Jun 10, 2019

இல்லத்தரசி என்னும் பொய்மை - பாகம் 1



பெண்களிடம்நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டால் நான்ஹவுஸ் வைஃப்என்று கூறிய காலம் ஒன்று உண்டு. அதனை தனிச்சிறப்பான ஒரு திறனாக கருதி பின்னர்நீங்க ஹவுஸ் வைஃப் இல்லைஹோம் மேக்கர்என்பதே சரி என்று பிரச்சாரம் நடந்தது. அதாவது வீட்டை நிர்வகிப்பவர், வீட்டை கட்டிக் காப்பவர், வீட்டை ஆள்பவர் இப்படியாக பொருள் கொள்ளலாம்.

எவ்வளவு பெருமைக்குரிய பதவி மனைவிக்கு வழங்கப்படுகிறது! ஒரு பெண்ணைப் போல் வீட்டை நிர்வகிக்க ஓர் ஆணால் முடியுமா என்று பட்டிமன்றங்கள் நடக்கும். பெண்கள் தினத்தன்று என் மனைவி இல்லையேல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன். காலை எழுந்து “4 மணிக்கு ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காபி போடுவா பாருங்கோஅப்படியே எங்கம்மா போட்ட மாதிரியே இருக்கும்என்றெல்லாம் புகழ்வார்கள்.  பல பெண்களுக்கு இந்த அங்கீகாரம் கூட கிடைக்காத நிலையில், என் அம்மா போல், என் மனைவி போல் வீட்டை ஆள்பவள் உண்டா என்கிற புகழ்ச்சிகள் பெண்களுக்கு பெருமிதத்தை தர போதுமானதாக இருக்கிறது.

ஆனால் அத்தகைய இல்லத்தரசிகளுக்கோ அல்லது இல்லத்தரசிகளின் உழைப்பிற்கு ஊதியம் வேண்டும் என்றுஅரைகூவல்விடுக்கும் பூர்ஷுவா பெண்ணியவாதிகளுக்கோ ஒரு கேள்வி எழுவதேயில்லை: “ஏன் அவர்கள் இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள்? அதாவது ஏன் அவர்கள் வீட்டு வேலைக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்?”

மேற்சொன்ன கேள்விகளுக்கு ஆண்கள் தரப்பிலும், பெண்கள் தரப்பிலுமிருந்து வரக்கூடிய பதில்:

1. “ரெண்டு பேருமே வேலைக்குப் போனா யார் தான் குடும்பத்தை பார்த்துக்குறதுஅதான் அவளே நான் வீட்ல இருக்கேன்நீங்க வேலைக்கு போங்கன்னு சொல்லிட்டா
2. “என்ன இருந்தாலும் குழந்தையை பார்த்துக்க, சரியா வளர்க்க ஒரு தாயால தான முடியும்அம்மா இல்லாம வளரும் குழந்தைகள் தாய் பாசத்துக்கு ஏங்கி போயிடும்அதனால அவங்க வீட்டை பார்த்துக்கட்டும், நான் சம்பாதிச்சு போடுறேன்என் சம்பாத்தியத்துல அவ குடும்பம் நடத்துனா போதும்
3. “பொம்பளை புள்ளையை பெத்து வச்சிருக்கோம்…. அது வயசுக்கு வந்துருச்சுஎப்படி தனியா விட முடியும்அதான் என் மனைவியை வேலையை விடச் சொல்லிட்டேன் (அல்லது நான் வேலையை விட்டுட்டேன்)”.
4.  யாராச்சும் ஒருத்தர் விட்டுக்கொடுத்தா தானங்க குடும்பம் ஒழுங்கா நடக்கும். என் மனைவி தங்கம்அவ அதுக்கு தயாரா இருக்கா
இப்படியாக ஏராளமான பதில்கள் வரும். இப்போதும் நமக்கு கேள்வி எழுவதில்லைஏன் ஆண் அத்தகைய விட்டுக்கொடுத்தலை செய்வதில்லை? ஏன் ஓர் ஆண் இல்லத்தரசனாக இருப்பதில்லை. பெண் சம்பாதித்து கொண்டுவருவதில் அவர் ஏன் குடும்பத்தை நடத்தக் கூடாது?

உத்தியோகம் புருஷ லட்சணம்என்ற விதியுள்ள சமூகத்தில் ஆண்கள் தரப்பு நெருக்கடிகளை பிறகு பார்ப்போம். அதற்கு முன்னர் குடும்பம் என்னும் அமைப்பு பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

குடும்பம் மற்றும் சமூகம் என்னும் அமைப்புகள்

தனிக்குடும்பங்கள் என்று இல்லாது கூட்டுக் குழுக்களாக வாழ்ந்த புராதன பொதுவுடைமை அல்லது தாய்வழிச் சமூக காலங்களில் தங்களுடைய வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆணும் பெண்ணும் எந்த பால் பேதமும் இன்றியே பொருளீட்டினார்கள் என்பதே வரலாறு. அது வேட்டையாடி சமூகமாக இருந்தது. காலப் போக்கில் ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்து பிழைக்கலாம் என்னும் நிலை வந்ததோடு, கால்நடை வளர்ப்பு மற்றும் இதர வாழ்வாதார வழிமுறைகள் மற்றும் கருவிகளின் கண்டுபிடிப்பால் மெல்ல மெல்ல கூட்டுக்குழு வாழ்வில் பிளவுகள் ஏற்படுகின்றன. இதில் பருவநிலை மாற்றங்கள், பொருள்கள் கிடைப்பதில் உள்ள சவால்கள் இப்படி புறச்சூழல்களையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.
பொருளீட்டி வாழும் முறையில் (இது மார்க்சிய அகராதியில் உற்பத்தி முறை எனப்படுகிறது) ஏற்படும் மாறுதல்களின் விளைவாக ஒரு கூட்டம் உழைத்து வாழும் நிலையும், மற்றொரு கூட்டம் உழைக்காமல் அதிகாரம் (உடல்ரீதியான வன்முறை உட்பட) செலுத்தி உழைப்பைச் சுரண்டி வாழும் நிலையும் உருவானது. அடுத்தடுத்து உருவான இந்த சமூக அமைப்புகள் ஆண்டான் அடிமை சமூகம், நிலவுடைமை சமூகம் மற்றும் தற்போது முதலாளித்துவ சமூகம் என்று வரையறுக்கப்படுகிறது. இதற்கு தனியுடைமை அல்லது சொத்துடைமை தோன்றிய காலங்கள் என்றும் பெயர் உண்டு. இந்த பிளவுபட்ட சமூக அமைப்பே வர்க்க சமூகம் எனப்படுகிறது. அதாவது மனித கூட்டுச் சமூகத்தில் உழைத்து வாழும் கூட்டம், உழைக்காமல் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கும் கூட்டம் என்னும் பிரிவுகள் உண்டானதே வர்க்க சமூகமாகும்.

இந்த பிழைப்பு முறைக்கு ஏற்ப சட்டதிட்டங்களும், பண்பாடுகளும் உருவானதே தவிர எதுவும் கடவுளின் விருப்பமோ ஆணையோ அல்ல. எல்லாம் மனித வாழ்வாதார தேவைகளுக்கு ஏற்ப கண்டுபிடித்த உபாயங்களே. அதில் செல்வக் குவிப்பு ஒன்றே பிரதானம். இந்த செல்வக் குவிப்பு தோன்றியதன் விளைவாகவே, தான் சேர்த்த அல்லது அடித்துப் பிடுங்கிய செல்வங்கள் அனைத்தும் தனது இரத்த வாரிசிற்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் (ஆண்களுக்கு) ஏற்படுகிறது.

பலதார மணமுறை வழக்கொழிந்து ஒருதார மணமுறையும், ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பும் தோன்றுவதற்கு அது வழிவகுக்கிறது. கூட்டுச் சமூக வாழ்வு சிதைந்து குடும்பம் என்னும் அமைப்பு தோன்றியது போலவே சுரண்டிப் பிழைக்கும் கூட்டம் சேர்க்கும் செல்வங்களை பாதுகாக்கத் தேவைப்படும் அதிகார அமைப்புகளும் இதன் விளைவாக தோன்றின. அரசு, காவல்துறை, நீதிமன்றம் (அந்த காலத்தில் கட்டப் பஞ்சாயத்து போன்ற அமைப்புகள்) போன்ற அதிகார அமைப்புகள் தோன்றின. சுரண்டும் கூட்டம் ஆளும் வர்க்கமாகவும், உழைக்கும் அடிமைகளாக ஆக்கப்பட்டோர் ஆளப்படும் வர்க்கமாகவும் எதிர் எதிர் துருவங்களாகினர். ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் இயந்திரமே அவர்களின் நலனிலிருந்து உருவான அதிகார வர்க்கமாகும் (அரசு, அரசாங்கம் போன்றவை).
இப்படியாக ஒரு கூட்டம் உழைத்து வாழ்வதும், மற்றொரு கூட்டம் உழைக்காமலேயே உழைப்பைச் சுரண்டி வாழ்வதுமான நிலைமைக்கு ஏற்றத்தாழ்வு மிக்க உழைப்புப் பிரிவினை என்று பெயர். மார்க்சிய சொல்லாடலில் இது தனியுடைமை அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை எனப்படுகிறது. இந்த சமூகத்தில் நிலவும் ஒட்டுமொத்த சமூக உறவுச் சிக்கல் அல்லது ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் இந்த உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டதே. மற்ற உலக நாடுகளில் இது வர்க்க முரண்பாடு எனப்படுகிறது. இந்தியாவில் சாதி என்றொரு தனித்துவமான வடிவில் உழைப்புப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்படுவதால் இங்கு வர்க்க-சாதிய முரண்பாடு என்று நாம் இதனை அனுக வேண்டியுள்ளது.

ஆண்-பெண் அல்லது மாற்றுப்பாலினம், ஏழை-பணக்காரன், பண்ணையார்-விவசாயக் கூலி, முதலாளி-தொழிலாளி என்ற வடிவங்களில் வெளிப்படும் முரண்பாடுகளில் பிரதானமாக இருப்பது எது? ஒருவர் கடுமையாக உழைக்கிறார், மற்றவர் ஆள்கிறார் என்பதே, அல்லவா?
ஆண்களும் கூட உழைப்புக் கூலிகளாக, பொருளாதார அடிமைகளாக இருக்கும் ஒரு சமூகத்தில் பெண் ஏன் அவனினும் கீழான அடிமையானாள்? (இதற்களிக்கும் விளக்கம் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட நிலைமைகளுக்கும் பொருந்தும்).

மனித சமூகம் வளர பெண்ணே பிரதான மறு உற்பத்தி சக்தி. பிள்ளைப் பேறு காலத்தில் அவளை பாதுகாக்க வேண்டி இயல்பாக நிகழ்ந்த உழைப்புப் பிரிவினை (அப்போது அது வேலைப் பிரிவினை மட்டுமே) பின்னர் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக சட்டதிட்டமான உழைப்புப் பிரிவினையாக மாறியது. (விரிவாக தெரிந்துகொள்ள மார்க்சிய நூல்களை வாசிக்கவும்). அதாவது பாலின அடிப்படையிலான வேலைப் பிரிவினை. வலுவான கருவிகளைக் கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் ஆண்களுக்கும், கால்நடை வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்று வீட்டிலிருந்தே செய்யக் கூடிய வேலைகள் பெண்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இது ஏதோ ஒரே நாளில் நடந்தேறியதல்ல. மெல்ல மெல்ல நிகழ்ந்த மாற்றங்கள்.

இப்படி மாறிய நிலைமையில் பெண்களிடமிருந்து பறிபோனது என்ன, நடந்த்து என்ன என்று தெரிந்துகொண்டால், உழைப்பு மற்றும் பெண்களின் உழைப்பின் மதிப்பு மற்றும் பெண்களின் நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருள்களை தயாரித்து வாழ என்னென்ன தேவைப்படுகிறது? நிலம், இயற்கை வளங்கள், அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்வதற்கான கருவிகள் இவற்றையெல்லாம் தன்வயப்படுத்துவதற்கான உழைப்பு.  இவை உற்பத்தி முறை (பொருள் தயாரிக்கும் முறை) + உற்பத்திச் சாதனங்கள் (நிலம் உள்ளிட்ட வளங்கள், கருவிகள்) + உழைப்புச் சக்தி எனப்படுகிறது இந்த மூன்றுக்கும் இடையிலான உறவு எப்படி கையாளப்படுகிறதோ அதற்கு ஏற்றார் போல் மனித (சமூக) உறவுகள் கையாளப்படும். இதனோடு தயாரித்த பொருள்களை பகிர்ந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சேர்ந்தே மனிதர்களின் வாழ்நிலைமைகளை தீர்மானிக்கிறது. இதனை  உற்பத்தி உறவுகள்  என்கிறோம்.  உற்பத்தி உறவுகளில் மூன்று அம்சங்கள் உள்ளன என்பது மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைப் புரிதல் (1) உடைமை வடிவம் (2) உற்பத்தியில் மக்களின் பாத்திரம் மற்றும் அவர்களுக்கு இடையிலான உறவு (உழைப்புப் பிரிவினை) (3) பொருள் விநியோக வடிவம்

தொடக்கத்தில் இயற்கையின் தேவையிலிருந்து ஏற்பட்ட உழைப்புப் பிரிவினையின் காரணமாக பெண்கள் பிரதான உற்பத்திச் சாதனங்களை விட்டுக் கொடுக்கும் நிலை உருவாகிறது. அதாவது அவசியமான உற்பத்திச் சாதனங்கள் பறிக்கப்பட்டு, பெண்கள் ஆண்களை சார்ந்து வாழும் நிலை உருவானது. பின்னர் ஓர் இனக்குழு மற்றொரு இனக்குழு மீது போர் தொடுத்து அவர்களை அடிமைப்படுத்தி உழைக்கும் அடிமைகளாக மாற்றியபோது ஆண்களுக்கும் இதுவே நடந்தது. இனக்குழு கலப்பினில் ஏற்பட்ட குழப்பங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டதிட்டங்கள் தோன்றின. காலப்போக்கில் அது சாதியமைப்பாக கெட்டிதட்டிப் போனது.

ஆக, இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருள்களை தயாரிக்க தேவைப்படும் சாதனங்கள் ஒருசிலரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதால் அடிமை முறைகள் தோன்றின. இனக்குழு சிதைந்த போது அல்லது தாய்வழிச் சமூகம் சிதைந்தபோது ஆண்களின் கட்டுப்பாடில் உற்பத்திச் சாதனங்கள் (பகுதி அளவில்) போனதன் விளைவாக:

  • ·         பெண்களுக்கு வீட்டு வேலை, ஆண்களுக்கு வெளி வேலை என்னும் உழைப்புப் பிரிவினைவரலாற்றின் முதல் உழைப்புப் பிரிவினை பாலின அடிப்படையில் தோன்றியது. 
  • ·         பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது.
  • ·         பெண்களின் மறு உற்பத்தி சக்திக்காக (பிள்ளை பெறும் சக்தி) அவள் அடக்கப்படுகிறாள். அதாவது வர்க்க சமூகத்தில் பெண்ணானவள் பிள்ளை பெற்றெடுப்பதென்பது

o   சொத்துகளை பாதுகாத்து ஓர் ஆணின் இரத்த வாரிசுக்கு கடத்திச் செல்வதற்கான விசுவாசத்துடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள். (பரஸ்பரம் அன்பினால் பிணைக்கப்பட்டு ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டிய நிலையன்றி எல்லாம் பண உறவாக மாற்றப்படுகிறதுஇதுவே தனியுடமை அமைப்பின் உண்மையான ஒழுக்கம்).
o   உழைக்கும் வர்க்க குடும்பங்களில் பாதுகாக்க சொத்துகள் ஏதுமற்ற போதும் உழைப்பதற்கான அடிமைகளை பெற்றெடுக்கும் இயந்திரமாக அவள் மாற்றப்படுகிறாள்.  

  • ·         பெண்களின் உழைப்புச் சக்தியையும், பிள்ளை பெறும் சக்தியையும் கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் உருவானது. அது ஆணுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியது.

  • ·         ஆணை உயர்த்தியும் பெண்களை தாழ்த்தியும் (இழிவுபடுத்தியும் ) கட்டுக் கதைகள் உருவாகி அவை இதிகாசங்களாகின; இன்னும் இதர ஆணாதிக்க இலக்கியங்கள் தோன்றின.
  • ·         அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட வேலைகளில் இருந்தும், கருவிகளைக் கையாள்வதிலிருந்தும், வெளியுலக வாழ்விலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டதால் பெண்களின் உடல் திறனிலும், வலுவிலும், மனதளவிலான வலிமையிலும் பெரும் மாற்றங்களும் ஏற்பட்டன. பொருளுக்காக மட்டுமின்றி வலிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பிற்காகவும், உணர்வுரீதியாகவும் பெண் ஆணைச் சார்ந்திருக்கும் நிலைமைக்கு அது வழிவகுத்தது. இதனைக் கொண்டு பெண்கள் பலவீனமானவர்கள் என்று நம்பவைக்கப்பட்டது.

பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்ட அல்லது அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்று சுருக்கம் இதுவே. பெண்மை என்றால் என்ன, சிறந்த குடும்பப் பெண் என்பவள் யார்? கனவனுக்கு கால் பிடித்து விசுவாசமாக வாழ்வதே பெண்ணின் கடமை (பத்தினி), தாய்மையின் மகத்துவம் போன்ற பேச்சுகள் (கருத்தாக்கங்கள்) மூலம் மெல்ல மெல்ல பெண்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டு ஆண்கள் உசுப்பேற்றிவிடப்பட்டனர். இதைத்தான் நாம் ஆணாதிக்க சமூகம் என்கிறோம். பெண் தாழ்ந்தவள், பெண்மையோடு இருக்க வேண்டியவள், ஒரு குடும்பத்தை வழிநடத்துவதே அவளின் கடமை, கற்பொழுக்கமே அவள் கனவனுக்கு தரக்கூடிய சிறந்த பரிசு (ஆனால் ஆண்கள் வைப்பாட்டிகளை வைத்துக்கொள்ளலாம்) என்னும் கதையாடல்களின் மூலம் ஆண்களையும், பெண்களையும் (குறிப்பாக பெண்களையே கூடுதலாக) அடிமைப்படுத்தியுள்ளது இந்த சுரண்டல்வாத தந்தைவழிச் சமூகம் (பேட்ரியார்க்கி). இதை கேள்வி கேட்டாலேநீ ஒரு வேசிஎன்று எதிர்வினையாற்றியே பெண்களை அச்சுறுத்தி வைத்து, தற்போது பெண்கள் தாங்களே வலிய இந்த அடிமைத்தனத்தை போற்றும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். கற்பொழுக்கம் சார்ந்த எதிர்வினைகளுக்கு ஆண்களை விட பெண்கள் தான் வீராவேசம் கொண்டு சீறும் நிலை!

சரி இதனால் என்ன? ஆண்கள் வெளிவேலைக்கு சென்றார்கள், பெண்கள் வீட்டு வேலையை எடுத்துக்கொண்டார்கள். இப்படி இல்லாது எப்படி குடும்பம் நடத்துவது என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

மனிதர்கள் இயல்பாக இயற்கையின் தேவையிலிருந்து வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டு தம் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்தபோது எந்த ஏற்றத்தாழ்வும் இருக்கவில்லை. ஒருவர் மேலே ஒருவர் கீழே என்கிற அதிகாரங்களும் இருக்கவில்லை. அது சமத்துவமான, மகிழ்ச்சியான வாழ்வாக இருந்திருக்கிறது. அப்போது எல்லோரும் உழைத்து வாழ்ந்ததால் சமத்துவமான, நாகரீகமான வாழ்வை வாழ்ந்தனர். அதுதான் அறமும். அதுதான் மனித உரிமை போற்றும் வாழ்வு.

ஒருவர் உழைப்பது, மற்றவர்  உழைக்காமல் வாழ்வது, ஒருவர் குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்வது மற்றவர் அதிலிருந்து விலக்கி வைக்கப்படுவது என்னும் நிலைமைகள் அதிகாரச் செயல்பாடுகள். அங்கு மனித உரிமை, சுயமரியாதை, வாழ்வாதார உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்று அனைத்தும் பரிக்கப்படுகின்றன. ஆறறிவுள்ள மனிதர்களாக இதை நாம் அனுமதிகக்க் கூடாது. அது பெண் ஒடுக்குமுறையோ அல்லது சாதிய ஒடுக்குமுறையோ அல்லது வர்க்க ஒடுக்குமுறையோ எதுவாக இருப்பினும் அதனை தகர்த்தேயாக வேண்டும்.

பெண்கள் வீட்டு வேலையில் முடக்கப்படுவதால் நடப்பது என்ன?

பணம், சந்தை, பரிவர்த்தனை போன்ற கட்டுப்படுத்தும் சக்திகள் தோன்றாத காலத்தில் அதாவது உற்பத்திச் சாதனங்கள் பறிக்கப்பட்டு ஒருவர் தன் உழைப்புச் சக்தியை விற்றுதான் வாழ முடியும் என்ற நிலை தோன்றாத காலத்தில் உழைப்பு, கூலி, மதிப்பு போன்ற பொருளாதார நிர்ணய சக்திகளும் (முழுதும் வளர்ந்த நிலையில்) இருக்கவில்லை. பிறப்பின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையும் இருக்கவில்லை. ஆனால் இந்த முறைகள் தோன்றிய பின்னர், அதாவது ஆண்கள், நிலப்பிரபு, முதலாளி ஆகிய ஒரு சாராரிடம் சமூக-பொருளாதார அதிகாரம் போன பின்னர் சமூக உற்பத்தியில் ஈடுபட முடியாதிருந்தால், அத்தகையோரின் வாழ்வாதாரம் என்பது என்றைக்கும் கேள்விக்குறியே. அதுமட்டுமின்றி அத்தகையோரின் உழைப்பிற்கு எந்த மதிப்பும் கிடையாது. வீட்டு வேலைக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதே இதன் பொருள். மதிப்பு என்பது இங்கு மரியாதை என்கிற பொருளில் காணப்படுகிறது, ஆனால் எல்லா பொருளும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்து பணம் ஈட்டி, அந்த பணம் பல்வேறு அலகுகளாக பிரிக்கப்பட்டு, ஓர் அலகாக உழைப்புச் சக்திக்கு ஒதுக்கப்படுகிறது. அப்படி அந்த உழைப்புச் சக்திக்கு பணம் கிடைக்கும் போது மட்டுமே உழைப்புக்குமதிப்புகிடைக்கிறது.

எனவே, உற்பத்தியில் ஈடுபடாத பெண்களின் உழைப்பிற்கு இங்கு மதிப்பு இல்லை.

பொருளாதார மதிப்பு இல்லாமல் போவதோடு, ஆணைச் சார்ந்து பெண் வாழ்வதால் சுயமரியாதை பறிக்கப்பட்டு குடும்ப அளவிலும், சமூக மட்டத்திலும் பெண்ணுக்கு மரியாதை (மதிப்பு) இல்லை. இந்த மரியாதை கெட்ட வாழ்விலிருந்து பெண்களை விடுவித்து சமூக அரசியல் பொருளாதார சுதந்திரத்தைப் பெறுவதே பெண் விடுதலை எனப்படுகிறது. 

பெண்கள் உணர வேண்டியது என்ன?

அடக்கமான பெண், சிறந்த மனைவி, தாய்மையின் சிகரம், பத்தினித் தெய்வம், சிறந்த இல்லத்தரசி போன்ற பட்டங்களைப் பெறுவதற்காக நாம் பிறக்கவில்லை. இந்த பூமியில் பிறந்த அத்தனை உயிர்களையும் போல் சுதந்திரமாக வாழ்வதொன்றே மனித வாழ்வின் பொருள். அதுவே அடிப்படை உரிமை. கூடுதலாக மனிதர்களாக பிறந்தவர்கள் உழைத்து சுயமரியாதையோடு வாழ வேண்டும்.

பெண்மை, தாய்மை, இல்லத்தரசி போன்ற போன்ற பொய்மைகளுக்கு மயங்கி வீட்டிற்குள் அடைபட்டுக் கிடப்பதோ அல்லது ஆணுக்கு இரண்டாம் நிலையில் நம்மை நாமே வைத்துக்கொள்ள ஒப்புக்கொடுப்பதோ அடிமைத்தனமன்றி வேறில்லை.  இதனை நாம் விரும்பிச் செய்தாலும், அறியாமையால் செய்தாலும் நாம் அடிமைகளே. ஆகவே, அந்த அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவது ஒன்றே பெண் வாழ்வின் பொருள். நமக்கு முன் வாழ்ந்த பெண்களும், ஆண்களும் போராடியதன் விளைவே இன்றைக்கு நாம் அனுபவிக்கும் உரிமைகள். 9 வயதிலேயே திருமணம் செய்துகொடுத்தாக வேண்டும், பெண்ணுக்கு கல்வி கூடாது, சொத்து கூடாது, உடன்கட்டை ஏற வேண்டும், ஓட்டுரிமை கிடையாது, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது போன்ற ஏகப்பட்ட ஒடுக்குமுறைகள் எல்லாம் எப்படி மாறியது, பெண்களும் ஆண்களும் ஏன் போராடினார்கள் என்று பெண்கள் சிந்திக்க வேண்டாமா? அதான் இப்போது பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்களே ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று பலரும் நினைக்கின்றனர். சொல்லப் போனால் பெண்ணாதிக்கம் தான் நிலவுகிறது என்னும் வாதமும் வைக்கப்படுகிறது. பெண்ணாதிக்கத்திற்கான காரணமும் இந்த தனியுடைமை ஆணாதிக்க பொருளாதார அமைப்பின் விளைவுதான். (அதை வேறொரு சமயம் விரிவாக பார்ப்போம்)


வீட்டு வேலை வெளி வேலை குறித்த பொருளாதார விவகாரங்கள் அடுத்த பாகத்தில்…


No comments:

Post a Comment