மித்ர....
நீ
காண்....
மண் முட்டித் தள்ளும் அலைகளை சாட்சியாய் வைத்து
கவிதையொன்றை பரிசளித்தாய்
எனதொரு மண்டையோட்டைப் பிளந்து கொண்டு
உயிர்நிணம் வடிய
நாளங்களையிறுகப் பற்றியதுன் காதல்
கண்ணீரில் தொடங்கியது
எல்லாம்
விழிகளைத் தோண்டி எடுத்துச் செல்ல எத்தனித்தாய்
விரல்கள் பாவையை நெருங்கும் கணத்திற்குள்
இதயத்தின் ஒலி கடக்க முடியா பாலமொன்றை எழுப்பி விட்டது
ஒற்றைப் பாதை
இனி
சாத்தியமில்லை
எரிமலை வெப்பத்திற்கு மௌனத்தை நீ ஊற்றும் பொழுது
இரவல் கேட்பவளாய் உணர்கிறது மனம்
முத்தங்களால் நிறைத்தாயென் பிச்சைப் பாத்திரத்தை
உன் புன்னகையின் லிபி
அந்தகாரத்தின் மொழி
பொருள் கொள்கிறது
மறைந்து போகும் வேளையில்
பாலைவனப் பிளவுகளில் கசிகிறது
பெருமூச்சு
பற்றியெரியும் மூங்கில்கள் கூட அச்சுறுகிறது
தனிமை காட்டில்
உன் நிழலின் வாசம் பிடித்துக்கொண்டு
உன் வார்த்தைகளையணைத்தபடி
விரல் நகங்களில் சேமித்து வைத்திருந்த
உன்
கண்ணீரின் உப்பை சுவைத்தபடி
ஜீவித்திருப்பேன்......என்
பச்சிளமே
என் சுவாசம் உன் மடியில்.
(உயிர் எழுத்தில் வந்த இரண்டாவது கவிதை)
(உயிர் எழுத்தில் வந்த இரண்டாவது கவிதை)
No comments:
Post a Comment