Apr 13, 2013

தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் விதிகள் - பேட்டி


1.  வன்முறை நிறைந்த சமூக உருவாக்கத்தில் அல்லது பெண்கள் அனுகமுடியாத ஒரு சமூக உருவாக்கத்தில் தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் பங்கு எத்தகையது? உங்களின் கருத்து என்ன?
பெண்களின் உரிமைகளையும், அதிகாரத்தையும் பிடுங்கியே தந்தை தலைமையிலான (ஆண் தலைமை) குடும்ப அமைப்பு பரிணமித்தது. பண்டைய காலத்தில் பெண்களே குடும்பம் மற்றும் இனக்குழுவின் தலைவர்களாக இருந்துள்ளனர். சேகரித்த உணவு, குழந்தைகள், சொத்து இவற்றின் மீது உரிமை கொண்டிருந்தனர். கரு-உருவாக்கத்தில் தங்களுக்கும் பங்குண்டு என்று ஆண்கள் அறிந்திருக்கவில்லை. பின்னர் உற்பத்தி முறை (வாழ்வாதாரச் சாதனங்கள்) மாறியபோது, சொத்துக் குவியலுக்காகவும், அதற்கு தேவைப்படும் அதிகாரத்திற்காகவும் பெண்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
சொத்துக் குவிப்பிற்காகவும், வளத்திற்காகவும் வன்முறையின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி வந்த ஒரு அமைப்பில் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தலைகீழாக நின்றாவது அது அடிமைத்தனத்தை பேணும், அது பெண்ணோ, உழைக்கும் வர்க்கமோ, பேதமில்லை. வாரிசு உருவாக்கம், உழைப்பு சக்தி என்று இரண்டு வகையில் ‘இரட்டை ’ உழைப்பு செலுத்தும் பெண்கள், குறைந்தவிலை கூலிகளாகவும் இருப்பதால், மிக மோசமான வன்முறை நிறைந்த ஒரு ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர்.  உற்பத்தி சாதனங்கள் மீதான உரிமை (உழைப்பு மற்றும் மறு-உற்பத்தி) மற்றும் சொத்து குவிப்பு தகர்க்கப்படும் வரை இதற்கு விடிவில்லை. ‘குறிப்பிட்ட வர்க்கம்’ அனுபவிக்கும் சுதந்திரம் உண்மையில் சுதந்திரமல்ல, அது தொழிலுக்காகவும், வளத்திற்காகவும் நடக்கும் உழைப்பு மற்றும் உடல் சுரண்டல்.
2.  பாலியல் வன்புணர்வில், மரண தண்டனை எவ்வாறு பிரச்சனையை தீர்க்கும்?
மரண தண்டனை மட்டுமன்று, எந்தவகையான தண்டனையும் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதில்லை. இவ்வகை தண்டனைகள் அரசர்களாலும், ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டவை. 100% அடிபணிதலை வலியுறுத்தியும், புரட்சியை ஒடுக்கவும் ‘ஆளும் வர்க்கத்தால்’, ’வணிக அல்லது பணக்கார வர்க்கங்களை’ திருப்திபடுத்தவும் தோற்றுவிக்கப்பட்டது. உழைப்புச் சுரண்டல் மூலம் திரட்டிய சொத்துக்கள் திருடு போகாமல் காக்க ஆளும் வர்க்கங்களுக்கு சில சட்டங்கள் தேவைப்பட்டது, அதனால் அவர்கள் மக்களை மரண தண்டனையைச் சொல்லி மிரட்ட முனைந்தார்கள். பின்னர் எல்லாவிதமான ‘கீழ்படியாமைக்கும்’ அதை பயன்படுத்த தொடங்கினர். காலனியாக்கத்தின்போது  அதற்கு பெரும் ஆதரவு கிட்டியது.
உளவியல்ரீதியாக ஆய்ந்துபார்த்தால், மரணதண்டனை ஒருவகையில் ‘விரைவு நிவாரணி’, அது எவருக்கும் நினைத்த பலனை தரப்போவதில்லை.
இங்கு அரசாங்கம் ‘தப்பித்தல்’ உத்தியை பயன்படுத்துகிறது, ‘மற்றவர்கள்’ குற்றவாளிகள் என்று விரல்காட்டிவிட்டு, தண்டனை மீதான மக்களின் போலி நம்பிக்கையை பயன்படுத்தி நற்பெயர் சம்பாதிக்க நினைக்கிறது. பாலியல் பகையை குறைக்க, பெண்களுக்கு மரியாதையை வலியுறுத்த அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது?
சவுதி அரேபியாவில் தன்னுடைய 1 ½ வயது குழந்தையை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு செய்தியை சமீபத்தில் படித்தேன், ஆனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. அதேவேளை குழந்தையை பராமரிக்கும்போது, குழந்தை இறந்துவிட்டதால், ரிஷானா எனும் பெண்ணுக்கு தூக்கு தண்டனை... இந்த ‘ஓரவஞ்சனைகளை’ நாம் எப்படிப் பார்க்கிறோம்?
3.  ஆண்-சார்பு சமூகத்திற்கு பெண்களும் பங்களிக்கிறார்களா?
நிச்சயமாக ஆமாம். ஆனால் அதற்கு நாம் ஆண்களையோ, பெண்களையோ குறை சொல்ல முடியாது. பல தலைமூறைகளாக அவர்கள் ’ஆண் ஆதிக்க ஆன்மாவையே’ உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இதே சமூக கட்டமைப்பில்தான் ஆண், பெண் இருவரும் வளர்கின்றனர். இதில் ஆண்கள் கடவுள்கள் என்று நம்பும் அளவுக்கு பெண்களின் உடலும் மூளையும், மரபணுரீதியாக மாற்றபட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. ஆண்களிடம் ‘நற்சான்றிதழ்’ வாங்குவதே பெண்களின் முக்கிய எண்ணமாக இருக்கிறது. ஆன்களின் அங்கிகாரமே தங்கள் வாழ்வின் பயன் என்று அவர்கள் நம்பும்படி செய்திருக்கிறார்கள். பெண் என்பவள் யார், அவளது உரிமைகள் யாது, மானுட வளர்ச்சியில் அவளது பங்கு என்ன? அவள் ஏன் ஒடுக்கப்படுகிறாள், குறிப்பாக என்ன வகையான ‘மாற்றம்’ அவளுக்கு ‘உண்மையான சுதந்திரத்தை’ பெற்று தரும் என்று எதுவும் பொது கல்வியில் கற்று கொடுக்கப்படுவதில்லை.
4.  ஆண்மை என்பது சமூக அடையாளமாக இருக்க, அதுவே பெண்களுக்கெதிரான வன்முறை மன்பான்மைக்கு வழிவகுக்கிறது. இது உண்மையா? இதற்கு மேல் ஏதும் இருக்கிறதா?
இது வரலாற்று பரிணாமத்தின் பொருளாயத நடைமுறை. இதற்கு நாம் எவரையும் குறை சொல்ல முடியாது. ‘எது’ இந்த படிநிலையை உருவாக்கியது, அதை எப்படி துடைத்தெரிவது, சமத்துவ சமூகத்தின் நன்மைகள் யாவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பண்டைய காலத்தில் பெண்கள் தங்கள் மறு-உற்பத்தி சக்திக்காக வணங்கப்பட்டும், போற்றப்பட்டும் வந்தார்கள், ஆண்களுக்கு சமூகத்தில் பெரிதாக ஒரு ‘இடம்’ இருந்திருக்கவில்லை. பொருளாதார முறை மாறியபோது, ‘சொத்துக்களை’ பாதுக்காக ஆண்கள் பலமானவராக ‘காட்டப்பட வேண்டியிருந்தது’ அதனால் ‘ஆண்மை’ கதைகள் உருவாகின. துரதிர்ஷ்டவசமாக ஆண்களும், பெண்களும் தங்கள் இரத்தங்களில் அதை அப்படியே ஏற்றிகொண்டனர். உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது, அந்த எண்னத்தோடே அது உருவாக்கப்பட்டது. அது மீண்டும் முதல் கேள்விக்கு இட்டுச் செல்லும்.
5.  வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் ஆகியவற்றில் உலக அளவில்கூட ஏன் பாதிக்கப்பட்டவரே குற்றம் சாட்டப்படுகின்றனர்?
‘பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்படுவதென்பது’ நிர்வாக இயலாமையிலுருந்து, உளவியல் காரணிகளாலும் எழுகிறது. நம் வீட்டிலேயே நாம் அடுத்தவரை தானே குற்றம் சொல்வோம். ‘மனித மனம்’ அப்படித்தான் சிந்திக்கும். எப்போது மற்றவர்களிடம் ‘நற்சான்றிதழ்’ பெருவது, ‘அடையாளத்தை’ தக்கவைத்துக் கொள்வது என்பதே அதன் விருப்பம். ஆனால், 1 ½ வயது குழந்தை ’காமத் தூண்டுதலை’ எப்படி செய்ய முடியும்?... மீண்டும் இது போலி ‘ஒழுக்கவாதத்தின்’ விளைவு.
6.  இதை முடிவுக்கு கொண்டு வர ஆண்கள், பெண்கள் என்ன செய்ய வேண்டும்? உண்மையில் இதற்கு முடிவு இருக்கிறதா?
ஆண் பெண் இருவரும் முதலில் சமூகத்தின் பொருளாயத வரலாற்று வளர்ச்சியை அறியவேண்டும். பானிபட் போர், ராமர் எங்கு எப்போது பிறந்தார் எனும் பயனற்ற தகவல்களுக்கு பதில் ‘பொருளாதார வளர்ச்சி’ / ‘உற்பத்தி’ முறைகளின் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை கற்க வேண்டும். இந்த ‘உண்மை அறிவு’ கல்விக்கூடங்களில் கிடைக்காது எனும் உண்மை நமக்குத் தெரியும், அதை ‘கல்விக்கூடச் சுவற்றுக்கு வெளியே’ தேட வேண்டும்.
தங்களைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் பற்றி கேள்வி கேட்க வேண்டும். ’யார்’ அதைச் சொன்னார்கள், எதற்காக சொன்னார்கள் என்பதை அறிய வேண்டும். ‘படிநிலைகள்’ / ‘எஜமானர் அடிமை’ உறவு (எத்தகைய உறவானாலும் சரி) பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். அது விதியல்ல, கடவுளின் ஆணையல்ல (அப்படி ஆணையிடுபவர் கடவுளாக இருக்க முடியாது) என்பதை புரிந்து கொண்டு, ஒவ்வொன்றை பற்றியும் கேள்வி எழுப்பும் உரிமை தங்களுக்கிருக்கிறது என்பதையும், ‘மாற்றம் வேண்டும்’, ‘சமத்துவம் வேண்டும்’ என்று கேட்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஆங்கில இதழுக்காக வைக்கப்பட்ட கேள்விகள், இதன் சுருக்கம் வெளிவந்தது. ஆங்கிலத்தில் படிக்க (To read in english - http://masessaynotosexism.wordpress.com/2013/03/19/1199/)
4 comments:

 1. hmm good . better if u have dealt elaborately with a political alternative. cos that's the only solution.though it gives some colour to the ppl its worth cos simple there is nothing called neutral.

  ReplyDelete
 2. "ஆண் பெண் இருவரும் முதலில் சமூகத்தின் பொருளாயத வரலாற்று வளர்ச்சியை அறியவேண்டும்"
  சரி ..அவ்வாறு அறிந்துகொண்டு பொருளாதார ஆதாயத்தை ஈட்டி விட்டால் ,பெண்ணுரிமை மீட்கப்பட்டு விடுமா ? அல்லது ஆனாதிக்கம் ஒழிந்து விடுமா ?...இப்படி பொருள் ஆதாயம் அடைந்த ஐஸ்வர்யா ராய் ...அல்லது I T துறையில் லட்சங்களை சம்பாதிக்கும் பலர் விடுதலை அடைந்து விட்டார்களா ......அவர்கள் மீண்டும் ஆணிடம் வந்து சேர்ந்து விடுகிறார்கள் ....கொற்றவை அவர்களே...ஆண்கள் பெண்களுக்கு எதிரி அல்ல ....இருவரும் ...ஒருவருக்கொருவர் இணை ....அவ்வளவே...இது பெண் விடுதலை என்பது பற்றிய விவகாரம் அல்ல ...ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ,பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்ந்தாலே போதும் ...இந்த உறவில் ஏன் வெடிகுண்டு வீசுகிறீர்கள் ...ஆண் ,பெண்ணை சார்ந்தும் பெண் ஆணை சார்ந்தும் ....அவர்கள் இயற்கையின் கொடையை சார்ந்தும் வாழ்வது தான் ..உலக வழக்கு ...

  பெண்கள் தங்களுடைய உடலமைப்பையும் ,அது சார்ந்த பலம் ,மற்றும் பலவீனம் ,இரண்டையும் அறிவார்கள் ,அப்படி அறிந்தவர்கள் எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ,பாதுகாப்புடன் பெண்ணாகவே இருக்க விரும்புகிறார்கள் ..அதனால்தான் அத்தனை ஆண் அடிமைகளை அமைச்சர்களாக காலுக்கு கீழே போட்டு மிதித்தாலும்....தங்களுடைய உடல் முழுக்க நகைகளை வாங்கி அணிந்து கொண்டு..தங்களுடைய (பெண்ணிய )சமூகம் சார்ந்த ஆசைகளை வெளிக்காட்டி மாட்டிக்கொள்கிறார்கள் ...(ஜெ .சொத்துகுவிப்பு வழக்கு )யாரும் ஆணாக மாற நினைப்பதில்லை ....படைப்புக்கள் அதன் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பொது விதி ....மாறினால் மதிக்கப்படுவது இல்லை ..சமூகத்தினால் மறுக்கப்படுகிறது ....

  ஒருவேளை நீங்கள் சொல்லும் பெண்ணிய விடுதலை என்பது கீழே கண்ட இதுதானா என்பதை தயவு செய்து பதிவிடுங்கள்

  கனடாவில் பெண்கள் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.


  இந்த அமைப்பினர் பிரிட்டிஷ் கொலம்பியா வீதியில் நடத்திய ‘ரொப்லெஸ்டே’ நிகழ்வை பற்றி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா என்னும் நகரத்தின் மேயரான வால்டர் கிறே என்பவருடன் லோரி வெல்போர்ன என்ற பெண் நிரூபர் ஒருவரின் நேர்காணல் இடம் பெற்றது. அப்போது, நான் தெருவில் மேலாடையின்றி நடந்து போனால் எப்படி இருக்கும் என்று வால்ட்டரிடம் சிரித்தபடி கேட்டார் லோரி. அதற்கு மேயர் வால்ட்டர் பதிலளிக்க முற்பட்டபோது, திடீரென தனது மைக்கை வால்ட்டரிடம் கொடுத்து விட்டு தான் அணிந்திருந்த மேலாடையை அப்படியே கழற்றிக் கீழே வைத்தார். நேர்காணலில் ஈடுபட்ட பெண் நிருபர் திடீரென தனது மேலாடையைக் களைந்து விடவே எதிரே இருந்த மேயருக்குத் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. ஆனால் அவர் தனது முகத்தில் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டமால் நேர்காணலுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஏன் திடீரென மேலாடையைக் களைந்தீர்கள் என்று அவர் பெண் நிரூபரிடம் கேட்டபோது, வெக்கையாக இருக்கிறது, அதுதான் மேலாடையைக் களைந்தேன் என்று நிரூபர் பதிலளித்தார். சிறிது நேரத்தால், அவர் மேயரைப் பார்த்து நான் இப்படி திறந்த மார்புடன் உங்களில் முன்னிலையில் அமர்ந்திருப்பது உங்களுக்குப் பிரச்சனையில்லையா என்று கேட்டார். அதற்கு மேயர் இப்படி திறந்த மார்புடன் தெருவில் நடப்பது இங்குள்ள சட்டப்படி குற்றமில்லை என்பதால் இதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை என்று பதில் கூறினார். அதற்கு லோரி, அப்படியென்றால் நான் கெலோவ்னா நகர வீதிகளில் இப்படி திறந்த மார்புடன் நடக்க முடியுமா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த மேயரோ, நிச்சயமா போகலாமே நீங்கள் இப்படிச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்று மட்டும் என்னால் கூற முடியும் என்று பதிலளித்துள்ளார் திடீரென நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அந்த நிகழ்வின்போது, மேயர் மிகவும் புத்திசாலித் தனத்தோடு நடந்து கொண்டபடியால் பலரின் விமர்சனத்தில் இருந்தும் தப்பிக் கொண்டார்.

  பொது இடங்களில் ஆண்கள் மேற்சடடை அணியாமல் நிற்கலாம் என்றால் ஏன் பெண்களும் அப்படி நிற்கமுடியாது என்பதே இந்த அமைப்பினரின் முக்கிய கேள்வியாக இருக்கின்றது. இந்த ஊர்வலத்தின்போது, ‘Free Your breasts Free your mind’ என்ற கோஷம் பலமாக எழுப்பப்பட்டது.

  B.M AHAMED JAN

  ReplyDelete


 3. சமூகம் சில சட்டங்களையும் ,கட்டுப்பாடுகளையும் இருவருக்கும் விதிக்கிறது ,பொருள் ஆதாய லாபம் என்பதற்காக "உடல்" காட்டி பிழைக்கும் சினிமாக்காரர்களை எல்லோரும் பின் பற்ற வேண்டுமா ? அல்லது அது அந்த பெண்ணின் உரிமை என்று சொல்வீர்களா ? அவ்வாறானால் தாங்கள் ஊடக ஆசிரியர்களுக்கு "நடு"ப்பக்கம் பற்றி பாடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே.......ஆந்த பெண்களின் உரிமையில் நீங்கள் ஏன் தலையிட்டு பெண்ணாதிக்கம் செய்கின்றீர்கள் .....

  "பானிபட் போர், ராமர் எங்கு எப்போது பிறந்தார் எனும் "பயனற்ற"!!!! தகவல்களுக்கு பதில் ‘பொருளாதார வளர்ச்சி’ / ‘உற்பத்தி’ முறைகளின் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை கற்க வேண்டும்"

  என்ன அருமையான வழிகாட்டுதல்
  வரலாற்றின் வழிகாட்டுதல் இல்லாமல்,வரலாறே அறியாமல் வாழும் சமூகம் எப்படி அறிவுடைய சமுதாயமாக இருக்கும்.? பொருளாதாரம், உற்பத்திமுறை,இவைகளை கற்றால் போதும் என்றால்...அங்கே அனைவரும் பணமீட்டும் எந்திரங்களாக இருப்பார்களே தவிர ...அன்பு ,பண்பு ,மனிதாபிமானம் ,இவைகளை குழி தோண்டி புதைத்து விட்டு அமெரிக்கர்களைப் போல பணத்தை மட்டும் நேசிக்க வேண்டியதுதான் .......தாங்கள் வழி காட்டும் பெண்களுக்கு அது போதும்தானே ?
  B .M. Ahamed Jan

  ReplyDelete