Jan 30, 2016

ரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு


எப்படி கடவுள் இல்லையோ அப்படி சாதியும் இல்லை. பணம் மற்றும் கடவுளின் வரிசையில் மனிதன்தான் சாதியைப் படைத்தான். வணக்கம் தோழர்களே, இன்று நாம் ரோஹித் வெமுலாவின் நினைவுச் சொற்பொழிவி நிகழ்விற்காகக் கூடியிருக்கிறோம்.  பார்ப்பனிய இந்துத்துவ சாதியக் கருத்தியலுக்கு , அடிமையாகிப் போயிருக்கும் இந்தியாவில் உள்ள  ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்து சாதிய ரீதியான புறக்கணிப்பிற்கும், அரசியல் ரீதியான இந்துத்துவ காழ்ப்புணர்ச்சிக்கும் பலியானவர்தான் ரோஹித்.  ஒரு சமூக எழுச்சிக்காக தன் உடலை அவர் ஆயுதமாக்கியது நமக்கெல்லாம் வருத்தம் தரக்கூடியதுதான் எனினும், இதுபோன்ற மரணங்கள் இனி எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடாது எனும் கவலையையும் அது நம்முள் எழுப்பியுள்ளது.

சென்ற வாரங்களில் தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை, மர்மமான முறையில் மரணம் போன்ற செய்திகள் உண்மையில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பாகுபாட்டினால் நிகழும் சமுதாயப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.  இந்நிலையை எப்படி மாற்றப் போகிறோம் என்பதே இன்று நம்முன் இருக்கும் கேள்வி.

காலம் காலமாக யாரோ சிலரின் பேராசைக்கு நாம் நம் பிள்ளைகளை, நம் தோழர்களை இழந்து வருகிறோம். ஆம் பேராசை!  பகிர்ந்துண்டு வாழும் எண்ணமின்றி மற்றையோரை விட தமக்குக் கூடுதலாக செல்வம் வேண்டும் எனும் பேராசையே  மனிதனை மனிதன் சூரையாடியும், வேட்டையாடியும் வாழப் பணிக்கிறது. அப்படியென்றால் எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையா என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம்.  “ஆதியில் செயல் இருந்தது” எனும் ரோசா லுக்சம்பர்க்கின் மேற்கோளைச் சுட்டிச் சொல்வதானால் செயல் பிறந்தது, செயலினால் சில விளைவுகள் பிறக்கின்றன, அந்த விளைவிலிருந்து சில விளைவுகள், அதிலிருந்து சில விளைவுகள் இப்படித்தான் சமூகம் முன்னேறியிருக்கும். சொல்லா செயலா என்றால் செயல்தான் முதலில் தோன்றியது என்று அடித்துச் சொல்லலாம் செயலினால்தான் இந்த அண்டமே தோன்றியிருக்கிறது, அந்த அண்டத்திலிருந்து கிரகங்கள், அதில் ஒரு கிரகத்தில் உயிரினம். பெரு வெடிப்பு ஏற்படும் (நானோ நொடியில் ஏற்பட்ட பின்பு) போதுதான் ஒலி தோன்றும், செயல் இல்லாத இடத்தில் ஒலி தோன்ற முடியாது.  ஆக ஆதியில் சொல்லுமில்லை, ஆதியில் கருத்துமில்லை.

சொல், மொழி, கருத்து, எல்லாமே மனிதன் தோற்றுவித்ததுதான். ஒவ்வொருவரும் இதை ஆழமாகப் புரிந்துகொள்வார்களேயானால் மூடத்தனமாகவும், பேராசைக்ககவும் தோற்றுவித்த கருத்துகளை முற்றிலுமாக கைவிடுவார்கள். ஆனால், கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல் அனைத்தும் பண்டமயமாகும் போது தான் படைத்த கருத்தும் மனிதனை ஆளத் தொடங்குகிறது என்பதைத்தான் நாம் கண்டு வருகிறோம்.

சொல்லும் செயலும் குறித்துப் பேசிவந்தோம் இல்லையா, மனிதர்களிடையே இன்று அன்பு மறைந்து வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருப்பதற்கான காரணமாக இருக்கும் மதங்கள் அனைத்தும் ஆதியில் சொல் இருந்தது என்கின்றன. அது தமக்கு மட்டும் அசரீரியாகக் கேட்டது, அந்த சொல்லுக்குறியவன் இட்ட கட்டளையின் அடிப்படையில்தான் இந்த சமூகத்தை ஒழுங்கமைக்கும் விதிகளை தாம் உருவக்குவதாக ஒவ்வொரு மதத்தின் உற்பத்தியாளரும் (ஆம், அதுதான் அவர்களுக்குப் பொருத்தமான சொல்) சொல்லி வந்திருக்கின்றனர். சரி அவர்களின் கூற்றுபடியே போவோம். ஒரு சொல் வந்தது எனில் அதற்கான காரணம், தேவை இந்த மண்ணில் இருந்திருக்க வேண்டும் இல்லையா? ஒழுங்கமைக்கும் தேவை இருந்ததெனில் ஒழுங்கின்மையும், அதற்கான காரணமும் இருந்திருக்க வேண்டும். அந்தத் தேவைகள் நிச்சயம் பொருளாயத காரணங்களினால்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால் உயிரினங்களின் தேவை உயிர்வாழ்தல் மட்டுமே. உயிர் வாழ்வதற்கான  முயற்சியின் (உழைப்பு,செயல்) விளைவான சில கண்டுபிடிப்புகளும் (கருவிகள், செயல்) பரிணாம வளர்ச்சியும் மனித இனத் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த உயிர் வாழ்வதற்கான முயற்சியானது புறச்சூழல் - நிலம் (இதை இயற்கை என்கின்றனர், மனிதனும் இயற்கைதானே) மற்றும் வளங்களைச் சார்ந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வளங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்துண்ணும் சூழல் இருந்திருந்தால் மனிதர்களுக்குள் முரண்பாடு வருவதற்கான காரணங்கள் ஏதும் இருந்திருக்க முடியாது.  மனிதர்களை ஒழுங்கமைக்கும் ‘ஏற்பாட்டிற்கும்’ தேவை இருந்திருக்காது.  ஆக, வளங்களை, அதனைப் பயன்படுத்திப் பெற்ற விளைச்சல்களை தமக்காக (குழு, குடும்பம்) மட்டுமே ஒருவர் அபகரித்துக்கொள்ள முயற்சிக்கும்போதுதான் அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன.

தாம் முயற்சித்து (உழைத்து) பெற்ற ஒரு பொருளை ஏன் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மதங்கள் சொல்வதுபோல் அதுதான் நல்ல மனிதருக்கு அழகு என்று நிச்சயம் நான் சொல்ல மாட்டேன். உண்மையில் ஒரு மார்க்சியராக நான் என்ன சொல்வேன் என்றால் நீங்கள் அறுவடை செய்ததை நீங்களே உண்ணுங்கள், ஆனால் நீங்கள் அறுவடை செய்து உண்ணுங்கள். அடுத்தவரின் அறுவடையை அபகரிக்காதீர்கள் என்பதோடு அடுத்தவருக்கும் வளங்கள் மீதிருக்கும் உரிமைகளைப் பரிக்காதீர்கள் என்று சொல்வேன். இதையெல்லாம் விட ஒருவர் தம் முயற்சியால் தமது தேவைக்கான எல்லாவற்றையும் உற்பத்தி செய்துவிட முடியாது. அரை மனிதனாக இருந்தபோது வேண்டுமானால் கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கலாம். ஆனால் நிலத்தின், வளத்தின் உடனான தொடர் உறவில், தம் இருப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வேட்கையில், முயற்சியில் மனிதர்களிடையே உற்பத்தி முறைகளும் அதன் விளைவான சமூக உறவுகளும் தோன்றுகின்றன.

இந்த சமூக உறவுகள் நியாயமான உறவுகளாக இருக்கும் வரை, அதாவது அனைவரும் உழைத்து (ஏனென்றால் உழைப்பின்றி ஏதும் விளையாது) அனைவரும் அந்த உழைப்புக்கேற்ற பங்கினைப் பெறும்போது அங்கு எந்த முரண்பாடுகளும், பிளவுகளும், பாகுபாடுகளும் இருப்பதில்லை.  ஆனால்  எங்கு வாய்புகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. எங்கு அபகரிப்பு நிகழ்கிறதோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. எங்கு சுரண்டல் நிகழ்கிறதோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. உற்பத்தி மற்றும் நுகர்வு இதுதான் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை. உற்பத்திக்கான களமாய் இருப்பது நிலமும் வளமும், நுகர்வுக்கான களமாய் இருப்பது மனித உடல்.  நிலம், வளம், உடல் - இம்மூன்றுக்கும் இடையே  எது ஒன்று நுழைந்தாலும் அது செயற்கையானதுதான். தேவையின் பொறுட்டு மனிதர்கள் உற்பத்தி செய்வதுதான் (அது கருவியாகட்டும், கடவுளாகட்டும்; பொருளாகட்டும், கருத்தாகட்டும்).

நிலத்தையும், வளத்தையும் சார்ந்திருக்கும் மனிதன், அதன் மாறுதலுக்கேற்ப தம் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இடம் பெயர்கிறான். அப்போது உள்ளூர் பழங்குடிகளிடம் ஏற்பையோ அல்லது எதிர்ப்பையோ எதிர்கொள்ள நேர்கிறது. எதை எதிர்கொண்டாலும் உற்பத்தியும் விளைச்சலும் எல்லா நேரமும் நிலையானதல்ல. இந்த நிலையற்ற தன்மையினால் மனித இனம் புதிய உற்பத்தி முறைகளை, புதிய உற்பத்திக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் தேவை உருவாகிறது. அது முன்பை விட சாதகமான அனுகூலங்களை ஏற்படுத்தும்பட்சத்தில் அவ்விடத்திலேயே நிரந்தரமாகக் குடியேறிடும் ‘எண்ணம்’ தோன்றும். மேலும், இந்த புதிய உற்பத்தி முறையினால் முன்பைவிட உற்பத்தியும் விளைச்சலும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு / குவித்தல் போன்ற நடைமுறைகள் தோன்றும். அழியும் பொருளாக இருக்கக்கூடிய ஒன்றை வெகு காலம் சேமித்து வைக்க முடியாது என்பதும் மற்ற நுகர்வுக்கும், மறு உற்பத்திக்கும் மற்ற  ‘பொருள்கள்’  தேவைப்படுவதாலும் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்கின்றன. உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கேற்ப முரண்பாடுகள் தோன்றுகின்றன. அதன் விளைவாக பரிவர்த்தனை முறையில் மாற்றங்களும், பல புதிய ஒழுங்கமைவுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.  மதிப்பென்னும் கருத்தாக்கம் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  ஆனால் எப்படிப்பட்ட மதிப்பிற்குறிய பொருளாயினும் ‘தேவை’ இருந்தால் மட்டுமே நுகரப்படும்.  தேவையை முதலில் பூர்த்தி செய்பவர் பொருள் பெரும் நிலை உருவாகிறது.  இதன் விளைவாக உற்பத்திக் கருவிகளை (நிலம், வளம் உட்பட) தனியுடமையாக்கிக் கொள்ளுதல், அபகரித்தல் போன்ற செயல்கள் தோன்றியிருக்கும். தேவைக்கு முந்தி அளித்தல் எனும் இந்தப் போட்டிதான்  குவித்தல் , ஆதிக்கம், சுரண்டல், உற்பத்தி முறையை (தொழிலை) கைப்பற்றுதல்  ஆகிய தீமைகளின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். இந்த முரண்பாடுகளை சரிசெய்ய ஒரு சமூக அமைப்பு, குறிப்பாக வாழவாதாரமான உற்பத்தி முறையை (தொழிலை)  அடிப்படையாகக் கொண்ட சில ஒழுங்கமைவுகள், விதிகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.  இந்தியாவில் முதன்மையானது என்று அறியப்படும் ஏற்பாடு வருணங்கள். செய்தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகைப்படுத்தல் முறையாக சில சட்டதிட்டங்கள் கொண்டதாக அது இருக்கிறது.  

வரலாற்று வளர்ச்சியில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்களின் விளைவாக உற்பத்தியாளர், நுகர்வாளர் மட்டுமின்றி மூன்றாவதாக ஒரு புதிய சமூக உறவும்  தோன்றுகிறது – அதுதான் இடைத்தரகர் எனும் உறவு. இந்த இடைத்தரகர்களின் தோற்றமானது (அல்லது வரவானது) சமூகத்தில் மாபெரும் மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளது.  உற்பத்தி முறையிலும், பரிவர்த்தனை முறையிலும் மாற்றங்களைப் புகுத்தி மேலும் மேலும் பொருளீட்டிட, செல்வம் குவித்திட அடிமை முறையையும் உட்புகுத்தியது. இப்போது உழைப்பதற்கென்றே ஒரு வர்க்கம் உருவாக்கப்படுகிறது. உழைத்து வாழும் சமூகங்களுக்கிடையில் உழைக்காமல் வாழும் பிரிவினரின் உதயம்தான் சமூகத்தின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணமாக இருக்கிறது. இம்முரண்பாடானது உற்பத்தியிலும், இடைத்தரகிலும் நேரடியாக ஈடுபடாத ஒரு நிர்வாக அமைப்பின் தோற்றத்திற்கு வித்திட்டது. அதுதான் அரசு.  காத்தல், நிர்வாகம், நீதி ஆகியவை அதன் உறுப்புகளாயின.  ஆனால் இம்மூன்றுக்கும் எதிராக செயல்படுவதுதான் அதன் உள்ளார்ந்த தன்மை ஏனென்றால் சுரண்டல் நிலவும் வரைதான் இங்கு அரசுக்கு வேலை இருக்கிறது. ஆகவே அரசு எனும் இயந்திரம் எப்போதும் சுரண்டும் வர்க்கமான ஆளும் வர்க்கத்திற்குத்தான் ஆதரவாக செயல்படும்.

போட்டியினாலும், பேராசையினாலும் முரண்கள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் குடிமக்களுக்கும் தம் வாழ்வாதாரத்திற்காக இடப்பெயரும் குழுவிற்கும் இடையே  எப்போதும் கடும் மோதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒன்று - குடிபெயர்பவர் உழைக்கும் அடிமையாக வேண்டும் அல்லது போரிட்டு மடிய வேண்டும். இந்த இரண்டிற்கும் தயாராக இல்லாத இனக்குழுக்கள் ஒரு புதிய ஆயுதத்தைக் கையிலெடுக்கின்றன. அதுதான்  ‘கருத்தாயுதம்’ .

அப்படி குடிபெயர்ந்த ஓர் இனக்குழுவானது உட்புகுத்திய கருத்தியல்தான் இன்று சாதியெனும் தீமையாக வளர்ந்து நிற்கிறது.  3500 வருட காலமாக இந்தியாவில் சாதிய பாகுபாடு நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆரியர் படையெடுப்பு எனும் பின்னணியில்  ஒரு வரலாறு அமைந்துள்ளது. அதற்கு மாறாக ஆரியர்கள் என எவரும் படையெடுக்கவில்லை ஆனால் இங்கிருந்த இனக்குழுக்களில் ஒரு குழுவினர் தம்மை மேன்மையானவர் என்று அறிவித்துக்கொண்டு  சாதிய சட்டங்களை உருவாக்கினர் எனும் ஆய்வும் நிலவுகிறது.  

மூன்றாவதாக, வருணங்கள் – அதாவது வேதகாலத்தில் தொழில்ரீதியான பாகுபாடுகள் இருந்தன, ஆனால் இன்றைக்குப் போல் அது இவ்வளவு இறுக்கமானதாக இருக்கவில்லை, தீண்டாமை இருக்கவில்லை வருணம் என்பது தகுதியின் அடிப்படையில் மாற்றிக்கொள்ளக் கூடியது  என்றும் முன்வைக்கின்றன.  அதன்படி விவசாயத்தின் தோற்றம் சாதிய சமூகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதைக் காண முடிகிறது. சிற்றரசுகளின் தோற்றம், நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சி , பிராமணிய இந்துமதத் தோற்றம்  ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.  நான்காம் நூற்றாண்டு வாக்கில் நிலப்பிரபுத்துவமும், சாதியமும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்வு தொடங்கி 10ஆம் நூற்றாண்டு வாக்கில் அது ஓர் உச்ச நிலையை அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 
இதனை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் மற்றொரு பிரிவினர் கூறுவது என்னவெனில் வருணங்கள் எனும் பாகுபாடு நிலவியது.  வரலாற்று வளர்ச்சியில் தொழில்மட்டுமின்றி ப்ராமணியமானது சில பண்பாட்டு விதிகளையும் உட்புகுத்தியது. அரசுகளின் ஆதரவோடு இச்சட்டங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டன. ஆனால் அந்த ப்ராமணிய பண்பாட்டு முறை பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பையும் வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ளது.  புத்த மத எழுச்சி, ஜைன மத எழுச்சி ஆகியவை அதற்கு உதாரணங்கள்.  புத்தமதத்தின் செல்வாக்கு காரணமாக புதிய விதிகளோடும் தத்துவங்களோடும் ப்ராமணிய இந்துமதம் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் மேலும் தூய்மைவாதமும், விலக்குகளும் புகுத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விதவைத் திருமணம் மறுக்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிறப்பை, உடலை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகள் உச்சத்தை அடைகின்றன. இதற்கிடையே பார்ப்பனிய சத்ரிய வைசியக் கூட்டுகளுக்குள்ளாகவே தம்முள் யார் சக்தி வாய்ந்தவர் எனும் மோதல்களும் (ரிஷி, குரு, அரசு)நிகழ்ந்துள்ளன. சந்தர்ப்பத்திற்குத் தகுந்தார்போல் ப்ராமணியமானது தன்னை தகவமைத்துக் கொண்டும், சமரசம் செய்துகொண்டும் இருந்து வந்துள்ளது.  

9ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியாரின் காலத்தில் மறுபடியும் ப்ராமணியம் தலையெடுத்தது. 1206 –இல் டில்லி சுல்தான் குத்புதீன் என்ற இஸ்லாமிய மன்னனின் ஆட்சிகாலத்தில் ப்ராமணியம் மறைந்துபோனதாக முனைவர் வெ. கன்னுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு 18ஆம் நூற்றாண்டுவரை காணாமல் போயிருந்த வருண அமைப்பு முறை திரும்பவும் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங் காலத்தில் (1774-1785) அவரது ஆதரவோடு, வேத கால பிராமண இந்து மதம் புதுப்பிக்கப்பெற்றது என்கிறார். அதுமட்டுமின்றி சாதி என்ற சொல் பதினாராம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, முதன் முதலில் கோவாவிற்குள் அவர்கள் நுழைந்துபோதுதான் அச்சொல் இந்தியாவிற்குள் நுழைந்தது என்றும் சொல்கிறார்.

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு வரை இந்தியாவில் வணிகத்திற்காக குடிபெயர்ந்த பல அயல்நாட்டு ஆட்சியாளர்கள், அயல்நாட்டு மரபுக்குழுக்கள் வேதத்தில் குறிக்கப்பட்ட ஆசார முறையைப் பின்பற்றி இந்தியர்களாக  உள்வாங்கப்பட்டு சங்கமமாக்கப்பட்டனர். அவர்கள் சத்ரியர்களுக்கு சமமாகவோ அல்லது பிராமணருக்குச் சமமாகவோ ஆக்கப்பட்டனர். இராஜபுத்திரர்கள், குஜார்கள், அபிராஸ் என்று இன்றைக்கு இந்தியாவின் ஆதிக்க சாதியினராய், சாதியத்தை மூர்க்கமாக பற்றிக்கொண்டு கொடுமைகள் செய்யும் பல ஆதிக்க சாதியினர் அனைவரும் அப்படி குடிபெயர்ந்தவர்கள், உள்வாங்கப்பட்டவர்கள் என்பதை அவரது ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளார்.

வருண முறை நிலவிய காலகட்டத்தில் கலப்பு வருண திருமணங்களால் அதிக எண்ணிக்கையில் புதிய பிரிவுகள் (சாதிகள்) உருவாகின. அப்படி உருவாகும் சாதிகள் வெளியேற்றப்பட்டன, விலக்கி வைக்கப்பட்டன. இதன் விளைவாக சாதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஆட்சி செய்யும் அரசரால் பணி அமர்த்தப்பட்ட மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சத்ரிய கூட்டோடு  ப்ராமணர்களின் அதிகாரம் மீண்டும் கூடுகிறது. ஆனால் வருண அமைப்பு தளர்வாக இருந்ததால் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு சாதி மேல்நிலையில் உள்ள மற்றொரு சாதியாக தன்னை மாற்றிக்கொள்வதும் நடந்திருக்கிறது. ரோமிலா தாப்பரும் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏழைகள் (கடைநிலைத் தொழில் புரிவோர்) பணம் கொடுத்து உயர்சாதியினராக மாற இயலாத காரணத்தால் அவர்கள் கீழ் சாதியிலேயே இருக்கும் நிலை தொடர்ந்திருக்கிறது.

பல்வேறு காரணங்களால் சாதிக் கலப்புகளும், மதக்கலப்புகளும், இனக்கலப்புகளும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. ப்ராமணர் உட்பட எந்த ஆதிக்க சாதியினரும், எம்மொழ்யினரும் தம்மை தூய இனத்தவர் என்று உரிமை கோர முடியுமா என்பது தெரியவில்லை.   அதனால் பாரம்பரியத் தொழில்  புரிந்தோர் எனும் வரயரையும் பொய்த்துப் போகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலவியல் அமைப்பின் காரணமாக வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு அதிக அளவிலாக இல்லாத காரணத்தால் வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்துள்ளன. சமஸ்கிருத மொழி உட்பட மனு ஆராய்ந்து விளக்கிய சாதி மற்றும் ப்ராமணியப் பண்பாடு ஆகியவை திராவிட நாட்டிற்கு அந்நியமானதாகவே இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதன் தாக்கத்தை நாம் காண முடிகிறது.

ப்ரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர் சாதியமைப்பு பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டது. ப்ரிட்டிஷாரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் (1871-72 – 1931) சாதியமைப்பின் மீளுருவாக்கத்திற்கு முக்கிய காரனம் என்று க்ரிஸ்டஃப் ஜாஃப்ரெலோ (Chirstophe Jaffrelot) எனும் ஃப்ரென்ச்சு நாட்டு அரசியல் அறிவியலாளரும்  குறிப்பிடுகிறார்.

    ஆங்கில அரசாட்சியின் 1871ஆம் ஆண்டு முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது.  அப்பொழுது W.R. கார்னிஷ் என்பவர் சென்னை மாகாண ஆணையராக பணி புரிந்தார். அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

“மனு தர்மம்” என்கிற இந்து மதச்சட்ட கோட்பாட்டின்படி இந்துக்கள் வர்ணத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாத தலித்மக்கள் என பிரிக்கப் பெற்றனர்.  மக்கட்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் சாதி அமைப்பின் துவக்கம், அடிப்படை ஆதாரம் பற்றிய கருத்துக்கள் ஓர் தனி இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மனு தர்ம சட்டத்தை வன்மையாக கண்டித்த அவர் பொய்மை நிறைந்த நூலை “புனித” நூல் என போற்றப்படுவதை சாடுகிறார்.  “தம்மைப் பொருத்தவரை சாதியின் ஆணிவேர் பார்ப்பனர்களின் உருவாக்கமே” என நிறுவுகிறார். பார்ப்பனர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்கள் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் சாதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிற மக்களிடமிருந்து வேறுபட்ட புனிதர்கள் என்கிற கருத்து திணிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை தெளிவாக்குகிற உண்மை என்னவெனில் பார்ப்பணர்கள் அளித்த கட்டுக்கதைகளின் அடிப்படையிலேயே வர்ண அமைப்பும், சாதிப்பிரிவுகள்  உருவாயின என்பதாகும்.  (சாதி ஓர் கண்டுபிடிப்பு வெ. கண்ணுப்பிள்ளை)

காலனியாக்கத்தின்போது பார்ப்பணர்கள் மீண்டும் கோலோச்சுகின்றனர். அதுமட்டுமின்றி வட இந்திய, தெனிந்திய பாகுபாடும் ஒரு நுண்ணிய வடிவைப் பெறுகிறது. ப்ரிட்டிஷ் ஓரியண்டலிசமானது சாதி மற்றும் மொழி அடிப்படையிலான  இனவாத சிதாந்தங்களை உட்புகுத்துகிறது. காலனிய இனவரைவியலானது ஆரியர்களை மேல் சாதியினர் என்றும் திராவிடர்களை கீழ் மக்கள் என்றும் வகை பிரிக்கிறது.


சாதியப் பெரும்பான்மை நிலை அடைவதற்காக உட்சாதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அகமண முறையை தளர்த்துகின்றனர். புதிய பண்பாட்டு அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. கூட்டு வரலாற்று உருவாக்கங்கள் நடைபெறுகின்றன.  புதிய இனமயமாக்கல் (ethnicization) நிகழ்கிறது.  இந்த நிகழ்முறையின் அடுத்த கட்டமாக மேல்நிலை வேண்டி காலனிய நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சாதிய சங்கங்கள் இக்காலகட்டத்தில்தான் உருவாகின்றன.  சாதிய தலைமைகள் உருவாகின்றன. ஆனால், சாதியத்திற்கு எதிராக ஜோதிராவ் புலே (1827-90) , அம்பேத்கர்,பெரியார், ராம் மனோஹர் லோஹியா ஆகியோர் முக்கியத் தலைவர்களாக உருவாகின்றனர்.  வட இந்திய சாதியச் சங்கங்கள் சமஸ்கிருதமயமாக்கலை விட்டு வெளிவராத போது இனமயமாக்கலில் - தென் இந்தியாவின் திராவிட அடையாளமானது அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான சித்தாந்தமாக செயல்பட்டது.  அதேவேளை இந்த இனமயமாக்கலும், சாதிய சங்கப் போராட்டங்களும் இடைநிலை சாதி எழுச்சிக்கும், அவரவர்களின் அரசியல் வளர்ச்சிக்கும் வித்திட்டது. இக்காலகட்டத்தில் இடதுசாரிகளின் அரசியல் எழுச்சியும் நடைபெறுகிறது. இந்த எழுச்சிகள் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின.
இப்படி, காலம் காலமாக, குறிப்பிட்ட பிரிவினரின் வளர்ச்சிக்காக இந்திய அரசியலானது சாதிய அரசியலாகவும், சாதியத்திற்கான அரசியலுமாகவே இருந்துவந்திருக்கிறது. செல்வக்குவிப்புக்கான அதிகாரம் வேண்டி உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணம், சாதி ஆகிய கருத்தியல்கள் பிரித்தாள்வதற்கும், சுரண்டலுக்கும் சாதகமாக இருப்பதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது புத்துயிர்ப்பு பெருகிறது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் பணம் கொடுத்து தம் சாதியை மாற்றிக்கொள்ளவோ அல்லது சாதியச் சங்கங்கள் மூலமாக தம் நிலையை மேல்நிலைக்கு உயர்த்திக்கொள்ளவோ முடியாத நிலையில் இருக்கும் ஏழைகள் / தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் பன்னெடுங்காலமாக கீழ் நிலையில்யே வைக்கப்பட்டதன் விளைவாக மேலெழ முடியாமல் இருக்கின்றனர். தனியுடமை அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு என்றென்றும் உழைக்கும் அடிமைகள் தேவைப்படுவதால் சாதியமைப்பென்பது அதற்கு சாதமகாக இருக்கிறது. ப்ராமணிய இந்துத்துவமே அதன் மூலாதாரம் என்பதால் ஆளும் / சுரண்டும் வர்க்கமானது அதனை ஆழப் பற்றிக்கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையிலான இந்த பாகுபாட்டு முறையானது  தனித்தன்மை, மேன்மை அடையாளம் இவற்றோடு பொருளாதார ஆதாயங்களையும் வழங்குவதால் மக்களும் அதை கைவிடத் தயாராக இல்லை.

இச்சூழ்நிலையில் சாதியை ஒழிப்பது எப்படி? சமத்துவத்தை நிலைநாட்டுவது எப்படி?
சாதிய ஒழிப்பு, சமத்துவம் அடைதல் இரண்டுமே சம வாய்ப்பை உறுதி செய்வது என்பதாகும்.  ஆனால், இந்தியச் சூழலில் வாய்ப்பின்மை  என்று பார்க்கும்பொழுது - ஒன்று விலக்கி வைக்கப்படுவதால்  ஏற்படுவது மற்றொன்று தனியுடமையின் விளைவாக ஏற்படுவது. ஆக, நமது போராட்டங்கள் அனைத்தும் சம வாய்ப்பிற்கான, சமூக நீதிக்கான  போராட்டமே அன்றி பார்ப்பனிய இந்துத்துவமும், முதலாளித்துவமும் கூறுவதுபோல் தேசத் துரோகச் செயல்பாடுகளோ அல்லது வளர்ச்சிக்கெதிரான போராட்டமோ அல்ல என்பதை நான் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்.

இந்த விலக்கி வைத்தல் எனும் ஏற்பாட்டை எடுத்துக்கொள்வோமேயானால் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிக்கப்பட்டோரின் தொழில்கள் அல்லது உழைப்பானது கடின உடல் உழைப்போடும் (கூலி உழைப்பு), சுத்தம் செய்தல் எனும் தேவையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. உ.ம் விவசாயக் கூலிகள், தோல் தொழில், கழிவுகளை அகற்றுவது, பிணம் எரிப்பது போன்றவை. பிரதானமாக இவர்களிடம் நிலம் மற்றும் ஏனைய உற்பத்திக் கருவிகள் இருக்காது. இதனால் இவர்கள் தம் வாழ்வாதாரத்திற்காக ‘வழங்குபவரை’ சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர். என்றென்றைக்கும் அவர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதே ஆளும் வர்க்கத்தின் எண்ணம்.

ஏனென்றால் இந்நிலையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் தங்களது நிலையில் மாற்றம் ஏற்படும், தாமும் உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும் – தனித்தன்மை போய்விடும், அளவுக்கதிகமாக செல்வம்  சேர்க்க முடியாது, அதிகாரம் கைமாறிவிடும் என்பதே அவ்வர்க்கத்தின் / சாதியினரின் அச்சம். ஆனால் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் அரசியல் எழுச்சியின் காரணமாக வாய்ப்பை மறுக்கும் அதிகாரம் உடைக்கப்பட்டு வருகிறது.  இடஒதுக்கீடு, தனித்தொகுதி உள்ளிட்ட சட்டபூர்வமான ஏற்பாடுகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரில் இருந்து உதயமாகி இருக்கும் அரசியல் தலைவர்கள், கட்சிகள், இடதுசாரி  கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

இதில், ஆதிக்க சாதியினரால் எப்போதும் தவறாகப் பேசப்படுவது இடஒதுக்கீடு பற்றியதாகும். விலக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பிற்கு ஈடும் செய்யும் ஏற்பாடுதான் இடஒதுக்கீடு, ஆனால் அதை ஏதோ தனிச்சலுகை, அநியாயமானது என்று சொல்லும் இவர்கள் தகுதியுடன் இருக்கும் தங்களது வாய்ப்பு பரிக்கப்படுவதுபோல் கூப்பாடு போடுகின்றனர். இது வாய்ப்பு பற்றிய அச்சம். எதற்கான வாய்ப்பு – அதிகாரம், செல்வக்குவிப்பிற்கு  சாதகானச் சூழல் பரிபோவது பற்றிய அச்சம். இது எல்லாவற்றுக்கும் ‘போட்டி’ நிறைந்த இந்த அரசியல்-பொருளாதார நிலையே காரணமாக இருக்கிறது.  குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் பெரும்பான்மையாக இருப்பதன் மூலம் அதிகாரத்தையும் வாய்ப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கான அனுகூலங்கள் அதிகம். அதேபோல் எதிர் பிரிவினரும் பெரும்பான்மை ஆகிவிட்டால் நம் நிலை என்னாகும் என்பதே இவர்களின் அச்சத்திற்குக் காரணம்.  

அதனால்தான் இவர்கள் இடஒதுக்கீட்டை அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். ரோஹித் வெமுலா உள்ளிட்ட பல மாணவர்கள் மீதும், தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிய வன்முறைக்கும் இதுதான் காரணம். ஆனால் இந்த ஆதிக்க சாதிகளும் ஆளும் வர்க்கமும் என்ன மறந்துவிடுகிறதென்றால் - அவர்கள் அல்லதுஅவர்களது மூதாதையர்கள் அடித்துப் பிடுங்கியதைத்தான் நாம் இப்போது நமது என்கிறோம் என்பதை மறந்துவிடுகின்றன.  அதனால்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று நியாயமான பங்கை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சட்டத்தை மதித்து ஆதிக்க சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்டப் பங்கை ஒப்புக்கொள்கிறார்களே, ஆனால் ஆதிக்க சாதியினர் எல்லாவற்றையும் அல்லவா பிடுங்கிக்கொண்டார்கள் . உயிர் உட்பட.

அதனால் இடஒதுக்கீடு, அரசியல் அதிகாரத்தில் பங்கு போன்றவையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் உரிமை. இது ஏதோ சலுகையோ அல்லது விட்டுக்கொடுப்போ அல்ல.  ஒரு சமூகத்தில் வாய்ப்பு என்பது எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டிய ஒன்று ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்துவிட்டதாலேயே தமக்கு மட்டுமே சிறப்புரிமை என்று எண்ணுவது அறிவின்மை உண்மையில் பேராசை. இந்துத்துவமும், முதலாளித்துவமும் இந்த அறிவின்மையையும், பேராசையையும்தான் கட்டிக்காக்க நினைக்கின்றது. இந்து மதத் தீவிரவாதம் பேசும் RSS ஆதரவு கட்சியான பா.ஜ.க மத்தியில் ஆட்சி பிடித்த பின்னர் எங்கு பார்த்தாலும் பார்ப்பனியவாதமும், அடக்குமுறையும், வன்கொடுமைகளும் பெருகிவருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. இது இந்துக்களின் நாடு, இந்து மதமே இந்தியாவின் மதம் என்று எவரும் உரிமை கோர முடியாது. இந்தியா மட்டுமின்றி எந்த நாடும் ஒரு குறிப்பிட்டவருக்கே சொந்தம் என்று சொல்லவும் முடியாது. நாடு, எல்லை இவையெல்லாம் ஒரு நிர்வாக ஏற்பாடுதான். மனிதனாக தோற்றுவித்தவை.  தவறான ஒரு சமூக அமைப்பின் விளைவால் உதித்துவிட்ட இந்த சட்டதிட்டங்களை நாம் வேறு வழியின்று ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மதிக்க வேண்டியுள்ளது. இயற்கைக்கு எல்லையும் கிடையாது, அடையாளமும் கிடையாது.

இதுபோன்ற அறிவார்ந்த தருக்க ரீத்தியான உண்மைகளைத்தான் முற்போக்கு சக்திகள் எடுத்துரைக்கின்றன.  அறிவூட்டுவதால்தான் நாம் தேச துரோகிகள் எனப்படுகிறோம். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் நம்மீது முத்திரை குத்தட்டும், அவமானப்படுத்தட்டும் நாம் அவற்றை துணிவோடு எதிர்கொள்ள வேண்டும். பொய்யர்களே மனம் தளராதபோது நாம் ஏன் மனம் தளர வேண்டும். நம் பக்கம் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது அதைத் துணிவோடு எடுத்துரைப்போம். தலித்துகள் என்று மட்டுமில்லை ஒடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் நாம் நம் உரிமையைத்தான் கேட்கிறோம், கேட்டுப்பெற்றுள்ளோம் எனும் பதிலடியைக் கொடுப்பதுதான் சரி. நம் தளர்வு அவர்களின் வெற்றி.
சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதென்பது கொடுமையானதுதான். அதேபோல் பிறப்பின் அடிப்படையில்.. இன்னும் பல்வேறு காரணங்களால் நிலவும் ஒவ்வொரு பாகுபாடும் கொடுமையானதுதான். அதை எதிர்க்கத்தான் நாம் பிறந்துள்ளோம் என்பதை ஒவ்வொரு போராளியும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நம் வழிகாட்டிகளும் தலைவர்களும் குறைந்தபட்சம் நமக்கு சில வழிகாட்டுதல்களையும், உரிமை மீட்பிற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம், மக்களிடம் எடுத்துச் செல்வோம்.  சாதிய ரீதியாக ஒரு பிரிவினரை ஒடுக்கும் இந்த சமூக அமைப்பு அவர்களை வேறொரு வடிவத்தில் ஒடுக்குகிறது, சுரண்டுகிறது, அநீதி இழைக்கிறது என்பதை உரக்கச் சொல்வோம்.  இணைந்து போராடுவோம்.

ரோஹித்தின் கடிதங்களில் அவர் - தனது கனவோடு - இந்த சமூகத்திற்கான தனது கனவையும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து தளங்களிலும் நாம் சமத்துவம் எய்த வேண்டும் என்பதும் ரோஹித்தின் கனவு. ஆனால் எந்தப் பாதையில் பயணிப்பது என்பதில் அவருக்கு குழப்பங்கள் இருந்திருக்கிறது என்பதாக அவரது கடிதத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இருவேறு அமைப்புகளின் மீதும் அவருக்கு சில விமர்சனங்கள் இருந்திருக்கிறது. ரோஹித் மட்டுமில்லை நம்மில் பெரும்பாலருக்கும் எது சரியான பாதை எனும் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு ஒற்றைப் பதிலைப் பெற முனைவதுதான் நம் பின்னடைவுகளுக்குக் காரணம் என நான் கருதுகிறேன். பிரச்சினைகளை வரிசைப்படித்தி ஒரு கூம்பு வடிவில் அடுக்குவோம் என்றால் அடித்தளம் பொருளாதார அடிமை நிலையாகவும் அதை அடிப்படையாகக் கொண்ட அடிமைத்தனங்கள் மேலே இருப்பதை நாம் உணர்ந்துகொண்டால் போதுமானது.  இதைத்தான் கார்ல் மார்க்ஸ் Base and Super Structure என்று விளக்குகிறார். அதாவது எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் பொருளாதார காரணங்கள்தான் அடிப்படை என்பதே அது. மற்றவையெல்லாம் அதன் manifestations.  உழைப்புப் பிரிவினையின் விளைவாக தோன்றிய பாகுபாடுகள்.

அப்படியென்றால் இந்த பாகுபாடு ஏன் தலித் மக்களுக்கு எதிராக மட்டும் செயல்படுகிறது? இந்த உழைப்புப் பிரிவினை என்பது எல்லா நாடுகளிலும்தானே இருக்கிறது ஆனால் சாதி என்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. என்று கேட்கப்படுகிறது.  உண்மைதான் இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் இருக்கிறது ஏனென்றால் இந்தியாவில்தான் பார்ப்பனிய கருத்தியல் உருப்பெற்றது. அது உருப்பெருவதற்கான ஒரு சமூகச் சூழல், பொருளாயத சூழல் இந்தியாவில் மட்டும் தனித்தன்மையோடு இருந்திருக்கிறது. உழைப்புப் பிரிவினையினை நிலைபெறச் செய்வதற்கான ஒரு கோட்பாட்டு வடிவமாய பார்ப்பனிய இந்துத்துவ சாதிய பகுப்புமுறை தோன்றியது.  ஆனால் சாதி என்பது மற்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது, இந்தியாவில் உள்ளது போன்ற வடிவத்தில் அது இருக்கவில்லை என்பதுதான் வேறுபாடு. கார்ல் மார்க்சின் சொற்களிலேயே அதனைப் பார்ப்போம்:

இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும்மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும்வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள். (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).

மற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:
எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதுமற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும்ஆனால்  வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர்ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர்மற்றொரு சமயத்தில் வாணிபம்வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர்சுதந்திரமான நாடுகளில்அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால்அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர்இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும்தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால்அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர். (பக். 461).

குறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியதுஅவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லைஅப்படிச் செய்தால்அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது. இப்படித்தான் சாதிகள் உருவாகின்றன.  (சாதி குறித்து மார்க்ஸ், ரங்கநாயகம்மா)
அதேபோல் ரோசா லுக்சம்பர்க்கின் வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்து ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்:
 ஜனவரி 1907, 10ம் தேதியன்று லியோ ஜொகிச்செஸ் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  விசாரனையின் தொடக்கத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. விசாரனையின் போது நடந்த அச்சம்பவம் ஜொகிச்செஸின் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியது. ஜாரிச ரஷ்யாவில் பண்டைய சாதிய அமைப்பில் நடைமுறையில் இருந்த வழக்கப்படி, குற்றப்பத்திரிகையில் அவர் கீழ்-மத்தியத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் நீதிமன்ற தலைவர் யொகிசெஸ்ஸை ‘தௌ’ 1 எனும் பட்டப்பெயர் கொண்டு விளித்தார்ர். இந்த இழிவுபடுத்தலை யொகிச்செஸ்ஸும், அவரது வழக்குரைஞரும் எதிர்த்தனர், அவர் ஒரு ரஷ்யப் பிரஜை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் நீதிமன்றம் அப்பட்டப்பெயரை உறுதிசெய்தது.  இதைத் தொடர்ந்து மேற்கொண்டு நடந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்குபெற மறுத்தார் ஜொகிச்செஸ், மூன்று நாள் விசாரணை முழுமையிலும் மௌனம் காத்தார்.  இராணுவப் பணியை கைவிட்டதால் கடமை தவறுதல் (1891ல் நடந்தது) மற்றும் இராஜ துரோகம் எனும் குற்றங்களுக்காக எட்டு வருட கடுங்காவல் தண்டனைக்குள்ளானார்.
போலந்தில் யூதர்கள் மத்தியில் நிலவிய சாதியமைப்பு குறித்து The Jews in polish culture – Alexander Hertz, Northwestern University Press- எனும் நூல் விளக்குகிறது. அதன் தன்மைகள் இந்தியா சாதியமைப்பிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனக்குழுக்களுக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட அதிகாரப் படிநிலை அமைப்புகள் நிலவியுள்ளது. 

பாகுபாடுகளை ஒழிக்க சீர்திருத்தங்கள், அரசியல் நடவடிக்கைகள், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் போன்ற  நடவடிக்கைகள் அவசியம் ஆனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தனியுடமை அடிப்படையிலான உற்பத்தி முறைகள் ஒழிக்கப்பட்ட  பொதுவுடமை சமூதாயமாக அது உதயமாக வேண்டும் இல்லையெனில் மீண்டும் மீண்டும் அடையாளம் சார்ந்த அதிகாரத்தின் கீழ் உழைப்பாளிகளை குறைந்த கூலிக்கு அமர்த்தி சுரண்டிப் பிழைக்கவே அது உதவும், ஏனென்றால் உழைப்புப் பிரிவினையினால் உருவானதுதான் சாதி.
இதை அம்பேத்கரும் ஏற்றுக்கொள்கிறார்.

“இந்து சமூக அமைப்பு உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, இந்த அமைப்பு இந்துக்களுக்கு அழுக்குப்படியாத, சுத்தமான சமுதாய மதிப்புடைய பணிகளை வழங்குகிறது; அதே சமயம் தீண்டப்படாதவர்களுக்கோ அது அருவருப்பான, இழிவான வேலைகளை ஒதுக்குகிறது; இதன் மூலம் இந்துக்களின் மீது கண்ணியத்தைப் பொழிந்து அவர்களைக் கௌரவிக்கிறது; அதேபோழ்து தீண்டப்படாதவர்களின் மீது இழிவைச் சுமத்தி அவர்களை அவமதிக்கிறது” (தொகுதி 10, பக்.204)

உழைப்புப் பிரிவினையை அங்கீகரிக்கும் அதேவேளை, ‘உழைப்பாளர் பிரிவினை’ என்று ஒன்று இருப்பதாக அவதானிக்கிறார். உழைப்புப் பிரிவினைக்கும் சாதி அமைப்பிற்கும் தொடர்பில்லை’ என்று அவர் சொல்லவில்லை. மேலும், இரண்டுக்கும் உள்ள தொடர்பை அங்கீகரிக்கிறார். அம்பேத்கரைப் பொறுத்தவரையும் கூட உழைப்புப் பிரிவினையே சாதியமைப்பிற்கு அடிப்படை என்று இதற்குப் பொருள். (ரங்கநாயகம்மா)

மூளை உழைப்பு செய்வோர் மேலானவர் உடல் உழைப்பு செய்வோர் கீழானவர் எனும் கருத்து உலகளாவிய அளவில் நிலவுகிறது. எல்லா நாடுகளிலும் ஏழைகளாக இருப்போர் உடல் உழைப்பில் மட்டுமே ஈடுபட முடிகிறது. அங்கும் இனம், மதம், மொழி போன்ற பிறப்பின் அடிப்படையான பேதங்கள் நிலவத்தான் செய்கிறது. இந்தியாவில் அது சாதி எனும் ஒரு unique வடிவத்தை எடுத்துள்ளது. 

இன்னாருக்கு இந்தப் பணி என்று நிலவும் உழைப்புப் பிரிவினையை மாற்றி அனைவரும் மூளை உழைப்பு, உடல் உழைப்பு என்று இரண்டு விதமான உழைப்பையும் செய்ய வேண்டும் எனும் நிலை உருவாக வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு சிலர் மட்டும் உழைத்து மற்றவர் அந்த உழைப்பைச் சுரண்டி வாழும் நிலையையும் மாற்ற வேண்டும். அனைவரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் எனும் நிலை உருவாக வேண்டும். இது ஒரு தலைகீழ் மாற்றமாகும்.
சாதி வர்க்கம் எனும் இரண்டையும் ஒழித்தல் வேண்டும்.  ஆகவே சாதிய எதிர்ப்பு, தனியுடமை எதிர்ப்பு எனும் இரண்டின் இணைப்பும் தேவைப்படுகிறது. இதற்கு EBC economically backward class எனும் அடையாளத்தின் கீழும் நாம் அனைவரும் ஒருங்கிணைவது அவசியமாகிறது.  ஏனென்றால் பொருளாதார மேல்நிலை என்பது அனைத்து பாகுபாடுகளையும் நீர்த்துப் போகச் செய்கிறது.*  

உ.ம். கலப்புத் திருமணத்தை எடுத்துக்கொள்வோம் – ஆதிக்க சாதிப் பெண் ஒருவர்  தலித் இளைஞரை திருமணம் செய்துகொள்ள தடையாய் இருப்பது சாதி – இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதே தலித் இளைஞர் ஒரு பணக்காரராக, தொழில் அதிபராக, மில்லினியராக இருந்தால் மறுப்பை விட ஏற்ப்புக்கே அதிக வாய்ப்புள்ளது, இல்லையா?
அதேபோல் ஆதிக்க சாதியினர் மத்தியில்கூட – ஏழையாக இருந்தால் அந்த ஆண்மகனை எவர் ஏற்றுக்கொள்கின்றனர்?  

அதேபோல் சாதிய கொடுமைகள் மட்டுமின்றி பொருளாதார நிலையில் பின்னடைவு காரணமாக இன்னும் சொல்லப்போனால் வறுமையின் காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எந்த ஒரு இடமாக இருந்தாலும் அங்கு ஏழைகளாக இருப்போர் கொடுமைப்படுத்தப்படுவதும், அவமதிப்பிற்கு உள்ளாவதும் நடக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், கூலி உழைப்புக்குறிய தொழில் புரியும் இடங்களில் சாதிக்கு அப்பார்பட்டு கொலைகளும் தற்கொலைகளும் நிகழ்கின்றன. SVS மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகளின் மர்மமான மரணமானது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. இதுபோல் பல சம்பவங்கள் உள்ளன.


அதேபோல் சமூக நீதிக்கான போராட்டத்தில் நாம் ஆணாதிக்க ஒழிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.  ஆணாதிக்கம் என்பதும் தனியுடைமை உற்பத்தி முறையின் விளைவே.  உடலின் அடிப்படையிலான பாகுபாட்டில் பெண் உடலும் கடுமையான ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டிற்கும் உள்ளாகிறது.  சாதியை கட்டிக்காக்கும் கருவிகளாக பெண் உடல் பார்க்கப்படும் அதேவேளை, சாதி / மத அடையாளத்திற்கு ஆண் தான் அடையாளமாக இருக்கிறான். அதாவது ஆணின் சாதிதான் பிள்ளைகளின் சாதியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆணாதிக்க சாதி / மதங்களின் உச்சபட்ச அநீதி இது.  ரோஹித்தின் விஷயத்திலும் இந்த ஆணாதிக்க சாதிய சிந்தனை வெளிப்பட்டது.  தந்தையின் சாதியை வைத்து ரோஹித் தலித் இல்லை என்று நிறுவப்பார்த்தார்கள். விளைவுகளை எண்ணி அவ்வளவு அச்சம்.  ஆணாதிக்க சாதிய மற்றும் மதக் கருத்தியல்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் உடல்கள், இன்னும் கூடுதலான வன்முறைக்கு உள்ளாகிறது.  
விலக்குதல், ஒடுக்கப்படுதல் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் செயல்படுகிறது என்பதை இன்னும் கூர்மையாக ஆய்வு செய்து அக்கொடுமைகளுக்கு உள்ளாகும் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து ஓர் அடையாளத்தின் கீழ் போராடுவதுதான் இதற்குத் தீர்வாக அமையும். அது சாதிய அடையாளமற்ற, அதாவது இந்துத்துவ அரசியலும், அடிப்படைவாதமும் எளிதாக எதிர்க்கக்கூடிய, மக்கள் மனங்களில் அச்சத்தையும், வெறுப்புணர்வையும் ஊட்டி பிரித்தாள்வதற்கு இடமளிக்காத வகையிலான ஓர் அடையாளமாக அது இருக்க வேண்டும்.

இன்றைக்கு கம்யூனிசம், சோஷலிசம், மார்க்சியம் போன்ற தத்துவச் சொற்களை  உள்ளடக்கிய பெயர்களும் சரி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களது பெயர்களைக் கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சாதியின் எழுச்சிக்காக தலித் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியின் பெரைக் கொண்ட அமைப்புகள் அனைத்தின் மீதும் இந்துதுவ பாசிசமானது ஒரு வெறுப்புணர்வை வளர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி பிரித்தாள்வதற்கான நாரதர் வேலையையும் பார்க்க முனைகிறது. இச்சூழ்நிலையில் பொதுவான அடையாளத்தின் கீழ் நாம் ஒருங்கிணைவதைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். 

நம்மை ஒடுக்குபவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒற்றை இலக்கோடு ஒருங்கிணைந்து செயல்படுவதால் அவர்களது அதிகாரம் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. நாம் அதாவது உழைக்கும் வர்க்கம் பெரும்பான்மையாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் உடைந்து உடைந்து சிறுபான்மை குழுக்களாகிக் கொண்டே இருக்கிறோம்.  இதனால் இளைஞர்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகிறது.  இதில் உளவியல் ரீதியாக நாம் ஒன்றை கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. இதை பொது புத்தியின் சிந்தனை ஓட்டத்தைக் கணக்கில் கொண்டு முன்வைக்க விரும்புகிறேன், மற்றபடி எந்த அமைப்பையும், தலைவர்களையும் மதிப்புக் குறைவாக சொல்வதற்கில்லை.

நான் மேற்சொன்னபடி ஒரு பொது அடையாளத்தின் கீழே நாம் இயக்கமாக இணைய வேண்டும், ஒருங்கிணைக்க வேண்டும், போராட்டங்களை தொடுக்க வேண்டும். ஏனென்றால் : இடதுசாரி அமைப்பின் பெயர் கொண்ட அமைப்பாக இருந்தால், முற்போக்கு சக்திகளாக இருந்தாலும் மார்க்சியம் குறித்த தவறான புரிதலாலும், சில இடது சாரி கட்சிகளின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு இருப்பதாலும் அதில் இணைவதற்கு இளைஞர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அத்தோடு அமைப்புகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் பெரும் தடையாக இருக்கின்றது.


அதேபோல் தலித் அமைப்புகளின் இயக்கம், அம்பேத்கரின் பெயரில் இயக்கம் என்றால் அதிலும் சில பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டாலும், மாற்றத்தை விரும்பினாலும், பன்னெடுங்காலமாக பொதுப் புத்தியில் ஊறிப்போயிருக்கும் சாதிய புத்தியின் காரணமாக 50 / 50 என்றிருக்கும் மக்கள் தங்களை தலித்துகளின் அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைத்துக்கொள்ள தயாராக இருப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானதுதான், ஆனால் யதார்த்த நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  ஏனென்றால் அத்தகையோர் சீர்திருத்தம் வேண்டுபவர்களாக இருப்பார்களே ஒழிய தங்களின் அடையாளங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.

பெரியார் பெயரில் இயங்கும் முற்போக்கு இயக்கங்கள் என்றால் இன்னும் கூடுதலான தயக்கம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  ஏனென்றால் பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் எனில் அது வேறு விதமான எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்கிறது. மொழி உணர்வின் அடிப்படையில் மிக மோசமான எதிர்ப்புணர்வையும் கொண்டிருக்கிறது.

மக்களை அணிதிரட்டுவதில் இப்பிரினிவைகள் பெரும் தடையாக இருக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். புரட்சிகர அமைப்புகள் பலமாக இருந்தபோது மாணவ அமைப்புகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பலமாக இருந்தன. எத்தகையப் போராட்டங்களெல்லாம் முன்னெடுக்கப்பட்டுள்ளன, என்னென்ன மாற்றங்கள் விளைந்தது என்பதை வரலாற்றில் காணலாம்.

கல்விச் சூழல் என்று எடுத்துக்கொண்டால் புரட்சிகர அரசியல் மேலோங்கியிருந்த காலத்தில் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் இந்துத்துவ சக்திகள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இடதுசாரிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக ஒடுக்கப்படுபவர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள வர்க்க ஒருங்கிணைப்பைக் காட்டிலும் சாதிய ஒருங்கிணைப்பைக் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்துத்துவ அரசியல் மீண்டும் எழுச்சி பெரும் சூழலில் அது அவர்களுக்குப் பின்னடைவாகிப் போகிறது.
மாற்று அரசியலில் இப்படிப்பட்ட பின்னடைவுகளால் எதிர்த்துப் போராடும் நம்பிக்கை குறைந்து, கைவிடப்பட்ட மனநிலை பாதிக்கப்படுபவர்களுக்கு மேலெழுகிறது. அவர்கள் தற்கொலையை நாடுகின்றனர். அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, தலித் மாணவர்கள் தற்கொலை, சாதிய ரீதியான படுகொலைகள் அனைத்திற்கும் நம்மிடையே உள்ள பிளவுதான் காரணம்.

ரோஹித்தின் கடிதமும் அதை சுட்டிக்காட்டுகிறது. அனைத்து முற்போக்கு தத்துவங்களையும் வழிகாட்டியாகக் கொண்ட ஓர் அமைப்பாக நாம் அனைவரும் ஒன்று திரள்வதுதான்  ரோஹித்தின் மரணத்திற்கு உண்மையான மரியாதை செலுத்துவதாக இருக்க முடியும். அந்த வகையில், மக்கள் நலக்கூட்டணி Joint Action Committee against CASTE போன்ற ஒருங்கிணைப்புகள் நல்லதொரு  முன்னேற்றம். ஆனால் இதை அனைத்துத் தளங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும். ஒற்றை அடையாளத்தின் கீழ் அணிகள் உருவாக்கப்பட வேண்டும்.  அது பன்மைத் தன்மைக்கும், சிறந்ததொரு ஜனநாயக அமைப்பிற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

* இதற்கு நாடார் சாதியின் வளர்ச்சி ஒரு சிறந்த உதாரணம் - கூட்டத்தில் தோழர் ஒருவரும் இதைக் குறிப்பிட்டார்

குறிப்பு:

ரோஹித் வெமுலாவின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் 30.1.2016 அன்று ஆற்றிய உரை.

சாதிகளின் வரலாற்று வளர்ச்சி பற்றிய குறிப்புகள்அவசியம் கருதி இப்பதிவில் சற்றே விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

References:

1.  மாறி வரும் சாதிகள்
2.  சாதி – ஓர் கண்டுபிடிப்பு (19 ஆம் நூற்றாண்டில் வியக்கத்தகு நிகழ்வு)
3.  சாமுகப் புறக்கணிப்பு (தாழ்த்தப்பட்டோர், முகமதியர்கள், பழங்குடிகள்)
          -   முனைவர் வெ. கண்ணுப்பிள்ளை, (இ.கா.ப. ஓய்வு), வளரும் சமுதாயப் பதிப்பகம்
3. Caste Question and Marxism (collection of Papers Presented in the Fourth Arvind Memorial Seminar) , Arvind Memorial Trust
4.  Caste and Class: A Marxist Viewpoint, Ranganayakamma, Rahul Foundation
5.  Religion, Caste & Politics in India, Christophe Jaffrelot, Primus Books
6.  சாதி குறித்து மார்க்ஸ், ரங்கநாயகம்மா - http://saavinudhadugal.blogspot.in/2014/09/blog-post.html


More Suggesstions

1.    CAPITAL, Karl Marx
2.    அம்பேத்கரின் சாதி ஒழிப்பு – சில சிந்தனைகள், இராசேந்திர சோழன்.
3.    வலைவிரிக்கும் இந்துத்துவம் - தலித்துகளை ஈர்க்கும் இந்துத்துவ தந்திரங்கள், பத்ரி நாராயண் திவாரி, கிழக்கு பதிப்பகம்
4.    தலீத்துகளின் இன்றைய நிலைமை – குழப்பமும் தடுமாற்றமும் – அவர்களின் முந்தைய தற்போதைய போராட்டம், ஆ. பத்மநாபன். பூம்புகார் பதிப்பகம் வெளியீடு
5.   சாதியப் போர்வையில் வர்க்கப் போராட்டம் - http://saavinudhadugal.blogspot.in/2016/01/blog-post_30.html



No comments:

Post a Comment