Showing posts with label மலையாளக் கவிதை. Show all posts
Showing posts with label மலையாளக் கவிதை. Show all posts

Mar 7, 2011

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது.....



நீ
எனது நேசத்தைக் குறித்துப் பயப்படவேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை
நீ
எனது நட்பை சந்தேகப்படவேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை

ஒரு சமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்து கொண்டிருந்தேன்.
கையில் ததும்பும் பானக்குவளை.

உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பிவாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப்போகும் நேசத்தைப்பற்றியும்
ததும்பிவழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?

உன்னிடம் சில விசயங்களைத்
தெளிவுபடுத்தவேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியைப் பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக...பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை.
பக்தனுக்குத் தரிசனமருளும்
கடவுளின் உணர்வும்வேண்டாம்.

எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பதுபோல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பதுபோல
சம உணர்வுடன் வா.

ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவதுபோலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவதுபோலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.

-  ரோஸ்மேரி, ( பெண் வழிகள், காலச்சுவடு,
மலையாளத்திலிருந்து தமிழில் சுகுமாரன்.)



இழப்பதற்கு எதுவுமேயில்லை, அடிமை விலங்குகளைத் தவிர. அடைவதற்கோ பொன்னுலம் இருக்கிறது.

மார்க்ஸ்- எங்கெல்ஸ். - கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.

இன்று மகளிர் தினம். சொல்வதற்கு இவைகளே இருக்கிறது.