Apr 6, 2018

தனிமை என்னும் துணைதனிமை - அதன் பன்முகத்தைக் கண்டுகொண்டால், தனிமை என்பது எப்போதும் துயராகாது.  
தனிமை குறித்து என்னைச் சுற்றியுள்ளவர்கள் துயரோடு பேசுகையில், அவர்களுக்காக இதை எழுத விழைகிறேன்.

தனிமை என்பது துணையின்றி வாழ்வதாகக் கருதப்படுகிறது. துணையோடு வாழ்வதே பெரும்பாலும் தனிமையாக உருமாறுகிறது என்பதே இச்சமூகத்தின் நகை முரண். சுயநலம், அதிலிருந்து விளைந்த சமூக மதிப்பீடுகள், அதற்கேற்ற சமூக உறவுகள், அதிலிருந்து எழும் நெருக்கடிகள் இதுவே வாழ்க்கை வட்டமாகிவிடுகிறது. குடும்ப உறவுகளும், காதல் உறவுகளும் அதன் ஒரு சிறிய அமைப்பு வடிவம். அவ்வளவே! இதில் பெறுவதற்கு நிறைய இருப்பினும், இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே எனது கண்டறிதல். அப்படியே ‘இழப்பு’ ஏற்படினும், அங்கு ஒரு புதியதற்கான இடம் பிறக்கிறது. இழப்பு அனுபவமாக மாறுகிறது. அது பல தத்துவங்களை உருவாக்கவல்லது. தேவைப்படுவதெல்லாம் அகவய மூழ்குதலுக்குப் பதிலாக புறவய எதிர்நீச்சல்.

சமூக உறவுகள் பற்றிய அறிவுத் தேடல் எதிர்நீச்சல் போடும் சக்தியை வழங்கும். கைக்கொண்டு பாருங்கள். மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பரிணமித்து வந்துள்ளன. உறவும் கூட பண்டமயமாகிவிட்ட இக்காலகட்டத்தில் பொருள்களின் (நுகர்வுப் பொருள்/பணம்) இருப்பும் அளவுமே ஒருவரின் வாழ்வை, சிந்தனையை, தேவையை, உறவுகளை, தேடலை வடிவமைக்கிறது. இந்த உண்மை விளங்குகையில், நம்மைக் கட்டுப்படுத்தும் எதுவொன்றும் - உணர்ச்சிகள் – உணர்வுகள் உட்பட எதுவும் இயற்கையானதல்ல என்னும் உண்மையும் விளங்கும். அந்த உண்மையே நல் துணையாக மாறி நம் வாழ்வை இன்பமயமாக்க வல்லது.

ஆனால், இத்தேடலை மேற்கொள்ளக்கூட நமக்கு ஒரு மனநிலை தேவைப்படுகிறது. தனிமைத் துயர் என்னும் மூடநம்பிக்கை அதற்குள் நம்மை மூழ்கடித்துவிடுகிறது. துன்பப்படாமல் இருக்க முடியாது எனினும், அதற்கொரு சிறப்பிடம் கொடுத்துவிடாதீர்கள். ஏனென்றால் பிறகு அதனை சுவைக்கத் தொடங்கி, அதுவே ஒரு போதையாகி விடக்கூடும்.

தனிமை என்பது அதிகாரமளித்தல். நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ளவும், சுதந்திரமாக இயங்குவதற்குமான அதிகாரத்தை அது நமக்கு வழங்குகிறது. தனிமை என்பது நேரம். அது முழுக்க முழுக்க நமக்கானதாய் அமைகிறது. அதனை திகட்ட திகட்ட பருகலாம்.  

துணை என்று ஒன்றிருந்தால் இவற்றையெல்லாம் சரிசமமாக பகிர்ந்துகொள்ளலாம். இல்லையேல் அதுவும் நமகே நமக்காய்… கொண்டாடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தனிமை என்பது வீடு / குடும்பம் என்னும் அமைப்பிற்குள் நம்மை அடைத்துக்கொண்டு நாம் கற்பனை செய்வதாகும். அந்த சிறைக்குள்ளிருந்து நாம் தான் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். அதற்கு நூல்களும், வாசிப்பும் சிறந்த ஊக்கமருந்து. வாசிக்க வாசிக்க சிறகு முளைப்பதை உணர முடியும். அடுத்ததாக இசை எந்த முயற்சியுமின்றி நம்மை தளர்த்தக்கூடியது. பயணம். தனியாக வாழ்பவர்கள் பெற்றிருக்கும் சிறந்ததொரு அதிகாரமிது.

“இதற்கெல்லாம் பணம் தேவையில்லையா. சாப்பாட்டிற்கே வழியில்லாத போது எங்கிருந்து புத்தகம் வாங்க, பயணம் போக…”    

இப்போது நான் சொல்லப்போவது சற்று காட்டமாக இருக்கலாம். உண்மையில், கடின உடல் உழைப்பாளிகளுக்கும். கொடிய வறுமையில் வாடுவோருக்கும் தனிமைத் துயர் பற்றி எண்ணக் கூட நேரமிருக்குமா தெரியவில்லை. இந்தத் தனிமை துயரில் வாடுவோரும் பெரும்பாலும் குறிப்பிட்ட வர்க்கத்தினராக (பெரும்பாலும் மூளை உழைப்பாளிகளாக) இருக்க வாய்ப்புள்ளதோ என்று நான் எண்ணுவதுண்டு. வறுமைக்கோட்டில் வாழ்வோருக்கு வாழ்வதே போராட்டமாக இருக்கையில் உழைத்து களைத்து உறங்கச் சென்றுவிடுகிறார்கள் போலும். அதையும் மீறி துணை சார்ந்த விஷயங்களில், ‘அழகான வாழ்க்கை’ பற்றிய அவர்களுடைய எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஆகவே உறவமைதல் எளிதாகி விடுகிறது. அந்நிலையிலிருந்து சற்றே மேல் நிலையில் இருப்பவர்களுக்கே சமூக அழுத்தத்தின் காரணமாக இந்த மனச்சிக்கல் ஏற்படுகிறது. (அதற்கும் மேல் நிலையில் இருப்பவர்களின் நிலை வேறு).
இன்பமென்றும், காதலென்றும், சிறந்ததொரு வாழ்வென்றும் நமக்குப் போதிக்கப்படுவதை கற்பனை செய்துகொண்டிருக்க நிறைய நேரமிருப்பதாலும், பகுத்தறியாமல் அவற்றை அப்படியே உள்வாங்குவதாலும் கூட தனிமை என்பது துயர் மிகுந்ததாகிவிடுகிறது.

இந்தத் தனிமை என்னும் ‘சாத்தானை’ பிறக்க விடுவதே ஆபத்து. கருவிலேயே அழித்துவிடுங்கள். இல்லையேல் அது சாத்தானை விடக் கொடிய ‘கடவுளாய்’ வளர்ந்து நம்மை அழிக்க அவதாரம் எடுத்துவிடும்.

தனிமையிடமிருந்து விடுபட மற்றொரு உயிர்தான் துணையாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஓருயிர் என்பதை விடுத்து பல்லுயிர்களை நாடிப்பாருங்கள். மனிதனிடமிருந்து விலகி, சமூகத்தை நெருங்குங்கள். நமக்கு இன்பம் தரும் நிலையில் இங்கு எந்த மனிதருமில்லை. நமக்கான இன்பத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கு நமக்கான இன்பம் என்ன என்பதை முதலில் நாம் வரையறுக்க வேண்டும்.  அப்படி வரையறுக்க பகுத்தறிவே வழிகாட்டி. சமூக உறவுகள் (மனித சாரம்) பற்றிய சமூக விஞ்ஞான நூல்கள் (எழுத்துகள்) அதற்கான கலங்கரை விளக்கம்.

மேற்சொன்னவை நம்மை மனதளவில் விடுவிக்க உதவலாம். உடல் ரீதியான தேவைக்கு என்ன செய்வது என்றொரு கேள்வி எழலாம். துணை இருப்பதால் மட்டுமே யாரும் உடலின்பத்தில் திளைத்து மகிழ்ந்து வாழ்ந்துவிடுவதில்லை. அது வேறொரு புதிய சிக்கலாக மாறிவிடுவதும் உண்டு. குறைந்தபட்சம் தனியாக வாழ்வோருக்கு இத்துன்பம் வாய்க்காது. இயற்கை அதற்கும் நமக்குள் சில இயல்பூக்க வழிகளை வகுத்துள்ளது. அதன் மூலம் அவ்வேட்கையை சற்று தணித்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக பாலுறவு மற்றும் காமம் சார்ந்த இழிவான ஆணாதிக்க சமூக கட்டமைப்பால் உடலுறவு என்னும் இயற்கைத் தேவையை நாம் ‘முறைபடுத்தப்பட்ட உறவுக்குள்’ மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அதுபற்றிய அரசியல் அறிவை பெற்றுவிட்டால், இச்சக்கலிலிருந்து விடுபடவும், தேவையான தீர்வை வகுத்துக்கொள்ளவும் நாமே கற்றுக்கொள்வோம்.

நம் (மன) மகிழ்ச்சிக்காக நாம் எவரையும் சார்ந்திருக்கும் வரை மகிழ்ச்சி என்பது எட்டாக் கனியே.

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என்று எண்ணிவிடாதீர்கள். இது அனுபவப் பகிர்தலும் கூட J

தனிமை வாய்ப்பு!
தனிமை திறப்பு
தனிமை புதுமை!
தனிமை விடியல்!
தனிமை புத்துணர்ச்சி
தனிமை செல்வம்
தனிமை இன்பம்
தனிமை கொண்டாட்டம்
தனிமை புதுமொழி
தனிமை காதல்
தனிமை பேரறிவு
தனிமை மெய்யறிவு
தனிமை விடுதலை


No comments:

Post a Comment