Aug 30, 2010

சூல் கொண்ட வன்மம்

http://www.penniyam.com/2010/08/blog-post_29.html

சதையின் நடுவே
சூல்கொண்ட பிளவு
இறங்கியது
சமவெளியின்
ஒரு பக்கம்

திரவங்கள் கூடிய மார்பை
அறுத்து வைப்பதோ
கவிகளின் நாவில்
சுழலும் கூந்தலை
பிடுங்கி வைப்பதோ
ஓலம்....

உரு பேதங்கள்
இரும்புச்சங்கிலிகளைத் தருகையில்
கண்ணீரின் நீர்மவாய்
ஆயுதத்தை முத்தமிட்டு மடியும்

பிணங்களின் கங்குகளில்
குளிர்காயும் மூதாதைய உடல்கள்
நட்டுச்செல்கிறது புன்னகையுடன் கூடிய
வன்ம மரங்களை
பூத்துக்குலுங்குகிறது வலி

உலா வருகிறாள்
அவள்
தன்னைத் தானே தொலைத்தபடி

கருப்பையில் விழுந்த
விதைகளை தாங்கிப் பிடிக்கும்
கைகளே..

புன்னகை சிந்தா உதடுகளே...
உங்கள் கருப்பையொத்த விழிகளை
காவு கொண்டதும்
எண்ணற்ற மலைகள் தாண்டி மறைத்து வைத்ததும்
சொல்லக்கூசும் வார்த்தைகளோடு ஓடி ஒளிவதும்
எது
எவை
ஏன்....


நடையில் குறுகி
மெத்தையில் துணுக்கிட்டு விரியும்
அந்தகாரம் கூடிய அப்பிளவுகளில்
செவ்வுதிரம்

எண்ணற்ற வாய்களுக்கு வெண்ணமிழ்தம் பொழிந்த மார்புக் காம்புகளில்
ஊறுவதும்
வானம் நோக்கி விடைக்கும் குறிகளில்
மிதப்பதும்
செவ்வுதிரம்
உதிரம்
ஒரே
நிறம்

பிளவு
வாசல்
வருகை
ஜனனம்.


(பெண்ணியம்.காம் இற்காக)

No comments:

Post a Comment