Sep 27, 2011

சாம்பல் நிற உறவுகள்



அவளது புகைப்படத்தை அணைத்துக் கொண்டிருக்கிறேன்

அம்மா
இது நீயென
அவள் செய்து கொடுத்த
காகித பொம்மையாக

புகைப்படம்
ஓவியம்
காகித பொருட்கள்
சிறு சிறு பொம்மைகள்
இப்படி எல்லாமாக பிம்பம் நிறைந்திருக்கும்
வீட்டில்
உறைந்து நிற்கிறது
நீராவியாகிப் போன கண்ணீர்

கவிதையும்
அவனும் மட்டுமே
துக்கத்தை சுமந்து நிற்கும் சாபம் பெற்றிருக்கின்றனர்

அவன்
அவள்
நான்
அறிவோம்
காலம்
அக்னியாய் மாறி எரித்து
கரிய சாம்பலாக்கும் உறவுகளை

பிரிவின் முட்களை இப்படி
கவிதையில் ஏற்றிப் பதிந்து வைக்கிறேன்
என்பதை அறியக்கூட மாட்டாள்
மகள்

குழந்தைகளின் உலகில் ஆண்
தந்தை
தமையன்
நண்பன்
இப்படியாக
இருக்கின்றனர்

கோப்பை நிறைய தனிமையை நிரப்பி
பருகத் தரும்
கணவர்கள் இருப்பதில்லை

துர் மணம் வீசும் குற்றங்கள்
பிரசவக் கோடுகளின்
நிழலில்
மன்னிக்கப்படுகின்றன


2 comments:

  1. கொற்றவை,

    இது ஓரளவு புரிகிறது. கடற்கரையில் தனியே அமர்ந்து வானம் வெறிப்பவனின்/ளின், எண்ணக் குவியலில் கொஞ்சம் எடுத்து வைத்ததைப் போல அத்தனை இயல்பாக இருக்கிறது கவிதை.

    ( உமது எழுத்துக்களைப் படித்து நானும் கொஞ்சம் புரியாத மாதிரி எழுத ஆரம்பித்து விட்டேன் )

    ReplyDelete