Jun 4, 2021

நான் ஒரு பகவானைப் படைக்கிறேன்.

நான் ஒரு பகவானைப் (இறைத் தூதரை / புனிதாத்மாவை / புரட்சியாளரை) படைக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் (மத நூல்கள்) அடிப்படையில் நானே எழுதுகிறேன் (தொகுக்கிறேன்).

என்ன நோக்கமாக இருக்க முடியும்? - அவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்… இந்தந்த கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனவே நான் அவரை என் விடிவெள்ளியாக கருதுகிறேன். அவரின் போதனைகளை விடுதலைத் தத்துவமாக, புரட்சிகர சிந்தனையாக முன் வைக்கிறேன்.என்’ மக்களின் விடுதலைக்கான பாதையாக அதை வழிமொழிகிறேன் என்பது தானே நோக்கமாக இருக்க முடியும்?

நிற்க!

இப்படி நான் தொகுக்கையில் அந்த பகவான் ஏன் துறவறம் எய்தினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது வாய்ப்பில்லை (முற்போக்கானதாக இல்லை) என்று எனக்கு தோன்ற நான் அக்காரணங்களை மாற்றி எழுதி புரட்சிகரமாக மாற்றுகிறேன்!

பின்னர் ஓரிடத்தில் அந்த புனிதாத்மாவின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த பண்பு நலன்களை எழுதுகிறேன். அப்போது, ” தன் மகன் துறவறம் சென்றால் இராஜ்ஜியத்தை யார் ஆள்வது என்னும் கவலையில் அவரை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் “இறக்கி” அந்த ‘ஆண்’ மகனை மயக்கி ‘சிற்றின்பத்தில்’ ஆழ்துமாறு பணித்தார்” என்று எழுதி… அந்த பெண்களும் மிகுந்த ஈடுபாட்டோட்டு அதனை செய்தனர்…

ஆண்டுக்கணக்கில் இந்த ‘வசிய’ வேட்டை நடந்தது என்று எழுதுகிறேன் (சாரி தொகுக்கிறேன்). எழுதி விட்டு இறுதியில் குலகுருவோ அல்லது யாரோ வந்து கேட்கிறார்கள் “பெண்களை நாடுதல் இயற்கையானது தானே என்கிறார். .அதற்கு அந்த புனிதாத்மா " தாங்கள் பெண்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்பீர்களாயின் , பண்பான நேயம் பற்றி நானறிவேன்" என்று பதிலடி கொடுத்தார் என்று எழுதி “ஆஹா எப்படிப்பட்ட பண்பாளன்’ இவனல்லவோ ஒழுக்கவாதி! பாருங்கள் இவன் பெண்களை எப்படி மதிக்கிறான் என்றெல்லாம் புகழ்ந்துரைத்து அவரை வரலாற்று நாயகனாக முன்னிறுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மற்ற மத நூல்களில் உள்ள ஆணாதிக்க நரித்தனங்களை கட்டுடைக்கும் ஒருவர் எனது புனிதாத்மா குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது மேற்சொன்ன வர்ண்ணனைகளைப் படித்து விட்டு அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது “ஏதேதோ துயரங்களை, அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் துறவறம் மேற்கொண்ட அந்த புனிதாத்மா அடிமைப் பெண்களை இப்படி பாலியல் பண்டமாக ஏவியது குறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?” சரி அதை “தொகுத்த” எம் தலைவி! ஏன் அதை அந்த கதாப்பாத்திரம் வழியாக போதிக்கவில்லை?

ஆண்டுக்கணக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அமைச்சர் வந்து கேட்கையில் “எனக்கு பண்புடன் நேசிக்கத் தெரியும்” என்கிறாரே? அதற்கும் மேல அந்த பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இளமை போய்விட்டால் பெண்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதாக வருந்தினார் என்றும் எழுதினால் எப்படி இருக்கும்?

உண்மையில் அந்த புனிதாத்மா சமத்துவவாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதி / மார்க்சியவாதி எதிர்பார்ப்பார்? குறைந்தபட்சம் அந்நூலை கட்டுடைப்பார்.

ஆணைப் புனிதவானாக காட்டுவதற்காக பெண்களை பாலியல் பண்டமாக்கி நடமாட விட்டு, அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.. ஏனென்றால் என்னுடய ‘நாயகன்’ ஒழுக்கவான். மனதைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் என்று நிறுவும் ஆணாதிக்க மனம் என்று திறனாய்வு செய்யக் கூடாதா?

கண்டிப்பாக முற்போக்கு மனங்கள் இதை வரவேற்கும். ஆஹா என்னவொரு ஆய்வு என்று மெய்சிலிர்க்கும்… அத்தகைய விமர்சனத்தை வைப்பது யார் என்பதைப் பொறுத்து! விமர்சிக்கப்படுபவர் யார் என்பதைப் பொறுத்தும்! 😉

சுயசாதி பற்றுடன் தம் தலைவரை அனுகுபவர்களுக்கு தம் தலைவர் இப்படி தூய்மைவாதப் பார்வையோடு தம் புனிதாத்மாவைப் படைத்திருக்கிறாரே… அதற்குள் இப்படி ஒரு “மதவாத”, “பார்ப்பனியத்திற்கு நிகரான புனிதவாத”, “ஆணாதிக்க” மனம் செயல்பட்டிருக்கிறதா என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாகத் தான் இருக்கும்… என்ன செய்வது!

கூடுதலாக பெண்கள் அப்படி உலவ விடப்படுவது குறித்த வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்சியம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். தாய்வழிச் சமூகம் உடையத் தொடங்கும் காலம், இனக் குழுக்கள் மெல்ல அழியும் காலம். ஆணாதிக்கம் மேலோங்கும் காலம், அரசு உருவாகும் காலம், பார்ப்பனிய ஒழுக்கவாத, மதவாத குலகுருக்கள் உள் நுழைதல், மன்னருக்கு அவர்கள் “முக்கியமானவர்களாக” மாறுதல், அதிகாரம் செலுத்துதல் என்று எவ்வளவோ விசயங்களை நாம் ஒரு தொன்ம நூலில் / புனிதாத்மாக்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து திறனாய்வு செய்ய முடியும்.

அதற்கு மார்க்சியம் வழிகாட்டும்!

இல்லையெனில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் செய்யப்படும் ஆய்வுகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். சுயசாதி பற்றும், ரசிக மனோபாவமும், பரிதாப உணர்வும் அதை தடுக்குமே ஆனால் அது அறிவு மறுப்புவாதம். மதம் அப்படித்தான் நகர்த்தும். முற்போக்கு சாயம் பூசப்பட்ட மதமானாலும் அது கருத்துமுதல்வாதமே. அதனை முன்மொழியும் ‘தலைவர் / தலைவி’களின் எழுத்துகளில் (தொகுப்புகளில்) உள்ள கோளாறும் அதுவே.

மதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளார்ந்த கேடு என்ன என்பதை அறியவும் மார்க்சியம் வழிகாட்டும். எல்லா மதங்களும் ஏதோ ஒரு நாட்டில் வன்முறையையும், அழித்தொழிப்பும் மேற்கொள்கிறது என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

இந்த அடிப்படையில் தான் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு விடுதலை தத்துவம் என்று போதிக்கப்படும் தொகுப்பு எழுத்துகளும் விமர்சிக்கப்படுகின்றன. எழுதியவரும் விமர்சிக்கப்படுகிறார்!

அவரை விமர்சிச்சீங்களா இவரை விமர்சிச்சீங்களாங்குற கேள்விக்கு 5 வருஷமா பதில் சொல்லியாச்சு... போய் அதையாச்சும் படிங்க!

 

No comments:

Post a Comment