Nov 28, 2018

தேசிய இயக்கத்தின் போது கம்யூனிஸ்ட் நீரோட்டம்




கம்யூனிஸ்ட் கட்சியானது தேசிய இயக்கத்தின் மற்றுமொரு மைய நீரோட்டமாகும்.  அதனால் சாதியப் பிரச்சினை பற்றிய அதன் நிலைப்பாடும், செயல்போக்கும் அறிந்துகொள்வது முக்கியமானது. இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இந்திய தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பாத்திரம் வகிக்க முடியாமல் போனதற்கும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை செயல்படுத்த முடியாமல் போனதற்குமான பலவீனத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தொடக்கம் முதலே (வரலாற்று வளர்ச்சியில் உள்ளார்ந்த வகையில் இருந்த புறவயக் காரணங்களை நாம் மேலே பார்த்தோம்) கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்த அடிப்படை பலவீனமாகவே இருந்தது, அது தொடரவும் செய்தது. 1920இல் டாஷ்கெண்ட்டில் கம்யூனிஸ்ட் பார்ட்டி நிறுவப்பட்டு அறிவிக்கப்பட்டது. மிகவும் தளர்ந்த அமைப்பாக அனைத்திந்தியக் கம்யூனிஸ்ட் மாநாடும் 1925இல் நடந்தது. ஆனால், அதற்குப் பிறகும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒரே தலைமையின் கீழ் இணைக்க முடியவில்லை. அந்நாளைய மந்தத் தலைமையானது, நிலவும் சூழ்நிலைகளை ஆராய்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு செயல்திட்டங்களை தீட்டி புரட்சிகர பாதையை வகுப்பதற்குப் பதில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் முக்கிய இதழானஇம்ப்ரெகோர்இல் வெளியாகி வந்த இந்தியா தொடர்பான கட்டுரைகளின் அடிப்படையில், சோவியத் கட்சியின் கடிதங்களில், பிரிட்டிஷ் கட்சியின் ரஜினிபாமிதத்தின் கட்டுரைகளில் இருந்து முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பெரும்பாலும் எடுத்தது.

1933இல் கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் சீனா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கட்சிகளின் ஆலோசனையின் பேரில், முதன்முதலில் லெனினிய அமைப்பு வடிவம் தயாரிப்பதற்காக தற்காலிக மையக் கமிட்டி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் கூட, 10 வருடம் கழித்து, அதாவது 1943இல்தான் கட்சியின் முதல் காங்கிரஸ் நடந்தது. துயரம் என்னவெனில், அப்போதும்கூட கட்சியிடம் புரட்சிகர செயல்திட்டமோ அல்லது விவசாய செயல்திட்டமோ இருக்கவில்லை. 1951இல், ஸ்டாலினுடனும், மாஸ்கோவின் சோவியத் கட்சியின் பிரதிநிதிகளுடனுமான கலந்தாலோசனைக்குப் பின் கம்யூனிஸ்ட் தலைமையானது ஒரு கொள்கை அறிக்கையையும், ஆவணத்தையும் வெளியிட்டது. 1951இல் அனைத்திந்திய கட்சி காங்கிரசிலும் 1953இன் மூன்றாம் காங்கிரசிலும் அது நிறைவேற்றப்பட்டது. பாதை மற்றும் புரட்சிக்கான பொது நோக்குநிலை ஆகியவை அடிப்படையில் சரியாக இருந்தாலும், இந்திய முதலாளித்துவ வர்க்கம், அரசு மற்றும் விவசாய உறவுகளில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய நோக்கு நிலை ஆகியவை யதார்தத்தோடு ஒத்துபோகவில்லை. பின்னர் அது மெய்ப்பிக்கப்பட்டது. எதுவாகினும், அந்த செயல்திட்டத்தை இப்போது நாம் அலமாரியில்தான் வைக்க வேண்டும். ஏனென்றால், தெலுங்கானா போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், கட்சியானது இப்போது முழுவதும் திருத்தல்வாதத்திற்கு மாறி, வெளிப்படையான பாராளுமன்ற கட்சியுமாகிவிட்டது. 1956இல் குருச்சேவிய திருத்தல்வாதத்தின் சர்வதேசிய சான்றிதழையும் பெற்றது. இந்த சித்தாந்த பலவீனத்தால்தான் கட்சியானது தேசிய இயக்கத்தின் போது மீண்டும் மீண்டும் சாதகமான சந்தர்ப்பங்களை நழுவவிட்டு, காந்தி மற்றும் நேருவின் காங்கிரசிடமிருந்து தேசிய போராட்ட தலைமையைக் கைப்பற்றத் தவறியது.

1920இன் தசாப்தத்தில், காந்தி தான் இழந்த நற்பெயரை மீண்டும் பெற முயற்சிக்கையில், சட்டமன்ற ஸ்வ்ராஜியக் கட்சியின் சமரசப் போக்கு அம்பலப்படுத்தப்பட்டபோது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கட்சிகள் நிறுவி, அதனைப் பரவலாக்கம் செய்வதற்கான காலமாக இருந்தபோது, கட்சியானது நிலைமை பற்றிய சரியான புரிதலற்று, அதனைச் சாதகமாக்கிக் கொள்ளும் தெளிவற்று ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தது. காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்த 1935இன் இந்திய அரசாங்க சட்டத்திற்கு எதிராகவோ தேசிய அளவிலான விழிப்புணர்வையோ, மாபெரும் அணிதிரட்டலையோ மேற்கொள்ள முடியாமல் போனதற்கு இந்த அமைப்புசார் பலவீனமே காரணமாகும். அதனைத் தொடர்ந்து, பி.சி. ஜோஷியின் காலத்தில் கட்சியில் நடந்த வலதுசாரி விலகலினால், இயக்கத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டது. ஐக்கிய முன்னணி தொடர்பாக இயங்கியல் கொள்கை இல்லாதபட்சத்தில், பூர்ஷுவா தேசியத் தலைமை நோக்கிய ஒரு சமரச அணுகுமுறை இயல்பானதே. காங்கிரசு மற்றும் லீகின் மாகாண அரசாங்கங்கள் மக்கள் மத்தியில் பரவலான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வந்தபோது, வெகுஜன இயக்கத்தை ஒருங்கிணைத்து அனைத்தையும் கையிலெடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். ஆனால் அது அப்படி நடக்கவில்லை.

1946 முதல் 1950 வரையிலான மாறும் காலகட்டத்தில் ஒருபுறம் தேசியளவிலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், கடற்படை கலகம், இராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவற்றில் கிளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோது, மிகவும் முக்கியமாக தெலுங்கானா, தெபாகா மற்றும் புனப்பரா-வயலாரின் மாபெரும் விவசாயப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இந்தியப் பூர்ஷுவா கட்சிகள், காங்கிரசு மற்றும் லீக் கட்சிகள் அதிகார மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, வெறும் 11% மேட்டுக்குடிகள் கூடி அரசமைப்பு சட்டத்தை இயற்றிக்கொண்டிருந்தன என்பது துரதிர்ஷ்டவசமானதே. இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், சிறு மற்றும் பெரு விவசாயக் கலகங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது மட்டும் உண்மையான பொருளில் ஒழுங்கமைக்கப்பட்ட லெனினிய கட்சி இருந்திருக்குமேயானால், நாட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், இதே காலகட்டத்தில்தான் ரணதிவே ஒருபுறம்இடதுசாகசப் போக்கை நடைமுறைப் படுத்திக்கொண்டும், மறுபுறத்தில், ஜனநாயகப் புரட்சி மற்றும் சோஷலிசப் புரட்சிக் கட்டங்களை இணைப்பதற்காக யுகோஸ்லாவியாவின் திருத்தல்வாதி கார்தெல்ஸின் சிந்தனைகளை உருவி காற்றில் கோட்டைக் கட்டி வந்தார்.

பம்பாயில் டாங்கே குழுவோ பொருளாதாரவாதம் எனும் சகதியில் மூழ்கிப் போயிருந்தது. ஆந்திரக் கட்சி கமிட்டி ஓரளவுக்கு சரியானப் பாதையில் சென்றுகொண்டிருந்தது, சீனத்தைப் போலவே மக்கள் யுத்தக் கட்சியை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.  ஆனால் மையத் தலைமையோஆந்திர ஆய்வறிக்கையைநிராகரித்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இந்த அனைத்துப் போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தங்களின் தீரச்செயல்களாலும், தியாகத்தாலும் முன்னணியில் இருந்தனர். ஆனால், புள்ளிகளை இணைத்து நாடு தழுவிய போராட்டமாக இதனை மாற்றக்கூடிய தலைமை இல்லாமல் போனது. இறுதியில், தனித்தனியானப் போராட்டங்கள் ஒன்று, சிதறடிக்கப்பட்டது அல்லது நசுக்கப்பட்டது.  இராணுவத்தை அனுப்பிக் கொடூரமான முறையில் நேரு தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கினார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சாதியப் பிரச்சினையை புறக்கணிக்கின்றன (சில நேரங்களில் சாதிய அடிப்படையில் பாரபட்சம் கொண்டவர்கள் என்றும் சொல்லி) என்று பல்வேறு தலித் அறிவுஜீவிகள் குற்றம் சாட்டுகின்றனர். புதுப் பணக்கார மார்க்சியர்கள் சிலரிடமும் இது போன்ற சிந்தனை முறையைக் காண முடிகிறது. இதை வழிமொழியும் சில கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களும், மார்க்சியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் இடையிலான இணைப்பு என்று சொல்லி எந்தவிதமான விரிவான ஆய்வுகளையும் முன்வைக்காமல் பேசிவருகின்றனர். இதன் மூலம் தங்களின் கடந்தகால பாவங்களை கழுவிவிட முடியும், தலித்துகளின் மனதை வென்றுவிட முடியும் என்று கருதுவதுபோல் தோன்றுகிறது.  ஒருவகையில், இது தோல்வி மனப்பான்மை அல்லது ஜனரஞ்சகவாதம் (பாப்புலிசம்). கம்யூனிஸ்ட் கட்சியானது, சரியான கோட்பாட்டுருவாக்கப் பணியை செய்து, இந்திய சமூகம் பற்றியும், புரட்சி தொடர்பான மற்ற பிரச்சினைகள் குறித்தும் கொள்கைகளை, யுத்திகளை முறையாக வகுத்து, சாதியப் பிரச்சினையை மற்றும் புறக்கணித்துவிட்டது என்று சொல்ல முடியாது.

1951 வரை இந்திய புரட்சி குறித்தும் விவசாய வேலைத் திட்டத்திற்குமே கட்சியிடம் சரியானதொரு ஆவணமோ, தெளிவான பாதையோ இல்லாதபோது, சாதியப் பிரச்சினை பற்றி மட்டும் தெளிவான ஆவணமும், பாதையும் எப்படி இருந்திருக்க முடியும்? ஆகவே, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பலவீனம் என்பது இந்திய புரட்சிக்கான வேலைத்திட்டம் தொடர்பான பெரிய பலவீனத்தோடு தொடர்புடையது. இருப்பினும், 1930இல் கட்சி முன் வைத்தகூட்டு நடவடிக்கைக்கான ஒன்றுபட்ட முன்னணிஎனும் ஆவணத்தை முன்வைத்தபோது, சாதியமைப்பு மற்றும் தீண்டாமை குறித்து விரிவாகவே விவாதித்திருந்தது. நிலபிரபுத்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களோடு சாதி எதிர்ப்பு போராட்டத்தையும் இணைத்து, “தீண்டப்படாதஉழைக்கும் மக்களை நோக்கி அறைகூவல் விடுத்தது. அவர்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்த முனையும் சதிகளிலிருந்து விலகியிருந்து, நாடு முழுவதும் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து நிலப்பிரபுத்துவத்திற்கும், காலனியத்திற்கும் எதிராகப் போராடும்படி அறிவுறுத்தியது.

அதேவேளை, சாதியமைப்பு மற்றும் சாதியடிப்படையிலான அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுக்கும் எதிராக போராடுவோம் என்றும் அறிவித்தது. மீண்டும் இதே பிரச்சினை, 1948இல் கட்சியின் இரண்டாம் காங்கிரசில் அரசியல் ஆய்வறிக்கை பற்றிய விவாதத்தில் எழுப்பப்பட்டு, தீண்டாமைப் பிரச்சினை தொடர்பாக ஐந்து பத்திகள் இடம்பெற்றிருக்கிறது. ‘மேல்சாதி பூர்ஷுவா வர்க்கத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களைத் தொடுப்பதோடு, சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக நின்று சாதியரீதியாகப் பிளவுபடுத்தி, தீண்டப்படாதவர்களை பிரிக்க முயலும் சந்தர்ப்பவாத, பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராகவும் அம்மக்கள் போராட வேண்டும் என்று தீண்டப்படாதவர்களை நோக்கி கோரிக்கை வைத்தது. தெளிவாக, காங்கிரசு தலித் தலைவர்கள் மற்றும் பெரியார் மட்டுமின்றி, முக்கியமாக அம்பேத்கர்தான் இங்கு மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியானது தீண்டாமையை எதிர்த்து போராடுவது குறித்து பேசும்போது சாதியொழிப்பிற்கு எந்த செயல் திட்டங்களையும் வழங்காமல், சாதியரீதியான பாரபட்சங்களையும் உருவாக்கியது என்றும் அம்பேத்கரை சந்தர்ப்பவாதி, பிரிவினைவாதி என்று கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டது குறித்தும் சுபாஷ் கடாடேவும் மற்றும் பலரும் வருத்தப்படுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியானது சாதி ஒழிப்பிற்கு உறுதியான ஒரு வேலைத்திட்டத்தை வழங்கவில்லை என்பது ஒரு தனிப்பிரச்சினை. அம்பேத்கரும் சாதி ஒழிப்பிற்கு எந்த வேலைத்திட்டத்தையும் வழங்கவில்லை. அதை நாம் பின்னர் விவாதிப்போம். ஆனால், அன்றைய யதார்த்த நிலை மீது எப்படி ஒருவர் பாரா முகம் காட்ட முடியும்? காங்கிரசின்மேல்சாதி தலைமையை எதிர்க்கையில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் மேல்சாதி ஜமீன்தார்களுக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்து தலித்துகளை ஒருங்கிணைக்கவில்லை, அவர்களது புரவலர்களான பிரிட்டிஷாருக்கு எதிராகவும் அக்கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டவில்லை. காலனிய எதிர்ப்பு போராட்டத்திலிருந்து அம்பேத்கர் விலகியே இருந்தார், சுதந்திர போராட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து வந்தார். பின்னர், 11 சதவிகித மேட்டுக்குடிகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமன்றத்தில், லீகின் ஆதரவுடன் இடம்பெற்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். நேரு அரசாங்கமானது தெலுங்கானாவில் காட்டுமிராண்டித்தனமாக விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒடுக்கியும், கொன்று குவித்தும் வந்தபோது அம்பேத்கர் காங்கிரசுக்கு நன்றிகளை தாராளமாக வாரி வழங்கிக்கொண்டிருந்தார் (அவரது சட்டமன்ற உரைகளைக் காணவும்).

அவருடைய பாத்திரத்தை முழுமையாக ஆய்வு செய்வோம், ஆனால் 1948இல் அவருடைய இந்த செயல்பாடுகளை சந்தர்ப்பவாதம், பிரிவினைவாதம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்? தலித்துகள் செய்திருக்க வேண்டியது என்னவெனில், உண்மைக்கு மூலாம் பூசி அம்பேத்கரை தழுவிக்கொள்வதல்ல, ஜனநாயகப் புரட்சிக்குள்ளாகவே தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புக்கான உறுதியான தொடர் போராட்ட வேலைத் திட்டங்களை வகுத்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இதைச் செய்யத் தவறியதென்பது மாபெரும் குறைபாடுதான். அதேவேளை, ஏஐடியுசியும் தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாட்டை ஒரு பிரிச்சினையாக தனது நான்கு-ஐந்து-ஆறாம் காங்கிரசில் குறிப்பிட்டு, பின்னர்தொழிலாளர்களுக்கான உரிமை ஆவணத்திலும்சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிசான் சபையின் மையக் கவுன்சிலும் தீண்டாமை எதிர்ப்பை தனது 1945இன் உரிமை ஆவணத்தில் குறிப்பிட்டது. இதையெல்லாம் நாம் முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது. அதேபோல், இடைவெளியையும், பலவீனத்தையும் மறுத்துவிடவும் முடியாது.

ஜனநாயகப் புரட்சியின்போது, சாதியமைப்பின் தோற்றம் பற்றிய சமூக அடித்தளங்கள், காலனிய சகாப்தம் வரையிலான சாதியமைப்பின் இறுப்பின் தன்மை மற்றும் சாதி, வர்க்கம் இரண்டுக்கும் இடையிலான இணையுறவை பற்றிய மார்க்சிய ஆய்வை மேற்கொண்டபோது சாதியப் பிரச்சினை குறித்த உறுதியான வரைவு உத்தியை வழங்காமல் போனது; சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவினைகள் மற்றும் பாகுபாடு கலாச்சாரத்திற்கு எதிரான நிலையான, பரவலான, முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை வழங்கவில்லை. அதுகூட போகட்டும், பாட்டாளி வர்க்க அரசு நிறுவப்பட்ட பின்னர் முழுமையான சாதி ஒழிப்புக்கான நடைமுறை அல்லது பொது நோக்குநிலை என்னவாக இருக்கும் என்றுகூட முன்வைக்கவில்லை! இந்த பலவீனமானது தனித்ததொரு பிரச்சினையல்ல; 1947க்குப் பிறகு நான்காண்டுகள் வரை கருத்தியல் பலவீனத்தால் புரட்சிக்கான எந்தவொரு செயல்திட்டமும் இல்லாமல் போன பலவீனத்தினால் நிகழ்ந்தது.

ஆனால், நாணயத்தின் இருபக்கத்தையும் காணாமல் போனால் நாம் வரலாற்றுக்குத் துரோகம் இழைப்பதாகிவிடும். கருத்தியல் மற்றும் பாதை சார்ந்து பலவீனங்கள் இருப்பினும், தங்களுக்கு செல்வாக்கு இருந்த பகுதிகளில் எல்லாம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் துணிவுடன் போராடினார்கள். அவர்களைக் காட்டிலும் வேறு எவரும் அப்பணியை மேலாகச் செய்திடவில்லை. சொல்லப் போனால், மேல் சாதி நிலவுடைமையாளர்கள் இகழ்ச்சியுடன்சம்மார்கள் மற்றும் தூஷத்துகளின் கட்சி” (தமிழ்நாட்டு சூழலில் பள்ளர், பறையர் கட்சி-மொ.ர்) என்றே கூறிவந்தனர். கிராமங்களில் பெரும்பாலும் தலித்துகளாக இருந்த நிலமற்ற உழைப்பாளர்கள் மத்தியில்தான் கம்யூனிஸ்டுகளின் பிரதான களம் இருந்தது. விவசாய சபைகளில், குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகளுடன்தான் செல்வார்கள், ஏனென்றால் அவர்கள்தான் தங்களது கோரிக்கைகளை போர்க்குணத்துடன் முன்வைப்பார்கள் என்று கருதினார்கள். (நிலப்பிரபுத்துவ விவசாயிகளிடம் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இருந்தபோதிலும்).  ஆனால், அந்தக் குத்தகைதாரர்களும்கூட கம்யூனிஸ்டுகள் தலித்துகளின் தோழமை அமைப்பு என்றே கருதினர்.

நாடு முழுவதிலும், தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அல்லது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான இடங்களில் கம்யூனிஸ்ட் ஒருங்கமைப்பாளர்கள் இயக்கங்களை முன்னெடுத்தனர். 1952-72* வரை, முழுநேர புரட்சியாளர்களின் மரபும், செயல்பாடும் அதன் உண்மையான பொருளில் இருந்தது.  மேல்சாதியைச் சேர்ந்தவர்களும் தலித்துகளின் குடியிருப்பில்தான் வசித்து வந்தனர். திருத்தல்வாத சகாப்தத்திலும் இந்த மரபு சிறிது காலம் தொடர்ந்தது. தெலுங்கானா விவசாயப் போராட்டத்திற்கான ஆயத்த வேலைகள் ஆந்திர மஹாசபாவில் நடந்தபோது, மற்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் சாதிய பாகுபாடு, தீண்டாமை, மத மூட நம்பிக்கைகள் மற்றும் பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். சக்தி வாய்ந்த சமூக இயக்கங்களின் வழி வர்க்க ஒற்றுமையைப் பலப்படுத்தினார்கள். ஆகவே, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிப்பதற்கு பதில், பிரச்சினைக்கான ஆணி வேரை ஆய்வு செய்வதே அவசியம். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கருத்தியல் பலவீனப் பிரச்சினை என்றுதான் அதனைப் பார்க்க வேண்டும்.

* நூலில் தவறாக 1952-52 என்று அச்சாகியுள்ளது. புரட்சிகர கம்யூனிஸ்ட் போராட்ட வரலாற்றை குறிப்பதால் அது 1952-1972ஆக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், நூலிலிருந்து... சுயவிமர்சனத்திற்கு கம்யூனிஸ்டுகள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்... தலித்திய அறிவுஜீவிகள்... ஆதரவாளர்களிடமும் இதே நேர்மையை எதிர்பார்க்கிறோம்)  

No comments:

Post a Comment