செவ்வியல் இசை என்று (ஒரு சமூகத்தால் – என் குறிப்பு) சொல்லப்படுகின்ற கர்நாடக இசையின் இராகங்களின் அமைப்பு பற்றியும் சமூக உணர்வற்ற முறையில் உள்ள அந்த இராகங்களின் அமைப்பு பற்றியும், திணை சார் தொழில்முறைகளோடு தொடர்புடைய பண்கள் மற்றும் கருவியிசை பற்றிய தகவல்கள், அவற்றை சைவமும் வைணவமும் வைதீக அறிவுஜீவிகளும் திரித்து மேளகர்த்தா ராகங்களை உருவாக்கி, கடவுளுக்கு குடும்ப உறவை ஏற்படுத்திக் கொடுத்ததுபோல், திணைகளிலிருந்து திருடிய ராகங்களுக்கு மனைவி, பிள்ளைகள், பாலின அடையாளங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பார்ப்பனிய இசை அரசியலை சமீபத்தில் இ.முத்தையா அவர்கள் எழுதியுள்ள இசையின் அதிகார முகங்கள் (வல்லினம் வெளியீடு) எனும் புத்தகத்தில் படித்தேன். வரலாற்றின் எந்தப் பக்கத்தை திருப்பினாலும், எந்தத் துரையாயிருந்தாலும் பார்பனர்களின் அரசியல் அரங்கேராத இடமே இல்லை என்று சொல்லலாம்.
இந்தப் புத்தகம் நல்ல ஆய்வு முறைகளைக் கைக்கொண்டும் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்ட இசை வரலாற்று புத்தகங்களை ஆதாரங்களாக கொண்டும் எழுதப்பட்டுள்ளது. காலவரிசைப்படி இசையின் வளர்ச்சியையும், இசையின் பெயரால் வளர்ந்த பார்ப்பனிய அரசியலையும், நாட்டுப்புற இசை, ஒடுக்கப்பட்ட மக்களின் இசை ஆகியவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சிலவற்றை உட்செரித்து பன்மை அடையாளங்களை அழித்து கடவுளின் பெயரால், உன்னதத்தின் பெயரால் இந்துக் கலாச்சாரம் என்ற பொது அடையாளத்தை உருவாக்க பார்ப்பனியம் கைக்கொண்ட மற்றும் ஒரு அரசியல் நாடகம் இசையிலும் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கொண்ட ஆய்வு. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் (புதியதாக எழுதத் துவங்குபவர்கள்), பார்ப்பனிய ஆதரவாளர்களும் கண்டிப்பாக வாசிக்கவேண்டியப் புத்தகம் – ‘இசையின்
அதிகார முகங்கள்’. இ. முத்தையாவின் உழைப்பு பாராட்டுக்குறியது.
அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு முக்கியமான பக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்: (அவருடைய சிறு முன்னுரைப் பத்தியோடு):
மனிதர்களே மனிதர்களுக்காக இசையை உருவாக்குகிறார்கள். தன்னிலைக்கும் படர்க்கை நிலைக்கும் இடையிலான இயங்கியல் உறவினாலேயே இசை உருவாக்கப்படுகிறது. இனக்குழுச் சமூகங்களில் புற உலகப் பொருட்களின் மீது மாற்றத்தை ஏற்படுத்துவத்ற்கான அல்லது புற உலகப் பொருருகளைக் கற்பனையான முறையில் தங்கள் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வருவதற்கான மந்திர ஆற்றலுடைய வெளிப்பாடாகவே இசையும் பாடலும் உருவாக்கப்பட்டன. இதனால் தான் இனக்குழுக்களின் இயற்கைச் சூழலுக்கேற்பவும் தொழில்முறைக்கேற்பவும் இவற்றின் பின்புலத்தில் உருவக்கிக் கொள்ளப்பட்ட கருத்துலகிற்கு ஏற்பவும் இசைமுறை வேறுபடுகிறது.
இனக்குழுவினர் புற உலகத்தோடு தொடர்பு கொள்வதற்க்காகவும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பப் புற உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மாற்றுவதகாகவும் தங்களுக்கன இசையை உருவக்கிக் கொண்டனரே தவிர பிற இனக்குழுவினரோடு முரண்படுவதற்கான பண்பாட்டு அடையாளமாக இசையை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (வர்ண பேதமில்லை, செவ்வியல் அதாவது கிளாசிக்கல் என்ற உன்னத அடைமொழிகளை அவர்கள் கொடுத்துக்கொளவில்லை – என் குறிப்பு)
பக்கம் – 52:
பஞ்சமரபின் கருத்தியலுக்கு முரண்பட்ட கருத்தியலை உடையதாகச் சங்கரனார் என்ற இசை அறிஞர் பதிப்பித்த (இந்நூலை உருவாக்கிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை) இசை மரபு என்ற நூல் (1968) விளங்குகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற போதிலும் கிடைத்துள்ள பகுதிகளைக் கொண்டு பார்க்கும்போது இது உலகாயதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இசை இலக்கன நூலாக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அதாவது இசை என்பது மனித உருவாக்கம் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. இசையைத் தெய்வத்தின் படைப்பாகவோ தெய்வத்தோடு தொடர்புடையதாகவோ காட்டுகின்ற கருத்துநிலைப்பாட்டின் சுவடு கூட இந்நூலில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் தோற்றம் பற்றிய கீழ்கண்ட நூற்பா கவனத்தில்
கொள்ளத்தக்கது.
பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து
நாதமுத லாமெழுத்து நாலாகி – வீதி
வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட்
டிருவரத்தாற் றோற்ற மிசைக்கு (கா. சங்கரனார் (ப.ஆர்) 1968:1)
அதாவது “ஐம்பூதங்களாகிய மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய முதற்கருவிகளால் ஆக்கப்பெற்ற உடம்பின் நடுப்பகுதியாகிய உந்தியிலிருந்து ஒலியானது காற்று வடிவத்தில் நெஞ்சின் வழியாக மேல்நோக்கிச் சென்று வாயை அடைந்து பின் தொண்டையின் முயற்சியால் இசையொலியாகி உதடு, நாக்கு, பல், அண்ணம், மூக்கு ஆகிய நான்கு உறுப்புகளால் வெவ்வேறு வடிவம் பெற்று வெளிப்படும்” என்கிறது இந்நூற்பா. மனித முயற்சியால் இசை உருவக்கப்படுவதைத் தெளிவாக விளக்குகிறது. மேலும் ஐம்பூதங்களால் உடலுறுப்புகள் உருவாகும் முறை பற்றியும் உயிர் உருவாகும் முறை பற்றியும் உடலின் அமைப்புமுறை பற்றியும் அறிவுபூர்வமாக விளக்குகிறது இசை இலக்கண நூலான இசை மரபு. இசைக்கும் தெய்வத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை
ஓசையும் ஏசனும் ஓக்கம் என உலகில்
வாசகப் பட்டு வருதலால் – ஓசை
மெய்யகத்தாலன்றி வினவவொண்ணாது என்னுமிது
வையகத்தார் சொல்லும் வழக்கு
என்ற நூற்பாவின் மூலம் இசைமரபு நூல் விளக்குகிறது. (கா. சங்கரனார் (ப.ஆர்) 1968:16). அதாவது இசையும் இறைவனும் ஒன்று என்ற கருத்து சமூகத்தில் பேசப்படுகிறது. ஆனால் இசை மனித உடம்பிலிருந்தே பிறக்கிறது என்பதைக் கேள்விக்கு உட்படுத்த இயலாது என உறுதி பட உரைக்கீறது இசைமரபு.
இசையின் இலக்கணத்தை விளக்குவதின் ஊடாக வர்ண அமைப்புகளைப் பஞ்ச மரபு நியாயப்படுதுகிறது. அதாவது, முன்னரே குறிப்பிட்டுள்ளபடி சுத்த இசையால் அந்தணர்களைப் பாடவேண்டும் என்றும் சாளவ இசையால் சத்திரியர்களைப் பாடவேண்டும் என்றும் தமிழ் இசையால் வணிகர்களையும் வேளாளர்களையும் பாடவேண்டும் என்றும் பஞ்சமரபு வலியுறுத்துகிறது. ஆனால் இசைமரபுக்கு இத்தகைய மேட்டுக்குடி அரசியல் இல்லை. அது சுத்தம், சாளாம், தமிழ் ஆகியவை மனிதரால் உருவாக்கப்படும் முறை பற்றியே விளக்குகிறது. எடுத்துக்காட்டாகச் சுத்தம் எனும் இசை வகை பற்றிய விளக்கத்தைக் காணலாம். “ஓசையை உச்சரித்து, நாசியிலே ஒட்டி சிரம், நா, கண்டம் ஆகிய இடங்களில் தம்பித்துத் தாங்கி இசையாகப் பாடுவது” என விளக்குகிறது. அதாவது எந்தப் பிரிவைச் சேந்த மனிதரும் மேற்குறிப்பிட்ட மூன்று வகை இசை வடிவங்களையும் உருவாக்கலாம் என்றும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறது. இதுவரையிலான விளக்கத்திலிருந்து இசை மரபு எனும் இலக்கண நூல் இசையை இறைவனிடமிருந்து விடுவிப்பதையும் அதனை மனிதமயப்படுத்துவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
முடிவுரை: (பக். 99)
ஒலி மற்றும் ஒளிநாடாப் பேழைகள் குறுந்தகடுகள் போன்ற இசைத் தேக்கிகள் இசையை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற உலாவ விட்டிருக்கும் சூழலில் தனி நபரின் இசைச் சுதந்திரம் வானம் போல அகன்று விரிந்ததாகத் தோன்றலாம். ஒருவர் தாம் விரும்பிய எந்த வட்டாரத்து, எந்த நாட்டு இசையையும் எந்த வகையான இசையையும் கேட்பதற்கான வாய்ப்புக் கிட்டுவதாகத் தோன்றலாம். ஆனால் நிதானமாகப் பார்த்தால் அப்படி இல்லை என்பது புரியும். நவீனத் தொழில் நுட்பங்களைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கும் ஆளும் வர்க்கமே நாம் ஒவ்வொருவரின் இசை விருப்பத்தையும் தீர்மானிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, திரப்படம், இணையதள்ம், இசைப்பேழைகள் போன்றவை ஆளும் வர்கத்தினரின் கண்காணிப்பிலேயே செயல்படுகின்றன. அவர்கள் எத்தகைய இசையை நமக்கு வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்களோ அதையே கேட்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறோம். ஆளும் வர்க்கத்தினர் உருவாக்கிய அரசாங்கம், நீதிமன்றம், சட்டங்கள் ஆகியவை அனுமதிக்கின்ற இசை மட்டுமே நமக்குக் கேட்கக் கிடைக்கும். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் கிடைத்திருப்பதைப் போலவே இன்று இசைச் சுதந்திரமும் கிடைத்டிருக்கிறது.
_________________________________________________________________________________
கர்நாடக அல்லது செவ்வியல் இசை (மற்றும் இந்துஸ்தானி போன்ற மேட்டுக்குடி இசை) மட்டுமே சபாக்களில் பாட அனுமதிக்கப்படுகிறது. திருவையாற்று சங்கமத்தில் யாருக்கு மட்டும் அனுமதி கிடைக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே. மார்கழி மாதக் கச்சேரிகளின் மூலம் இசைக்கே அவர்கள்தான் பாதுகாவலர்கள் என நிறுவப்படுகிறது. தமிழ் மொழியில் கீர்த்தனைகளை இயற்றிப் பாடுவதால் மட்டும் அது தமிழ் இசையாகி விடுமா? அதிலும் கடவுளைப் பற்றித்தானே பாடப்படுகிறது. மக்கள் பற்றிய அல்லது மக்களுக்கான பாடல் என்று என்ன இருக்கிறது?
கர்நாடக இசைப் பெருமைகளை பார்ப்பனியப் பத்திரிகைகள் மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதுகிறது. அவ்விசையை நிராகரிப்பவர்கள் இசை ரசனையற்றவர்கள் என்று ஓரங்கட்டப்படுவதும் நாம் அறிந்ததே. அவ்விசையை முண்டியடித்து சீட்டுகள் வாங்கிப் பார்ப்பது என்பது சமுதாயப் படிநிலையில் உயர்ந்து இருப்பதற்கான அடையாளமாக நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல ஆதரவு தருவது ஆதிக்க ஜாதி இந்துக்கள் (முதலாளிகள்). ஆக மொத்தம் தெய்வீக இசையை உலகம் முழுக்க விற்று நன்றாக காசு பார்க்கும் ஒரு தொழிலுக்கு இறைவன் கொடுத்தக் கலை என்று உன்னதங்கள் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.
உழைப்பில்லாமல் பிழைப்பதற்கு மற்றும் ஒரு வழி. எந்த நடைமுறையும் சாராத, சமூக உணர்வற்ற ஒரு மேட்டுக்குடி (தெய்வீகக்) கலையினால் யாருக்கு என்ன பயன்?
please tamilisai enga?
ReplyDeleteஉங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை குணா அவர்களே..
ReplyDelete