Apr 12, 2012

அவளை உங்களுக்கு தெரியாதுஅவளை உங்களுக்கு தெரியாது
உழுது பயிர் செய்த தூர தேசத்து கோதுமையாய்

புவியின் நரம்புகள் அறுக்கப்பட்ட போதிலும்
கசியாமல் உறைகிறது வெண் குருதி

சொற்களற்ற அகராதி நிறைந்திருக்கும்
வீடு அது
வெற்று பக்கங்களில்
ஆண் சிலந்திகள்
வழ வழப்பான திரவத்தை இட்டு நிரப்பின

யானைகளுக்கு சிறகு வரைந்தாள் அவள்
வீடுகள் பறந்தன அவள் தூரிகையில்
என் முகம் மட்டும் காட்டும்
ண்ணாடி ஒன்றை பரிசளித்தாள்

அகராதிகளை ஒளித்து வைத்து
அக்கண்ணாடியை அணிந்து கொண்டோம்
பிம்பங்கள் பிம்பமானது
குட்டி இளவரசனின்
பறக்கும் தட்டை களவாடினோம்

சிறகு முளைத்த யானையும்
சேர்ந்து கொண்டது எங்களுடன்
அன்று மழை பெய்யவில்லை
சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது பால் வீதி

சொற்கள் கோர்த்து பனிக்குடம் செய்கிறாள்
அந்த வெம்மைக்குள் என்னை பொதிந்து வைக்கிறாள்

உங்களுக்கு அவளை தெரியாது
உங்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதில்லை அவள்.
8 comments:

 1. என்ன கவிதை இது ? கவிதை முழுக்க குறியீட்டுச் சொற்கள் ! புரியாதது போல எழுதுவதில் தான் மேதைத் தனம் இருக்கிறதா என்ன ? தமிழுக்கென்று, தமிழ் கவிதைகளுக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. அன்னியமொழிக் கவிதைகளின் ' சாயலைத் ' தமிழ் கவிதைக்கு ஏற்றிவிட்டால் அக்கவிதை உலகத்தரம் அடைந்து விடுமா என்ன ? எதுகையும் மோனையும் அவ்வளவு குற்றமா ? திருக்குறளில் இல்லாத எதுகை மோனையா ? எத்தனை மொழிகளில் அது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது ! என்னைப் பொறுத்தவரை இது கவிதை இல்லை. விடுகதைகளின் தொகுப்பு !

  ReplyDelete
 2. எல்லாப் பின்னூட்டங்களுக்கும் நன்றி என்று ஒரு வார்த்தையில் மட்டுமே விடையளிப்பது என்ற கொள்கை சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். தேவை இல்லாத சர்ச்சைகளை அதன் மூலம் தவிர்க்கலாம் என்பது தங்கள் எண்ணமாக இருக்கலாம் அல்லது ' யாரோ ' வேலை வெட்டி இல்லாதாவன்கள் வெட்டியாகப் போடும் பின்னூட்டங்களுக்கு மெனக்கெட்டு விடை அளிப்பதன் மூலம் தங்கள் ' பொன்னான ' நேரம் செலவழிவதை தாங்கள் விரும்பாமல் இருக்கலாம். ' நன்றி ' என்ற அந்த ஒரு வார்த்தையில் மகா புறக்கணிப்பை நான் உணர்கிறேன். எனது வலைப்பூவை விமர்சிக்க உனக்கு எந்தத் தகுதியும் இல்லை, அல்லது உம்மைப் போன்ற சராசரிக் கொள்கைகள் கொண்ட சாமாநியன்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது என் வேலை அல்ல என்ற செய்தியை நன்றி என்ற அந்த ஒரு வார்த்தையில் அழகாக வெளிப்படுத்துகிறீர்கள் !


  நன்றி !

  ReplyDelete
 3. அது அவ்வாறில்லை.... வேறு பல காரணங்களும் இருக்கலாம். எல்லாவற்றையும் வெளிப்படையாக பதிவு செய்ய இயலாது, அது தேவையும் இல்லை...

  சில இடங்களில் உங்கள் விமர்சனத்திற்கு இடமளிக்கிறேன், சில இடங்களில் விடையளிக்கிறேன்... அவ்வளவுதான்... ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனம் ஏன் மற்றதை மறுக்கிறது...

  எல்லாம் சுதந்திரம் சார்ந்தது....நீங்கள் தேவையற்ற கற்பனைகளில் ஈடுபடுவதும், தேவையற்ற விளக்கங்களை கோருவதும் வழக்கமாக கொண்டுள்ளீர்கள்... ஒருவகையில் இது வாசகர் அதிகார மனம் என்றும் சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. " வாசகர் அதிகார மனம் " , எங்கு தான் பிடிக்கிறீர்கள் இது போன்ற சொற்களை ! ஒரு படைப்பாளிக்கு, " படைப்பு அதிகார மனம் " இருக்கலாம், ஒருசார்புத் தன்மையுடைய ஏதோ ஒரு விஷயத்தை அவன் தன் எழுத்துக்கள் மூலம் வாசகனுக்கு முன்னிறுத்தலாம். ஆனால், வாசகன் அவனது படைப்புகளைப் புகழ மட்டுமே செய்ய வேண்டும். அதிகப் பிரசங்கித் தனமாகக் கேள்வி கேட்கக் கூடாது. இந்தக் கவிதைக்கான பின்னூட்டத்தில் என்ன பெரிதாய் தேவை இல்லாமல், தேவையற்ற கற்பனையோடு கேட்டு விட்டேன் கொற்றவை ? புரியும் படி கவிதை எழுதுவது ஏன் புறக்கணிக்கப் படுகிறது என்று தானே கேட்டேன். அவ்வாறு கேட்பது, தங்களை புரியும் படி மட்டுமே கவிதை எழுதச் சொல்ல வேண்டும் என்ற அதிகார மனப்பான்மையில் அல்ல. ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் நானும் ' ஏதாவது ' தெரிந்து கொள்ள.

   எனக்கெல்லாம்,

   " நீ ஒரு புலி !
   பயந்து ஓடுகிறது எலி !
   அதற்குப் பிடித்து விட்டது கிலி !
   அது ஆகப் போகிறது பலி !
   அந்த வெற்றியை உரத்து நீ ஒலி ! "

   - என்று எழுதினால் தான் ஒரு கவிதை எழுதிய நிறைவு வருகிறது. யாராவது ஒரு பாமரன், ' இக்கவிதையின் ' லி தந்த மின்சார உணர்ச்சியில் அதைப் பாராட்டித் தொலைத்து விட்டானென்றால், தொடர்ந்து நான் இப்படியே தான் எழுதுவேன். எனக்கென்று ஒரு வட்டம் உருவாகும். நான் அங்கேயே தங்கி விட நேரும். என்னால் வெளி வர முடியாது. இது போன்ற கவிதைகளை 1960 களிலே வாலி எழுதி விட்டார். நீங்கள் எழுதிய இந்தக் கவிதை சத்தியமாக எனக்குப் புரியவில்லை. நம் அறிவுக்கு மீறிய ஏதோ ஒரு விஷயம் இதில் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. அதைத் தெரிந்து கொள்ளும் உந்துதலில் சற்று எதிர்மறையாகக் கேட்டு விட்டேன். மன்னிக்கவும். எனக்கும் தங்களிடம் மன்னிப்புக் கேட்டு கேட்டு போரடித்து விட்டது.

   " நீ யாரோ எவனோ ? நீ கவிதை எழுதுவதற்கெல்லாம் என்னால் பாடம் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. போய் உருப்படியாக வேலை ஏதாவது இருந்தால் பார்..... " என்று சொல்லாமல் சொல்ல நாசுக்கான வரிகளை நீங்கள் தேட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் தங்களுக்கு இட்ட பின்னூட்டங்களில் இருந்து என்னைப் பற்றிய ஒரு ' பிம்பம் ' தங்களுக்கு உருவாகியிருக்கலாம். அது பிம்பம் மட்டுமே. நிஜம் என்பது வேறானது.

   எழுத்தைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நடை முறையில் அது சாத்தியமில்லை. நான் தற்போது ஈடு பட்டுள்ள பணியில் உப்புச் சப்பில்லாமல் தான் ஈடுபடுகிறேன். ஆற்றில் ஒரு கால் ! சேற்றில் ஒரு கால் ! கூழுக்கும் ஆசை ! மீசைக்கும் ஆசை ! திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது என் கனவு ! சத்தியமாக அடுத்த ஜென்மத்தில் அது ஈடேறலாம். என்ன தான் சொல்ல வருகிறாய் என்கிறாயா ? என்னத்தைச் சொல்வது. ஒன்றுமில்லை. நன்றி.

   Delete
 4. ஐந்தாறு முறை...சேர்த்தும் பிரித்தும் படித்தாயிற்று, பொருள் தான் விளங்க வில்லை. பின்னர் சட்டென தோன்றிற்று, ஹூம் 'சரியாகத்தான் தலைப்பிட்டு இருக்கிறீர்' என்று.

  ReplyDelete
 5. நன்றி சந்திரமோகன்... எல்லாம் புரிந்தேயாக வேண்டும் என்று நினைப்பது கூட ஒருவகை கட்டமைப்பே...நம்மைச் சுற்றி புரியாத விசயங்கள் எத்தனையோ இருக்கின்றது...புரியாமல் இருப்பது ஒரு அனுபவம் தானே.... அந்த அனுபவமே கவிதை... அதேபோல் எல்லாவற்றிற்கு காரணம் வேண்டும், நியாப்பாடு வேண்டும், பொறுத்தப்பாடு வேண்டும் என்பது ஒரு பழக்கப்பட்ட மனநிலை....அதிலிருந்து நம்மை மீட்டெடுக்க உதவுதது கலை என்பது எனது புரிதல்... பெயரில் ஒன்றுமில்லை...

  ReplyDelete
 6. குருசந்திரன் (தேவ்!!), சந்திரமோகன் - இந்த கவிதையின் கருப்பொருளை சொன்னால் உங்களால் எளிதில் அனுகமுடியும் என்று நினைக்கிறேன்...

  இது எனக்கும் என் மகளுக்குமான உறவு, பிரிவு பற்றிய கவிதை.......மற்றவற்றை கவிதை பேசும்... நன்றி.

  ReplyDelete