அம்மா நிறைய தெலுங்கு படங்கள்
பார்ப்பார்… அறையை கடக்கும் போது நானும் சில காட்சிகளைக் காண்பேன். அப்படி இன்று
ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒன்று எனை ஈர்க்க நானும் பார்க்க
அமர்ந்தேன்.
விவசாயத்தை மையப்படுத்தி எத்தனையோ படங்கள்
வந்திருந்தாலும் இந்தப் படம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக தோன்றியது.
மண்ணைக் காக்கிறேன், கார்ப்ரேட்டுகளை ஒழிக்கிறேன்,
தாய் நாடு காக்கிறேன்.. ஜெய்ஹிந்த்.. அந்நியனை விரட்டுகிறேன்
என்னும் போலியான புரட்சிகர கொந்தளிப்புகளின்றி இப்படம் இருந்ததே அதற்கு காரணம்.
நான் பார்த்தவரையில்! உற்பத்தி முறை மற்றும்
பகிர்தலை மாற்றினால் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேம்படும் என்பதை மிகவுன்
நேர்த்தியான திரைக்கதையோடு தந்தை மகன் பாசப் போராட்டத்தோடும் பிணைத்து மன
நெகிழ்ச்சி தரும் ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.
பேசுபொருள் பற்றிய கூருணர்வு அவரின் படைப்பில்
வெளிப்படுகிறது… அவருடன் இணைந்து வசனம் எழுதியிருப்பவர் சாய் மாதவ் புர்ரா
என்பவர். நல்ல கூட்டணி!
என்ன படம் என்று கேட்கிறீர்களா – ஸ்ரீகாரம். (SUNNXT) தொடக்கம், அனுகூலம், ஆரம்பம் ஆகிய பொருள்படும் சொல்..
உண்மையிலேயே நல்ல தொடக்கம். நம்பிக்கை தரும் படைப்பு. எனக்கு பிடித்திருக்கிறது 
கதைச் சுருக்கம்
மருத்துவர், எஞ்ஜினியர், தொழிலதிபர்,
நடிகர் என்று வாரிசுகள் அப்பன் பாட்டனின் தொழிலில் ஈடுபடுகையில்
நான் ஏன் என் அப்பாவின் தொழிலான விவசாயத்தில் ஈடுபடக் கூடாது என்று படித்த,
அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் ஓர் இளைஞன் கேட்கிறான்.
செயலில் இறங்குகிறான்.
விவசாயத்தால் கடன் பட்டு, வாழ்க்கை நலிந்து மக்கள்
எல்லாம் கிராமத்தை விட்டே சென்று விட்ட நிலையில், அவனது
முடிவு தந்தைக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்துகிறது. மகன் ஒரு முடிவோடு இருக்கிறான்.
ஊரைக் கூட்டி தன் யோசனையை கூறுகிறான். நலிந்து போய் கூலி வேலைக்கு சென்று
பிழைத்துக் கொண்டிருக்கும் மக்களால் அதை எளிதில் ஏற்க முடியவில்லை. ஊராரின்
நிலங்களை அடமானமாக வாங்கி வைத்துக் கொண்டு “ஏகாம்பரபுரம்” கட்ட 25 வருடங்களாக நிலங்களை அபகரித்து வரும் “வில்லனுக்கு” அது பெரும் அதிர்ச்சியை
கொடுக்க அவன் அந்த முயற்சியை மறைமுகமாக கெடுக்கிறான். (ஆதி மூலதனத் திரட்டலாக நாம்
இதை காணலாம்).
”நீங்க வாங்கும் கூலியை நான்
தருகிறேன்… இலாப நட்டம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நட்டம் வந்தால் நானே ஏற்கிறேன்”
என்று கெஞ்சியும் பார்க்கிறான். வில்லனின் பேச்சால் மக்கள் குழம்பி செல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ஹீரோவின் மாமா ஒரு சிலரோடு வந்து
முயன்று பார்க்கலாம் என்கிறார். ஆனால் முடியுமா என்று கேட்கையில் கதாநாயகன்
சொல்வது ஊற்பத்தி முறை மாற்றம்! “கூட்டு விவசாயப் பண்ணை” – கூட்டு உழைப்பு..
பருவத்திற்கேற்ற, மண்ணுக்கேற்ற
பயிரிடுதல்.. சுழற்சிமுறை விவசாயம் என்று பல விசயங்களை கூறி கூட்டாக உழைப்போம்
என்கிறான்.
ஒருவர் எல்லாருக்காக, எல்லாரும் ஒருவருக்காக என்னும்
பொதுவுடைமை தத்துவம் இழையோடியது!
எல்லாரும் கடுமையாக உழைத்து பயிரிட்டு விளைச்சல்
கண்டு மன நிறைவு கொள்ளும் போது கதாநாயகன் ஒரு கவரில் கொஞ்சம் பணத்தை கொண்டு வந்து
கொடுக்க. “அதான் எங்களுக்கு சம்பளம் கொடுத்துட்டியேபா” என்க. “அது அவசிய
உழைப்பிற்கான கூலி, இது
நம் கூட்டு உழைப்பிற்கு கிடைத்த இலாபம். இதை அனைவரும் பகிர்வதே சரி” என்கிறான்.
பொதுவுடைமை அடிப்படையிலான கூட்டு உற்பத்தி…
கூட்டுப் பகிர்தல்… இழையோடுகிறது! ஆனால் இது எதுவும் ஆர்பாட்டமின்றி!
அந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதை
அனைவரும் ஒன்று கூடி முடிவெடுக்கும்படியும் கூற, அது அவசியாக இருக்கும் ஒருவரின் நிலத்தை மீட்கப்
பயன்படுத்தப்படுகிறது!
இவ்வாறாக கூட்டு வாழ்க்கை முறை, ஒருவர் வீழ்கையில் மற்ற
அனைவரும் சேர்ந்து கைகொடுத்தல் ஆகிய அவசியமான “பண்பாடு” மிகவும் யதார்த்தமாக
சொல்லப்படுகிறது.
இவர்களின் இந்த ஒற்றுமை வில்லனை அச்சுறுத்த அவன்
பிரித்தாளும் தந்திரத்தை கையாள,
பின் என்ன நடக்கிறது என்பதை திரையில் காணவும்.
அதீத கதாநாயகத்தன்மையோ, சினிமாத்தனமோ இல்லாத படம்.
இதில் ஒரு முக்கியமான விசயம் கொரோனா தொற்று, WHO, MODI முதலில்
கொண்டுவந்த லாக்டவுண் எல்லாம் வருகிறது. ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர்
காலங்களில் ஒற்றுமையான உற்பத்தி முறையின் அவசியத்தை நயமாக சொல்லி நகர்கிறது
ஸ்ரீகாரம்.
வில்லன் அல்லது எதிரி சற்று குறைத்து
மதிப்பிடப்படுதல், கதாநாயகி
ஒரு சராசரி பெண்ணாக உலாவருதல் (ஏனென்றால் அவள் பணக்கார வீட்டுப் பெண்) போன்ற சில
குறைகள் இருந்தாலும் எது மாதிரியான மாற்றம் தேவை என்பதை சுட்டி நம்பிக்கை தரும்
வகையில் நிறைவு பெருகிறது ஸ்ரீகாரம்.
விவசாயம் அல்லது எந்த ஒரு தொழில் பற்றிய
உணர்வும் வெறும் நாட்டுப்பற்று,
உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி (என்னும்
பெயரில் ஒரு சில செல்வந்தர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுதல்) பற்றியது மட்டுமன்று..
தற்சார்பு பொருளாதாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு உற்பத்தி முறை மாற வேண்டும். உற்பத்தி
உறவுகளும் (உழைப்புசார் உறவுகள்), விநியோகமும் மாற வேண்டும்.
வீழ்ந்து போன மரத்தை அனைவரும் ஒன்று கூடி
இழக்கும் போஸ்டர்… உணர்த்தும்!
பி.கு!
பூமி என்றொரு படத்தை எடுத்து கொடுமைபடுத்திய
இயக்குனர் இப்படத்தை பார்க்குமாறு சிறப்பு பரிந்துரை செய்யப்படுகிறது 
#Sreekaram #sreekarammoviereview I Loved it. A very sensible movie
that discusses about the good beginning and probability of a happy life through
the change of mode of production, labour relations and distribution. Unity is
strength! A new beginning & a new hope.
No comments:
Post a Comment