமுமே இதன் அடிப்படை. இதைத் தவிர தமது தயாரிப்புகளை வாடிக்கையாளனிடம் கொண்டு சேர்க்க உத்திகள் முதலாளிகளிடம் இல்லை. இந்த அழகூட்டும் க்ரீம்களின் விளம்பரங்களில் கருப்பு நிறத்தை (நடைமுறையை போலவே) இழிவாகவே சித்தரிக்கிறார்கள். கருப்பிலிருந்து சிவப்பாவதுதான் சிறப்பெனக் காட்டுகிறார்கள். இந்த சில நாட்களில் சிவப்பழகு, பொலிவான சருமம் போன்ற சிவப்புநிறமேன்மையை வலியுறுத்தும் நிறவாத விளம்பரங்களில் (சிவப்பில்லாத மாநிறமான சருமத்தைக் கொண்ட) அசினும், ப்ரியாமணியும் நடிக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு. இதை நமக்குச் சொல்வதற்குப் பதில் அவர்களே பயன்படுத்தினால் தயாரிப்பாளர்களுக்கு இவர்களுக்குச் செய்யும் உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான ஒப்பனைச் செலவையாவது மிச்ச்ம வைக்கலாம். இவர்கள் மீது நிற வெறியை தூண்டியதாக வழக்கே போடலாம்.

  ReplyDelete
 2. நன்றி தமிழானவன். இந்த விளம்பரத்தில் சூர்யா. மற்ற நடிகர் நடிகைகளும் இது போன்ற சுரண்டல் விளம்பரங்களில் பணம் கிடைத்தால் போதும் என்று பொறுப்பற்ற முறையில் பங்கு பெறுகிறார்கள். உங்கள் கோபங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள உங்கள் வலைப்பக்கத்தைப் பார்த்தேன், தமிழ் வினை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  முக்கியமான பதிவுகளை பதிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக online petition, face book page என்று தொடங்கி ஒத்த சிந்தனைகள் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கியிருக்கிறேன். முடிந்தால் அதில் சேரவும்.

  அடுத்ததாக இவ்விளம்பரம் குறித்தான புகாரை ASCI - Advertising Standard Council of India விற்கு அனுப்ப உள்ளோம்.தொடர் செயல்பாடுகள் குறித்து யோசித்துவருகிறோம்.

  நன்றி.

  http://www.facebook.com/home.php?sk=group_202859906403065

  http://www.petitions.in/petition/oppose-male-chauvinistic-fair-handsome-advertisement/234

  ReplyDelete