திட்டமிடாமல் நிகழும் சில நிகழ்வுகள் சில வேளைகளில்
ஆச்சரியங்களை இறைத்துச் செல்கின்றன. ஜனவரி 21ஆம் நாள், மாலினி ஜீவரத்தினம் இயக்கிய
“லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன்” ஆவணப் படத்தைக் காணச் சென்றதும் அப்படித்தான் நிகழ்ந்தது.
தோழர் ஆனந்த் குமரேசனிடமிருந்து அழைப்பு வர, அட நம்ம
மாலினியா படம் இயக்கியிருக்கிறாள் என்ற வியப்புடனும், ஆவலுடனும் திரையிடலுக்குச் சென்றேன்.
“எதிர்ப்பார்ப்புகளோடு ஏன் வருகிறாய்” என்று முகத்தில் அறைந்தாள் மாலினி. ஆம், நமக்குள் எவ்வளவு முன் முடிவுகள் உள்ளன, நாமே
அறியாத அருவருப்புகள் உள்ளன என்பதை லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன் வெளிச்சம் போட்டு காட்டியது.
நமக்குள் இருக்கும் அந்நியளை (னை) வெளிக்கொண்டுவருகிறாள் தீவிரா!
தனியுடைமை சமூகத்தில் எவரும் சுதந்திரமானவர்கள் இல்லை
என்பதற்கு மற்றுமொரு ஆவணம் “லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன்”. எண்ணற்ற அடிமைகள் இவ்வுலகில்,
ஆனால் அவர்களின் வரலாறு ஒன்றுதான். அதுவே ஒடுக்கப்படும் வரலாறு. வரலாற்றை வலிமையானவர்கள்
தானே எழுதுகிறார்கள் என்று படம் தொடங்கும்போதே வெளிப்படுகிறது மாலினியின் அரசியல் விழிப்புணர்வு.
“அடிமைகளின் துணிச்சலைச் சித்தரிப்பதற்கு வரலாற்று ஆசிரியர்கள் இல்லையே” என்ற ஹோவர்ட்
ஃபாஸ்டின் வரிகள் அப்போது எனக்குள் எதிரொலித்தது. அரசியல் என்பதே பொய்யும் புரட்டும்
தான், அதைத்தான் வரலாறு என்று எழுதிவிடுகிறார்கள் என்கிறார் ஃபாஸ்ட். ஆம், ஆளும் வர்க்கங்களால்
எழுதப்படும் வரலாறானது பொய்களின் கூடாரம், ஒடுக்குமுறையை, சுரண்டலை பரப்பும் போதை மருந்து.
ஆகவே, ஒடுக்கப்படுபவர்கள் தங்களின் வரலாற்றை தாமே
எழுதுவது அவசியமாகிறது. அந்த வகையில் இதுபோன்ற படைப்புகள் முக்கியமானவை. எந்த ஒரு சமூகப்
பிரச்சினையும், அதைப் பற்றி பேசப்படும் அளவைப் பொறுத்து கவனத்தை ஈர்க்கும். அதிலும்
ஒரு வலிமை அரசியல், அளவு அரசியல் இயங்குகிறது. அதனால் இங்கு, ஒடுக்குமுறை வடிவங்களுக்கும்
ஒரு தரவரிசை பட்டியலை நம்மை அறியாமலே வழங்கிவிடுகிறோம். சமூகத்தின் பிரதான பிரச்சினை
இதுதான் என்று ஒன்றை கவனித்து மற்றொன்றை புறக்கணித்துவிடுகிறோம். அப்படித்தான் காதல்
மற்றும் பால் உறவு பிரச்சினனிகளில், எதிர் பால் காதல், மற்றும் அதன் மீதான வெறுப்பரசியலை
பேசிய அளவுக்கு ஓர் பால் ஈர்ப்பு, காதல் அதிலும் நிகழும் ஆணவக் கொலைகள் பெரிதாக பேசப்படாமல்
போய்விட்டது அல்லது நம் ‘selective nature’இனால் நாம் அதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்
என்று நினைக்கிறேன்.
லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன், அதுபோல் கவனிக்கப்படாமல்
விடப்பட்ட - ஓர் பால் ஈர்ப்பில் – பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவின் பரிமானத்தை
கவிதையாகப் பேசுகிறது. அதேவேளை அக்காதல் எதிர்கொள்ளும் சமூக அவலங்களை கேட்டீரில்லையோ
என குரலெழுப்புகிறது. ஆவணப்படங்களின் கனத்த தன்மையின்றி (பெரும்பாலான) ஒரு எளிமையான
தகவல் பரிமாற்றமாய், நம்மை அந்நியப்படுத்தாமல், கைகோர்த்தபடி நிகழும் உரையாடல். உண்மை
மிக எளிமையானதல்லவா? அதற்கு அலங்காரங்கள் தேவையில்லை என்னும் தெளிவோடு மாலினி இந்தப்படத்தை
இயக்கி இருக்கிறாள். வாழ்த்துகள்.
சாதிய எதிர்ப்பு மட்டுமின்றி அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும்
எதிர்க்கும் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும் என்பதில் பா. ரஞ்சித் முனைப்புடன்
இருக்கிறார் என்பதைக் கண்டபோது மகிழ்ச்சி!
ஆணாதிக்கத்தால் பீடிக்கப்பட்ட சமூகத்தில் வளர்வதாலோ
என்னவோ காதல் என்றதும் நமக்கு அது ஒழுக்கக்கேடாகவே தெரிகிறது. அதிலும் தன் பால் ஈர்ப்பு
எனில் காம வெறி பிடித்தவர்கள் என்பதே நம்மில் பலரின் புரிதல். ஆனால் நாங்கள் தேடுவது
உங்களின் காதலைக் காட்டிலும் மேலானதொரு அன்பை என்று அந்தக் காதலர்கள் நம்மிடம் ஆணவத்துடன்
கூறுகிறார்கள். காதலில், காமமே கண்ணெனக் கொண்டாலும் தவறில்லை என்பதில் எனக்கும் உடன்பாடே.
ஆனால் ஆணாதிக்கச் சமூகத்தில் எதிர்பால் காமத்திற்கு புனித இடமும், ஓர் பாலினக் காமத்திற்கு
அறுவறுப்பானதொரு இடமும் அளிக்கப்படுவதால், இதை அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.
ஒரு சமூகப் பிரச்சினையை அதன் வரலாற்று வளர்ச்சியோடு
பதிவு செய்யும்போதே அது ஒரு சிறந்த ஆவணமாகும். அந்த வகையில், புராண காலம் தொடங்கி,
நாட்டுப்புற வாய்வழிக் கதைகளாக வளர்ந்து இன்றைய மனிதர்களின் வாழ்க்கைப் பகிர்வாக நகர்கிறது
படம். அதில் பகிரப்படும் நாட்டுப்புற கதைகள் தொடங்கி, நம்மோடு வாழ்ந்து சமூக படுகொலைக்கு
உள்ளான நமது சகோதரிகளின் கதைகள் என எல்லாமும் நமது மனதை உலுக்கிச் செல்கிறது. “சே!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என குறளெழுதிய ஒரு சமூகத்திலா நாம் வாழ்கிறோம் என்று
வெட்கித் தலைகுனியும் தருணமது.
படம் ஓடும் அந்த 1 மணி நேரமும் நாம் இப்படித்தான்
வெட்கித் தலை குனிவோம் அல்லது குற்ற உணர்வடைவோம்.
மாலினியும், அத்திரைப்படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொருவரும்
நமக்கு அன்பால் நிறைந்த வேறோர் உலகத்தை அறிமுகம் செய்கிறார்கள். (LGBT Community படங்கள்
பல வந்திருக்கின்றன. அவையெல்லாம் கண்டிப்பாக இம்முயற்சியிலானவையே என்பதில் ஐயமில்லை.
ஆனால், அவற்றை நான் கண்டதில்லை என்பதற்காக என்னை மன்னியுங்கள்!) அன்பு இன்னதாய் தான்
இருக்க வேண்டும் என்று வரையறுப்பது எவ்வளவு முட்டாள் தனமானது, இல்லையில்லை காட்டுமிராண்டித்தனமானது.
அன்பைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்குப் பின்னால்
இருக்கும் அரசியலையும் இந்தப்படம் பேசுகிறது. அந்த விதிகளைத் தகர்த்து, சுதந்திர மனிதர்களாக காதல்
செய்ய எங்களுக்கு உங்கள் அனுமதி தேவையில்லை, புரிதல் இருந்தால் போதும் என்கிறார்கள்
அப்பெண்கள். நம்மைப் போல் விலக்கிவைப்பதில் நம்பிக்கையற்றவர்களாய் இருக்கும் இந்த மாற்றுப்
பாலினத்தவர் நம்மிடம் புரிதலையும் வேண்டுவது கூட அவர்கள் மானுடத்தின் மீது கொண்டுள்ள
பெரும்காதலுக்குச் சான்றாகும்.
அந்த மரியாதையை காத்துக்கொள்வது இனி நம் கையில்!
#Ladiesandgentlewomen ஆவணப்படத்தை தயாரித்துள்ள
பா. ரஞ்சித், இயக்கியுள்ள மாலினி, இசையமைத்துள்ள ஜஸ்டின் பிரபாக்கரன் உட்பட இதில் பங்காற்றியுள்ள
அனைத்து தோழர்களும் பாராட்டிற்குறியவர்கள். சுபா கண்ணன், கிருபா முனுசாமி, ஆர்த்தி
வேந்தன், ஸ்ரீஜித் சுந்தரம் என்று குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்
கொஞ்சம் நீண்டதே. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறப்பான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இவர்களின் தகவல்களையெல்லாம் மிஞ்சும் தகவல் என்ன தெரியுமா? லெஸ்பியனா? பொண்ணும் பொண்ணும்
கல்யாணம் பண்ணிக்கிறதா என்று கேட்கும் நம் சமூகக் குரல்கள். அவர்களோடு இப்படம் வாயிலாக
உரையாடியபின் ஏற்படும் மாற்றமென்ன… நீங்களே காணுங்கள் #லேடீஸஅண்ட்ஜெண்டில்வுமன்.
அன்பே பொருளாய் இருக்கும்
உறவுக்கு, ஆணாதிக்க அகராதி கொண்டு இல்லாப் பொருள் கொடுக்கும் அறியாமைகெதிராய் இதுபோன்ற
பல படைப்புகளை நம் கலைஞர்கள் படைக்க வேண்டும்.
-
கொற்றவை
23.1.2018
No comments:
Post a Comment