May 29, 2021

பாலியல் சுரண்டல் என்பது வேறு வல்லுறவு என்பது வேறு

 

இன்னமும் கூட மூளையில்லாத ஜென்மங்கள் “அவங்கம்மா இதை சொன்னாங்க அதை சொன்னாங்க”, சின்மயி அரசியல் தப்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நானே சின்மயியையும், சின்மயி அம்மாவையும் மீனவர் தொடர்பான அவரது பதிவை ஒட்டி எதிர்த்தவள்தான். தொலைக்காட்சி நேரலையில் அவர் அம்மா தொடர்புக்கு வந்து “என் மகள் எல்லாருக்கும் உதவக் கூடியவள்” என்றபோது “நல்ல விசயம். அதே போல் அவரை ஆபாச பொருள் படும் பாடல்களை பாட வேண்டாம் என்று கூறுங்கள்” என்றேன்.

அன்றைக்கு பெண்ணியவாதிகள் சிலர் பொங்கி எழுந்து வழக்கம் போல் வசை பாடினர்.நீயெல்லாம் ஒரு பெண்ணியவாதியா” என்றனர். அப்போது என் சாதி பிரச்சினையாகவில்லை ஆனால் நான் பெண்ணியவாதியா என்னும் ஐயம் எழுந்தது! பெண் என்பதாலேயே வக்காலத்து வாங்க வேண்டும் என்பதல்ல பெண்ணியம்! குஷ்பு உட்பட அன்று என்னை அவமரியாதையாக பேச, அன்றைக்கு ஒரு சில தோழர்கள் அதற்கு பதிலடி கொடுத்தனர்.

 அதனையொட்டியே நான் அறிவித்தேன் - “நான் பெண்ணியவாதி (மட்டும்) அல்ல மார்க்சியவாதி”

 இன்றைக்கு சின்மயி பாலியல் குற்றம் சாட்டும் போது சமூக அரசியல் ரீதியான நிலைப்பாட்டிலிருந்து பேசுகையில் என் சாதி விவாதமாகிறது.. ஒவ்வொரு விசயம் பேசும்போதும் ஒவ்வொரு குரூப்பிற்கு ஒவ்வொரு அடையாளப் பிரச்சினை! இந்த அவலம் இங்கு தான் நடக்கும்!

 சின்மயியின் தவறான அரசியல் கருத்தில் உடன்பாடில்லாமல் அவரை விமர்சனம் செய்த அதே கொற்றவை தான் இன்று இந்த பாலியல் குற்றச்சாட்டில் அவர் உடன் நிற்கிறேன். (இதுலையும் வரலாறு தெரியாம வந்துடுறாங்க).. ஏனென்றால் பாலியல் குற்றச்சாட்டு என்பதை நாம் “வாட் அபௌட்டரி” மூலம் எதிர்கொள்ளக் கூடாது!

 சின்மயி அல்லது மீ.டூ இயக்கம் என்பது அவரவரின் சொந்த “விளம்பரப் பதிவன்று”.

 இது சின்மயிக்கான முட்டல்ல மக்களே! மீ டூ என்னும் சமூக ஊடக பகிர்வாக தொடங்கிய ஒன்று இன்றைக்கு பாலியல் சுரண்டல் மற்றும் ஆணாதிக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்கான ஒரு இயக்கமாக மாறியுள்ளது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்களை ஒருங்கிணைக்க இது உதவியுள்ளது. அதுதான் பத்மா சேஷாத்ரி ஆசியரின் அத்துமீறலையும் வெளிக்கொண்டு வர உதவியுள்ளது. (தமிழ்நாட்டில் சின்மயியின் முன்னெடுப்பு இதில் பிரதான பங்கு வகிக்கிறது.)

 பொது வெளியில் பேசி என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் – இந்த மீடு இயக்கமானது இனியும் முன்பை போல் ஆண்கள் பெண்களை துன்புறுத்த இயலாது என்னும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதன் மூலம் அனுகூலம் அடையப்போவது பெண் இனம். அதில் சின்மயியை விபச்சாரி என்று பேசிக் கொண்டிருப்பவர்களின் வீட்டுப் பெண்களும் அடக்கம்.

பாலியல் சுரண்டல் என்பது வேறு வல்லுறவு என்பது வேறு. ஆசை காட்டி, காதல் வலை வீசி, “முற்போக்குப் பெண்ணியம், பாலியல் சுதந்திரம்” என்றெல்லாம் பேசி… அல்லது பதவியை பயன்படுத்தி பணிய வைத்து “இசைவுடன்” “அனுபவிப்பது” பாலியல் சுரண்டல்.அதுவும் ஒருவகையில் துன்புறுத்தலே. இதை குறித்து விரிவாக படித்தறியவும். தயவு செஞ்சு “அன்னைக்கு படுத்தாளே” என்று தொடங்காதீர்கள்! ஆம்பிளை ஏன் படுக்க சொல்றான்னு யோசிங்க.. அதிகாரத்தில் உள்ளோரை நோக்கி கேள்வி கேளுங்கள்!

 

No comments:

Post a Comment