Aug 25, 2023

மாதவிடாய் நிறுத்தம், கருப்பை புறணி தடித்தல்



Menopause அதாவது மாதவிடாய் நிறுத்தம் நெருங்குவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் குறித்த எனது பதிவில் சற்று விரிவாக எழுத சொல்லி கேட்டிருந்தனர்.

மாதவிடாய் நிறுத்தம் மட்டுமல்லாது மாதவிடா சுழற்சியின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கூட இங்கே போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.

பெண்  மீதான சமூக அதிகாரமும், இயற்கையின் அதிகாரமும் கருப்பையை மையப்படுத்தியே இருக்கிறது!

பெண்ணின் கருப்பை இயக்கத்தை வைத்து, அதாவது மாதவிடாய் காரணமாக அவள் பலவீனமானவள், தீட்டு என்றெல்லாம் வகைப்படுத்தி ஒடுக்குகின்றனர்.  ஆண் உடலும் பெண் உடலும் மாறுபட்டதுதான், அதற்காக ஒன்று பலம் இன்னொன்று பலவீனம் என்று எப்படி ஆகிறது? இயற்கையின் படைப்பில் மாறுபட்டிருப்பது ஒரு பண்பு தானே ஒழிய இது பலம், இது பலவீனம் என்று வகைப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை.

பெண்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றொரு கற்பிதம் இங்கு உள்ளது. ஒருவேளை அது உண்மயென்றாலும் கூட அதற்கான உடலியல் காரணங்கள் இருக்கலாம் என்கிற புரிதலின்றி, உடல் / மன வெளிப்பாடு தொடர்பான அனைத்தையும் கேலி செய்து கொண்டிருப்பார்கள். பெண்கள் சற்று கோவப்பட்டால்  “Are you on your periods, why are you behaving hysteric” என்பார்கள், பொதுவாக இந்த ஹிஸ்டெரிக் (ஹிஸ்டீரியா) என்ற மனநிலையை பெண்களுக்கே பொறுத்துகிறார்கள், அல்லவா?

மாதவிடாய்க்கு முன்  PMS என்னும் நோய்க்குறி சிலருக்கு ஏற்படும், அப்போது அதீத கோவம் அல்லது மன அழுத்தம் இன்னும் இதர மனநிலை மாற்றங்கள் ஏற்படும். இதுகுறித்தெல்லாம் விழிப்புணர்வே இல்லாமல் மாதவிடாய் என்றால் உதிரப் போக்கு, உடல் வலி, விடுப்பு தேவை, ஓய்வு தேவை என்று மட்டுமே பேசப்படுகிறது. மனரீதியாக ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் ‘உதவி’ குறித்து குறைந்தளவிலான விழிப்புணர்வு மட்டுமே இருப்பதாக நான் கருதுகிறேன்.

இதைக் கடந்து, மாதவிடாய் நிறுத்தம் நெருங்கும்போது .. அதை விட மோசம்… உடலில் ஏற்படும் சுரபி மாற்றங்கள், சுழற்சி மாற்றங்கள், அதனால் ஏற்படக்கூடிய இதர “நோய்கள்”, பாதிப்புகள், என்ன மாதிரியான மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்னும் அதிகமான கல்வி தேவைப்படுகிறது. Estrogene Dominance எனப்படுவது குறித்தெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்?

பொதுவாக 35 வயதிலிருந்தே பெண்ணின் #மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் மாற்றங்கள் மெனோபாசின் தொடக்கமாக அமையலாம் என்று சொல்லப்படுகிறது. விழிப்புணர்வு இல்லாதாதால் அறிகுறிகளை அதனோடு தொடர்புபடுத்தி பார்க்கத் தெரிவதில்லை.

40க்கு மேல், மேலும் குறிப்பாக 45 வயதுக்கு மேல் கூடுதல் கவனத்துடன் மாதவிடாய் சுழற்சி மற்றும் உடல் / மன இயக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது.

என்னுடைய மெனோபாஸ் அனுபவத்தை பகிர்கிறேன்:

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எனக்கு 21 நாட்களில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும், அதாவது 2 மாதங்களில் 3 முறை. அதனோடு பி.எம்.எஸ் ஒரு வாரம் முன்பாக ஏற்படும் எனில் மாதத்தில் எத்தனை நாட்கள் ‘நன்றாக’ இருக்க முடியும்?

சமீபத்தில் மாதவிடாய் தவறுவதும், பின் திடீரென வருவதுமாக இருந்தது. 2 மாதம் வராமல், ஒரு நாள் எதிர்பாராமல் மாதவிடாய் தொடங்கியது. நிற்காத உதிரப் போக்கு, போகப் போக அதிக அளவிலான உதிரப் போகாக மாறியது. ஏறத்தாழ 20 நாட்களுக்கு மேல் இப்படி இருக்க, மகப்பேறு மருத்துவரை அணுகினேன். மாதவிடாய் நிறுத்தம் நெருங்கும்போது இயல்பாகவே பெண்கள் உடலில் சுரபி மாற்றங்கள் ஏற்படும். ப்ரொஜெஸ்ட்ரான் அளவு குறையத் தொடங்கும் அதற்கான மருந்துகளைத் தருவார்கள். அதோடு கருப்பை புற்றுநோய் உள்ளதா என்பது உள்ளிட்ட நோய்குறிகளுக்கான பரிசோதனைகளும் நடைபெறும். (PAP SMEAR, Ultra Sound Scan, Trans-Vaginal Scan, Blood Tests).

இந்த பரிசோதனைகளுக்கு நடுவே, உதிரப் போக்கை கட்டுப்படுத்துவதற்கான மருந்து தரப்பட்டது. ஆனால் பயனளிக்கவில்லை. அடுத்த கட்டமாக சுரபி மாற்றத்திற்கான மருந்து தரப்பட்டது. ஆனாலும் உதிரப் போக்கு தொடர்ந்தது. ஏறத்தாழ 45 நாட்கள்… உதிரப் போக்கு நிற்காமல் ஸ்கேன் எடுக்க முடியாது. ஆகவே அதனை முதலில் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது. ஒரு வழியாக dosage ஐ மாற்றிய பின்னர் 3 ஆவது வாரம் குறைந்தது. பின்னர் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் கண்டுபிடிப்புகள் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

Endometrium எனப்படும் கருப்பை புறணி அதாவது கருப்பையின் உட்சுவரின் தடிமன் மிகவும் அதிகமாக உள்ளது. இதனை Bulky Uterus என்கிறார்கள். மாதவிடாய் சுழற்சி மற்றும் நிறுத்தத்தின் போது தடிமன் மாறும் என்றாலும், எனக்கு மிகவும் அதிகமாகவே தடித்துள்ளதால், ஏன் இந்த தடிமன் என்று காரணம் கண்டறியப்பட வேண்டியுள்ளது. எனவே இந்த மருந்துகளின் காலம் முடிந்து, மாதவிடாய் வந்து உதிரப் போக்கு நின்ற பின் மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டும். Polyp உள்ளதா அல்லது வேறு என்ன பிரச்சினை என்பதைப் பொறுத்து Procudures இருக்கும். தேவைப்பட்டால் Biopsy எடுக்க வேண்டி இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண்களை பாலியல் பண்டமாக, வீட்டு வேலைக்காரியாக, பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய ஒருத்தியாக, பலவீனமானவளாக கருதுபவர்களுக்கு – ஒரு பெண் ஒவ்வொரு மாதமும் தன் உடலில் எத்தனையோ பிரச்சினைகளை அனுபவித்துக்கொண்டே தான் தன் ‘கடமைகளை’ ஆற்றிக்கொண்டிருக்கிறாள். பருவம் எய்துவதில் தொடங்கி, இறுதியில் மாதவிடாய் நிறுத்தம் நடக்கும் வரை எத்தனை ஆண்டுகள் அவள் தன் உடலோடு போராடிக்கொண்டே அனைத்து வேலைகளையும் செய்கிறாள். அந்த உடலை பலவீனம் என்று சொல்வது… வேடிக்கையானது!

ஆண்களுக்கு மட்டும் உடல்நிலை பாதிப்பு இல்லையா, அவர்களும் தானே ஓடி ஓடி உழைக்கிறார்கள் என்ற கேள்விகள் வரலாம். ‘நோய்’ ஏற்படுவது குறித்த பதிவல்ல இது.. உடலமைப்பில் இயற்கையாக இருக்கும் ஓர் உறுப்பின் காரணமாக, குறிப்பாக மனித குலம் பெருகுவதற்கான அமைப்பின் காரணமாக ஒவ்வொரு பெண்ணும் தவிர்க்கவியலாத வகையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. இது குறித்த புரிதல் எத்தனை பேருக்கு உள்ளது? இங்கே பரிதாபம் தேவைப்படவில்லை, பெண் உடல் மாறுபட்டது என்கிற புரிதலும், அதற்கான மரியாதையும், ஆதரவும் மட்டுமே தேவைப்படுகிறது. பெண் உடலை பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் நிலை மறுப்பு தேவைப்படுகிறது!

பெண்ணின் ‘அழகை’ ரசிக்க / துய்க்கத் துடிக்கும் ஆண்களில் எத்தனைப் பேர் பெண்ணின் இந்த வேதனைகளின் போது உடனிருந்து கவனித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்? கணவனாகவோ, இணையாகவோ இல்லாமல் பெண்களை ‘விரும்பும்’ ஆன்களைக் கேட்கிறேன். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள் மீது ஈர்ப்பு கொள்ளும் ஆண்கள். எனக்கு ஆண்டிகளை ரொம்ப புடிக்கும் என்பவர்கள்! ”ஆண்டியை” எதுக்கு புடிக்கும்னு சொல்லனுமா என்ன?… ஆனால் இந்த இயற்கை உறுப்பு / சுழற்சி காரணமாக நிகழும் மாற்றங்களால் “ஆண்டியால்” “பயனில்லாமல்” போகலாம் பையன்களே….

“எல்லா ஆண்களும் அப்படியல்ல” என்று வருபவர்கள் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்… எதை சுட்டினாலும், அது பொதுமையானதல்ல! போதுமா!

ஈர்ப்புகள் இயற்கையானவைதான்! அதோடு கொஞ்சம் மரியாதை, கருணை, Empathy, கரிசனம், சுமை பகிர்தல் எல்லாம் இருக்குமானால் பரவாயில்லை… ஒரு பெண் படுக்கைக்கு மட்டும் தேவைப்படுகிறாள் எனில்… ???

என் தங்கையும் மகளிர் மருத்துவத் துறையில் இருப்பதால் அவளிடமும் ஆலோசித்து வருகிறேன். எண்டோமெட்ரியம் தடிமன் பற்றிய மறு பரிசோதனைக்கு காலம் உள்ளது! அதற்குள் ப்ரொஜெஸ்ட்ரான் ஊக்கத்திற்கு  உதவும் உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் கருப்பையைப் பலப்படுத்துதல், இடுப்பு தசைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள சொன்னார்.  

தற்போது எனது உடல்நிலை மற்றும் மனநிலை பராமரிப்பில் மட்டுமே எனது கவனம் உள்ளது!

தொடர்புடைய சுட்டி: https://tamil.samayam.com/lifestyle/health/know-here-about-endometrium-in-tamil/articleshow/79319228.cms

No comments:

Post a Comment