· தொல்பழங்காலச் சமூகத்தில் சரிசமமாக, ஏன் முதன்மையாக இருந்த பெண்ணினத்தை, சூத்திரர், விபச்சாரி, வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கப்படவேண்டியவள், பொருளாதாரத்திற்காக அவள் என்றுமே ஆணையே சார்ந்திருக்கவேண்டும், இப்படி பல கோட்பாடுகளை எழுதி பெண்ணினத்திற்கு துரோகம் செய்தது.
· பால்ய விவாகத்திற்கான கட்டளைகளை மநு பிறப்பித்தது. அதில் குறிப்பிட்டபடி ஒர் பெண் குழந்தை 9 வயது அடைந்தவுடன் திருமணம் செய்து கொடுக்கப்படவேண்டும், அதை செய்யத் தவறும் தந்தை அப்பெண்ணின் தூமையைக் குடிக்கவேண்டும்.
பெண் பற்றிய மநுவின் பார்வை (அவரது வழித்தோன்றல்களுக்கானதும் கூட)
· பீஜம், யோநி இவ்விரண்டையும் நோக்குமிடத்து, பீஜம் உயர்வு ஏனெனில், தோன்றூம் உயிர் அணைத்தும், அதன் தன்மையச் சார்ந்திருக்கிறது என்று ஆண் மகனை உயர்த்தி பெண் இரண்டாம் நிலையானவள், கீழ் நிலையானவள் என்று நிறுவியது. மேலும்:
· ஆடவரின் அழகினையும் வயதையும் பாராட்டாமல் அவர்தம் ஆண்மையை மட்டுமே பொருட்படுத்தி மாதர் ஆடவர்பால் மனம் பற்றிக் கலப்பர்.
· நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை.
· இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால், மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது.
· படுக்கை, ஆதனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மநு படைத்தார்
· மாதர்க்குப் பிறவியைத் தூய்தாக்கும் சம்காரங்கள் மந்திர பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது எனவே, பொய்யைப்போல மாசு வடுவினராக மாதர்ர் இயன்றிருக்கின்றனர்.
· பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றயும் கேட்பீராக.
· மற்றும் சத்யவதி போன்ற ’ஈனக்குலப்’ பெண்களும், மேலோரான கணவரைப் பெற்றதனாலும், தங்கள் கற்புத்திறனாலும், கணவரின் மேன்மையினாலும், தாங்களும் இவ்வுலகில் மேன்மையுற்றார்கள்.
· மாதரைக் காத்தல் இவ்வளவு தொல்லை நிறைந்த தாயினும், நன்மக்களை ஈன்று, நல்லின்பம் தருகிறவர் ஆதலினால், அவர்களை ஆடை அணிகளால் அழகு செய்ய வேண்டியது.
மேற்கூறிய அவரது தர்மத்திலிருந்து பெண் கீழ்மைக்குணம் கொண்டவள் என்றும், வேசி என்றும், பிள்ளைப் பெறும் சாதனம் மட்டுமே என்றும் நிறுவியது, பெண்கள் நகை, பணம், வசதி இவைகளுக்கு அடிமையாக்கப்பட்ட சூத்திரத்தை அதை ஆண்கள் பெண்களுக்கானது என தீர்மானித்ததை நாம் புரிந்துகொள்ளலாம்.
மேலும் குடும்பப் பெண்ணிற்கான அறங்களாக அவர் விதிப்பவை:
· கணவன் சூதாடுகிறவனாயினும், குடியனாக விருந்தாலும், பிணியாலனாயினும், மனைவி அவனுக்குச் செருக்குற்றுப் பணிபுரியாதிருந்தால் (பெண் ஆணுக்கு தானே மனமுவந்து வேலை செய்யவேண்டும் என்பதோடு, இங்கு பெண்ணுக்கு அறிவானது திமிர் என்று குறிப்பிடப்படுகிறது. அறிவு யாருக்கும் பணியா குணம் கொண்டது என்ற உளவியல் பார்வையையும் நாம் இதில் காணலாம்.) அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவை மறுத்து, மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
· மலடியான மனைவியை எட்டாண்டுகளின் மேலும், தக்காமல் அடிக்கடி பிள்ளையிறக்கும் வயிற்றினளைப் பத்தாண்டுகளின் மேலும், பெண் குழந்தையையே பெறுபவளைப் பதினோராண்டுகளின் மேலும், பொல்லாங்கு சொல்கிற பெண்ணை உடனேயும் நீக்ககிவிட்டு, வேறு மணம் செய்துகொள்க. இம்மனைவியர்க்கு மனமகிழ்ச்சிப் பொருள் யாதும் கொடுக்க வேண்டியதில்லை.
· முப்பது வயதுள்ள ஆணுக்குப் பனிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்தி நான்கு வயதுள்ளவன் எட்டு வயதுப் பெண்ணையும் மணக்கலாம். (வயதான காலத்தில் ஆண்களுக்குப் பணிவிடை செய்ய பெண்ணானவள் இளமையுடன் இருக்க வேண்டும் என்று செய்த ஏற்பாடு.)
· புத்திரனில்லாது இறந்து போனவனின் மனைவி, கணவன் கோத்திரத்து ஒருவனைக் கூடி விதிப்படி மகனைப் பெற்றுக் கொண்டு, அவனுக்குக் கணவன் ஈட்டிய பொருளைக் கொடுக்கவும்.
· பிள்ளை பிறந்தபின் கணவனிறந்து போனால், பின்னர் மனைவி மற்றவனுக்கொரு பிள்ளையும் பெறுவாளாயின், இரு பிள்ளைகளும் தனித்தனி அவரவர் தந்தையின் பொருளை அடைய வேண்டியதே யன்றி இரண்டையும் ஒன்றாக்கிப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. – (இவற்றிலிருந்து ஆணுக்குப் பெண் எதற்காகத் தேவைப்படுகிறாள் என்று மநு கற்றுக்கொடுக்கிறார். அவன் விந்தைத் தாங்கிப் பிள்ளைப் பெற்று அவன் குலத்தை வளர்ர்கவும், (ஊரை ஏமாற்றி) சம்பாதித்து வரும் சொத்துக்களை காக்கவும். )
(அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை என்னுடையது.)
இப்படியாக மநு ஜாதிய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, பாலின ஒடுக்குமுறைகளையும் வகுத்துக்கொடுத்திருக்கிறார். அவ்வழி வந்தோரும், உன்னதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் பெண் மீது ஏற்றிவைத்த கருத்தாடல்களானது பல்வேறு துணைகளைக் கொண்டு ஆண்களின் மனதில் ஆழப் பதிந்தும் விட்டது. அதை வைத்து பெண்களின் மனதில் அவர்களின் நடத்தை விதிகளை எவ்வாறு வளர்த்தெடுத்தார்கள் என்பதை பெண்ணிய ஆய்வுகள் நமக்குத் தருகின்றன.
கற்பு என்ற ஒன்று இவர்களால் நிறுவப்படும் முன்னர் தாய் வழி மரபில் ஆணுக்கு பிள்ளை மீது எந்த உரிமையும் இல்லை, அவர் அவ்வப்போது மனைவியின் வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்திருக்கிறார். அப்போது தனிச்சொத்துப் பிரச்சனையெல்லாம் இருக்கவில்லை.
இந்த சுயநலப்பொருளாதாரக் காரணிகளை மனதில் கொண்டு தொன்மக் கதைகள் மூலம் பதிவிரதை, பத்தினித் தன்மை என்ற புதிய தத்துவங்களை ரிஷி மனைவிகளின் பெயரால் அவர்கள் உருவாக்கியது, பெண் எவ்வாறெல்லாம் நடக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே ஒழிய அது கடவுளின் விதியல்ல. அவர்கள் உருவாக்கிய கடவுள் கணவர்களின் நடத்தையை வைத்தே அவர்களின் ஆணாதிக்க தன்மையை நாம் புரிந்துக்கொள்ளலாம். அதோடு அவர்களின் பெண் பித்தையும் நாம் புரிந்துக்கொள்ளலாம். அவர்களின் பெண் பித்தின் தன்மையே அவர்களை அச்சுறுத்தியிருக்கிறது, அப்படி மற்ற குலத்து ஆண்கள் பார்ப்பனிய குலப் பெண்களை கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும், கலப்புத் திருமணங்களை தடுக்கவும், அதன் மூலம் வர்ணக்கலப்பு, ஜாதிக்கலப்பு, சொத்து கைமாறுவது நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகளாய்தான் தோன்றுகிறது. இதுவே தந்தை வழி மரபின் சாதனை.
ரிஷிப் பத்தினிகள் மட்டுமல்ல, கடவுளரின் மனைவிகளும் இவர்களின் விதிகளுக்குட்பட்டவர்களே, கரணம் தப்பினால் கடவுளாகிய கணவர் சாபம் கொடுத்துவிடுவார்.
தாய் வழி மரபில் பிறந்த குலப் பெண்கள் ’செருக்கற்று’ கணவர்களுக்கு பணி செய்யவேண்டும் என்றோ, பெண்ணின் நடத்தை விதிகள் குறித்தோ எங்கும் குறிப்புகள், விதிகள் காணக்கிடைக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்பொழுது ஒரு பார்ப்பனிய ஆண் வேறு குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் கணவனே கண் கண்ட தெய்வம் என்று கிடக்கமாட்டாள் என்ற புரிதலோடும், அதே நேரம் இவர்களுடைய ஆணாதிக்கப் போக்கை சகிக்கமுடியாமல் பாப்பனியப் பெண்கள் மற்ற இன ஆண்களைத் திருமணம் செய்துக் கொண்டு போய்விட்டால் தங்களுக்குப் பணிவிடை செய்யப், பிள்ளைப் பெற்றுத் தர பெண்களே இல்லாமல் போய்விடும் நிலை வந்துவிடுமே என்று பார்ப்பனிய உயர் ஜாதி அறிவு முக்காலத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.
இவ்வளவு விதிகளையும், கதையாடல்களையும், அச்சுறுத்தல்களையும், தண்டனைகளையும் பெண்கள் மீது பார்ப்பனியம் திணித்து வைத்திருக்கும் சமூக வரலாற்றில் எப்படி சாத்தியம் பெண் விடுதலை?
பொருளாதாரமும், கல்வியும் மறுக்கப்பட்ட பின்னணியில் ஒரு பெண்ணுக்கான சுதந்திர வெளியாக பார்ப்பனிய ஆச்சாரியார்கள் வகுத்துக் கொடுத்தது கோயிலும், கடவுளும், மதச் சடங்குகளும். அங்கும் அவள் கணவனின் நலனுக்காக அவள் உடலை வருத்திக்கொண்டு வேண்டுதல்கள் வைப்பதின் மூலம் அவள் ஓர் உத்தமியாகிறாள். ஒரு பெண்ணின் அங்கிகாரமானது புனிதத்தின் பெயரால் ( கற்புக்கரசி) என்பதைத் தவிர வேறு சாத்தியங்களே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க பெண் மத நம்பிக்கைகளில் தன்னை இழந்து நிற்கிறாள். அதை நிராகரிக்கும் ஏன் கேள்வி எழுப்பும் பெண்களைக் கூட வேசிகள் என்றே குறிப்பிடுகிறார்கள். கற்பு ஒரு கற்பிதம் என்று கூறும் பெண்கள் அதை பாலியலை முன் வைத்து மட்டுமே பேசுபவர்களாய் சித்தரித்து, தனக்காக சுதந்திரத்தைக் கோறுபவர்கள், உங்கள் கணவர்களையும் கவர்ந்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று அச்சுறுத்தி பெண்ணுக்குப் பெண்ணையே எதிரியாய் நிறுத்தியும் விட்டார்கள்.
கடவுளின் பெயரால் இவர்கள் செய்யும் அரசியலை சரியாக கண்டுணர்ந்தவர் பெரியார். பார்ப்பனிய இந்து மதத்தை ஒழித்தாலொழிய பெண் விடுதலை சாத்தியமில்லை என்று முழங்கிய பெரியாரைக் கண்டு பார்ப்பனியர்கள் அச்சுறுவதிலும் அவரை வெறுப்பதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் பெரியார் தாயுள்ளம் கொண்டவன் அல்லவா, அதனால்தான் பார்ப்பனியர் வீட்டுப் பெண்களுக்கும் சேர்த்து பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதை அம்பேத்கர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஐயாவின் முயற்சியால் கிடைத்த சொத்துரிமையின் சுகங்களை, அவரின் சுயமரியாதை இயக்கப் பெண்களின் கடும் போராட்டங்களால் கிடைத்த பெண் உரிமைகளை, சுய மரியாதையை, விதவைகள் திருமண சாத்தியத்தை அனுபவித்துக்கொண்டே பார்ப்பனியர்கள் அவரை துரோகி என்றழைப்பதையும் காணலாம்.
விலை உயர்ந்த பண்டங்களை மனைவிக் கேட்டால் கூட அச்சுறாத ஆண், தன் மனைவி பெரியாரின் புத்தகத்தைக் கேட்டால் அச்சுறுவது ஏன் என்று புரிந்துக் கொள்ளக்கூடியதுதான்.
ஆண்களுக்கு: இன்று நீங்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் பார்வைக்கும், அதிகாரத்திற்கும் பாடதிட்டம் வகுத்திக்கொடுத்தவர்கள் யார் என்று, பெரும் உழைப்பைச் செலுத்தி ஆராய்ந்து அவர்களின் முகத் திரையைத் தோலுரித்துக் காட்டும் வேலைகளில் பெண்கள் இறங்கினால் ‘பெண்ணியவாதிகள்’ அடங்காப்பிடாரிகள், குடும்பத்துக்கு ஆகாதவர்கள், குடிப்பவர்கள், பாலியல் சுரண்டல் செய்பவர்கள் என்றெல்லாம் நீங்கள் கூறுகிறீர்கள். பெண்களிடத்தில் இந்த உன்மைகள் போய்ச் சேரா வண்ணம் முயன்ற வரையில் தடுக்க முயற்சி செய்வீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நாளை உங்கள் பெண் வாரிசு கணவனால் சித்திரவதைகளுக்குள்ளானால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்துப் போராடுபவர்கள் இந்தப் பெண்ணியவாதிகளே.
பெண்களுக்கு: வேதம், உபநிடதம், சாங்கியம், வேதாந்தம் உள்ளிட்ட தத்துவ தரிசனங்கள், புனித நூல்கள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கடவுள் கதைகள், சங்க இலக்கியங்கள் (ஔவையார், காக்கப் பாடினியார் போன்ற சிலரைத் தவிர) உள்ளடக்கிய இந்த அறிவு சார் படைப்புத் துறையில் ஏன் பெண்கள் இடம் பெறவில்லை என்று எப்பொழுதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? பார்ப்பனியம் சமூகத்தின் மேல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மதத்தின் பெயரால் செயலாற்றிய பக்தி இலக்கியக் காலத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையார், ஆண்டாள் இவர்கள் கூட கடவுளைப் பாடினார்களே தவிர பெண்ணுக்கான சுதந்திரத்தை, நடத்தை விதிகளை ஏன் உருவாக்கவில்லை என்று ஒரு கேள்வியை வைக்க வேண்டும். பெண்ணிய எழுத்தாளர்கள் இந்தப் படைப்புத்துறைக்கு வரும் முன்னர் வரை ஆண் படைப்பாளர்களால் தான் இதுவரை பெண் கதாப்பாத்திரங்கள், கற்பு நெறிகள், சமூக நெறிகள், குடும்ப நெறிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன, அது அப்படியே சினிமா, சீரியல் என்று இன்றும் தொடர்கிறது, ஆண் படைப்பாளிகளின் வழிகாட்டுதலில் எந்த சந்தேகமும் எழாத சில மேட்டுக்குடிப் பெண் எழுத்தாளர்களும் அந்த குணங்களைக் கொண்டப் பெண் கதாப்பாத்திரங்களையே உருவாக்கி பெண்ணினத்திற்கு துரோகம் செய்வதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
பெண்கள் என்ன செய்ய வேண்டும்..?.
கொற்றவை என்ன சொல்ல வாரீகள்.
ReplyDeleteபாலியல் அடக்கு முறைகளுக்கும், சமூக அடக்கு முறைகளுக்கும் ஆண்கள் தான் காரணம் என்றா!.
சுற்றி நடப்பவைகளை பார்த்து தான் சொல்கின்றீர்களா இல்லை புராண இதிகாசங்களை படித்துக் கொண்டு எழுதுகின்றீர்களா!.
கற்பென்பது இல்லையென பெரியார் சொல்லி சென்ற பின் எத்தனை கள்ளக் காதல் மரணங்கள், கொலைகள். பெண்ணை தெய்வமாக வணங்கிய காரணத்தினால் செய்திகள் அதிகம் கசிவதில்லை. அதிகம் கொலை செய்யப்பட்டது அப்பாவி கணவன்மார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இரண்டாவது மனைவிக்காக இங்கு எத்தனை பெண்கள் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், இரண்டாவது கணவனுக்காக கொள்ளப்பட்ட ஆண்களையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.
3 வயதில் பெண் கற்பழிக்கப்பட ஆண் காரணம் என்று சொன்னால், ஏற்றுக் கொள்ளலாம். 10ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் குழந்தையை பெற்று கழிவறையில் போடும் பெண்ணுக்கு ஆண்மீது தவறு இருப்பதாக சொன்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.
இப்போதைய வீச்சில் சிதறுகின்றவர்கள் ஆண்கள் என்பதே என் கருத்து. ஒரு பெண் பாலியல் புகார் கூறினாலோ, வரதட்சை புகார் கொடுத்தாலோ குடும்பத்தோடு கூண்டிற்கு செல்லும் அப்பாவிகளையும் கொஞ்சம் நினைத்து எழுதுங்கள்.
ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு,
ReplyDelete//பாலியல் அடக்கு முறைகளுக்கும், சமூக அடக்கு முறைகளுக்கும் ஆண்கள் தான் காரணம் என்றா!//
என்னுடைய மற்ற கட்டுரைகளைப் படிக்காமல் இக்கேள்வியை வைத்திருக்கிறீர்கள் - ஆணாதிக்கம் என்று சொல்லப்படுவது ஒவ்வொரு ஆணும் அப்படித்தான் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது - நான் குறிப்பிட்டுப் பேசுவது அமைப்புகளை, நிறுவனங்களை
தற்போது நம் குடும்ப அமைப்பானது - தந்தைவழி மரபு என சொல்லப்படும் Patriarchy அமைத்து தந்த குடும்ப முறை, அதன் படி சமுதாயத்தில் நிலவுவது ஆணாதிக்க முறைமை. அதன் ஒடுக்கு முறைகளைக் குறைபாடுகளை பேசும்பொழுது இரண்டு நிறுவன அமைப்புகளை குறிப்பிட்டுப் பேசவேண்டியுள்ளது.
இந்தியச் சூழலில் - இந்து மதம்
உலகமயமாக்கலுக்குப் பின் - நிலவும் சர்வதேசிய முதலாளித்துவம்
இதையே நான் என் எல்லாக் கட்டுரைகளிலும் எழுதி வருகிறேன்.
நானோ, பெரியாரோ அவரைப் பின்பற்றுபவர்களோ எங்கும் கள்ளக் காதலுக்கு ஆதரவு தெரிவித்துப் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
http://saavinudhadugal.blogspot.com/2010/07/blog-post_7902.html
http://saavinudhadugal.blogspot.com/2010/07/blog-post_2618.html
http://saavinudhadugal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
//கற்பென்பது இல்லையென பெரியார் சொல்லி சென்ற பின் எத்தனை கள்ளக் காதல் மரணங்கள், கொலைகள். பெண்ணை தெய்வமாக வணங்கிய காரணத்தினால் செய்திகள் அதிகம் கசிவதில்லை. //
ReplyDeleteபெரியார் சொல்லிச் சென்ற பின் - ???? அதற்கு முன் கள்ளத் தொடர்புகள் இருக்கவே இல்லை என் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்.
ஊடகங்களின் வீச்சால் இன்று அத்தொடர்புகள் வெகுவ்வாகப் பிரபலப்படுத்துகிறது அவ்வளவுதான்.
இந்து மத ஆண் கடவுளர்கள் எத்தனை பெண்டாட்டிகள் வைத்திருக்கிறார்கள்? பெண்ணை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பது பெண்களின் விருப்பமா? இந்து மத பெண் தெய்வங்களின் உரிமைகள், அவர்களின் நிலைகளை நாங்கள் நன்கு அறிவோம் தோழரே.
கள்ளக்காதலின் கொலையுணர்வு பற்றி நான் எழுதியிருக்கும் பதிவுகள் மேலே.
கற்பழிப்புகளின் விகிதாச்சாரங்களை எடுத்துப் பாருங்கள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளின் விகிதாச்சாரங்களை எடுத்துப் பாருங்கள். யார் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது விளங்கும்.
//வரதட்சை புகார் கொடுத்தாலோ குடும்பத்தோடு கூண்டிற்கு செல்லும் அப்பாவிகளையும் கொஞ்சம் நினைத்து எழுதுங்கள்//
ஆணாதிக்க தந்தைவழி மரபு தோற்றுவித்த வரதட்சனை என்ற ஒன்றை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று இதிலிருந்து நான் புரிந்துக் கொள்ளலாமா?
வரதட்சனையை ஒழிக்கச் சொல்லி எத்தனை ஆண்கள் போராடியிருக்கிறார்கள்?
பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் நபர்கள் தான் அந்த தெய்வத்தின் பெயரால் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அவள் வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து பின்பு எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர்.
ReplyDeleteஇந்துத்துவவாதிகள் ஏன் மத வெறியினால் நேரும் சமூக அவலங்களை விட தனி மனித உறவு சார்ந்த பாலியல் குற்றச்சாட்டுகளை பற்றி மட்டுமே அதிகம் கவலைக்கொள்கிறார்கள் என்று விளக்க முடியுமா?