Mar 23, 2012

தொடர் உண்ணாநிலை போராட்டம் - நாள் இரண்டு


கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்டம் குறித்து நிறைய பேருக்கு மென் கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளித்த Naanarkaadan Oviyanilaa எனும் தோழர் பின் வரும் வாழ்த்துறையும், அறிக்கையும் அனுப்பியிருந்தார். அது இன்றைய தினம் போராட்டக்கூட்டத்தினரிடையே வாசிக்கப்பட்டது. ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி.

போராட்டம் வெல்ல நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் வாழ்த்துகிறது . இந்தப் போராட்டத்திற்குப் பொருத்தமான தோழர் பகத்சிங் கின் அறிக்கை.......

லாகூர் சதிவழக்கு விசாரணை நடைபெற்ற சிறப்பு நீதிமன்றத்தில்,பகத்சிங்கால் எழுதப்பட்டு,ஐந்து தோழர்களால் கையொப்பமிடப்பட்டு,வாசிக்கப்பட்ட அறிக்கையின் சிறு பகுதி....

....புரட்சியின் இலக்கை அடைவதற்காக கைக்கொள்ள வேண்டிய வழிமுறை சமாதானப் பூர்வமானதாய் இருக்க வேண்டுமா அல்லது வேறுவகைப்பட்டதாய் இருக்கவேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களிடமே இருக்கிறது என்று நாங்கள் அறிவிக்கிறோம்.புரட்சியாளர்கள் பிறர்க்கென வாழும் கோட்பாட்டை உடையவர்களாதலால்,அவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்கள். அவர்கள் நேசிக்கும் சமாதானம்,கோழைத்தனத்தின் விளைவாய் பிறப்பதும்,துப்பாக்கி முனையில் பேணப்படுவதுமான போலி சமாதானம் அல்ல.நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக்கொண்ட உண்மையான நிரந்தரமான சமாதானமே.தவிர்க்க முடியாத கட்டாய சூழ்நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கையாக, கடைசிப் புகலிடமாக மட்டுமே புரட்சியாளர்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் கையிலெடுக்கின்றனர்.
மனிதனுக்காக சட்டம்-ஒழுங்கேயொழிய, சட்டம்-ஒழுங்கிற்காக மனிதன் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

மக்களது விருப்பதின் வெளிப்பாடாக இருக்கும் வரை மட்டுமே சட்டத்தின் புனிதத்தை பேண முடியும்.எப்போது அது ஒடுக்கும் வர்க்கத்தின் கையில் வெறும் கருவியாக மாறிவிட்டதோ,அப்போதே அது தனது புனிதத்தையும் தனிச்சிறப்பையும் இழந்துவிடுகிறது.பொதுமக்களின் சமூகத்தேவைகளுடனான தனது பொருத்தத்தை சட்டம் இழந்த உடனேயே அது, அநீதி இழைப்பதற்கும் கொடுங்கோலாட்சி செலுத்துவதற்குமான கருவியாக மாறிவிடுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்கள்,எமது மக்களின் நலனுக்கு எதிராக,அந்நிய ஆட்சியாளர்களின் நலனுக்காகவே இருக்கின்றன.அதனாலெயே அறநெறிகளின்படி,எமது மக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அச்சட்டங்களுக்கு கிடையாது.........

---------- பகத்சிங்


இன்று தோழர் பகத்சிங்கின் நிணைவு நாள். அதையொட்டி கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்துவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் அவரது சிந்தைனைகளை நிணைவுகூர்ந்து பேசுவது என்று நேற்று முடிவு செய்தோம். அதற்கு பொருந்திவருமாறு நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் தோழரும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடுதலைப் பாதையில் பகத்சிங் எனும் புத்தகத்திலிருந்து எங்களைத் தூக்கிலிடக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கடிதத்தின் இறுதி பத்திகளை வாசித்தேன்:

கைதிகளைச் சுடும் படைப்பிரிவிற்கு உத்தரவிடுங்கள்:

எங்களது இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களை சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொலை செய்வதென்று நீங்கள் தீர்மானித்துவிட்டதால் அதனை நீங்கள் நிச்சயமாய் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. இந்த உலகத்தில் அதிகாரமே மிகப்பெரும் நியாயத்தைக் கொடுக்கிறது. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” எனும் முதுமொழியே உங்களை வழிநடத்தும் உந்து சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் மீதான விசாரனை முழுவதுமே அதற்கு ஓர் சான்று.

நாங்கள் எதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றால், உங்களது நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நாங்கள் அரசுக்கெதிராகப் போர் தொடுத்துள்ளோம். ஆகையால் நாங்கள் போர்க்கைதிகளே. எனவே நாங்கள் போர்க் கைதிகளைப் போலவே நடத்தப்பட வேண்டும். அதாவது தூக்கிலிடுவதற்குப் பதிலாக நாங்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கோருகிறோம். உங்களது நீதிமன்றம் சொன்னதைத்தான் நீங்களும் மனதிற் கொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதே. எஙகளுடைய மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காகக் கைதிகளைச் சுடும் படைப்பிரிவொன்றை அனுப்பி வைக்குமாறு மிகுந்த கனிவுடன் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.


தங்கள்......

பகத்சிங்
                                                                                                                                     
ராஜகுரு

சுகதேவ்.

இவர் பெயர் தோழர் பெருமாள். இன்றைய பேச்சாளர்களில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர். இடிந்தகரை பகுதிக்கருகிலிருந்து வந்துள்ளார். மீனவ சமூகத்தை சார்ந்தவர்.

கோட்பாட்டு சொல்லாடல்கள், தத்துவார்த்த கேள்விகள் என்றெல்லாம் கவலைகொள்ளாமல், மண்ணின் மைந்தராக, ஒடுக்கப்பட்ட குரலாக அவர் பேசியது ”உண்மை”. வயிற்றெரிச்சலோடு நாங்கள் என்ன உங்களிடம் உங்கள் சொத்தையா கேட்கிறோம் நியாத்தைதானே பேசுகிறோம் எனும் தொணியிலிருந்தது.

உதயகுமார் வெறும் தலைவர் அல்ல, எங்களில் ஒருவர் எனும் உணர்வை வெளிப்படுத்தும் அப்பகுதி மக்கள் அவர் மீது எத்தகைய அன்பையும், நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது.
_________________________

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்த்தில் நாளை கணிணி தொழிற்துறையினர் கலந்து கொள்கின்றனர். கணினி தொழில் நுட்ப பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தோழர்களே, வெகுஜன ஊடகங்கள் பெரிதாக இந்த போராட்டம் குறித்து பேசுவதில்லை, ஆகையால் முடிந்தவரை நீங்கள் உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இந்த போராட்ட செய்தியை எடுத்துச்செல்லவேண்டும்.

பெரும் திரளான மக்கள் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வெளிப்படுத்துவதே அம்மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி.1 comment:

 1. எது எப்படியோ, இந்தப் போராட்டம் மிக முக்கியமான ஒரு போராட்டமாக வரலாற்றில் பதிவாகப் போகிறது. இது ஒரு கூட்டத்தின் போராட்டமாகப் பார்க்கப் படாமல், ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டமாகப் பார்க்கப் பட வேண்டும்.
  இயற்பியல், வேதியல் துறைகளில் ஆயிரக்கணக்கான பேர்கள் முனைவர் பட்டம் பெற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராவது, அணு மின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகளை சீரிய முறையில் தடுப்பது எப்படி என்று மக்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ ஆலோசனை போல ஏதாவது சொல்லலாமே !

  ஒரு ஊரில் குடிநீர்ப் பஞ்சம் ! அந்த ஊர் கோவிலுக்கு அருகில் ஒரு கிணறு வெட்டுவதாகத் தீர்மானிக்கப் படுகிறது. கிணறும் பாதி வெட்டியாகி விட்டது. இந்நிலையில் கிணறு வெட்டினால், கோவிலின் கோபுரம் பாதிப்பு அடையக் கூடும் என்று சிலர் கிணறு வெட்டுவதைத் தடுக்கிறார்கள். இரண்டு அணிகள் உருவாகின்றன. ஒன்று கிணறு அணி ! மற்றொன்று கோவில் அணி !

  கிணறையும் வேறு இடத்தில் வெட்ட முடியாது. ஏனெனில் அந்த இடத்தில் தான் போதுமான நீர் இருக்கிறது. ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட புராதானக் கோவிலையும் இடம் மாற்ற முடியாது. குடிநீரும் ஊரின் இன்றியமையாத தேவை !

  இப்போது என்ன செய்ய வேண்டியதெல்லாம் கோவில் கோபுரத்தை பாதிக்காத வகையில் கிணறு வெட்ட வேண்டும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த கோவிலின் மீது எடுக்க வேண்டும். அது தான் அந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஆக முடியும்.

  என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது என்ற ' தொழில் நுட்ப ' சமாச்சாரம் தான் இப்போதைய பிரச்சனை !

  ReplyDelete