Sep 15, 2012

ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் கவிதையாகிற தருணத்தில்




ஒரு குற்றவாளியின் வாக்குமூலம்
கவிதையாகிற தருணத்தில்
கல்லறையில் இவ்வாசகம் பொறிக்கபப்டுகிறது
”நல்லவர்களை அடையாளம் காட்ட
குற்றங்களை உருவாக்கிய
கடவுளுக்கு நன்றி”

பெயரற்ற அந்த நபர்
செய்ததெல்லாம்
கண்காணிப்பு நிறுவனங்களுக்கு
முழு விசுவாசமாய் இருந்தது
வரி கட்டுவது
ஊழலுக்கெதிரான உண்ணாவிரதங்களில்
கலந்துக் கொள்வது
தேர்தல் நேரத்தில்
ஓட்டுப் போடுவது
உடலை நிராகரித்து
மனதிற்கு கோயில் எழுப்புவது
கொன்றுவிட்ட மனதோடு புதைந்து போவது

மற்றொருவர்
கடவுளுக்கு சாத்தானை அறிமுகம் செய்வதோடு
சாத்தானுக்கு பிள்ளைகளும்
பெற்றுத் தருகிறார்
வறுமையிலிருந்து சொற்களை உருவி
மறைகளை உருவாக்கினர்

குப்பைத் தொட்டிக்கருகில்
ஈக்களுக்கு கொடுத்தது போக
தானும் உண்கிறார்
தனக்கு மட்டும் விசுவாசமாய் இருக்கும்
நம்மைப் போல் அல்லாத
வேறொருவர்

இப்போது புனித மறையில்
ஒரு புதிய குற்றம்

 (இம்மாத புதிய கோடங்கி இதழில் வெளிவந்துள்ளது)

No comments:

Post a Comment