Apr 8, 2018

விளம்பரம் என்னும் நஞ்சு...



திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா?
மீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்?
உஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா? இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்?
முதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.
அடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.
ஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா? அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா? உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது? உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.
இந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா? உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல்? பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.

சமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்?

நீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.
முதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.
மிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.
திரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.
இச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.
கூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்?
உங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.
உங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.
விளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.
நன்றி
கொற்றவை

No comments:

Post a Comment